குகை ரயில் (2)

<<<சென்ற வாரம்

வந்தபோது தெரியாத நடை இப்போது தூரங்காட்டியது. தலை சுற்றுகிறதோ? கண்ணை லேசாய் இருட்டுகிறதோ? கிறுகிறுப்பாய் இருந்தது. மயங்கி விடுவேனோ? பாம்புதான் போலிருக்கிறது. கொடிப்பின்னல் பின்னிக் கொண்டதே! இருட்டு. அப்படியோர் இருட்டு. ஒருவேளை விஷ உக்கிரத்துக்கு எனக்குதான் கண்ணை மறைக்கிறதோ? நடை தடுமாற ஆரம்பித்தது. மேலே நடக்கவே தள்ளாட்டம் அதிகரித்தது. எங்காவது உட்காரலாமா? உடம்பு சாய ஏங்க ஆரம்பித்தது. தவித்தது உடம்பு. பாம்புதான் என்றது மனது. அதுதான். அதேதான். உள்ளே அதன் விறுவிறுப்பு உஷ்ணம் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. ஹா… என வாயைத் திறந்து மூச்சு விட்டார். மூச்சே பாம்புச் சீறல் சீறியது. வெளிச்சம் இருந்தால் தெம்பாய் இருக்கும். எவ்வளவு தூரமாகி விட்டது வீடு? நடை பலவீனப் பட்டுக் கொண்டே வந்தது. நடக்க முடியவில்லை. குதிகால்கள் வலித்தன.

இல்லை. வெறும் முள் குத்தல்தான். நான் சரியாக இருக்கிறேன். எனக்கு ஒன்றுமில்லை. என நினைக்கையிலேயே தலை திடீரென்று ஒரு சுற்றில் அடிவாங்கினாப் போல ஆளைத் தள்ளியது. தடுமாறி போதைகண்டாப்போல ரெண்டடி நடையோட்டம் ஓடி சமாளித்து நின்றார். இல்லை. நிலைமை கட்டுமீறிக் கொண்டே வருகிறது. தன்னம்பிக்கை என்று பைத்தாரத்தனம் பண்ணிறப்டாதில்லையா. அட வீடு அதுவே லட்சியம் என்கிற அளவில் மனசைக் குவித்த கணம் கல்லொன்று இடறி அப்படியே விழுந்தார். நல்லவேளை. பொட்டில் கிட்டில் பட்டிருந்தால் உசிர் போயிருக்கும். பாம்புக்கும் தப்பித்து அடியும் படாமல் தப்பித்தது நல்ல விசயந்தான். உடம்பெல்லாம் மண். அப்போதுதான் வியர்த்து உடம்பே அம்மை போட்டாப் போல முத்துமுத்தாகி நாறுவதை உணர்ந்தார். குப்பென்று இந்த இருளில் இந்த வியர்வை. விஷம் மேலேறுகிறது. எதாவது கயிறு கொண்டு கடிவாயில் கட்ட வேண்டும். அவசரம். அவசரம் என அலாரமாய் அலறியது உள்ளே. எழுந்து கொண்டால் நல்லது.

முடியவில்லை.

பிடியில்லாமல் எழுந்து கொள்ளமுடியாது என்றிருந்தது. கால்கள் நடுங்கின. பயத்தினாலா? பசிக்கிறதோ? யசோதா உன்னண்டை எப்படியும் வந்து சேர்ந்து விடுகிறேன். நீ பார்த்துக்கொள். என்னைக் காப்பாற்று யசோதா. அது சரி! எழுந்து கொள்ளவே முடியவில்லையே. அப்படியே சிறிது உட்கார்ந்திருந்தார். சீக்கிரம். நேரம் பொன்னானது. ஒவ்வொரு துளியும் மகத்துவம் வாய்ந்தவை. வீணாக்க முடியாதவை…

