கூழாங்கல்

நதியொன்று இருந்ததன்
தடயத்தை தனக்குள் நிரப்பி
மணற்படுகையில் ஒளிந்து
கிடக்கின்றன – ஒரு வயசுப்
பெண்ணின் பயத்தோடும்
நாணத்தோடும்.

மலைக்குன்று ஆதியிடம்
முட்டி மோதி வஞ்சித்து
கற்களை பெயர்த்துக்
கொண்டு வந்த பாவத்தில்
நதி மரணித்துப் போனதாய்
கேள்வியுற்று எட்டிப்
பார்க்கின்றன தலை நீட்டி.

தன்னைத் தாயிடம்
பிரித்த துயரத்தையும்
தனக்கு உருவம் அளித்த
நன்றியையும் ஒரு சேர
விழிகளில் பரப்பி
மாண்டு போன நதியின்
பிரிவுத் துயரத்தில்
ஒப்பாரி வைக்கின்றன
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்.

பிறப்பிடம் புக்கிடம்
என எல்லாம் தொலைந்து
போனதில் ஒரு வாழ்விடம்
வேண்டி அழுது கரைகிறது
செவி மடுக்காது நதியைக்
கடக்கும் ஒவ்வொருவரிடமும்.

நிலா வெளிச்சம் நீளும்
இரவொன்றில் ஊர்ச்சிறுமி
கரைப்பக்கம் ஒதுங்கிய
நேரம் அதன் புலம்பல்
கேட்டு ஸ்நேகம் கொண்டதில்
தாயத்துக் காய்களாக
ஆடுபுலிச் சோவிகளாக
தட்டான்கல் நொண்டிக்கல்
ஆட்டத்துத் தோழிகளாக
ஊர்சிறார் அனைவரோடும்
புதிய நட்பு கொண்டு
வாழ்கின்றன-ஒரு அகதியின்
அடையாளத்தைச் சுமந்து கொண்டு.

About The Author