காளித்தம்பியின் கதை (7)

கையிலே தோல்பையுடன் நின்ற பழனி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. மேலும் அங்கேயே நிற்க விரும்பவில்லை. தோல்பையை எடுத்துக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டான். பெரியமேட்டிலிருந்து சூளைக்குச் சென்றான். தன் அறையில் தோல் பையை வைத்தான். காளியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

காளி வந்தான். காளியிடம் பழனி விஷயத்தைச் சொன்னான். தனக்கு வழியில் கிடைத்த தோல்பையைக் காட்டினான். காளி தோல் பையைத் திறந்தான் "அம்மாடி! எவ்வளவு பணம்!!" என்று வாயைப் பிளந்தான்.

"பழனி! நீ என்ன செய்ய முடிவு செய்திருக்கிறாய்? அதைச் சொல்லு!" என்று கேட்டான் காளி.

பழனிக்கு அந்த நிலையில் பணம் தேவை. பள்ளியில் சேரவும், பாடப் புத்தகங்கள் வாங்கவும் பணம் நிச்சயம் வேண்டும். அதிர்ஷ்டம் அவனைத் தேடி வந்திருக்கிறது. கொடுக்கிற தெய்வம் அவன் காலடியில் கொண்டு வந்து அவ்வளவு பணத்தைக் கொட்டியிருக்கிறது. அதை எடுத்துக் கொள்ள வேண்டாமா?

"சீச்சி! என்ன நினைப்பு" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் பழனி. "யாரோ ஒருவர் பணத்தை நாம் எடுத்துக் கொள்வதா? கூடாது. இந்தப் பணத்திற்கு உரியவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும்" என்று முடிவு செய்து கொண்டான்.

"காளி இது யார் பணமோ? இவ்வளவு பணத்தை இழந்தவர் இந்நேரம் எவ்வளவு துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்? அவரைக் கண்டுபிடித்து இதை அவரிடம் கொடுத்து விடவேண்டும். அவரை எப்படிக் கண்டுபிடிப்பது?"

இப்படிப் பழனி சொன்னதும் காளியின் முகம் மலர்ந்தது. "நீ சொன்னபடி செய்வதுதான் நல்லது. பணத்தின் சொந்தக்காரரைத் தேடி நாம் ஏன் வீணாக அலையவேண்டும்? இதை இப்போதே போலீசில் ஒப்படைத்து விடுவோம். போலீசார் சொந்தக்காரர்களைக் கண்டுபிடித்துக் கொடுத்து விடுவார்கள்" என்றான் காளி.

பழனிக்கும் அதுவே சரியென்று தோன்றியது. உடனே காளியும் பழனியும் தோல்பையுடன் புறப்பட்டார்கள். சூளைக்கு அருகில் இருந்த வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றனர். பழனியும் காளியும் அதற்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றதில்லை. அதனால் பயந்து பயந்து உள்ளே சென்றனர்.

ஸ்டேஷனின் முன்புறத்தில் இருந்த ஒரு போலீஸ்காரர் பழனியையும் காளியையும் பார்த்தார். "உங்களுக்கு என்ன வேண்டும்? இங்கே எதற்காக வந்தீர்கள்?" என்று கேட்டார்.

பழனி, "நாங்கள் இன்ஸ்பெக்டரைப் பார்க்க வேண்டும்" என்று சொன்னான்.

போலீஸ்காரர், "என்ன விஷயமாக அவரைப் பார்க்க வேண்டும்?" என்று கேட்டார்.
காளி, "இதோ இந்தத் தோல்பை இவனுக்கு வழியில் கிடைத்தது. இதை ஒப்படைக்க வந்திருக்கிறோம்" என்று பழனியிடமிருந்த தோல்பையைக் காட்டினான்.

"தோல்பையா? உம்… அதற்குள் என்ன இருக்கிறது?" என்று போலீஸ்காரர் கேட்டார்.

பழனி, "பணம்! அவ்வளவும் ரூபாய் நோட்டுக்கள்! இந்தப் பை நிறைய இருக்கின்றன" என்று சொன்னான்.

போலீஸ்காரர், "என்னது? இந்தப் பை நிறையப் பணமா?" என்று கேட்டார்.

பழனியும் காளியும் பூமாடுகள் போலத் தலையை அசைத்து, "ஆமாம்" என்றனர்.

