காமாட்சிபாயி சரிதமும் காலத்தின் கதையும்

காமாட்சிபாயி சாகேப் கூடத்தில் நீண்டு கிடந்தாள். எதிர் வீட்டு அப்பண்ணாராவ்தான் முதலில் பார்த்தது. விடியற்காலை நாலு மணிக்கே எழுந்து, தளர்ந்து போன உடம்போடு கைகள் நடுங்க சிரத்தையாய் வாசல் பெருக்கி கோலம் போட்டுவிடுவாள். ஒல்லியான உடம்பு. குளித்து, துவைத்து உலர்த்திய வெள்ளை நூல் புடவையை உடுத்திக் கொண்டு தும்பைப்பூவாய் வெளுத்திருந்த நீளக் கூந்தலை நீவிநீவி உலர்த்திக் கொண்டு ஏதோ ஸ்லோகத்தை உச்சரித்துக் கொண்டிருப்பாள். நெற்றி நிறைய அடைக்க அடைக்க குங்குமப் பொட்டு வட்ட நெருப்புக் கோளமாய்த் தெரியும்.

ஊஞ்சலை சன்னமாக ஆட்டிக் கொண்டே அதன் சீரான கிறீச்சிடலை சுருதியாகக் கருதி "ஸீதம்ம…மாயம்மா…" பாடிக் கொண்டிருப்பாள். நிறைய பிசிர் தட்டிய குரல். எண்பத்தைந்து தாண்டிய காமாட்சி பாயிக்கு இந்தக் குரல் அதிசயம்தான். சுவரில் மாட்டியிருக்கும் தஞ்சாவூர் ஆலிலைக் கிருஷ்ணனை உற்றுப் பார்ப்பது பிடித்தமான காரியம். தங்க ரேக்குகள், சின்னச் சின்ன முத்துக்களாய்ப் பதித்த கழுத்து மாலை. பெரிய கண்கள். கழுக்மொழுக்கென்ற குண்டான உடம்பு…. அந்தக் கிருஷ்ணனை ரொம்பவும் நேசித்தாள். கிருஷ்ணனுக்கும் இவளைப் பிடித்திருந்ததாகத்தான் தெரிந்தது. "ஏன் சங்கீதத்தைக் காணும். ஸ்வரக் கீற்றுகளின் சஞ்சாரத்தை எங்கே காணும். உன் மதுர கானத்தால் ஏன் என்னைக் கொஞ்சலே" என்று கேட்பது போலிருந்தது. ஜன்னல் வழியாக ஒரு கற்றை வாடைக் காற்று திடீரென சுழன்று உள்ளே வியாபித்தது.

‘இவளுக்கு யாரும் இருக்கறதாத் தெரியலே. பந்துக்களெல்லாம் ஹைதராபாத் தாண்டி தெனாலி, பாகாலா, ரேணுகுண்டா பக்கம்னு சொல்லுவா. எழுவத்தஞ்சு வருஷமா போக்குவரத்தில்லே. திருப்பரங்குன்றத்திலே இவளுக்கிருந்த ஒரே உறவு ராஜமந்திரி மாணிக்கம்மா, போய்ச் சேர்ந்து வெகுகாலமாச்சு. இவா சம்பரதாயம் பழக்க வழக்கம் தெரிலே. அதனால என்ன. தெரிஞ்ச நாள்லேருந்து இங்கேயே இருக்கா. இங்கேயே வாழ்ந்தா. நம்ம வழக்கப்படியே சம்ஸ்காரம் பண்றதிலே தப்பில்லே. சாஸ்திரிகள் ராமபத்ரன் வந்தார்னா புரியும்.’

ஒவ்வொருவராக வருவதும் போவதுமாக இருந்தனர். "நாழியாச்சு நாழியாச்சு" என்று யாரோ அவசரப்படுவது கேட்டது. "முந்தா நா கூட பாத்தேனே. வாசல்லே வந்து காய்கறி வங்கிண்டு போனாளே. நல்ல விதூஷகி. அந்த காலத்திலே சதிர்லே கொடிகட்டிப் பறந்தவ. இவ சதிர் இல்லேன்னா ஸ்வாமி ஊர்வலமே களையில்லாது போயிடும். அப்படி ஆடுவா.

