கிங்.. க்வீன்.. ஜாக் (3)

சீட்டுக் கட்டைப் பிரித்ததும் அப்பாவின் முகம் என்னமாய் விகசிக்கும். புதுக் கட்டு என்றால் ஆசையாய் வாசனை பார்ப்பார். கலைத்து இடை சேர்த்து பர்ரென்று அடித்து மீண்டும் குலுக்கி.. படங்களும் எண்ணும் அவரைத் தங்கள் ஆளுமையில் வைத்திருந்தன.

‘ரம்மி ஆடணும்னா இது வேணும்’ தலையைத் தொட்டுக் காண்பிப்பார்.

சின்ன வயசில் ஒரு தரம் உமாவையும், அம்மாவையுமே இழுத்து அமர வைத்து விட்டார்.

"ஒரு தரம்.. ஒரே ஒரு தரம்.. வந்து விளையாடிப் பாருங்க"

அம்மாவுக்கு மனசே இல்லை. உமாவுக்கு அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

"வாம்மா.. ஒரு தடவைதானே"

கலைத்து.. ஜோக்கர் வெட்டச் சொல்லி.. ஆளுக்கு 13 கார்டுகள் பிரித்துப் போட்டார். அதற்கு முன்பே விளக்கம் சொல்லியிருந்தார்.

"இது ஏஸ்.. இது கிங்.. இது க்வீன்.. இதுதான் கிளாவர்.. டைஸ்..ஆடுதன்.. இப்படிச் சேர்ந்தா ஒரு செட்டு"

முதலில் புரிபடவில்லை. தானே இருதரப்பும் விளையாடிக் காட்டியதும் ஓரளவு புரிந்தது. தானும் சேர்ந்து விளையாடிப் பார்க்க பாதி ரகசியம் வெளிப்பட்டது.

இரவுச் சாப்பாடு முடிந்து வீட்டில் இருந்த அபூர்வம். அப்பாவின் கைகள் பரபரவென்று சீட்டுகளை ஏந்தத் துடித்த தவிப்பு, அம்மாவையும் பெண்ணையுமே உட்கார வைத்து விட்டது.

அம்மா வெறுப்பாய் அமர்ந்திருந்தாள்.

"எதைப் போடறதுன்னு புரியலைப்பா"

"எதையோ ஒண்ணு போட்டுத் தொலைடி" என்றாள் அம்மா.

"ரெண்டு ஆடுதன் தனியா நிக்குமே.. அதைப் போட்டுடாதே"

அப்பா எப்படிக் கண்டு பிடித்தார்.. மூன்று சுற்று முடிந்து நாலாவது சுற்று.

"எப்படிப்பா?"

தலையைத் தொட்டுக் காண்பித்தார்.

"உங்கம்மாவுக்கு அது வேணும். வேற கார்டை இறக்கு. செட்டு சேர்ந்தது வேணாம். மூணு ஏஸ்.. மூணு கிங்னு வச்சிருப்பியே.. அதுல கழட்டு"

"போப்பா.. அப்புறம் எப்படி மறுபடி சேர்க்கறது"

"உங்கிட்டே ரியல் ரம்மியே இல்லியே"

"அது எப்படிப்பா தெரியும்?" மறுபடி வியப்பு.

"உம்மூஞ்சியப் பார்த்தாலே தெரியறது.."

உமாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.

அன்றைய ஆட்டத்தில் அம்மாதான் ஜெயித்தாள். கொத்தாய்க் கீழே போட்டு எழுந்து போனாள்.

"பாரேன் அலட்சியத்தை.."

அப்பா எரிச்சலாகி விட்டார்.

அம்மாவிடம் இரவுப் படுக்கையில் சிலாகித்தபோது "வாயை மூடுடி.." என்றாள்.

"எப்படிம்மா"

"எனக்கு அதுல வெறி இல்லைடி. எப்பவாவது அமையறதை எப்பவும் கிடைக்கும்னு தொரத்தறது உங்கப்பா"

வீட்டில் அதன் பிறகு அப்பா இவர்களைக் கூப்பிடுவதில்லை. அப்பாவின் சட்டைப்பை வறட்சியான தினங்களில் தானே மானசீகமாய்ப் பிரித்துப் போடுகிற பாவனையில் அபிநயிப்பார்.

உமா அப்பாவுடன் பேசிப் பார்த்ததில் இன்னமும் இறுகிப் போனார்.

"நீ சின்னப் பொண்ணு.. பேசாம போ.. எனக்குத் தெரியும்"

"பொழுதுபோக்கா இருக்க வேண்டிய விஷயம்பா. இப்படி அதுவே வாழ்க்கைன்னு"

அப்பாவின் கோபம் முகத்தில் தெரிந்தது.

"வாயை மூடிண்டு போடி"

அப்பா கை நீட்டி அறைந்ததில்லை. அன்று அந்த வார்த்தைகள் அறைந்தன. உமாவுக்குச் சலிப்பு வந்து விட்டது.

‘எப்படியோ போகட்டும்’

கூட்டுக்குள் முடங்கியவளை வெளியே இழுத்தவன் தினகர்.

(தொடரும்)

About The Author