கை

‘தன் கையே தனக்குதவி’ என்பர் பெரியோர். சற்றே யோசித்துப் பாருங்கள். நமக்கு இரு கைகளும்; இல்லையென்றால்! கையில்லாமல் நம்மால் எதுவும் செய்வது கடினம்.

கையில் பல வகை உண்டு. கையால் சைகை காட்டுவோர் பலர்.

ஒரு கை ஓசை கடினம். இரு கை தட்டினால் தான் ஓசை என்போரும் உண்டு. கைக்குள்ளே ஒரு கை. உள்ளங்கை. கைக்குள்ளே இன்னொரு கை. ரேகை. கைக்குள்ளே மற்றொரு கை. நம்பிக்கை

உள்ளங்கை நெல்லிக்கனி போலே என்ற ஒரு பழமொழியும் பழக்கத்தில் உள்ளது. நம்பி கை வை வியாபாரத்தில் நம்பிக்கை வை சம்சாரத்தில் என்றும் சொல்வதை கேட்டிருக்கிறோம்.

‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’
கையின் பெருமையை நட்புக்கு ஈடாக திருக்குறள் பறைசாற்றுகிறது.

நம் உடம்பில் நம் கைகள் எண்ணிடலங்கா முக்கியப் பணிகளைச் செய்கின்றன. வலது கையால் உதவி செய்யும் போது இடது கைக்குத் தெரியாமல் பிறருக்கு உதவ வேண்டும் என்பர்.

ஒரு சிலர் பிள்ளையாரை கும்பிடும் போது தமது இரு கையினாலும் தலையில் குட்டிக்கொண்டும் தமது கன்னத்தில் போட்டுக்கொள்வதையும் பார்க்கிறோம். திடீரென்று நம் உடலில் அரிப்பு வந்தாலோ அல்லது நமைச்சல் ஏற்பட்டாலோ உடனே லாவகமாக சொரிந்து கொள்ள நமக்கு கைதான் உதவுகிறது.

எதிர்பாராத விதமாக துன்பத்தில் தவிப்போர் மற்றோரிடம் ‘உன் கையை காலாக நினைத்து வணங்குகிறேன். என்னை எப்படியாவது காப்பாற்று’ என்று உதவி கேட்போர் பலர்.

கோபம் வந்திடின் ‘உன்னை ஒரு கை பார்க்கிறேன்’ என்பர் ஒரு சிலர்.

கையில் உள்ள அனைத்து விரல்களிலும் அல்லது ஒரிரு விரல்களில் மோதிரங்கள் அணிந்து அழகு பார்ப்பவர்கள் பலர்.
சண்டையிடும் போது கோபம் வந்தாலோ படீரென்று ஒருவர் மற்றொருவர் கன்னத்தில் அடிப்பதையும் ஓங்கி குத்துவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

இருகைகளையும் சங்கிலியால் பூட்டி திருடனை அழைத்துச் செல்வர் காவல்துறை. இக்கட்டான சூழ்நிலையில் தலையில் கையை வைத்து சிலர் சத்தியமும் செய்வர். வீட்டில் கொசுத் தொல்லையிருப்பின் பட்டென்று கையால் தன்னைத் தானே அடித்துக் கொள்வதும் அன்றாடம் நடக்கும் நிகழ்வு.

தேசியக் கொடியைப் பார்த்தால் கையை உயர்த்தி கொடி வணக்கம் செய்வோர் பலர். சற்றுத் தொலைவில் செல்வோரை கைதட்டிக் கூப்பிடுவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

சந்தோஷத்தைப் பரிமாறிக் கொள்ளும்போது ஒருவருக்கொருவர் கைகளைத் தட்டிக்கொண்டும் அல்லது கைகுலக்கிக் கொள்வதும் பெரும்பாலான வழக்கம்.

அதே சமயம் துக்கத்தை பகிர்ந்து கொள்ள ஒருவருக்கொருவர் கையைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறுவோரும் உண்டு.
வலது கையால் நாம் உணவை உன்கிறோம். இடது கையால் நாம் சுத்தம் செய்கின்றோம்.

நமது இரண்டு கைகளும் வேறுவேறு பணிகளைச் செய்தாலும் பிறருக்கு மரியாதை கொடுக்கும் சமயத்திலும் திருக்கோயில்களில் சாமி கும்பிடும்போதும் இரு கைகளையும் சேர்த்து நாம் கும்பிடுவதுடன் நன்றியினையும் வணக்கத்தையும் மரியாதையையும் பல்வேறு விதத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் வெளியே செல்லும்போது கைகளால் ‘டாடா’ காட்டி விடைபெற்றுக் கொள்வதை நம் கண்ணார காண்கின்றோம்.

‘கையெடுத்து கும்பிடுகிறோம் போகிறாயா இல்லையா’ என்று நீங்கள் இப்போது எனக்கு ‘டாடா’ காண்பிப்பது தெரிகிறது.

About The Author

3 Comments

  1. chitra

    நல்ல கை
    நம்பிக்கை
    கை இருப்பு கரையும் வரைக்கும் கை சளைக்க எழுத்தில் இடவும் எங்கள் வாழ்க் கை வளம்பெறட்டும் பாசந்திக்கு கை கொடுக்க ஆயிரம் கைகள் என்னுடைய இரண்டு கைகளைத்தவிர

Comments are closed.