காடா விளக்கு, நல்லெண்ணை தீவட்டி வெளிச்சம் – ஆவணி மூலவீதி ரொம்பிக் கிடக்கும். ‘சொக்கநாதா சொக்கநாதா’ என்று ஆரவாரம். திருப்பாம்புரம் சாமிக்கண்ணுப் பிள்ளை மல்லாரியிலே இழைப்பார். யாழ்ப்பாணம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் அனுசரணையான தவில். காமாட்சி பாயின் அபிநயம். கூட்டமே கிறங்கி நிற்கும். எதைக் கேட்டு பரவசப்படுவது! எதைப் பார்த்து லயிப்பது! அபிநய சுந்தரி காமாட்சி பாயி சாகேப் சலங்கைக்கு – அந்த அற்புத அடவுகளுக்கு வேறெது இணை? ஜெயிக்கிறவள் அவள். ஒல்லியான கச்சிதமான உடம்பு, சங்கு நிறம், மூக்கில புல்லாக்கு இடுப்புலே ஒட்டியானம். கழுத்து நிறைய நகை… பட்டுப்புடவையை சதிர் பாணியிலே இறுக்கக் கட்டிக் கொண்டு சலங்கை சப்திக்க இடுப்பில் கை வைத்துக் கொண்டு வந்து நிற்பாள். உற்சவ மூர்த்திகளை கைகூப்பி வணங்குவாள். ஒரு காலை லயத்தோடு வைத்து அழுத்தினாளென்றால் ‘கலீர் கலீர்’ என மதில் சுவரில் பட்டு எதிரொலிக்கும் ஒய்யாரம். எந்த மொழியில் பாடி ஆடினாலும் கச்சிதமாக இருக்கும். புரந்தரதாசர் அன்னமையா, தீட்சிதர், தியாகராஜர், கனகதாசர், முத்து தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை எல்லாம் பாடுவா. "மலையத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே என்று பதம் பண்ணி முத்திரை பிடித்தாளென்றால் ஆஹ்…ஹா….பெரியவர் ஒருவர் விமரிசித்துக் கொண்டிருந்தார். அந்த காலக்காட்சிகள் கண்முன்னே தெரிவது மாதிரி பரவசம்".

‘நானும் பாத்திருக்கேன். நீடாமங்கலம் கனகாம்பா, நாச்சியார் கோயில் மங்களநாயகி கோயிலடி ரங்கம், பாகாலா நாகரெத்தினம் புன்னம்புழா லட்சுமி நாராயணி, சத்தியவேடு சுப்புத்தாய்… என ஏகப்பட்டவர்கள் இவ கூட சேர்ந்து ஆடுவார்கள். ராத்திரி தூக்கம் ஏது… அப்புறம் சர்க்கார் உத்தரவு வந்து எல்லாமே நின்னு போச்சு. சதிர்காரா யாரும் இருக்கக் கூடாதுன்னு அவாளுக்கு ஆயிரம் நியாயம். அப்புறம் எல்லோரும் சொந்த ஊருக்குப் போயிட்டா. காமாட்சி பாயி சாகேப் மட்டும் பிடிவாதமா தங்கிட்டா. நாயக்கர் கொடுத்த பெரிய வீடு… விளாங்குடி பக்கத்திலே நாலு காணி மானிய நிலம்… கோயில் பக்கம் வருவதையும் நிறுத்திட்டா. இறைவன் கைங்கரியம் நின்னுபோனதில் ஏக வருத்தம். பல நாளைக்கு வெறிபிடித்தாற்போல் கதவைச் சாத்திண்டு ஆடுவா. பாட்டும் சலங்கையும் சதா கேட்டுக் கொண்டிருக்கும்’.

