சதுரங்கம் (4)

டில்லியில் நாட்கள் வெகு துரிதமாக, ஆனந்தமாகக் கழிந்தன. மனசில் பொங்கிய சுதந்திர உணர்வில், உடலுக்குக் கிடைத்த சமாதானத்தில் அற்புதமாகப் பாட முடிந்தது.

எங்கு திரும்பினாலும் பாராட்டுக்கள். புகழ் மாலைகள். வெளிநாட்டுக்கு அழைப்புகள். இதுவரை அனுபவித்திராத திருப்தி அவளுக்கு ஏற்பட்டது.

"நீ இப்ப எத்தனை அழகாயிருக்கே தெரியுமா அனு?" என்று அணைத்தபடி சொன்னார் ஸ்ரீனிவாஸன்.

"இந்த ஆறு நாள்லே பத்து வயது குறைஞ்ச மாதிரி இருக்கே. மனசிலே இருக்கிற பிரமைகள் குறைஞ்சதினால்."

என்ன காரணம் என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் மனது லேசாகிப் போயிருந்தது. உற்சாகமாகத் துள்ளிற்று.

சென்னையை நோக்கிப் பிரயாணம் செய்யும் போதுதான் சுரீரென்று விழிப்பு ஏற்பட்டாற் போல் யதார்த்தத்தின் பிரக்ஞை ஏற்பட்டது. மறுபடி மூர்த்தியின் ஆக்ஞைப்படி அவர் இழுத்த இழுப்பின்படி வாழவேண்டிய யதார்த்தம். இந்த எட்டு நாட்களில் ஆகாயத்தில் மிதந்ததற்கெல்லாம் ஏதும் அர்த்தமில்லை என்று உணர்த்தின யாதார்த்தம்.

மேற்கொண்டு என்ன செய்வது என்று ஒரு பிரமிப்பு ஆட்கொண்டது. ஸ்ரீனிவாஸன் எந்தவித பாதிப்பையும் காண்பிக்காமல் சகஜமாக அளவளாவினார். ஜோக் அடித்தார். சல்லாபித்தார். உபநிஷத்தையும் வேதாந்தத்தையும் பேசியே அவள் மூளையை மழுங்கடித்து அவர் சல்லாபித்ததை நினைக்கையில் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு மனைவியும் குழந்தையும் இருப்பது அவளுக்குத் தெரியும். அவளிடம் இந்த எட்டு நாட்களில் அவர் காட்டிய பிரியத்துக்கு எத்தனை ஆழம் இருக்கும்? அவளை சமூகத்தைக் கண்டு பயப்படாதே என்று சொல்லும் இவருக்கு தைரியம் இருக்காதா? மூர்த்தியை உதறிட்டு வா என்றால் இந்த இடத்தை இவர் நிரப்புவார் என்றுதானே அர்த்தம்?

அவள் சிரித்துக் கொண்டு கேட்டாள். "மெட்ராஸக்குப் போனப்புறம் என்ன பண்ணப் போறீங்க?"
அவர் புருவங்களை உயர்த்திப் பார்த்தார்.

"என்ன பண்ணுவேன்? எப்போதும் போலத்தான் வீடு. ஆபீஸ் வேலை இருக்கவே இருக்கு."

"என்னை என்ன பண்ணப் போறீங்க."

அவர் வியப்புடன் அவளைப் பார்த்தார். இதென்ன அசட்டுக் கேள்வி என்கிற மாதிரி, பிறகு செல்லமாக அவளுடைய கன்னத்தை கிள்ளிச் சிரித்தார்.

"அடிக்கடி உன்னைப் பார்க்க வருவேன். மூர்த்தி இல்லாத சமயத்திலே" என்று கண்ணைச் சிமிட்டினார். "ரகசியமா காதல் செய்யறதிலே இருக்கிற திரில் வேறெதிலேயும் இல்லே…"
சுரீரென்று ஒரு கீறல் மனசில் விழுந்தது. ரணமாய் வலித்து. அவமானத்தில் கண்களில் நீர் துளிர்த்தது. சரசரவென்று அவருடைய முகமூடி அசிங்கமாய் கிழிந்த மாதிரி தோன்றிற்று. அவள் தன் சினத்தை அடக்கிக் கொண்டு சொன்னாள்.