எழுந்து கொள்…ள மீண்டும் முடியவில்லை. ஆளைச் சரித்தன கால்கள். நம்பிக்கை துரோகிகள். இவ்வளவு நாட்கள் ஒத்துழைத்து என்ன? அவசர நேரத்தில் கைவிட்டு விட்டன. சொன்னபடி கேட்க மறுத்தன. சரி, நான்… அதெல்லாம் பிழைத்து விடுவேன்… வீட்டை நோக்கி… உருள ஆரம்பித்தார். கோவிந்தா கோவிந்தா… திருப்பதியில் அங்கப் பிரதட்சிணம் அதிகாலை செய்திருக்கிறார். சபரிமலையில் செய்திருக்கிறார். இப்போது நடுவீதியில். தலைசுற்றல் ஏற்கனவே. உருளலுக்கும் அதுக்கும் உடம்பு இலக்கை நோக்கிப் போகாமல் எங்கெங்கோ போய்ச்சேர்ந்தது. எங்கே கிடக்கிறோம் என்றே தெரியாதபடி காரிருள் கடந்த பேரிருள்.

வீடு பூட்டியிருக்குமே!

அதுவரை திரண்ட நம்பிக்கை சட்டென்று முருங்கைக் கிளையாய் முறிந்து மளுக்கென உட்சத்தம். அட உருள்கிறாய். வீடு போய்ச்சேர் சீக்கிரம். உனக்கு ஒன்றும் ஆகாது. பிழைத்து விடுவாய். தப்பித்து விடுவாய். யசோதா. பார்லிமென்ட்டுக்கு மசோதா. கிச்சன் பார்லிமென்ட் மகாராணி. இவள் யசோதா… வீட்டில் சமீபத்தில்தான் போன் வந்தது. மனிதர்கள் தூங்கினால் குறட்டை வரும். தொலைபேசி விழித்திருந்தால் குறட்டை வருகிறது.

பிறகு வேடிக்கை. நேரம் நழுவுகிறது. வீடு அடேயப்பா… உருண்டு அங்கேயும் இங்கேயுமாக என்ன இது? தெருவில் நல்லவேளை யாருமேயில்லை… அட இது மடத்தனம்டா, தெருவில் யாராவது என்னை, அதும் இந்நிலையில் பார்த்தால் ஓடிவந்து உதவ மாட்டார்களா? திருவருட்செல்வர் சினிமா கிளைமேக்ஸ் போலல்லவா ஆகிவிட்டது.

வீடு. வீடு. வீடு… எத்தனை சீக்கிரம் போகிறோமோ அத்தனை சீக்கிரம் நல்லது. கடிவாயில் கட்டுப்போட வேண்டும். உடனே செய்திருக்க வேண்டும் அதை. அப்ப ஓர் அலட்சியம். அட பாம்பாய் இருக்காது என நினைத்தது எத்தனை பிசகு. என்ன பாம்போ? உதற உதறப் போகவில்லை. நறுக்கென்று என்ன கடி. பாம்புகள் அநேகம் விஷமற்றவை. அதற்காக நாம காலை நீட்டிக் காட்டிட்டிருக்க முடியாது. மூச்சிறைப்பு மேலும் அதிகமாகி விட்டது. தலைக் கிறுகிறுப்பு அதிகமாகி விட்டது. கடிவாயில் டிக்டிக் ரத்தகடிகாரம். மயங்கி விடுவேனா? அதற்குள் யசோதாவைச் சேர்வேன். அவள் பார்த்துக் கொள்வாள். ஹா நல்லவேளை வீட்டில் ஆள் இருக்கிறது கவனிக்க. கல்யாணம் பண்ணிக் கொள்ளாவிட்டால் இந்த உதவியும் கிடைக்காது! நான் பிழைத்து விடுவேன். பிழைத்து விடுவேன்.