"ஆடமோடி கலதே…" சாருகேசி விஸ்தாரமா உலாவுவது கேட்கும். ஜதிஸ்வரம் சொல்ல ஆள் வேண்டாம். நட்டுவாங்கம் பண்ண யாரும் வேண்டாம்" பால… கனக மய…"

தாம் தத்தீ… தா…திந்தக…

தாம் தத்தீ தாம்தாம்…ததி திந்திக… பசி தாகம் களைப்பு ஏதும் உண்டா? தள்ளாமை உண்டா? இதுவே என்னுலகம் இதுவே என் தவம்! இதை யார் நிறுத்துவார்? தன்னிடம் இருக்கும் எல்லா வித்தைகளையும் இன்றே இந்த க்ஷணமே கொட்டித் தீர்த்துவிடுவதைப் போல… தாம்…தத்தீ… தா… திந்தக…

"காமாட்சியம்மா கதவத் திற. நாங்களும் கொஞ்ச நேரம் உன் சதிரைப் பார்க்கறோம்…" எவ்வளவு கெஞ்சியும் கதவு திறக்காது…. தெருவே வரிந்து கட்டிக்கொண்டு நின்றாலும் கதவு திறக்காது.

"அகிலத்தின் தலைவி. அனைத்தையும் கண்களால் காப்பாற்றுபவளுக்கு என் பிரசாதத்துளி இது. தீப ஜோதிப் பிரகாசமாய்…

"தத்த ததீம்…ததிகை…தத்த ததீம் ததிகை தத்த…."

‘கூப்பிடு தூரத்தில் இருப்பவன் பார்த்துக் கொண்டிருப்பான். அங்கயற்கண்ணியும் ரசித்துக் கொண்டிருப்பாள். எனக்கேது குறை’.
வீட்டைவிட்டு வெளியே வருவதே அபூர்வமானதாயிற்று. நான்கு சுவர்களுக்குள்ளும் பரவும் சலங்கையொலி சுவரைப் பிளந்து கொண்டு வெளியே வந்து ரம்மியமாக்குவதை யார் தடுப்பர்?

எல்லாமே தலைகீழாய்ப் போயிற்று. தர்மசக்கரம் அப்ரதஷிணமாய் சுழன்றாற் போலிருந்தது.

கோயில் பூசகர்களுக்குள் ஏகப்பட்ட சச்சரவுகள். மாணிக்க சுந்தரபட்டர் தெருவில் இறங்கி அடிக்கடி சப்தம் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். விபூதிக் கீற்றுகளும் பெரிய குங்குமப் பொட்டும் கோபத்திலும் வியர்வையிலும் கரைந்து முகமே விகாரமாகப் போகும். அவர் குலசேகர பட்டர் வகையறாவாம். அம்மன் கோயில் சந்நிதியில் சிவதீட்சை பெற விக்ரபாண்டி பட்டர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் ஏற்பட்ட ஆத்திரம். ஆகமம் பேசும் வாயிலிருந்து வசைச் சொற்கள் வரிசை கட்டின. விக்ரபாண்டி பட்டர்கள் தாங்களே உயர் குலத்தவர் என்று வாதிட்டனர். குலசேகர பட்டர்கள் சளைத்தவர்களா. சின்னுபட்டர் அறுபதாம் கல்யாணத்தை அம்மையின் சந்நிதியில் வைத்து நடத்தக் கூடாது என்று கட்சி கட்டினர். பிழைக்க வந்தவர்களுக்கு இவ்வளவு அழிச்சாட்டியமா என்று விக்ரபாண்டி பட்டர்கள் கோர்ட் படியேறினர். ஆக பட்டர்களின் சச்சரவும் ரகளையும் பிடிபடாததாகவே இருந்தது. நாங்களே இறைவனின் மறுவடிவம் என்ற கர்வம் பட்டர்களின் கண்களில் தெரிவதைக் கண்டும் மீனாட்சியின் மௌனம் ஏன். புதிர்தான்.

"உண்மையிலிருந்து விலகாதீர். தர்மத்திலிருந்து விலகாதீர். நன்மை தருபவற்றினின்று விலகாதீர். நற்செயல்களிலிருந்து விலகாதீர். கற்பதிலிருந்தும் கற்றுக் கொள்வதிலிருந்தும் விலகாதீர்."

