காங்கிரசுக்காரன் சத்தியமூர்த்தி பவனை மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்” – இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்”

‘காற்றுக்கென்ன வேலி’, ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்று ஈழப் பிரச்சினையைப் பற்றித் தமிழில் உண்மையான திரைப்படங்களை வழங்கிய துணிச்சல் மிக்க இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்! தமிழ்நாடு முழுக்கத் தமிழீழ உணர்வு தகிக்கும் இவ்வேளையில் அவருடன் கைப்பேசி வழியே உரையாடியதிலிருந்து…

ஈழப் பிரச்சினையை வைத்துத் தமிழில் தீவிரமான திரைப்படங்களை வழங்கியவர் தாங்கள்தான். இப்பொழுது தமிழீழத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் தமிழ்நாட்டு மாணவர் போராட்டங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்பொழுது ஏற்பட்டிருக்கிற மாணவர் போராட்டங்களை ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்துக்குப் பரவலாக நம்பப்படுகிற மாதிரி, தம்பி பாலச்சந்திரனின் முகம், அந்தச் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை – அது ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. தமிழ்மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தமிழ் மாணவர்கள் இந்த (பாதிக்கப்பட்ட) குழந்தைகளின் முகத்தைப் பார்த்து இவ்வளவு எழுச்சியை, எதிர்ப்பை வெளியிட்டிருப்பது சரியான நேரத்தில் காலம் கருதிச் செய்யும் செயல் என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப் போராளிகள் இந்த இனப்படுகொலையில் இறந்ததாக ஒரு கணக்கு இருக்கிறது. அந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப்புலிகளுடைய, போராளிகளுடைய உயிர்த் தியாகத்தால் கூட எழுப்ப முடியாத ஒரு மிகப்பெரிய எழுச்சியை இந்தப் பன்னிரண்டு வயதுக் குழந்தையுடைய உருவம், அந்தக் குழந்தையுடைய பார்வை எழுப்பியிருக்கிறது. (குரல் கம்முகிறது) தம்பி பாலச்சந்திரன் இறந்து விட்டான் என்பது போன ஆண்டே தெரியும். இருந்தால்கூட, அப்பொழுது அந்தக் குழந்தையுடைய விழிகளை நாம் பார்க்கவில்லை. இப்பொழுது நாம் பார்க்கும் அந்தப் பார்வையில் இருக்கும் ஒளியும், நம்பிக்கையும் இரண்டு நிச்சயங்களை நமக்கு உணர்த்தியிருக்கின்றன. ஒன்று, 19ஆம் தேதி கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் முகத்தில் 17ஆம் தேதி தன் தந்தை கொல்லப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது பெரிதும் குறிப்பிடத்தக்கது. அது நமக்கு ஒரு வரலாற்று உண்மையை, சிங்கள அரசாங்கம் திட்டமிட்டுச் செய்து வருகிற ஒரு பிரச்சாரம் எவ்வளவு பொய் என்பதை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அடுத்ததாக, அந்த விழிகளில் காணப்படக்கூடிய ஒளி நம் மாணவர்களை உசுப்பி எழுப்பியிருக்கிறதென நம்புகிறேன்.

புகைப்படத்தில் பாலச்சந்திரனின் கண்களில் இருக்கும் ஒளியை வைத்து, பிரபாகரன் அவர்கள் இன்னும் இருக்கிறார் என்பதை நாம் அறியக்கூடும் என்ற ஒரு தகவலை நீங்கள் இந்தப் பதில் மூலம் சொல்லியிருக்கிறீர்கள். இதுவரை யாரும் இந்தக் கோணத்தைச் சொல்லவில்லை. அடுத்ததாக ஐயா, இது தாமதமான போராட்டம் எனத் தனிமனிதர்கள் முதல் ஊடகத்தினர் வரை பலரும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து…?

