கிளியோபாட்ரா – 36

ஆண்டனியைத் தற்காலிகமாக பிரிந்த கிளியோபாட்ராவுக்குத் தூக்கம் வர மறுத்தது. தன்னருகில் உதவிக்கு யாரும் இல்லை என்பது போன்ற தவிப்புக்கு ஆளானாள்.

ஆண்டனியின் பிரிவைத் தாங்க முடியாத கிளியோபாட்ரா நீண்ட தூக்கம் தரும் மருந்தைத் தேடியதாக தனது நாடகத்தில் பதிவு செய்கிறார் ஷேக்ஸ்பியர். தூக்க மருந்து கேட்கும் கிளியோபாட்ராவிடம் ஏன் என்று கேட்கிறாள், சார்மியான் என்ற அவளது தோழி.

அதற்கு கிளியோபாட்ரா, "எனது ஆண்டனியைப் பிரிந்திருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தைத் தூங்கியே கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால்தான் அப்படி கேட்டேன்" என்கிறாள்.
இதில் இருந்தே, கிளியோபாட்ரா ஆண்டனி மீது எந்த அளவுக்குக் காதல் வசப்பட்டிருந்தாள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆண்டனியின் பாதுகாப்புக்காக அவனுடன் எல்லைவரை சென்று திரும்பிய தம் படைவீரர்களில் ஒருவனை அழைத்து ஆர்வமாக பேசினாள் கிளியோபாட்ரா.

"வீரனே… வந்துவிட்டாயா? உன் வருகைக்காகத்தான் இவ்வளவு நேரமும் காத்திருந்தேன். ஆண்டனி நல்ல முறையில் புறப்பட்டுச் சென்றாரா? நிச்சயம் அவரது பயணம் சிறப்பாகத்தான் இருக்கும். உன் முகத்தைப் பார்த்தாலே அது நன்றாகத் தெரிகிறது…" என்று வேகவேகமாக பேசியவள்,

"சரி… அவர் எனக்கென்று எதுவும் கொடுத்து அனுப்பினாரா?" என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

"ஆமாம் அரசியாரே! விலை உயர்ந்த கீழ்த்திசை நாட்டு முத்தினை, பலமுறை முத்தமிட்டு என்னிடம் தந்தார். இதை, பாதுகாப்பாக எனக்கு உரிய உனது அரசியாரிடம் சேர்த்துவிடு என்று என்னைப் பணித்தார். இதோ அந்த முத்து…" என்ற வீரன், ஆண்டனி பரிசாகக் கொடுத்தனுப்பிய விலை உயர்ந்த முத்தினை கிளியோபாட்ராவிடம் கொடுத்தான்.

பேரின்ப பரவசத்தோடு அதைப் பெற்றுக் கொண்ட கிளியோபாட்ரா, "வேறு எதுவும் சொன்னாரா?" என்று தணியாத ஆர்வத்தில் கேட்டாள்.

"இன்னும் சொன்னார் அரசியாரே! எகிப்து அரசியின் காலடியில் பல நாடுகளை இந்த ஆண்டனி பரிசாக வைப்பான் என்று போய்ச் சொல். கீழ்த்திசை நாடுகள் விரைவில் அவளைத் தங்களது தலைவியாக அழைக்கும் என்பதையும் மறந்துவிடாமல் சொல்லிவிடு என்று கூறியவர், தனது குதிரை மீது தாவி ஏறினார்" என்றான், வீரன்.

‘என்னைத் தற்காலிகமாகப் பிரிந்தாலும், அவருக்கு என் மீதான அன்பும், பாசமும் குறையவில்லை’ என்று மனதிற்குள் பெருமிதப்பட்டுக் கொண்டாள் கிளியோபாட்ரா.

இந்தக் காலக்கட்டத்தில்தான் தான் ஏற்கெனவே நேசித்திருந்த, ஜூலியஸ் சீஸரை விடவும், இளம் வீரன் ஆண்டனியை அதிகமாக நேசிக்க ஆரம்பித்து இருந்தாள் கிளியோபாட்ரா என்று குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.

