கிங்.. க்வீன்.. ஜாக் (6)

அம்மா பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். சரமே விலைக்குக் கிடைக்கிறது. ஆனாலும், அம்மாவுக்கு உதிரிப்பூ வாங்கித் தொடுப்பதில் தனி சந்தோஷம். அந்த லாகவம் உமாவுக்கு வரவில்லை. முடிச்சு ஒழுங்காய் வந்தால் பூ விழுந்து விடும். பூ ஒழுங்காய் நின்றால் முடிச்சு தப்பிவிடும்.

"அம்மா"

‘என்ன’ என்று கேட்பது போல, நிமிர்ந்து பிறகு பூத்தொடுப்பதில் கவனம் திரும்பியது.

"எந்த மாறுதலும் இல்லாம.. வாழணுங்கிற நிர்ப்பந்தம் மட்டும் இருக்கிற மாதிரி.. நாம வாழறாப்ல இருக்கு"

அம்மா குனிந்திருந்ததால் என்ன உணர்வை முகம் பிரதிபலிக்கிறது என்று புரிபடவில்லை.

"அபத்தமா இருக்கும்மா"

"இப்ப என்ன செய்யணும்"

"எங்கேயாவது ஒரு பத்து, பதினைந்து நாள் போயிட்டு வரலாம். ஆனா திரும்ப இதே வாழ்க்கைக்குத் திரும்பனும். வேற ஊருக்கு மாற்றல் வாங்கலாம். அதுவும் ஆறு மாசம் இருந்தாப் பழகி, அலுப்பு வந்துரும்"

‘நீயே யோசித்து முடிவு சொல்’ என்கிற மாதிரி அம்மாவின் மெளனம் இருந்தது.

"செத்துப் போயிடலாம்னுகூடத் தோணுது"

சொன்னபிறகு உமா நாக்கைக் கடித்துக் கொண்டாள். சட்டென்று அந்த வரி விடுபட்டு விட்டது. எய்த அம்பு இனித் திரும்பாது.

அம்மா அழுதிருக்க வேண்டும். பூவுக்குத் தெளித்த நீருடன் இரண்டு சொட்டுக் கண்ணீரும் தெறித்தது. பாதி தொடுத்ததோடு எழுந்து போய் விட்டாள்.

பக்கத்து வீட்டாருடன் அவ்வப்போது புன்னகை பரிமாறியதுடன் சரி. வேறு விதமான உரையாடல்களோ, விசேஷ நாட்களில் இனிப்பு வழங்கிப் பெறுவதோ இல்லை.

இன்று வெளியில் வந்து நின்ற உமாவைப் பார்த்துச் சிரித்ததோடு நிற்காமல், நெருங்கியும் வந்து நின்றாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி.

"எங்க வேலை பார்க்கறே"

சொன்னாள்.

"என்ன சம்பளம் வரும்?"

லேசாய் எரிச்சல் வந்தது.

"எங்க குடும்பத்துக்குப் போதும்"

"அதுக்கில்ல.. உனக்குக் கல்யாணம் ஆயிருச்சின்னா, உங்க வீட்டுக்கு உன்னால பணம் எதுவும் தர முடியுமான்னு"

"நீங்க ஏன் அதுக்கு கவலைப்படறீங்க"

"பின்னே.. இத்தனை வயசாகியும் உன்னைக் கட்டிக் கொடுக்கணும்னு நினைக்காம.. கம்முனு இருக்காங்களே.. கட்டிக் கொடுத்துட்டா.. உன் சம்பளப் பணம் போயிரும்னுதானே.. வளர்ந்த பெண்ணைப் புருஷனோடப் பார்க்கணும்னு பொறுப்பு வேணாமா?"

எவ்வளவுதான் அண்டை அயலாருடன் விலகி இருந்தாலும், நம்மைக் கவனிப்பதும் நம் மீதான விமர்சனங்களுடன் அவர்கள் வாழ்வதும் தவிர்க்க முடியாது போலும் என்று, அந்த நிமிடக் கோபத்திலும் உமாவுக்குத் தோன்றியது. தினகரின் பழக்கம் கற்றுத் தந்த உணர்வு அலசல் இது.

‘நாம எப்பவும் தெளிவா இருக்க முடியும் உமா. அதனால என்ன பயன்னு நினைக்கறியா.. மத்தவங்களை நாம மாத்த நினைக்கறது வீண் வேலை. நம்மால அது முடியாத காரியங்கூட. நம்ம உணர்வை சரியான கோணத்துல பழக்கிட்டோம்னா.. எப்பவும் நிதானமா இருக்கலாம். குறைந்தபட்சம் மத்தவங்க நம்மை ஆளுமைப் படுத்த முடியாது’

உமா எதுவும் பதிலளிக்காமல் உள்ளே வந்து விட்டாள். அம்மாவும் இந்த உரையாடலைக் கேட்டிருக்க வேண்டும். இவள் வரும்போது அம்மா வழியில் நின்றிருந்தாள்.

குளத்தில் எறியப்பட்ட கல் அலை எழுப்பாமல் விடுவதில்லை. உள்ளூர அடிமட்டத்தில் நிச்சலனமாய் இருந்தாலும் புறத்தில் தளும்பித்தான் ஆக வேண்டும் என்றும் உமாவுக்குத் தோன்றியது.

தினகர் ‘குட் மார்னிங்’ சொன்னதும் திருப்பிச் சொன்னாள்.

"நைட் சரியாத் தூங்கலியா"

"ம்"

"இன்னிக்கு லீவு போட்டிருக்கலாமே"

"ஸ்டேட்மெண்ட் முடிக்கணும்"

"ஹெல்ப் பண்ணவா?"

"இல்லே.. நான் பார்த்துக்கறேன்"

"ஓக்கே"

போய்விட்டான். அவனிடம் இந்தக் குணம் அவளுக்குப் பிடிக்கும். பிறர் போல மேலே மேலே கேள்விகள் கேட்டு இம்சிப்பதில்லை.

வேலை திருப்தியாய் முடிந்ததும் அரை மணி ஓய்வு கிடைத்தது. மேனேஜர் அவளைப் பாராட்டிச் சொன்னதும் பிடித்திருந்தது. உள்ளூர வந்த பெருமிதம் யோசிக்கவும் வைத்தது.

‘வார்த்தைகள் வருத்தமும், சந்தோஷமும் தர முடியுமானால்.. எப்படி விலகுவது’

தினகரிடம் பேச வேண்டும் போலிருந்தது.

(தொடரும்)

About The Author