ஒரு கொத்து புறாக்கள் மேலக்கோபுர, உச்சியிலிருந்து கூட்டமாய்ப் பறந்து செல்வதை ஜன்னல் வழியாகப் பார்ப்பது தவிர காமாட்சி பாயிக்கு வேறு வழி தெரியவில்லை. உடைந்து போனாள். இப்படியும் நடக்குமா என விசனப்பட்டாள். இதில் திருச்சுழி பட்டர்கள் குன்னத்தூர் பட்டர்கள் மானாமதுரை பட்டர்கள் என ஏகத்துக்குக் குழப்பம். கோயில் கோர்ட் மாதிரி ஆனது.
சதிர் ஒன்றே உயிர். முன்னைவிட உத்வேகத்தோடு கதவைச் சாத்திக் கொண்டு வீட்டிற்குள்ளே ஆடினாள்.

இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டவள். கனிவும் வல்லமையும் பெற்ற அன்னை தந்த யாசகம். ஏழைக்குப் பரிந்து முதுகில் பிரம்படி வாங்கியவன் கொடுத்தது. ‘அழகிய நிறத்தவளும் கருணை மனத்தவளும். பொன் மயமான என் தேவியே. உன் கருணையினால் மேகங்கள் மின்னலுடன் இரவும் பகலுமாய் மழை பொழியட்டும். தான்ய முளைகளின் வேர்கள் உரம் பெற்று வளரட்டும். பூமி செழிக்கட்டும். என் கலையின் மூலம் இதைச் சொல்வேன். உன் திருப்பணியாளர்களின் ரசக் குறைவான போட்டி சச்சரவு வழக்கு வியாஜ்யங்கள் அனைத்தையும் போக்கி காரிருளிலிருந்து மீட்பது உன் பொறுப்பில்லையா எனக் கோபிப்பேன். என் சலங்கையின் நாதத்தால் மீண்டும் மீண்டும் சொல்வேன். உன் மௌனம் கலைப்பேன். உன் சந்நிதானத்தில் என்ன நடக்கிறது. உன் நாமாவளியைவிட நாணயங்களின் பேரிரைச்சல் சரியோ.’

‘தாமரைப் புஷ்பத்தில் வீற்றிருப்பவளே!. உன்னை வணங்குகிறேன் எங்களுக்கெல்லாம் நீரையும் காற்றையும் உணவையும் நற்சிந்தனைகளையும் தருபவளே. ஸ்வர்ண ஜோதியானவளே. உன் கண்ணொளி ராஜ்யத்தில் இதெல்லாம் என்ன!’

"பால கனக மய… சேல… ஸூஜன பரி பால…"

ஏழெட்டு நடன மணிகள் பாடம் கேட்டுக் கொண்டிருந்தனர். கோயிலடி கனகம் கிண்டல் செய்வாள். மதுரேச பட்டர் முகம் சிவந்துபோகும்.

"என்ன சொல்றே… என்ன சொல்றே… கோயில் பட்டைச் சாதத்தை வாங்கிச் சாப்பிடறவளுக்கு இவ்வளவு கர்வம் ஆகாது…"

"திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டத்தின்போது தேவரடியார்கள் ஏழு முறை பட்டர்களை மட்டையால் அடித்த பிறகே தேர் நகரணும்னு சம்பிரதாயம். திருவாரூர் கோயில்லே கர்பக்கிரகத்துள் நுழைந்து நாங்க சோடசோபசாரம் செய்து கற்பூரம் காட்டிவிட்டு வெளியே வந்த பிறகுதான் அர்ச்சகர்களே உள்ளே நுழையணும். என்னோட பாட்டி மங்களாம்பாத்தாயி காலமானப்ப மதுரை கோயில் பிரதான வாசல்லேதான் கொண்டு வச்சா. கோயிலிலிருந்து அம்மன் வஸ்திரம் கொண்டு வந்து போத்திய பின்னாடிதான் மயானம் கிளம்பும். அக்னிகூட கோயில் மடப்பள்ளியிலிருந்துதான் மயானத்துக்கு எடுத்து வரணும். கேள்விப்பட்டிருக்கேன். அவ்வளவு மரியாதை அந்தஸ்து தெரியுமோ."