உருள்கிறதுக்கும் அதற்கும் தெருவின் குப்பைகள் அசுத்தங்கள் அப்படியே உடையில் அப்பின. வேட்டியை அடிக்கடி கட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. தெருப்புழுதியும் அழுக்கும். வியர்வைக்கு அவை இன்னும் தீவிரமாய் உடையில் பற்றின. ஒருவித நாற்றம் கிளம்பியிருந்தது. அட இதெல்லாம் ஒரு விஷயமா என்ன? வீடே குறி. இன்னும் பெரிய பிரச்னை காத்திருக்கிறது. உருளும்போதெல்லாம் வீட்டின் சாவியைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. வழியில் அது விழுந்து விட்டால் அது உயிரே விழுந்தாப்போல. அது சாவி. இது வி…. நான் பிழைத்து விடுவேன். என்னிடம் சக்தி மிச்சமிருக்கிறது. அதெல்லாம் சமாளித்து விடுவேன். பிழைத்து விடுவேன். என்ன பயங்கரமான ராத்திரி. நாய்த் துணையுமற்ற இரவு. எங்காவது நாய் குரைத்தால் கூடத் தெம்பாய் ஆறுதலாய் இருக்கும். இந்த மகா அமைதி மகா பயங்கரம். அதுவே பாதி கலவரத்தை மூட்டுகிறது. என்று நினைக்கிறபோதே அடுத்த தெருவிலோ எங்கோ நாய் ஒன்றின் குரல். இரவுக்கும் இருளுக்கும் பயந்த பணிந்த நாயின் நீ…ள அவல ஊளை! ஏனிப்படி ஊளையிடுகிறது சனியன். நாய் ஊளையிட்டால் எமன் வருகிறதாக ஐதிகம். அட நாயே ஐதிகமும் நீயும்… ஐதிகம் நாய்க்கா நமக்கா?

வீட்டை எப்படியோ எட்டி விட்டேன். ஆகாவென்று மனம் எழுச்சி கொண்டது. சந்தோஷம். சந்தோஷம் எனக் கூக்குரல் கிளம்பியது உள்ளே. பைக்குள் சாவி… , நல்லவேளை தொலையவில்லை. எல்லாம் நல்லம்சங்கள்தான். நல்ல சகுனங்கள் தான்… நாய் ஊளை? அதைப் பற்றியென்ன? ஆனால் எவ்வளவு உயரத்தில் இருந்தது பூட்டு. எட்டித் தொட்டுத் திறக்க வேண்டுமே. கம்பிகள் கொண்ட கதவானால் எத்தனை உதவிகரமாய் இருந்திருக்கும். மரக்கதவு. கையை உயர்த்திப் பூட்டை எட்டிப் பிடிக்கவே முடியவில்லை. எழுந்து உட்கார வேண்டும். முடியுமா?… என்ன கேள்வி இது? முடிந்தாக வேண்டும். உடம்பு நடுங்க நடுங்க கதவின் மரவேலைப்பாடுகளில் சிறுபிடி கிடைக்குமா என்று முயன்றார். பிடி சறுக்கி சறுக்கி ஆளைச் சரித்தது. இத்தனை தூரம் வந்துவிடவில்லையா நான்? அதெல்லாம் பிழைத்து விடுவேன்…

பரவாயில்லை. அட கதவை நம்பாதே. உன்னை நம்பு. நீ கட்டாயம் கட்டாயம் பிழைத்து விடுவாய். அப்படியே கையூன்று. எழு. கை நடுங்கி அதிர்ந்தது, ரயிலில் போகிறாப்போல. விடாதே. தெம்பேயில்லை. பரவாயில்லை. விடக்கூடாது. உன்னால் முடியும். இத்தனை தூரம் உடம்பை வேடிக்கை காட்டி இழுத்துக் கொண்டு வந்தவன் நீ. உன்னால் முடியும். மாப்ள இன்னும் நாலு கல்யாணம் முடிக்க உனக்குத் தெம்பு இருக்கிறது. அதெல்லாமில்லை என்று மனம் உடம்பைப் பொத்தென்று கீழே தள்ளிவிட்டது. விடப்டாது. உடம்பு கூசினாலும் நடுங்கினாலும் பிடியைத் தளர்த்தக் கூடாது. விடக்கூடாது. தலைக் கிறுகிறுப்புதான் அதிகரித்தபடி இருந்தது. ரத்தமே உஷ்ணமாகி விட்டாப்போல. ஜுரம் அதிகரித்திருக்கிறது.

