கிளியோபாட்ரா-17

ஜூலியஸ் சீஸர் எகிப்து வந்து, ஒன்றரை ஆண்டு காலம் தன்னுடன் பழகி, குலாவி மகிழ்ந்திருந்ததை நினைத்துப் பார்த்த கிளியோபாட்ராவுக்கு வியப்புதான் மேலிட்டது. ஏதோ ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர் வந்ததுபோல் உணர்ந்தாள்.

சீஸர் ரோம் சென்ற அதே நேரத்தில், கிளியோபாட்ராவுக்கு எகிப்தில் இருக்கப் பிடிக்கவில்லை. சீஸரின் நினைவுதான் அவளுக்குள் அடிக்கடி வந்து எட்டிப்பார்த்தது.

இதே தவிப்புதான் சீஸருக்கும்! பேரழகியும், தனது அதிகாரப்பூர்வமற்ற மனைவியுமான கிளியோபாட்ராவை அவரும் நினைக்காத நாட்கள் இல்லை. அவளது நினைவுகளுடனேயே பெரும் படையுடன் ரோமுக்குச் சென்றார்.

சீஸரால் எகிப்தின் நிரந்தர மகாராணியாக அறிவிக்கப்பட்ட கிளியோபாட்ரா நாட்டை ஆளத் தொடங்கினாள். எகிப்தில் அவளுக்கு எதிரிகள் நிறையப்பேர் உண்டு என்பதால், அவளது பாதுகாப்புக்காக ரோமானியப் பாதுகாப்பு படையின் 3 படைப் பிரிவுகளை எகிப்தில் நிறுத்திவிட்டுதான் சென்றார் சீஸர். இதனால், எதிரிகள் பயமின்றி அரியணையில் அமர்ந்தாள் கிளியோபாட்ரா.

இதற்கிடையில், கிமு. 46 ஜூலை மாதம் ரோமை பெரும் படையுடன் சென்றடைந்தார் சீஸர். அவரை வரவேற்க திரளான பேர் வந்திருந்தனர். ரோமானியப் பேரரசை அலெக்ஸாண்டிரியா வரை விரிவுபடுத்திய வெற்றிக் கொண்டாட்டத்தின் அடையாளமாக அவர்கள் அங்கே வந்திருந்தனர்.

உண்மையில், இதைவிட பிரம்மாண்ட மக்கள் கூட்டம் சீஸரை வரவேற்க ரோமில் திரண்டிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. காரணம், சீஸருக்கும், கிளியோபாட்ராவுக்கும் இடையே உள்ள உறவுதான்.

கிளியோபாட்ராவை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டு, ரோமப் பேரரசுக்கே அவளை மகாராணியாக்கப் போகிறார் சீஸர் என்ற தகவல், அவர் ரோம் வருவதற்கு முன்பே அவரது ரோமானிய அரசியல் எதிரிகளால் ஓரளவுக்கு பரப்பப்பட்டுவிட்டது.

இதுதவிர, இன்னொரு காரணமும் இருந்தது. ரோமப் பேரரசுக்கு உட்பட்டு இருந்த ஸ்பெயின் பகுதியில், சீஸரின் பரம எதிரியான பாம்பேவின் மகன்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அங்கே அவர்கள் வைப்பதுதான் சட்டமாக இருந்தது.

சீஸரிடம் பர்சலஸ் போரில் தோல்வியடைந்த பாம்பேவை கிளியோபாட்ராவின் மாஜி கணவன் 13-ம் டாலமியின் ஆட்கள் கொலை செய்துவிட்டதால் சீஸரின் வேலை குறைந்தது. அதேநேரத்தில், பாம்பேயின் மகன்கள் ஆதிக்கத்தில் இருந்த ஸ்பெயினை, அவர்களுடன் போரிட்டு கொன்று, ரோமப் பேரரசில் தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு வந்தார் சீஸர்.

ரோமானியர்களான பாம்பேயின் மகன்களைக் கொன்று கிடைத்த இந்த வெற்றி சில ரோமானியர்களுக்கு கசப்பாக இருந்தது. அதனால், சீஸருக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் சற்று ஒதுங்கி இருந்தனர்.

இருந்தாலும், இதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை சீஸர். மாறாக, எகிப்து வரையிலான தனது வெற்றியை உற்சாகமாகக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்தார். அடுத்த சில நாட்களிலேயே ரோம் நகரம் திருவிழாக்கோலம் பூண்டது. பெரும்பாலான மக்கள் உற்சாகம் ஆனார்கள்

ஜூலியஸ் சீஸர் அதைவிட படு உற்சாகத்தில் மிதந்தார். காரணம், ரோமின் வெற்றி விழாவில் தனது ஆசைக்காதலி கிளியோபாட்ராவும் கலந்துகொள்ள இருக்கிறாள் என்பதுதான்.

சீஸரின் அழைப்பை ஏற்றுப் பெரும் படையுடன் ரோமுக்கு பயணமானாள் கிளியோபாட்ரா. கூடவே, ஒரு வயதே நிரம்பியிருந்த தனது மகன் சீஸர் டாலமியையும் அழைத்து வந்தாள். அப்போது, கிளியோபாட்ராவின் இப்போதைய அதிகாரப்பூர்வ கணவன் தம் தம்பி 14-ம் டாலமியும் உடன் அழைத்து வரப்பட்டான். சில வாரங்களில் அவர்கள் ரோம் வந்து சேர்ந்தனர்.

வெகுநாட்களுக்குப் பிறகு கிளியோபாட்ராவை மீண்டும் நேரில் பார்த்த சீஸர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகன் சீஸர் டாலமியை முத்தமிட்டுக் கொஞ்சி மகிழ்ந்தார்.

இதையெல்லாம் கண் எதிரே பார்த்துக்கொண்டு அப்பாவியாய் நின்று கொண்டிருந்தான், கிளியோபாட்ராவின் டம்மி கணவனும், தம்பியுமான 17 வயது 14-ம் டாலமி.

கிளியோபாட்ரா தனது ஆசைக்காதலி மட்டுமல்ல; எகிப்து பேரரசுக்கு மகாராணியும்கூட என்பதால், அவளை பிரம்மாண்ட அரண்மனையில் தங்க வைத்தார் சீஸர். ரோம் நகரை ஒட்டி ஓடிய டைபர் நதிக்கரையில் அந்த பிரம்மாண்ட அரண்மனை அமைந்திருந்தது.

சீஸரின் வெற்றிவிழா செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்கள் கொண்டாடப்பட்டது. ரோம் நகர வீதிகளில் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர் பெரும்பாலான ரோம் மக்கள்.

இந்த வெற்றிவிழாக் கொண்டாட்டத்திற்கு மத்தியில் ஜூலியஸ் சீஸர் பெரிய திட்டம் ஒன்றையே தீட்டியிருந்தார்.

ரோமுக்கு வந்து சேர்ந்துள்ள கிளியோபாட்ராவை ரோமானிய சட்ட திட்டங்களின்படியும், ரோம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடனும் தனது அதிகாரப்பூர்வ மனைவியாக அறிவிப்பதற்கும், அவள் மூலம் தனக்குப் பிறந்த சீஸர் டாலமியை தனது அரசியல் வாரிசாக அறிவிக்கவும் தயாரானார்.

(இன்னும் வருவாள்…)

About The Author