இல்லை Better late than never! சரியான நேரத்தில் மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். 2007 வரை, உலகம் முழுக்க இருக்கிற தமிழ் இளைஞர்களில், குறிப்பாகத் தமிழ் மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பற்றித் தவறான புரிதலுடன் இருந்தார்கள். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகளே கூடத் தங்கள் தேசிய இனத் தலைவனுடைய உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை நம்பி இருந்தார்கள். இது மறுக்க முடியாத உண்மை! தங்களுடைய தலைவனைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டதே 2008-09க்குப் பிறகுதான்; அதுவும், குறிப்பாக முத்துக்குமாருடைய மரணத்துக்குப் பிறகுதான் அந்த மாணவர்கள் சிலிர்த்து எழுந்து நின்று "எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன்" என்று பிரகடனப்படுத்தினார்கள். இது 2009 பிப்ரவரியில் நடந்தது. அதற்குக் காரணம் என்னவென்றால், அதற்கு முன்பு அவர்கள் பிரபாகரனைப் பற்றி ஊடகங்கள் பரப்பியிருந்த பொய்ப் பிரச்சாரத்தைத்தான் நம்பியிருந்தார்கள். குறிப்பாக, ஆங்கில ஊடகங்களை. ஆங்கில ஊடகங்கள் மூலமாகத்தான் அவர்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. அவர்கள் பிரபாகரனைத் தீவிரவாதி என்றுதான் ஆங்கில ஊடகங்கள் மூலமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். 2008க்குப் பிறகுதான், தங்கள் மண்ணில் மிஞ்சியிருக்கிற தங்கள் உறவுகளுக்குப் பாதுகாப்பாகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த போராளிகளுடைய தலைவன்தான் பிரபாகரன் என்பது 2009க்குப் பிறகுதான் அந்தக் குழந்தைகளுக்கே தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் தங்கள் தலைவரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டிருந்த அந்த மாணவர்கள் "எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன்" என்று சொல்லி, பிரபாகரனின் எழுத்துக்களைத் தங்கள் உணர்வில் தாங்கி, புலிகளுடைய கொடிகளுடன் வலம் வரத் தொடங்கினார்கள். இது 2009இலேதான் நடந்தது. ஆக, புலம் பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களுடைய குழந்தைகளே அப்படி இருக்கையில், இங்கே இருக்கிற தமிழ் மாணவர்களுக்கு அந்த எழுச்சி ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து ஏற்பட்டிருப்பது என்பது தாமதமானது என நினைக்க முடியாது. இப்பொழுது ஏற்பட்டிருக்கிற இந்த மாணவர் எழுச்சி உலகெங்கும் தமிழ் உணர்வை நிமிர்த்தி நம்பிக்கையோடு உட்கார வைத்திருக்கிறது.

சரி ஐயா! அடுத்து, மாணவர்களில் பலர், ‘தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பையும், இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையையும் கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்’ எனப் போராடுகிறார்களே, இது சரியா?

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! மாணவர்கள் போராடத் தொடங்கியது ‘அமெரிக்கத் தீர்மானம் மோசடி’ என்று சொல்லித்தான். ஊடகங்கள் கண்முன்பாகத்தான் மாணவர்கள் அந்தத் தீர்மானத்தை எரித்தார்கள். எரித்துவிட்டு மாணவர்கள் சொன்னார்கள் "அமெரிக்கத் தீர்மானம் மோசடி, இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என்று. ஆனால், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகங்கள் கடைசி நிமிடம் வரை ‘அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்’ என்று செய்தி போட்டார்களே, ஏன்? இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா? அவர்கள் படப்பிடிப்புக் கருவிக்கு முன்பாகத்தானே மாணவன் அமெரிக்கத் தீர்மானத்தை எரிக்கிறான்? ஆக, மாணவர்கள் வெளிப்படையாக அறிவித்த பின்பும் ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்க முயன்றார்கள். போர்க்குற்றம் என்பதோடில்லை, நடந்தது இனப்படுகொலை; நடந்த இனப்படுகொலையை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்; அந்த இனப்படுகொலையைப் பற்றிச் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று இந்தியா தனியாகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது.!

