சங்க இலக்கியத்தில் கடல்கோள் (சுனாமி) (1)

சுனாமி(Tsunaami) எனப்படும் கடல்கோள் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட பின்னர், மக்கள் இதைப் பற்றி அறிய பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் கடந்தகால கடல்கோள் (‘சுனாமி’) தாக்குதல்கள் குறித்து நிறையக் குறிப்புகள் உள்ளன.

கடலுக்கு தமிழில் ‘முந்நீர்’ என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் ‘முந்நீர்’ என்ற சொல் வருகிறது (புறநானூற்றுப் பாடல்கள் 9, 13, 20, 30, 35, 60, 66, 137, 154 முதலியன). "நிலத்தைப் படைத்தலும். காத்தலும். அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர்" என்ற நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே கடலின் அழிவுசக்தி குறித்தும், ‘சுனாமி’ எனப்படும் இராக்கதப் பேரலைகள் குறித்தும் தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான்.

தமிழை வளர்க்க அமைக்கப்பட்ட முதலிரண்டு தமிழ்ச் சங்கங்களையும் கடல் விழுங்கியதால் தற்போதுள்ள மதுரையில் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இந்த ‘சுனாமி’யைக் "கடல்கோள்" என்று பழைய உரைகார்கள் குறிப்பர். தென்மதுரையையும், கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இறையனார் கள்வியலுரையும், அடியார்க்கு நல்லாரின் உரையும் இதைப்பற்றி விளக்கமாகப் பேசுகின்றன.

சங்கத் தமிழ் நூலான கலித்தொகையும், சங்கக் காலத்துக்குப் பின் எழுந்த சிலப்பதிகாரமும் பாண்டிய நாட்டின் தென்பகுதியைக் கடல் விழுங்கியதைப் பின்வருமாறு கூறுகின்றன:-

"மலிதரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப்
புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்ட
வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்"

– கலித்தொகை 104

(முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்.)

"பஃறுளி யாற்றுடன்பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல்கொள்ள
வடதிசைக் கங்கையுமிமயமுங் கொண்டு
தென்னிசை யாண்ட தென்னவன்வாழி"

– சிலப்பதிகாரம் I-11-17/22

(கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான்)
சிலப்பதிகாரத்தில்மற்றொரு பாடலுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், 700 காதம் பரப்புடைய 49 நாடுகளைக்கடல் விழுங்கியதாகக் கூறுகிறார். அந்த 49 நாடுகளின் (வட்டாரங்களின்) பெயர்களையும் நமக்கு அளிக்கிறார். தலைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழ் நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இடைச்சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியமும், சில பாடல்களுமே நமக்குக் கிடைத்தன.

கொற்கையிலிருந்த தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டதைப் பிளினியும் குறிப்பிடுவதால் இந்தக் கடல்கோள் கி.மு முதலிரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம்.

பல சங்கப் பாடல்கள்சுனாமிக்குக் காரணமான நில அதிர்ச்சி குறித்தும் கடல் எல்லை மீறுவது பற்றியும் பொதுவாகப்பாடுகின்றன.

நிலம்புடை பெயரினும் நீர்த்தீப் பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும்

– குறுந்தொகை 373

‘நிலம், நீர், தீஆகியன அவைகளின் இயல்பான நிலைகளிலிருந்து மாறினாலும் கடல் எல்லை மாறுபட்டாலும்’ என்று கூறுவதிலிருந்து இத்தகைய இயற்கை மாற்றங்களை மக்கள் அறிந்தது தெரிகிறது.

‘பெருநிலங்கிளறினும்’ (நற்றிணை 201) ‘நிலம்புடை பெயர்வதாயினும்’ (நற்றிணை 9) ‘நிலத்திறம் பெயருங்காலை யாயினும்’ (பதிற்றுப்பத்து 63-6), ‘நிலம்புடை பெயர்வதாயினும்’ (புறநானூறு 34-5) ஆகிய அடிகள் நில அதிர்வு பற்றியும் நிலம் அழிந்துபட்டு எல்லை மாறுவது பற்றியும் பேசுகின்றன.

வடவைத்தீயும் மடங்கலும்

கடலுக்கடியில் ‘வடவை’எனும் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும், அது ஊழிக்காலத்தில் கடல் நீருடன் எழுந்து வந்துஉலகை அழிக்கும் என்றும் சங்க நூல்களுக்கு உரை எழுதியோர் கூறுகின்றனர். வடவைத் தீயை’வடமுகாக்கினி’ என்றும் அது திரை வடிவமுள்ள பெருந்தீ என்றும் வட மொழி நூல்கள் குறிப்பிடுகின்றன.

வடவை என்பது கடலுக்கடியிலுள்ள எரிமலைகளா என்று தெரியவில்லை. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் இராட்சதப் பேரலைகள் வந்து ஆயிரக்கணக்கானோரை உயிர்பலி கொண்டபோது ‘மர்மத்தீ’ ஒன்றும் கடலில் தோன்றியது. இது புயலின்போது பேரலைகளின் உராய்வினால் ஏற்பட்ட மின்சார சக்தி என்று அப்பொழுது விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் வடவைத் தீயா என்றும் தெரியவில்லை. ஆனால் வடவைத் தீ தோன்றும் போது கடல் பொங்கி எழுந்து நாட்டை அழிக்கும் என்று புலவர்கள் நம்பியது உறுதியாகத்தெரிகிறது.

சங்க இலக்கியத்தில் வரும் மற்றொரு சொல் "மடங்கல்". இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் ஊழிக்காலத்தில் உலகம் மடங்கிப் போவதை (அழிவதை) இப்படிக் கூறுவதாக விளக்கம் எழுதியுள்ளனர். இந்தப் பிரபஞ்சம் உருவானதற்கு ‘மாபெரும் வெடிப்பு’ (Big Bang) காரணம் என்று கூறும் வானநூல் அறிஞர்கள் இது ஒரு காலத்தில் சுருங்கி (மடங்கி) அழியும் (Big Crunch) என்றும் கூறுகின்றனர். இந்த விளக்கம் சங்ககாலத்திலேயே இருப்பது வியப்புக்குரியது. (மடங்கல்: பர்பாடல் 1-47,3-8 கலித்தொகை 2-3, 105-20, 120-8, 122-1 ப.பத்து – 62-8 முதலியன)’.

(மீதி அடுத்த வாரம்)

About The Author