"கனகம் அதிகப் பிரசங்கித்தனமா பேசாதே" என்று சத்தம் போடுவாள் காமாட்சி பாயி…"

‘அதுக்கென்ன இப்ப. நான் பதிமூணு வருஷம் ஆகம சாஸ்திரம் படிச்சவன். எனக்குத் தெரியாதது ஏது. எங்க தாத்தாவிற்கு குதிரைபட்டர்னே பேரு. பட்டுடுத்தி தலையிலே கிரீடம் வச்சுண்டு சுவாமிக்கு முன்னால் குதிரையிலே போவார். கம்பீரம்னா அப்படியொரு கம்பீரம். அவருக்கு ஆண் வாரிசு இல்லேன்னு சொல்லி குதிரையிலே வேற யாரையும் ஏறவிடலே. எங்க பெரிய தாத்தா சுப்ரீம் கோர்ட் வரை போய் ஜெயிச்சு வந்தார். அவரோட வம்சமாக்கும் நான். பட்டமார் வீட்டுப் பெண்களுக்கும் பூஜை முறையுண்டுன்னு எங்க பெரியப்பா போட்ட கேஸ் இன்னும் நடந்திண்டிருக்கு முப்பது வருஷமா…"இப்படிச் சொல்லிச் சொல்லி பெருமிதப்படும் பட்டர்களை தேவி எப்படி சகித்துக் கொள்கிறாள்.

– ‘காத்யாயினியை வணங்குவேன். அவள் கருணை மிக்கவள்.
– தேவியைத் துதிப்பேன் – அவள் இரக்கமுள்ளவள்.
– சுவர்ண லட்சுமியைப் பிரார்த்திப்பேன் – அவள் ரட்சிக்கும் தன்மையானவள்.’

காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை. அனைத்தையும் அதன் நிறை குறைகளோடு அங்கீகரித்துவிடுகிறது. சதிர் இல்லையென்றவுடன் மதனபள்ளி நஞ்சன்கூடு பாகாலா, சித்தூர் என அவரவர்கள் பூர்வீக ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். காமாட்சி பாயி மறுத்துவிட்டாள். ‘என் தவச் சாலையே மதுரை என்றாள்.

"நாழியாகலையா… சீக்கிரம் ஆகட்டும். பந்தல்காரா வந்தாச்சு… இன்னும் பதினைஞ்சு நாற்காலிக்குச் சொல்லிடு…" உட்கார்ந்திருந்தவர் முகங்களில் அலுப்பு படர ஆரம்பித்தது.

காமாட்சி பாயி சாகேப்’பின் புன்னகை நிரந்தரமோ? ஆழ்ந்து உறங்குவது போலிருந்தது.

– சொக்கலிங்கனை யாரறிவார் – எங்கள் சொக்கலிங்கனை. "சிம்மேந்திர மத்தியமத்தில் காமாட்சிபாயின் முத்திரைகள் என்ன அழகு! என்ன அற்புதம். ‘வரம் பெற்றவடி நீ’ என்று உருகுவாள் பாக்யத்தம்மா. மீனாட்சி தேவி உன் கண்ணசைவுக்குப் போட்டியாய் இங்கே பார் என் நயன வித்தையை – தஞ்சாவூர் நட்டுவாங்கம் பொன்னையா பிள்ளை ஒரு தடவை ‘ஆஹ்ஹா’ என்று சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தாராம். தஞ்சாவூர் வடிவேலுகூட ஒரு தடவை இவளுக்கு பிடில் வாசிக்கும்போது சுருதி விலகி திரும்பப் பிடிக்க முடியாமல் தடுமாறிப்போய் விட்டாராம்.

"ரமணீ… இப்படியே பழய கதய பேசிண்டிருந்தா ஆச்சா. தலைக்கு மேல வேலை கிடக்கு. நாளை காலம்பற எங்க சித்தப்பாவுக்கு சதாபிஷேகம் மானாமதுரை போகணும். சீக்கிரம் ஆகட்டும். முனிசிபாலிட்டி வண்டிக்குச் சொல்லியாச்சு. கோயில் ராஜகோபுர வாசல்லே நிறுத்த முடியுமோ, நடை சாத்த முடியுமோ. அம்மன் வஸ்திரத்த எடுத்துப் போர்த்தி மரியாத பண்ண முடியுமோ. அக்னி எடுத்து வந்து சம்ஸ்காரம் பண்ண முடியுமோ. இவ மராட்டி ஜாதி வேற…."