ஒருமுறை தனது தோழி சார்மியானிடம், ஜூலியஸ் சீஸரை நான் இதுபோன்று நேசித்து இருக்கிறேனா என்று ஆண்டனியை மனதில் நினைத்து கேட்டாள், கிளியோபாட்ரா.

அதற்கு சார்மியான், "ஓ… அந்த மாவீரரையா?" என்று ஆர்வமாகக் கேட்டாள்..

அவள் இப்படி சொன்ன மாத்திரத்தில் கன்னம் சிவந்து கோபமானாள் கிளியோபாட்ரா.

"இனி ஒருமுறை நீ சீஸரை அதுபோன்று பெருமையாக அழைத்தால், நான் உன் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடுவேன். மாவீரன் என்றால், அது ஆண்டனிதான் என்று சொல்" என்று கூறி செல்லமாக மிரட்டினாள்..

கிளியோபாட்ரா இப்படிச் சொன்னதும், சார்மியானுக்குத் திடீர் சந்தேகம். சீஸர் உயிரோடு இருக்கும்வரை அவரை நாம் புகழ்ந்து பேசினால்தான் இவளுக்குப் பிடித்தது. இப்போது தலைகீழாக மாறிவிட்டாளே… என்று மனதிற்குள் புலம்பியவளுக்கு, கிளியோபாட்ராவின் மனதில், மறைந்த சீசருக்கு இப்போது இடம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அதை அவள் கிளியோபாட்ராவிடம் சட்டென்று கேட்டும்விட்டாள்.

கோபமான கிளியோபாட்ரா, "ஆண்டனியோடு சீஸரை ஒப்பிட்டு நீ பேசியது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். நான் சீஸரை நேசித்தது அந்தக் காலம். அப்போது நான் சிறுமி. என் உள்ளம் பக்குவம் அடையாமல் இருந்தது. அனுபவம் இல்லாததால் சீஸரைப் புகழ்ந்து பேசிவிட்டேன். ஆனால், இப்போது நிலைமை வேறு. ஆண்டனியைத்தான் நான் முழுமையாக நேசிக்கிறேன். அதுதான் உண்மை!" என்று கிளியோபாட்ரா கூறியதாக வரலாற்றில் பதிவு செய்கிறார் ஷேக்ஸ்பியர்.

இதற்கிடையில், ரோமாபுரிக்கு வந்து சேர்ந்தான் ஆண்டனி. அவனும், ஆக்டேவியனும், லெப்பிடசும் சந்திக்க ஏற்பாடு ஆனது.
மனைவியைப் பறிகொடுத்த சோகம் எட்டிப் பார்த்திருந்த ஆண்டனி, அதற்குக் காரணம் ஆக்டேவியன்தான் என்று கருதியதால் சற்றே கோபத்துடன் காணப்பட்டான். ஆக்டேவியனும், ஆண்டனி தூண்டிவிட்டதால்தான் புல்வியா தனக்கு எதிராகக் கலகம் செய்தாள் என்று கருதினான்.

ஆண்டனியும், ஆக்டேவியனும் சண்டை இட்டுக்கொண்டால் மூவர் கூட்டணிக்கே ஆபத்தாகிவிடும் என்று எண்ணிய, அந்த கூட்டணியின் மூன்றாவது ஆட்சியாளனான லெப்பிடஸ் இருவரையும் சமரசம் செய்யும் நோக்கத்துடனேயே பேசினான். அதனால், இருவரும் சற்றே இறங்கி வந்து பேசினார்கள்.

முதலில், மூவர் கூட்டணியின் முதலாமவனும், ஜூலியஸ் சீஸரின் அரசியல் வாரிசுமான ஆக்டேவியனே பேசினான்.

"ஆண்டனி… நீங்கள் எகிப்தில் தங்கியிருந்ததைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு எதிராக தாங்கள் செய்த சதிதான் அதிர்ச்சியாக உள்ளது".