போலீஸ்காரர் தன் விசாரணையை அத்தோடு நிறுத்திக் கொண்டார். உடனே அவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். இன்ஸ்பெக்டரிடம் இருவரும் தோல்பையைக் கொடுத்து நடந்ததைக் கூறினர்.

இன்ஸ்பெக்டர் பையைத் திறந்து பார்த்தார். அந்தப் பை எந்த இடத்தில் கிடைத்தது என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். பிறகு, அவர்கள் இருவரையும் வெளியே கொஞ்ச நேரம் உட்காரச் சொன்னார். காளியும் பழனியும் இன்ஸ்பெக்டர் அறையை விட்டு வெளியே சென்றனர்.

இன்ஸ்பெக்டர் பணம் நிறைந்த தோல்பை கிடைத்திருப்பதைச் சில முக்கிய போலீஸ் ஸ்டேஷன்களுக்குத் தெரிவித்தார். பெரியமேட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சொன்னபோது, அங்குப் பணம் நிறைந்த தோல் பை ஒன்று காணோம் என்று ஒரு மரத்தொட்டி சொந்தக்காரரான முஸ்லீம் ஒருவர் புகார் செய்திருப்பதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவரை அழைத்து வருமாறு கூறினார், வேப்பேரி இன்ஸ்பெக்டர். சற்று நேரத்திற்கெல்லாம் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஜீப் வந்தது. அதிலிருந்து பெரியமேட்டு இன்ஸ்பெக்டரும் ஒரு முஸ்லீமும் இறங்கி வந்தனர். வேப்பேரி இன்ஸ்பெக்டர் அவரை வரவேற்றார். காளி, பழனி இருவரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு, பழனி கண்டெடுத்த பையை முஸ்லீமிடம் கொடுத்தார். "இதுதான் உங்கள் பையா" என்று கேட்டார்.

முஸ்லீம், "ஆமாம் ஆமாம், இதுவேதான் என் பை" என்று கூறிக்கொண்டே அதைப் பறித்துக் கொண்டார். "கடையை மூடிக்கொண்டு பையையும் ஒரு பத்திரிகையையும் கக்கத்தில் வைத்துக்கொண்டு போனேன். பாதிவழி நடந்து வந்து பார்த்தால் பத்திரிகைதான் இருந்தது. பையைக் காணோம்" என்றார் முஸ்லீம்.

"இவன்தான் பழனி. இவன்தான் உங்கள் பையைக் கண்டெடுத்தான். இவன் இவனுடைய நண்பன்" என்று சொல்லிவிட்டு, "பையில் நீங்கள் வைத்த பணம் மற்ற பொருள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்" என்றார் இன்ஸ்பெக்டர்.

முஸ்லீம் பையிலிருந்தவற்றை வெளியே எடுத்துப் பார்த்தார். நோட்டுக்கட்டுகளை எண்ணிப் பார்த்தார். பிறகு, "இன்ஸ்பெக்டர் சார்! ஐம்பதாயிரம் ரூபாய் அப்படியே இருக்கிறது. எதுவும் குறையவில்லை. பையை நான் எடுத்துச் செல்லட்டுமா?" என்று கேட்டார்.

இன்ஸ்பெக்டர், "பொறுங்கள்! கொஞ்சம் சடங்கு இருக்கிறது. அதை முடிக்கவேண்டும். பிறகு, நீங்கள் கையெழுத்து போட்டுவிட்டு எடுத்துச் செல்லலாம்" என்று சொன்னார். பிறகு, "பழனி! பையைக் கண்டுபிடித்ததும் போலீஸில் கொண்டு வந்து கொடுத்தாய். உனக்கு என் பாராட்டுகள்! காளி உனக்கும் என் பாராட்டு உரியது. பழனிக்கு இந்த நல்ல வழியைக் காட்டினாயல்லவா? இனி நீங்கள் போகலாம்" என்றார்.

காளியும் பழனியும் இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் தெரிவித்துப் புறப்பட்டனர். அதற்குள் முஸ்லீம், "கொஞ்சம் இருங்கள்" என்றார். தன் சட்டைப் பையிலிருந்த பர்ஸை எடுத்தார். அதிலிருந்த பணத்தில் இருநூறு ரூபாயைத் தனியே எடுத்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார். "சார்! இந்த ரூபாயை உங்கள் கையால் பழனியிடம் கொடுங்கள். பணப்பையைக் கண்டெடுத்துத் தந்ததற்கு நான் தரும் சிறு பரிசு இது" என்றார்.