மேல பட்டமார் தெருவிலே நாதஸ்வர இசை மெல்ல காற்றில் மிதந்து வந்தது. பட்டமார் சமூகத்தில் சடங்குகளுக்குப் பஞ்சமில்லை. இப்போ அது ஒன்றுதான் மிச்சம். எல்லாம் மாறிய பிறகு இவர்களின் சடங்குகள் மட்டும் மிச்சம். கோயிலும் மாறிவிட்டது. உள்ளே ஏகப்பட்ட கடைகள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மாதிரி – எங்கும் இரைச்சல். அதிகார மிடுக்கோடு அரசாங்க அதிகாரிகள்… அவசரமாய் வரம் வாங்கிக் கொண்டு ஓடும் கூட்டம். மாற்றம் இயற்கையானது என்று இன்னும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் அன்னை மீனாட்சி.

ஆலிலைக் கிருஷ்ணன் கண் சிமிட்டுவது போலிருந்தது. பெரிய அலமாரியில் பட்டுத்துணிகள்… சதிர்க் கச்சேரிக்கான நைந்துபோன பளபளப்பான உடைகள். ஆபரணங்கள். ஒரு ஓரமாக பாசியும் துருவும் படிந்த சலங்கைகள்…

தக தத்… தித்தக்க ஜனுதாம்…தகதித்

தகஜனு தாம்தக ஜனுதாம் ஜனுதாம்… திஸ்ர நடையில் தொடங்கி சதுஸ்ர நடைக்கு சஞ்சரித்து மூன்று முத்தாய்ப்புகளுடன் அனுபல்லவியை இணைத்து அபிநயம் செய்வது போலிருந்தது. காமாட்சி பாயி வெறும் கனவாகிப் போய்விட வில்லை.
பெண்கள் சுற்றி உட்கார்ந்து கொண்டு சம்பிரதாயத்திற்காக அழுது கொண்டிருந்தார்கள். நான்கைந்து குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.

அபிநயத்தில் வானத்தை எட்டியவளும் நாலா திசைகளிலும் ஸ்வர விஸ்தாரங்களை வீசியவளும். நாட்டிய ஞானத்தை கால் பாதங்களிலும் கைகளிலும் அடக்கி வைத்திருந்தவளுமாகிய காமாட்சி பாயி இதோ எழுந்து வந்து ஒரு அலாரிப்பில் ரம்மியப்படுத்திவிடுவேன் என்பதைப்போல புன்னகைத்துக் கொண்டிருந்தாள். திடீரென்று வாசலில் சலசலப்பு. "ஆரு… ஆரு… ஆரது…"

ஒரு பச்சை நிறக்கார் வந்து நின்றதை வியப்போடு பார்த்தனர். கதவைத் திறந்து கொண்டு ஒரு முதியவர் இறங்கி தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். பஞ்சகச்சம், இடுப்பில் சிவப்புத் துண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை வெள்ளையாய் கட்டுக்குடுமி, காதுகளில் பளபளக்கும் வைரக் கடுக்கன்கள், நெற்றி நிறைய விபூதி… நடுவே பெரிய குங்குமப் பொட்டு…

"ஆரு… ஆரு… அடையாளம் தெரியலே… எங்கேருந்து வரார்…." கூட்டத்தைப் பிளந்து கொண்டு தடுமாறிக் கொண்டே உள்ளே நுழைந்தார். கண்களில் ஆறாய் ஜலம்.

"அடே… நம்ம விக்கிரபாண்டி… பார்த்து ரொம்ப வருஷமாச்சு… எங்கேயோ தஞ்சாவூர் பக்கம் மகள் வீட்டுக்குப் போய்விட்டவர் இப்போது எப்படி வரார்… உடம்பு தள்ளாடறது… தொண்ணூறு இருக்குமா… விக்கிரபாண்டிய பட்டருக்கு…."

"கா…மா…ட்…சி…பாயி… போயிட்டியா போயிட்டியா…. என்ன விட்டுட்டுப் போயிட்டியா… என் காமாட்சீ…."

அவளுடைய நீண்ட உடம்பின் மீது அப்படியே விழுந்து புரண்டார். "கா…மா…ட்…சீ…."

கலீர் கலீர் எனச் சலங்கையொலி.

"…பால கனக மய…..சேல…"

About The Author