மாணவர்களின் கோரிக்கைப்படி, ஒருவேளை, இந்தியா தானே ஈழத் தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அது எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவா? அப்படி நடக்குமா என்கிற ஒரு கேள்விக்கே இடமில்லை. அப்படி ஒருவேளை நடந்தால்… ஆட்சி ஒன்று மாற்றம் வந்தால்… ஏனெனில், இன்று இந்தியா என்று சொன்னால் காங்கிரசு அரசு, மன்மோகன் அரசு என்கிற அடிப்படையிலே பேசுகிறோம். நாளைக்கே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு… ஒரு நியாயமான அரசு அமைந்து… அப்படியெல்லாம் இந்தியாவில் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஒருவேளை நடந்தால்… அப்படியொரு தீர்மானம் உலக அரங்கிலே கொண்டு வரப்பட்டால் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் நிச்சயமாக அதை ஏற்றுக் கொள்ள வைக்க முடியும்! எப்படியென்று கேட்டால், நாம் 110 கோடி மக்கள் இருக்கிறோம். நம் நாட்டில் காந்தி பிறந்தார், விவேகானந்தர் பிறந்தார் என்பதெல்லாம் நம்முடைய மரியாதை கிடையாது இன்றைக்கு. நம்முடைய ஒரே மரியாதை, இந்த 110 கோடி பேரும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் பொருளுக்கு வாடிக்கையாளராக இருக்கிறோம் என்பதுதான்.. எனவே, நாம் எந்தத் தீர்மானம் கொண்டு வந்தாலும் உலகநாடுகள் அதை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நாம் நெருக்கடி கொடுக்க முடியும். "உன் நாடு என்னென்ன பொருட்களை இங்கே விற்கிறது என எனக்குத் தெரியும். நீ இந்தத் தீர்மானத்தை ஏற்காவிட்டால், நாளையிலிருந்து உலக நாடுகளுடைய பொருளை இங்கே விற்பனை செய்ய மாட்டோம், வாங்க மாட்டோம் என்று போராட வேண்டியிருக்கும்" என மிரட்டியே உலகநாடுகளை நம்மால் பணிய வைக்க முடியும். இரண்டரை கோடி சிங்களர்கள் வாடிக்கையாளர்களாக இருப்பது உலக நாடுகளுக்கு முக்கியம் இல்லை. 110 கோடி இந்தியர்கள் முக்கியம்! இன்னும் சொல்லப் போனால், நாமே இதைச் செய்ய முடியும். நாம் ஏழு கோடித் தமிழர்கள்! ஏழு கோடி வாடிக்கையாளர்கள் இங்கே தமிழ்நாட்டில் இருக்கிறோம். ஆக, உலகநாடுகளைத் தமிழ்நாடே மிரட்ட முடியும் என்கிற நிலையில், இந்தியா நிச்சயமாக மிரட்ட முடியும்! மிரட்டி அப்படியொரு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வைக்க முடியும்! நடந்தது இனப்படுகொலை என பன்னாட்டு அளவிலே அப்படி ஒரு தீர்மானம் வந்தால், இலங்கையை முற்றிலுமாகத் தனிமைப்படுத்த முடியும். ஆனால், அப்படி ஒரு மாற்றம் இந்தியாவால் வராது என்பதுதான் யதார்த்தமான உண்மை!

இந்தப் போராட்டம் பற்றிய தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டையும், நடவடிக்கைகளையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

போன அரசாங்கத்தின் ஆட்சியும் சரி, அந்த ஆட்சியை நடத்தி வந்த கட்சியும் சரி, நடந்தது இனப்படுகொலை என்று தங்கள் கட்சியிலேயே கூடத் தீர்மானம் கொண்டு வர முடியவில்லை. இந்த அரசாங்கம் வந்த பிறகு, எடுத்த எடுப்பிலேயே சட்டமன்றத்தில் போர்க்குற்றங்கள் பற்றியும், மனிதஉரிமை மீறல்கள் பற்றியும், பொருளாதாரத் தடை என்றும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அப்போது நமக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால், போன அரசாங்கம் மாதிரியே தீர்மானங்கள், கடிதங்கள் மூலமாக எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. இப்போது பொருளாதாரத் தடை என்று இந்தியாவுக்கு நாம் வேண்டுகோள் வைத்து இந்தியா ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், தமிழ்நாட்டில் இன்னின்ன நாடுகளின் பொருட்களை விற்க அனுமதிக்க மாட்டோம்; தமிழ்நாட்டில் ஏர் லங்கா விமானங்கள் இறங்குவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது, அது எங்கள் மக்களை அவமதிக்கிற செயல் என்று தமிழ்நாடு அரசாங்கம் சொல்ல முடியும். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு இருக்கிற குறைந்தபட்ச அதிகாரங்களை வைத்து அதிகபட்சம் என்னவெல்லாம் அறிவிக்க முடியுமோ அவற்றையெல்லாம் அறிவிக்கலாம். அந்த நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசாங்கம் எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்! 

