காட்டுக்குள்ளே திருவிழா (1)

ராஜா அன்றைக்கு ஸ்கூலுக்குப் போகவில்லை. அவனுடைய சின்ன மம்மிக்கு குழந்தை பிறந்திருந்தது. ராஜாவையும், பாபுவையும் பாலச்சந்தர் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு வந்தான். பிள்ளைகள் ரெண்டு பேரையும் சந்தியா இருந்த அறைக்குள் விட்டுவிட்டு டாக்டரைப் பார்க்கப் போனான்.

பாபு மம்மியிடம் ஓடினான். கட்டிலில் ஒருக்களித்து சந்தியா, பாபுவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

"குட்டிப் பாப்பா பாத்தியா பாபு?"
"குட்டிப் பாப்பா எப்படி வந்தது மம்மி?"
"ம்? கொக்குதான் கொண்டு வந்து போட்டுட்டுப் போச்சு."
"என்னக் கொண்டு வந்த போட்டுட்டுப் போச்சே அந்த ஸேம் கொக்கா மம்மி?"
"இல்ல கண்ணா, இது வேற கொக்கு."
"எல்லா பாப்பாவையும் கொக்குதான் கொண்டு வந்து போடுமா மம்மி?"
"நல்ல பாப்பாவையெல்லாம் கொக்குதான் கொண்டு வந்து போட்டுட்டுப் போகும்."
"அண்ணாவையும் கொக்குதான் கொண்டு வந்து போட்டுட்டுப் போச்சா மம்மி?"
"அது யாரது, ஒனக்கு அண்ணா!”
"ராஜா அண்ணா.”
"அவனா? அவனக் கொரங்கு கொண்டு வந்துப் போட்டுட்டுப் போயிருக்கும்."

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜாவுக்கு முகம் சுண்டிப் போனது. மனசும்.

குழந்தைகளைக் கொண்டு வந்து போட்டுப் போவது கொக்குகளின் வேலையாயிருக்க, இவனைக் கொண்டு வந்து போட்டுப் போக மட்டும் குரங்கொன்று அமர்த்தப்பட்டது இவனுக்கு வேதனையாயிருந்தது.

டாக்டரைப் பார்க்கப் போயிருக்கிற டாடி திரும்பி வந்த பின்னால், டாடியின் பாதுகாப்பில் மெல்லப்போய்ப் பாப்பாவை அருகாமையில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையை ஓசையில்லாமல் விழுங்கிக் கொண்டான்.

குரங்கு கொண்டு வந்து போட்டு விட்டுப் போன பிள்ளை! ராஜாவின் கண்களில் கண்ணீர் திரண்டது. இந்தக் குரங்கு விவகாரத்தை டாடியிடம் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்பி பைக்கில் போகிற போதோ அல்லது போகிற வழியில் டிரைவ் இன்னில் டிஃபன் சாப்பிடுகிற போதோ கேட்க முடியவில்லை; தம்பி கூட இருந்தான். அவன் எதையாவது புரிந்து கொண்டு அவனுடைய மம்மியிடத்தில் தத்துபித்தென்று ஏதாவது உளறி வைத்தானென்றால் இவனுக்கு உதை விழும்.

ராத்திரி, பாபு தூங்கிவிட்டானென்று உறுதி செய்து கொண்டு, படுக்கையிலிருந்து எழுந்து, ஹாலில் புஸ்தகம் படித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் வந்தான்.

"டாடி."
"நீ இன்னும் தூங்கலியா ராஜா, காலைல ஸ்கூலுக்குப் போகணும்ல?"
"டாடி ஒங்கட்ட ஒரு டெளட் கேக்கணும்."
"டெளட் கேக்கணுமா!" பாலச்சந்தர் சிரித்தான்.
"டெளட்டெல்லாம் காலைல கேக்கலாம்; மணி பத்தாச்சு பார், போய்த் தூங்கு."
"இல்ல டாடி, இது அர்ஜன்ட். ஏன் டாடி, நம்ம குட்டிப் பாப்பாவ கொக்கா டாடி கொண்டு வந்து போட்டுச்சு?"
"ம்? ஆமா, ஏன்?"
"பாபுவ?"
"அதுவும் கொக்குதான்."
"அப்ப என்ன மட்டும் கொக்கு கொண்டு வந்து போடலியா டாடி?"
"ஒன்னயும் கொக்குதான் கொண்டு வந்து போட்டுச்சி. சரி போய்த் தூங்கு."
"இல்லியாம் டாடி, என்னக் கொக்கு கொண்டு வந்து போடலியாம். என்னக் கொரங்கு கொண்டு வந்து போட்டுச்சாம்."

பாலச்சந்தருக்கு முகம் இறுகியது.
"நான்ஸென்ஸ். யார் சொன்னது அப்படி?"
"சின்ன மம்மி தான் சொன்னாங்க டாடி."

பாலச்சந்தர் மகனை இழுத்து அணைத்துக் கொண்டான். தகப்பனின் தோளில் ஆறுதலாய் முகம் புதைத்துக் கொண்டான் ராஜா. தகப்பனின் விரல்கள் தலைமுடியைக் கோதிவிடுவது சுகமாயிருந்தது.