"என்னது… நான் சதி செய்தேனா? அரசியல் அனுபவம் அதிகம் இல்லாத உனக்கு எதிராக சதி செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை".

"அப்படியென்றால், தங்கள் மனைவி புல்வியா உங்களது சகோதரனுடன் சேர்ந்து எனக்கு எதிராக கலகம் விளைவித்ததை எப்படி எடுத்துக்கொள்ளச் சொல்கிறீர்கள்?"

"எனது சகோதரன், எனது மனைவியுடன் சேர்ந்து உனக்கு எதிராக கலகம் செய்தது, எனக்கு ஆதரவாகத்தான் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? அதேநேரம், நீ என்னுடன் சண்டையிட ஆசைப்பட்டால் வேறு காரணத்தைத் தேடு".

"நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதை நான் எப்படி நம்புவது?"

"நம்பித்தான் ஆகவேண்டும். ஆட்சிப் பொறுப்பில் நான் உனது பங்காளி. எனது சகோதரன், நீ சொல்வதுபோல் கலகம் ஏற்படுத்தினால் அது என்னையும் சேர்த்தே பாதிக்கும். அதனால், நானும் அவனது கலகத்தை அங்கீகரிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்த நாட்டின் மூன்றில் ஒரு பகுதியைக் கட்டிக்காப்பது என்பது எளிதான ஒன்றுதான். ஆனால், புல்வியா போன்ற ஒருத்தியுடன் குடும்பம் நடத்துவது என்பது அதைவிட கஷ்டம். மேலும், அவள் கலகம் செய்ய காரணம், அவளது சொந்த உணர்ச்சிகளும், சூழ்ச்சிகளும்தான். அதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மற்றபடி, அவளது கலகத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லவே இல்லை. இதற்கு மேலும் என்னால் விளக்கம் அளிக்க முடியாது".

"சரி… அந்த விஷயத்தை விட்டுவிடுங்கள். அதேநேரம், இன்னொரு வாக்குறுதியையும் நீங்கள் மீறிவிட்டீர்கள்".

"என்ன வாக்குறுதி?"

"எனக்குத் தேவைப்படும்போது ஆயுத உதவியும், பொருள் உதவியும் செய்ய வேண்டும் என்பது நம் இருவருக்கும் இடையே உள்ள உடன்பாடு. ஆனால், அதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்".

"இல்லை, ஆக்டேவியன். நான் உன்னை மறக்கவில்லை. என்னையே மறந்துவிட்டேன். என் மனைவியின் கலகத்திற்கும், இதற்கும்தான் தொடர்பு இருக்கிறது. அதையும் சேர்த்தே ஒப்புக் கொள்கிறேன்".

"என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"நான் எகிப்தில் இருந்து ரோமாபுரி திரும்ப வேண்டும் என்பதற்காகவே என் மனைவி புல்வியா தங்களை எதிர்த்து கலகம் செய்திருக்கிறாள் என்பது எனது கணிப்பு. அதற்காக நான் வருந்துகிறேன். தேவைப்பட்டால் மன்னிப்பும் கேட்கிறேன்…" என்று ஆண்டனி இறங்கி வந்தபோது, லெப்பிடஸ் குறுக்கிட்டான்.

"சபாஷ் ஆண்டனி. உங்களது பெருந்தன்மையான முடிவை வரவேற்கிறேன். இளைய சீஸர் அதை பெரிய விஷயமாக கருதமாட்டார் என்று உறுதியாகச் சொல்கிறேன்…" என்று கூறி, ஆக்டேவியனின் கோபத்தையும் குறைத்தான்.
தொடர்ந்து, ஆக்டேவியன், ஆண்டனி இருவரும் சமாதானம் ஆனார்கள். மனம் விட்டுப் பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக, தனது சகோதரி ஆக்டேவியாவை ஆண்டனிக்கு மறுமணம் செய்து கொடுக்க முன் வந்தான் ஆக்டேவியன். ஆண்டனியும் அதற்குச் சம்மதித்தான்.

(இன்னும் வருவாள்…)

About The Author