இந்தப் போராட்டத்தைப் பொறுத்த வரை, எங்கும் மிகக் கடுமையாகக் காவலர்கள் நடந்து கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. சில இடங்களில் கொஞ்சம் அவ்வாறு நடந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் மாணவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டரை மணிக்கு 
நான் அந்தச் சமூகநலக்கூடத்துக்குப் போனபோது, தனியாளாகச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தப் போராட்டம் பெரிய அளவில் வளர்வதற்கு அரசாங்கம் இதற்கு இடைஞ்சலாக இல்லாதது ஒரு காரணமாக இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, தஞ்சாவூரிலே ஐயாயிரம் மாணவர்கள் நடத்திய ஊர்வலம், மதுரையிலே ஐயாயிரம் மாணவர்கள் நடத்திய ஊர்வலம் ஆகியவற்றைச் சொல்லலாம். இங்கே சென்னைக் கடற்கரையிலே கூட, முதலில் ஒரு மூவாயிரம் மாணவர்கள் இருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல, மதிய வெயில் ஏற ஏற, அவர்களுடைய எண்ணிக்கை ஏறி ஏழாயிரம், எட்டாயிரம் மாணவர்கள் அந்த இடத்திலே கூடியபோது அவர்களைக் கலைப்பதற்காக எந்த ஒரு முயற்சியையும் அரசாங்கமோ, காவல்துறையோ எடுக்கவில்லை. அவர்களுக்குப் பாதுகாப்பாகத்தான் நின்றார்கள். வள்ளுவர் கோட்டத்திலே எங்களுடைய மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தபோது, திடீரென்று அவர்கள் சாலையை நோக்கி நகர்ந்ததும் காவல்துறையினர் அவர்களை நோக்கி ஓடியபோது, நாங்கள் "ஓடாதீர்கள்!" என்று காவல்துறையினரைக் கண்டித்தோம். நீங்கள் ஓடினால் முன்னால் போகும் மாணவர்களும் ஓடுவார்கள் என்று சொன்னோம். அது மனித உளவியல். நாங்கள் அப்படிச் சொன்னவுடன் அந்தக் காவல்துறை அதிகாரிகளெல்லாரும் உடனே நின்றுவிட்டார்கள். ஆக, இந்த அரசாங்கம் மாணவர்கள் போராட்டத்தை ஊக்குவிக்கவில்லை என்றாலும், போன அரசாங்கம் மாதிரி மிகவும் கெடுபிடியாக அந்தப் போராட்டங்களை அடக்குவதற்கு, எதுவும் செய்யவில்லை. என்றாலும் சில இடங்களில், குறிப்பாக, திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களையெல்லாம் பன்னிரண்டு நாள், பதிமூன்று நாள் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோதுகூட அவர்களை அங்கிருந்து அகற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்க்காதது இந்த அரசாங்கத்தின் தவறு என்று நான் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டுகிறேன்! அந்தப் பிள்ளைகள் அரசியல் கட்சிகளுடைய உண்ணாவிரதம் மாதிரி சாப்பிட்டுவிட்டு வந்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அது அங்கே இருக்கிற மாவட்ட ஆட்சியருக்குத் தெரியும். உளவுத்துறை மூலமாக அரசாங்கத்துக்குத் தெரியும். என்ன செய்திருக்க வேண்டும்? அந்த மாணவர்களைக் காப்பாற்றுவதற்காகக் அவர்களைக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. இல்லையா! கொண்டு வந்து சேர்க்க வேண்டும், சிகிச்சை கொடுக்க வேண்டும், அதற்குப் பிறகும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் அதைத் தடுக்கக்கூடாது. ஏனெனில், சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு மேலும் அவர்கள் "நாங்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்போம்" என்றால் மருத்துவமனையிலேயே அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சிகிச்சை கொடுக்கலாம். அப்படியெல்லாம் செய்யாமல் விட்டதும், இப்படிச் சில இடங்களில் சில தவறுகள் நடந்ததைப் பார்க்கும்போதும் கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதெல்லாம் அரசாங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்துத் தன்னுடைய நடுநிலைத்தன்மையை நிரூபிக்க வேண்டும்!