பாலச்சந்தருக்கு சாவித்ரியின் ஞாபகம் வந்தது. ராஜாவைப் பெற்றுப் போட்டுவிட்டு, கடமை முடிந்ததென்று கண்மூடிக் கொண்டுவிட்ட சாவித்ரி. பிறகு சந்தியாவைக் கல்யாணம் பண்ணிக்க கொண்டது, தனக்கு ஒரு துணை வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல. ராஜாவுக்குத் தாய் வேண்டுமென்பதற்காவுந்தான்.

கல்யாணத்துக்கு முன்னால், பலம்மாய்த் தலையாட்டி வைத்த சந்தியா, முதலிரவு முடிந்த கையோடு தன்னுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டாள். ராஜா தன்னை மம்மியென்று கூப்பிடவே அவள் சம்மதிக்கவில்லை. பாலச்சந்தர் மம்மியென்று சொல்ல, அவள் ஆன்ட்டியென்று அடம் பிடிக்க, கடைசியில் ரெண்டுக்கும் பொதுவாய் சின்ன மம்மி என்று முடிவாயிற்று.

அவளுக்கென்று ஒரு பாபு பிறந்த பின்னால், சந்தியாவின் மாற்றாந்தாய்த்தனம் மூர்க்கமடைந்தது. இப்போது ரெண்டாவது குழந்தையாகிவிட்டது. நிலைமை இன்னும் மோசமடையலாம். ஒன்றிரண்டு வருஷத்துகாவது ராஜாவைத் திருநெல்வேலியில், சாவித்ரியின் பெற்றோரிடம் விட்டு வைத்தாலென்ன என்று தோன்றியது. பேரன்மேல் உயிரையே வைத்திருக்கிறவர்கள் அவர்கள். ராஜாவைத் தங்களிடம் விட்டுவிடும்படிக் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். பையனைப் பெற்றவனுக்குத்தான் ஒரு வறட்டுக் கெளரவம்.

மாற்றாந்தாய் ஹிம்சையிலிருந்து மகனைக் காப்பாற்ற வேண்டுமென்றால், திருநெல்வேலிதான் சரி. நாளைக்கே ஸ்கூலில் ட்டி.ஸி. வாங்க எற்பாடு செய்ய வேண்டும்….

அப்பாவின் அணைப்பிலிருந்து மெல்ல விடுபட்ட ராஜா, அப்பாவின் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.

"டாடி, சின்ன மம்மி சொன்னது நெஜந்தானா டாடி?"
"ம்? எது?"
"கொரங்கு."

மனசு புண்பட்டிருக்கிற மகனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று கொஞ்சம் குழம்பின பாலச்சந்தரின் சிந்தனையில் ஒரு பொறி தட்டியது.

"ராஜா நீ இப்ப எந்த க்ளாஸ் படிக்கிற?"

"ஸெகண்ட் ஸ்டாண்டர்ட் ஸி செக்ஷன்."

"நீ தர்ட் ஸ்டாண்டர்ட் ஃபோர்த் ஸ்டாண்டர் டெல்லாம் படிச்சிப் பெரிய்ய க்லாஸ்க்குப் போகும் போது ஒனக்கு சொல்லிக் குடுப்பாங்க, மனுஷங்க எல்லாமே கொரங்குலயிருந்து தான் வந்தாங்கன்னு. ராஜாவோட தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா ஒரு கொரங்கு. ராஜாவோட பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டி ஒரு கொரங்கு. நாம எல்லாருமே கொரங்குக்குப் பொறந்தவங்க தான் ராஜா. நானும் கொரங்குக்குப் பொறந்தவன்தான். நீயும் கொரங்குக்குப் பொறந்தவன்தான். அதனால ராஜா, ஒங்க சின்ன மம்மி சொன்னதுல தப்பொண்ணுமில்ல. ஸோ, எதப்பத்தியும் கவலப்படாம நீ போய்த் தூங்கு."

ராஜாவின் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.
"டாடி டாடி, நம்ம எல்லாருக்கும் அம்மா அப்பாவான கொரங்க நா பாக்கணும் டாடி."

"அதான் வண்டலூர் ஸூல பாத்தோம்ல?"

"அந்தக் கொரங்கெல்லாம் நல்லாவேயில்ல. டாடி, எங்க க்ளாஸ்ல ஸி.அம்ருதான்னு ஒரு கேள் இருக்கா டாடி. அவ குத்தாலத்துக்குப் போய்ட்டு வந்தாளாம். அங்க அழகழகா நெறய்ய கொரங்கு இருக்காம். டாடி டாடி, நாமளும் குத்தாலத்துக்குப் போலாம் டாடி."

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இருந்தது பாலச்சந்தருக்கு. "அப்ப நீ திருநெல்வேலிக்கித் தாத்தா பாட்டிக்கிட்ட போறியா? அங்க பக்கத்துலதான் குத்தாலம். தாத்தா ஒன்ன அடிக்கடி குத்தாலத்துக்குக் கூட்டிட்டுப் போவார், நெறய்ய கொரங்கு பாக்கலாம். அழகழகான கொரங்கு பாக்கலாம். என்ன?"

"ஓ! நா ரெடி டாடி!"
அன்றைக்கு ராத்திரி ராஜாவின் மனசெல்லாம் குரங்கு.
கனவெல்லாம் குரங்கு.
விதவிதமான குரங்கு.
அழகழகான குரங்கு.
அப்பா அம்மாவான குரங்கு.

(மீதி அடுத்த ‏இதழில்)

About The Author