ஆளை உடம்பு கீழே சரிக்குமுன் செயல்பட வேண்டும். நல்லவேளை! பூட்டை எட்ட முடிந்தது. காயடிக்கப் பட்ட மாடுபோல பூட்டு. பிடித்தார். பிடித்துக் கொள்ள செளகர்யமாய் இருந்தது. சட்டென்று உள்ளேயிருந்து எக்களிப்பு. கெட்ட நாற்றத்துடன் திரவம் வெளியேற அவசரப் பட்டாப்போல. நுரைக்கிறதோ வாயில்? சீச்சீ பயப்படாதே. எல்லாம் சரியாகி வருகிறது. யசோதாவிடம் உன் உடம்பை ஒப்படை. அவள் பார்த்துக் கொள்வாள். முதலுதவி செய்வாள். கடிவாயில் கட்டுப் போடுவாள். தொலைபேசிகூட இருக்கிறது. டாக்டரை வரவழைத்து விடலாம். டாக்டர் ஹரிகிருஷ்ணனிடம் வீட்டில் போன் இருக்கிறது. எல்லாம் நல்லபடி முடியும். ஆகா! நான் பிழைத்து விடுவேன்.

சட்டென்று கண் இருட்டி ஒரு விநாடி எதுவுமே தெரியவில்லை. என்ன இருள் இது. ஆளை மிரட்டுகிறது… யசோதா பயந்துறாதே. அதெல்லாம் நான் பிழைத்து விடுவேன். நடுங்க நடுங்க பூட்டைத் திறக்கப் போராடினார். மனசின் குறியில் ஒரு வெறிப்பற்றல் பற்றிக் கொண்டார். மண்டியிட்டிருந்தார். ஆண்டவரே ரட்சியும்… டொடக். பூட்டு திறந்தபோது ஆகாவென எழுச்சி கொண்டார். கதவு கொண்டியைத் திறக்க பெரும்பாடு பட வேண்டியிருந்தது. பரவாயில்லை. யோசிக்க நேரமில்லை. பாதி திறந்த கதவில் உடம்பைத் திணித்துக் கொண்டார்.

யசோதா படுத்திருப்பது தெரிந்த கணம் உற்சாகக் கணம். உள்ளே உருண்டு யசோதாவை நோக்கி… யசோதாவை விலகிப் போய்… திரும்ப உருண்டு… பரவாயில்லை. பரவாயில்லை. யசோதா என்னைக் காப்பாற்று யசோதா. எப்படியோ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உன்னிடம் வந்து சேர்ந்து விட்டேன். வேகமாய் அவளை நோக்கி ஒரு ரயில் தண்டவாளத்தில் ஓடுவதைப்போல உடம்பைத் தள்ளிக் கொண்டு முன்னேறினார். யசோதா என்னைப் பார் யசோதா… பேச முயன்றார். கத்த முயன்றார். முடியவில்லை. நல்லுறக்கத்தில் இருக்கிறாள். அவரால் அவளை உசுப்பி எழுப்ப முடியுமா? முடியுமாவாவது… யசோதா என் உயிர் உன் கையில். கிட்டேபோய் அவள் கா…லை… உயரத்துக் கட்டிலை எட்டி… காலைத் தொட்டு அசக்கினார். யசோதா விழித்துக் கொள். நான் செத்துக் கொண்டிருக்கிறேன். நிலைமை கட்டுமீறி விட்டது. உடனே டாக்டரிடம் போக வேண்டும். டாக்டர் வந்தால் நல்லது. விஷம் மேலேறி விட்டதா? உடம்பெங்கும் பரவி விட்டதா? என் உடலே பரபரக்கிறது. விஷமேறி விட்டால் உடம்பே நிறம் மாறிவிடும். நீலம் பாரித்துவிடும் என்கிறார்கள்.

திரும்ப அவள் காலை அசக்கினார். அசைந்தாள். உறக்கம் கலைந்தாள். சந்தோஷத் திகட்டலில் அழுகை முந்தியது. என்னைக் காப்பாற்று யசோதா…

‘சனியன் எப்பபாரு இதுக்கு இதே நினைப்புதான்!’ என்றாள் யசோதா. காலை இழுத்துச் சுருட்டி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

ஹா…வென மல்லாக்க விழுந்தார்.

About The Author

1 Comment

  1. k.saradha

    கடைசி நெர தவிபு உய்ரின் மெல் அவருக்கு இருகும் ஆசை எல்லம் கடிய விதம் அர்புதம்

Comments are closed.