நடுவண் அரசிலிருந்து திமுக விலகியது பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழ்நாட்டில் தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொள்கிற அரசியல்வாதிகளில் முதலிடத்தில் இருப்பவர் கருணாநிதிதான். அவர் அதற்காக வெட்கப்பட்டதும் கிடையாது. அவர் கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிடுவோம் என்று சொன்னதும் உடனே ஒரு செய்தி வருகிறது, மு.க.ஸ்டாலின் மிரட்டித்தான் கருணாநிதி இதற்கு ஒத்துக் கொண்டார் என்று. கருணாநிதி அதை மறுத்தார். அப்படியெல்லாம் யாரும் மிரட்டவேயில்லை, நாங்கள் நேர்மையாக நடந்திருக்கிறோம் என்று கருணாநிதி சொன்னார். இதில் இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! மு.க.ஸ்டாலின் ஈழத் தமிழர்களுக்காகத் தன் தந்தையை மிரட்டியிருப்பார் என்பது மாதிரி ஒரு பச்சைப் பொய் இருக்க வாய்ப்பேயில்லை. இன்று வரை, முத்துக்குமார் என்கிற பெயரைத் தன் உதட்டால் உச்சரிக்காத ஒரே தமிழன் மு.க.ஸ்டாலின்தான் என்கிற உண்மையை நாம் ஊரெல்லாம் சொல்லியாக வேண்டும்!. ஆக, மு.க.ஸ்டாலின் மிரட்டி தி.மு.க ஒரு முடிவு எடுத்தது என்பதெல்லாம் பச்சைப் பொய்! உண்மை என்னவென்றால், நம் தமிழக மாணவர்கள் நடுத்தெருவுக்கு வந்து நின்றதும், தனக்கு ஏற்கெனவே இருக்கிற அவப்பெயர் மேலும் பன்மடங்கு அதிகரித்துவிடும் என்பதால், எங்களுடைய மாணவர் சக்தி கொடுத்த நெருக்கடியால், எங்கள் மாணவர்களின் மிரட்டலால்தான் கருணாநிதி இந்த முடிவுக்கு வந்தார். கடைசியில், எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எடுத்த நடவடிக்கை இதெல்லாம். அண்ணன் சுப.வீரபாண்டியன் போன்றவர்கள், பதவியிலிருந்து விலகியிருந்தால் போர் நின்றிருக்கும் என்று நினைக்கிறீர்களா, அவ்வளவு சக்தி மாநில அரசாங்கத்துக்கு இருக்கிறதா என்றெல்லாம் கேட்டார்கள். இப்பொழுது விலகியிருக்கிறீர்களே, அப்பொழுது விலகியிருந்திருந்தால் நடந்திருக்குமா நடந்திருக்காதா என்பது வேறு விஷயம், உங்களுடைய முகத்தையாவது நீங்கள் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியுமே என்று நாங்கள் கேட்கிறோம்! நடப்பது இனப்படுகொலை, ஓர் இனத்தை அழிக்கிறார்கள் என்பது தெரிந்தே இந்த மனிதர்கள் நாற்காலிகளில் பசை போட்டு உட்கார்ந்திருந்தது இந்த இனத்தால் என்றென்றைக்கும் மறக்க முடியாத மிகப்பெரிய துரோகம்! இன்றைக்குப் பதவிக்காலம் முடிவடையும்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மாணவர்கள் நடுத்தெருவுக்கு வந்த பிறகு வேறுவழியில்லாமல் பதவி விலகியிருக்கிறார். அதுதான் உண்மை!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போராட்டத்தை ஒடுக்கிய அப்பொழுதைய மாநில, நடுவண் அரசுகள்தான் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றன. எனவே, இப்பொழுது நடக்கும் இந்த மாணவர் போராட்டத்தின் தாக்கம் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என நினைக்கிறீர்களா?