இன்ஸ்பெக்டர் பணத்தைப் பழனியிடம் நீட்டினார். பழனி தயங்கி நின்றான்.

"வாங்கிக்கொள் தம்பி! இதில் ஒன்றும் தவறில்லை. பிறர் பொருளை எடுத்துக்கொள்வதுதான் தவறு. பரிசு பெறுவது தவறல்ல. உம்… இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்" என்றார் வேப்பேரி இன்ஸ்பெக்டர்.

பழனி அதைப் பெற்றுக்கொண்டான். பரிசு கொடுத்த முஸ்லீமுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தான். பின்னர், காளியுடன் வீட்டுக்குச் சென்றான்.

பழனி, காளி இருவரும் அன்று மிக மகிழ்ச்சியாகத் தூங்கினார்கள். பிறருக்கு உதவும்போது உண்டாகிற மகிழ்ச்சியைக் காட்டிலும் சிறந்த மகிழ்ச்சி எதுவும் இல்லை என்பதை இருவரும் அன்று நன்கு உணர்ந்தார்கள்.

மறுநாள் காலை காளி வேலைக்குப் போய்விட்டான். அதற்குப் பிறகு, பழனி ஓட்டலுக்கருகே சைக்கிள்களைத் துடைக்கும் வேலையைப் பார்க்கப் புறப்பட்டான். காளி வேலை செய்யும் பத்திரிகைக் கடைக்கு அப்பால்தான் ஓட்டல் இருந்தது. பழனி பத்திரிகைக் கடையைக் கடக்கும்போது "பழனி" என்ற குரல் கேட்டது. பத்திரிகைக் கடை முதலாளிதான் அழைத்தார். அவருக்குப் பழனியை நன்றாகத் தெரியும்.

பழனி கடையருகே சென்றான். "என்னங்க" என்று கேட்டான்.

"பழனி! காளி எல்லாம் சொன்னான். ஐம்பதாயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுத்தாயாமே? நீயும் தங்கம்! காளியும் தங்கம்! இனம் இனத்தோடு என்று சொல்லுவாங்களே, அது பொய்யா? இரண்டு பேரும் எப்பவும் ஒற்றுமையா இருக்கவேண்டும். அதுதான் எனக்கு வேண்டியது. பத்திரிகை பாத்தியா பழனி? காலையிலேயே வந்த பத்திரிகை எல்லாவற்றிலும் உங்கள் செய்தி வந்திருக்கிறது" என்று கடை முதலாளி சொன்னார்.

"எங்க செய்தியா? எதுங்க, இந்தப் பணப்பையைப் போலீசிலே கொடுத்த செய்தியா!" என்று வியப்போடு கேட்டான் பழனி.

"ஆமாம் பழனி! இந்தச் செய்தியைப் போஸ்டரிலேயே போட்டிருக்கிறாங்களே" என்றார் முதலாளி.

பழனி, கடைக்கு முன்னே வரிசையாகத் தொங்க விட்டிருந்த போஸ்டர்களைப் பார்த்தான்.

"ஐம்பதாயிரம் ரூபாய் கண்டெடுத்த சிறுவன்!"

"ஐம்பதாயிரம் ரூபாய் பணப்பையைப் போலீசில் கொடுத்தான். சிறுவனின் நேர்மை!"

"பணப்பை கண்டெடுத்த சிறுவனுக்குப் பரிசு."

போஸ்டர்களைப் படித்த பழனி கடையிலிருந்த செய்தித்தாள்களை எடுத்துப் படித்தான். பழனி பணப்பையைக் கண்டது, காளியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று திருப்பிக்கொடுத்தது, பணத்தின் உரிமையாளர் ரூபாய் இருநூறு பரிசு கொடுத்தது ஆகிய விவரங்களை ஒவ்வொரு செய்தித்தாளும் தனக்கே உரிய பாணியில் வெளியிட்டிருந்தது.

பழனி செய்தித்தாள்களைக் கடையில் வைத்து விட்டான்.

