கோழி மஞ்சூரியன்

தேவையானவை:

எலும்பில்லாத கோழிக்கறி – அரை கிலோ
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 2
இஞ்சி – பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்)
தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு – 1 மேசைக்கரண்டி
சோளமாவு – 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்துமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நன்கு கழுவிய கோழிக்கறியுடன் எலுமிச்சைச் சாறு, கரம் மசாலா, மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது, சோளமாவு ஒரு தேக்கரண்டி, தக்காளி சாஸ், உப்பு ஆகியவை சேர்த்துப் பிரட்டி, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறியைப் பொரித்தெடுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெயுடன் வெண்ணெயும் வார்த்து, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவை சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் மீதியுள்ள தக்காளிச் சாசை ஊற்றி, உப்புச் சேர்த்துக் கிளறுங்கள்.
கொதி வரத் தொடங்கியதும் பொரித்து வைத்துள்ள கோழித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, சிறிது தண்ணீர் விட்டு மூடி, மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.

சிறிது வெந்ததும், சிறிது தண்ணீரில் சோளமாவைக் கரைத்து ஊற்றி 2 நிமிடங்கள் கிளறி இறக்கி விடலாம்.

சுவையான கோழி மஞ்சூரியன் தயார்! கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author