போன நாடாளுமன்றத் தேர்தலின்போது, எனக்குத் தெரிந்து முதல் மாணவர் போராட்டம் தம்பி கார்க்கி தலைமையில் சேலத்தில் தொடங்கியது. கார்க்கி வீரன் தலைமையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சேலம் நகரை அந்த அளவுக்குத் திணற வைத்தார்கள். அன்றாடம் ஒரு போராட்டம் நடத்திக் கொண்டேயிருந்தார்கள். கார்க்கியும் கார்க்கியுடைய தோழர்களும் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலையை எழுப்பியது. அதன் பிறகு செங்கல்பட்டு விஜயகுமார், அன்பரசன் முதலான அந்தத் தம்பிகள் உட்கார்ந்த உண்ணாவிரதம் கருணாநிதி அரசின் நெருக்கடியால் எட்டாவது நாள் முடிக்கப்பட்டது. அப்புறம் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதமும் அதே நிலையை அடைந்தது. இப்படி, எங்கு போராட்டம் நடந்தாலும் அதை அடக்கி ஒடுக்குவதில் அன்றைய தி.மு.க அரசாங்கம் குறியாக இருந்தது. இனப்படுகொலை என்பதை நிரூபிக்கிற ஆவணங்களைக் குறுவட்டுகள் மூலமாக எங்களுடைய மாணவர்கள் சிவகங்கைத் தொகுதியிலே விநியோகித்தபோது நானும் சிவகங்கையிலே முகாமிட்டுப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். நாள்தோறும், அப்படி விநியோகம் செய்யும் மாணவர்களையும் இளைஞர்களையும் காவல்துறை கொண்டு போய்க் காவலில் அடைத்து வைக்கும். தினசரி காலையில் அவர்கள் போவார்கள். அப்புறம் இரவில் உள்ளே அடைந்திருப்பார்கள். பிறகு அவர்களைக் கூட்டி வருவது, அதுவே ஒரு பெரிய வேலையாக இருக்கும். இப்படி, இந்தச் செய்தி வெளியே பரவி விடக்கூடாது என்பதற்காக, தடுப்பதற்கான எல்லா வேலைகளையும் போன அரசாங்கம் மேற்கொண்டது.. ஆனால் இப்போது, நடந்தது இனப்படுகொலை என்பது உலகம் முழுக்க அம்பலமாகி, தமிழ்நாடு முழுக்கப் போய்ச் சேர்ந்து, அந்தக் குழந்தை பாலச்சந்திரனின் முகம் ஒவ்வொரு தமிழ்த்தாய் மனத்திலும் அப்படியே பதிந்திருக்கிறது. ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு சகோதரியும் அந்தத் தம்பியை "எங்களுடைய பிள்ளை!… எங்களுடைய பிள்ளை!" எனச் சொல்வதை நான் பார்க்கிறேன். அன்று மாணவர்களிடையில் வந்து பேசிய எண்பது வயதுத் தாய் சொல்கிறார்கள் "என்னுடைய பேரன்" என்று பாலச்சந்திரனை. அந்த உணர்வுதான் எல்லோருக்குமே இருக்கிறது. அதனால் இந்த முறை, சரியான வகையில் வியூகங்களை வகுத்தால், ஒட்டுமொத்த மாணவர்களும் தேர்தல் களத்தில் இறங்கி வீடு வீடாகப் போய் நியாயம் கேட்டால் காங்கிரசுக்காரன் சத்தியமூர்த்தி பவனை மூடிவிட்டுப் போய்விட வேண்டியதுதான்! அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும்! காங்கிரசோடு யார் சேர்ந்தாலும் அவர்களுக்குச் சர்வநாசம் நிச்சயம் என்பதைத் தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே உணர்ந்திருக்கின்றன. கிணற்றில் மூழ்கிக் கொண்டிருக்கும் காங்கிரசைக் காப்பாற்றப் போனால் தன்னையும் சேர்த்து உள்ளே இழுத்து விடும் என்பதைத் தி.மு.க-வும் இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறது. ஆக, காங்கிரசு இப்போது தனிமைப்படுத்தப்படும். அதனால் அடுத்த தேர்தல் களத்தில் நிச்சயமாக மாற்றம் இருக்கும்! இதன் எதிரொலி இருக்கும்!

About The Author