"இன்று மாலை, பரிசுப் பணத்தில் காளிக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும்" என்று நினைத்தான் பழனி. உடனே கடை முதலாளியிடம், "காளி வந்தால் என்னைப் பார்க்கச் சொல்லுங்கள். நான் ஓட்டல் அருகே இருக்கிறேன்" என்று சொன்னான்.

"நம்ம பக்கத்து ஓட்டல்தானே? காளி வந்ததும் சொல்கிறேன்" என்றார் கடை முதலாளி. பழனி சைக்கிள் துடைக்கச் சென்றான்.

அழகன், ‘மல்லிகை’ சிறுவர் இதழைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் மனம் பத்திரிகையில் பதியவில்லை. விடுமுறை நாட்கள் யாவும் பழனி இல்லாததால் வீண் நாட்களாகக் கழிந்தன. அழகனுக்குப் பழனியைப் பிரிந்திருப்பது மிகவும் சிரமமாய் இருந்தது. அந்த நேரத்திலும் பழனியை நினைத்தான் அவன்.

பழனி மதுரையை விட்டுப்போன மறுநாள் மாலை சுந்தரேசர் அழகனின் வீட்டுக்கு வந்தார்.

"அழகா! பழனி எங்கே போவதாக உன்னிடம் சொன்னான்?" என்று கேட்டார்.

அழகனுக்கு அந்தக் கேள்வியே வியப்பளித்தது.

"கோயமுத்தூருக்குப் போவதாகச் சொன்னான். நீங்கள்தானே கோவைக்கு டிக்கெட் வாங்கினீர்கள்! இப்போது ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? ஏதாவது…" என்று இழுத்தான் அழகன்.

சுந்தரேசர் பெருமூச்சு விட்டார்.

"அழகா! பழனி கோவைக்குப் போகவில்லை. வேறு எங்கோ போயிருக்கிறான். அவனுக்கு நீதானே உயிர் நண்பன்; ஒருவேளை, உண்மையில் எங்கே போகப் போகிறான் என்பதை உன்னிடம் சொல்லியிருப்பானோ என்று நினைத்தேன்" என்றார் சுந்தரேசர்.
‘பழனி கோவைக்குப் போகவில்லையா? பின் எங்கே போனான்?’ அழகனுக்கு இது தெரியாது. "பழனி என்னிடமும் ஒன்றும் சொல்லலைங்க. எங்கே போயிருப்பான்? எனக்கு ஒன்றும் தெரியலைங்களே" என்றான்.

சுந்தரேசர், "சரி அழகா! வருகிறேன். பழனி இல்லை என்பதற்காக வீட்டுப்பக்கம் வராமல் இருக்காதே! அடிக்கடி வந்து கொண்டிரு" என்று கூறினார்.

அழகன், "சரிங்க" என்றான். சுந்தரேசர் சென்றார்.

அதன் பிறகு, ஒருநாள் பழனியிடமிருந்து அழகனுக்குக் கடிதம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு சுந்தரேசரிடம் ஓடினான். அப்போது அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்!

ஆனால், அழகனுக்குக் கோபம். பழனி தன் முகவரியைக் கொடுத்திருந்தால் இவனும் பதில் போட்டிருக்கலாமல்லவா? அந்த ஒரு கடிதத்திற்குப் பின் வேறு கடிதமே வரவில்லை. அது வேறு ஏமாற்றம்.

அழகன் இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். இத்தனை நினைவுகளும் தோன்றித் தோன்றி மறையும்போது பத்திரிகையிலிருப்பது அவன் மனத்தில் பதியுமா?

அழகன் பத்திரிகையை மூடி ஒருபுறம் வீசி எறிந்தான். அவனால் வீட்டிலிருக்க முடியவில்லை. பள்ளிக்கூடத்து விளையாட்டு மைதானத்தில் மாலையில் மாணவர்கள் வந்து விளையாடுவது வழக்கம். விடுமுறையிலும் இந்த வழக்கம் நிற்பதில்லை. அழகன் அங்காவது போகலாம் என்று புறப்பட்டான்.

விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஐஸ் விற்கும் ஒருவன் அங்கு வந்து சேர்ந்தான். விளையாடிக் கொண்டிருந்த நாகமாணிக்கம் உடனே விளையாட்டை நிறுத்தினான். "போதும் விளையாடினது. வாருங்கள், ஐஸ் சாப்பிடுவோம்! இன்று எல்லோருக்கும் நான் ஐஸ் வாங்கித் தருகிறேன்" என்றான். அவன் பையில் ஐம்பது ரூபாய் நோட்டு இருந்தது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் நாகனைச் சூழ்ந்து கொண்டனர்.

"ஏய் ஐஸ்! ஆளுக்கு ஒன்று கொடு! ஐம்பது ரூபாய்க்குச் சில்லறை இருக்கா" என்று கேட்டான்.

"ஐம்பது ரூபாய்க்குச் சில்லறை எப்படி அண்ணாச்சி இருக்கும்?" என்றான் ஐஸ்காரன். நாகன் ரூபாயை அருகே இருந்த ஒருவனிடம் கொடுத்துச் சில்லறை மாற்றி வரச் சொன்னான். ஐஸ்காரன் ஆளுக்கொரு ஐஸ்புரூட் கொடுத்தான். நாகன் ஒன்றை வாங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தபோதுதான் அழகன் அங்கு வந்தான்.

நாகன் அழகனைப் பார்த்தான். அழகனிடம் அன்று ஒருநாள் வாங்கிய உதை நன்றாக நினைவிருந்தது. அது மட்டுமா, அவனுடைய பல் ஒன்று இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறதே! இதையெல்லாம் நினைத்த நாகன் அழகனைத் தன் பக்கம் சேர்த்துக்கொள்ள விரும்பினான். அதனால் ஐஸ்காரனிடம் மற்றொரு ஐஸ்புரூட்டை வாங்கிக் கொண்டு அழகனிடம் போனான்.

"அழகா, இந்தா ஐஸ்புரூட் சாப்பிடு!" என்று அதை நீட்டினான்.

நாகனைக் கண்டதுமே அழகன் முகம் மாறியது. "சே… இங்கே வந்தது இவன் முகத்தில் விழிக்கவா?" என்று நொந்துகொண்டு "வேண்டாம்" என்று சொன்னான்.

"இதோ பார் அழகா! உன்னை நான் பகைவனாகக் கருதவில்லை. நமது சண்டை அன்றோடு போனது. உம்… இதை வாங்கிக்கொள்!"

"ஐயா மகாத்மா காந்தியே! பகைவனாகக் கருதாத மனப்பக்குவம் எப்போது வந்தது? நீ இப்படிச் சொல்வதைப் பார்த்தால் இதன் மூலமும் ஏதோ லாபத்தை எதிர்பார்க்கிறாய் என்பது தெரிகிறது" என்றான் அழகன்.

அழகன் அவ்வளவு சுலபத்தில் தன்னோடு சேர மாட்டான் என்பதைப் புரிந்துகொண்டான் நாகன். "அழகா! பழனியைப் பற்றி நான் சொன்னதை நினைத்துத்தானே இப்படிப் பேசுகிறாய்? நீயே சொல்! முதல் மார்க்கு வாங்க வேண்டிய நான் ஒவ்வொரு முறையும் ஏமாந்தால் எப்படி இருக்கும்? பழனியைக் காட்டிலும் நான் நன்றாக எழுதுகிறேன். என்றாலும் எனக்கு ஏன் முதல் மார்க்கு கிடைப்பதில்லை?"

அழகன் அதற்கு மேல் நாகனின் பேச்சைக் கேட்க விரும்பவில்லை.

"நாகா, மற்றவரிடம் சொல்லும் கதையை என்னிடம் சொல்லாதே! உன் திறமையும் அறிவும் எனக்குத் தெரியும். இதை இந்த வருடம் மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள். நாகா! பழனி இந்தப் பள்ளியில் இந்த வருடம் படிக்கப் போவதில்லை. நீ உன் சூரத்தனத்தைக் காட்டி முதல் மார்க்கு வாங்கு பார்க்கலாம்" என்றான் அழகன்.

"என்ன! பழனி இந்தப் பள்ளியில் படிக்கப் போவதில்லையா?" வியப்போடு கேட்டான் நாகன்.

"ஆமாம் நாகா ஆமாம். நீ கெட்டிக்காரனாயிற்றே! மிக நன்றாகப் பரீட்சை எழுதுவாயே. உன்னால் முடிந்தால், உனக்கு உண்மையிலேயே திறமை இருந்தால் முதல் மார்க் வாங்கு" என்று கூறிவிட்டு அழகன் அங்கிருந்து சென்றான்.

நாகன் சிலைபோல நின்றான். "பழனி இந்தப் பள்ளியில் படிக்கப் போவதில்லையா? என்ன அதிசயம்! ஏன் படிக்கப் போவதில்லை? எங்கே படிக்கப் போகிறான்?" நாகன் கையிலிருக்கும் ஐஸ்புரூட் கரைவதையும் கவனிக்காமல் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அழகன் நேரே வாசகசாலை ஒன்றுக்குச் சென்றான். கொஞ்சநேரம் பத்திரிகைகளைப் புரட்டினான். விளக்கு வைக்கும் நேரம். மாலைப் பத்திரிகைகள் வந்தன. அழகன் அவற்றைப் புரட்டினான். அதில் ஒரு செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது.

அது, ஐம்பதாயிரம் ரூபாய் அடங்கிய பையைச் சிறுவன் போலீஸில் ஒப்படைத்த செய்திதான். அதில் ஒப்படைத்த சிறுவன் பெயர் பழனி என்று இருப்பதைப் பார்த்தான். "யார் இந்தப் பழனி; நம் பழனியின் கடிதம் திருச்சியிலிருந்தல்லவா வந்தது? பழனி திருச்சியிலிருந்து சென்னைக்குப் போயிருந்தால்…?"

அழகன் சிந்தித்தான். ஒன்றும் தோன்றவில்லை. எதற்கும் சுந்தரேசரிடம் சொல்லலாம் என்று நினைத்து வாசகசாலையிலிருந்து புறப்பட்டான். சுந்தரேசர் வீட்டுக்கு மாலையில் செய்தித்தாள் வரும் என்பது அவனுக்குத் தெரியும்; தெரிந்தும் கடையில் ஒரு செய்தித்தாள் வாங்கிக் கொண்டு சுந்தரேசர் வீட்டுக்கு விரைந்து சென்றான்.

சுந்தரேசர் அப்போதுதான் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். அழகனைப் பார்த்ததும் நின்றார். அழகன் சுந்தரேசருக்கு வணக்கம் தெரிவித்தான். "வா அழகா" என்று வரவேற்றார் சுந்தரேசர். அழகன் எதையோ சொல்லத் துடிக்கிறான் என்பதை அவன் தோற்றத்திலிருந்தே தெரிந்து கொண்டார்.

"அழகா, ஏதாவது பேசவேண்டுமா?" என்று கேட்டார். "ஆமாம்" என்று பதிலளித்தான் அழகன். உடனே, சுந்தரேசர் அழகனை அழைத்துக்கொண்டு வரவேற்பு அறைக்குச் சென்றார். இருவரும் அந்த அறையில் உட்கார்ந்தார்கள். "அழகா! ஏதோ சொல்ல வேண்டுமென்று சொன்னாயே" என்று நினைவுபடுத்தினார்.

அழகன் மடித்து வைத்திருந்த செய்தித்தாளை அவரிடம் கொடுத்தான். "இதோ! இந்தச் செய்தியைப் பாருங்கள்" என்று சொல்லிப் பழனி பணப்பையைப் போலீசில் கொடுத்த செய்தியைச் சுட்டிக்காட்டினான்.

சுந்தரேசர் செய்தித்தாளை வாங்கினார். அழகன் காட்டிய செய்தியைப் படித்தார். செய்தியில் பழனி என்ற பெயரைப் படித்ததும் பரபரப்படைந்தார். மடமடவென்று செய்தியைப் படித்து முடித்தார்.

"அழகா! இதில் வரும் பழனி…" என்று இழுத்தார்.

"நம் பழனியாக இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம். அதனால்தாங்க நான் உங்களிடம் சொல்லலாம் என்று வந்தேன்" என்றான் அழகன்.

"நீ சந்தேகப்படுவது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் சென்னைக்குப்போய் போலீசில் கேட்கிறேன். அவர்கள் செய்தியில் உள்ள பழனியைக் காட்டுவார்கள். அவன் நம் பழனிதானா என்று பார்க்கிறேன்" என்றார் சுந்தரேசர்.

"அதுதாங்க சரி! எதுக்கும் போய்ப் பாருங்க. எப்போது போகப்போறீங்க?" என்று கேட்டான் அழகன்.

"இன்றைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறது. அதற்காகத்தான் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். நீ வந்தாய். நாளை மாலை புறப்பட்டுப் போகிறேன். அழகா! நான் வெளியே போகிறேன். நீ அம்மாவைப் பார்த்துவிட்டுப் போ. ஆனால், அவளிடம் இந்த விஷயத்தைச் சொல்லாதே!" என்று சொல்லிவிட்டுச் சுந்தரேசர் வெளியே சென்றார்.

அழகன் பழனியின் தாயாரைப் பார்த்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். பிறகு, வீட்டிற்குச் சென்றான்.

மறுநாள் மாலை.

அழகன் தன் அறையில் உட்கார்ந்து பழனிக்கு ஒரு கடிதம் எழுதினான். அதைச் சுந்தரேசரிடம் கொடுத்தனுப்ப விரும்பினான் அழகன். சுந்தரேசர் சென்னையில் பார்க்கும் பழனி, அவர் மகனாக இருந்தால் அவனிடம் கொடுக்குமாறு சுந்தரேசரைக் கேட்டுக்கொள்ள முடிவு செய்திருந்தான்.

கடிதம் எழுதி முடித்ததும் அதை ஓர் உறையில் போட்டான். அதன்மேல் பா.சு.பழனி, சென்னை என்று எழுதினான். அதை எடுத்துக்கொண்டு சுந்தரேசரின் வீட்டுக்கு ஓடினான். வெளியிலேயே காவல்காரனிடம் "சுந்தரேசர் இருக்கிறாரா" என்று கேட்டுக் கொண்டான். காவல்காரன் "இருக்கிறார்" என்றான்.

"பரவாயில்லை. இன்னும் ஸ்டேஷனுக்குப் புறப்படவில்லை" என்று நினைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
சுந்தரேசர் ஹாலில் உட்கார்ந்திருந்தார். அவர் கையில் அன்றைய செய்தித்தாள் இருந்தது. அவர் சோர்ந்திருந்தார்.

அழகன் வந்ததை அவர் கவனிக்கவில்லை. அழகன் "வணக்கங்க" என்று சொன்னான். சுந்தரேசர் நிமிர்ந்து பார்த்தார். "அழகனா? உட்கார்" என்றார்.

அழகன் உட்கார்ந்தான். ‘சுந்தரேசர் இருக்கும் நிலையைப் பார்த்தால் ஊருக்குப் புறப்படுகிறவரைப் போல் இல்லையே? ஏன்? சென்னைக்குப் போகவில்லையா?’ அழகன் அதை அவரையே கேட்டுத் தெரிந்துகொள்ள நினைத்தான்.

"நீங்கள் சென்னைக்குப் போகவில்லைங்களா?" என்று கேட்டான் அழகன்.

"இல்லை, அழகா. செய்தியில் பார்த்த பழனி யாரோ! நம் பழனி அல்ல" என்றார் சுந்தரேசர்.

"உங்களுக்கு எப்படித் தெரிந்ததுங்க?" அழகன் கேட்டான்.

சுந்தரேசர் தன் மடியிலிருந்த செய்தித்தாளை எடுத்து அழகனிடம் கொடுத்தார். "அந்தப் பழனியின் படம் இன்றைய பத்திரிகையில் வந்திருக்கிறது பார்" என்றார்.

அழகன் செய்தித்தாளை வாங்கிப் பார்த்தான். முதல் பக்கத்திலேயே ஒரு சிறுவனின் படம் இருந்தது. வெள்ளைப் பற்கள் பளிச்சிட, கருத்த சிறுவன் ஒருவனின் படம் அது. அதன் அடியில் "ஐம்பதாயிரம் ரூபாயைப் போலீசில் கொடுத்த நாணயமுள்ள சிறுவன் பழனி இவன்தான். இவனுக்கு இதற்காக இருநூறு ரூபாய் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது" என்று எழுதியிருந்தது.

அந்தச் சிறுவன் சுந்தரேசர் மகன் பழனியல்ல; வேறு யாரோ. அழகன் ஏமாந்தான். அவன் கொண்டுவந்த கடிதத்தைக் கிழித்து எறிந்துவிட்டு வீட்டுக்குச் சென்றான்.

உண்மையில் பணப்பையைக் கண்டது சுந்தரேசர் மகன் பழனிதானே? அப்படியிருக்க மற்றொருவனின் படம் எப்படிச் செய்தித்தாளில் வந்தது?

–தொடரும்

About The Author