"எட்டு நாளா எனக்கு உபதேசம் பண்ணீங்க. நா மூர்த்திகிட்ட அடிமைப்பட்ட வாழ்வு வாழக் கூடாது. சமூகத்தைக் கண்டு பயப்படக்கூடாது. வேண்டாத பிரமைகள் மனசிலே வளர்த்துக்கக் கூடாதுன்னேள். சமூகத்தை எதிர்த்துக் கொண்டு என்னை ஏத்துக்கற துணிவு உங்களுக்கு இருக்குமா?"அவர் அதிர்ச்சி அடைந்த மாதிரி அவளைப் பார்த்தார்.

"இது என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சு அனு? மனசாலே சோர்ந்து போயிருக்கிற உனக்கு உற்சாகம் கொடுக்கணும்ங்கற எண்ணம்தான், எனக்கு வேறு எந்த அர்த்தமும் இல்லே. நான் திருப்பித் திருப்பிச் சொன்னேனே! இந்த சரீரம் என்கிறது வெறும் ஒரு கருவி. எனக்கு உன் மேலே இருக்கிற அபிமானத்தை உணர்த்த உபயோகிக்கப்பட்ட கருவி அது. ஒரு பந்தத்தை ஏற்படுத்தணும்ங்கற அவசியமில்லே. இப்பவும் நீ சோர்ந்து போகிற சமயத்திலே உற்சாகப்படுத்தத் தயாராயிருப்பேன். மூர்த்தியுடைய ஆதிக்கம் அதிகமாகிப் போச்சுன்னா தனியா பிரிஞ்சு போயிடு. அப்ப உன் இஷ்டபடி வாழலாம்."அவர் பேசப் பேச தன்னுள் ஏற்படும் அதிர்ச்சியையும் வெறுப்பையும் அவள் வெகு பிரயாசைப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

"அனு! உனக்கு அந்த வாழ்க்கை புதுசில்லே நீ பிறந்ததே…"

"போதும் நிறுத்துங்கோ!"அவள் பிறகு அவருடன் ஒரு வார்த்தைப் பேசவில்லை. கண்ணீர் சிந்தவில்லை.

ஓ, இந்த ஆண்கள்!

வெறுப்பும் கோபமும் மனசில் தீயாய் மூண்டது. எத்தனை கேவலமாக நடத்திவிட்டான். பெரிய மனிதன் என்கிற போர்வையில் எத்தனை நீசத்தனமாக என்னுடைய பலவீனத்தை உபயோகித்துக் கொண்டு விட்டான்! நான் ஒருத்தனின் மனைவி என்று இவன் மரியாதை கொடுக்கவில்லை. ஒரு வேசியின் மகள் என்பது ஒன்று தான் இவனுக்குத் தெரியும். இந்தப் பிரக்ஞைதான் என்னுடைய உணர்வுகளுடன் இவனை விளையாட வைத்தது. இதே பிரக்ஞைதான் மூர்த்தியை நம்மிடம் நெருங்க விடாமல் தடுக்கிறது.

திடீரென்று அவளுள் பெரிய ஆயாஸம் புகுந்து கொண்டது. தான் அகப்பட்டுக் கொண்டிருக்கும் சுழலிலிருந்து மீளுவது அசாத்தியமான காரியம் என்று தோன்றிற்று.

"சங்கீதத்திலே சக்ரவர்த்தினி நீங்க. யாருக்கும் அடிமையா ஏன் இருக்கணும்?"அவளுக்குப் பெரிதாகக் சிரிக்க வேண்டும் போலிருந்தது.

மீண்டும் சென்னை… மீண்டும் மூர்த்தியின் விரட்டல்கள்… கோபங்கள். நிஷ்டூரங்கள்… ஸ்ரீனிவாஸன் மறுபடி கிட்ட நெருங்காமல்… அவள் தீர்மானமாகச் சொன்னாள். "என்னை தனியா சந்திக்க முயற்சி பண்ணாதீங்க ஸ்ரீனிவாஸன். வந்தீங்கன்னா உங்க வீட்டுக்குத் தெரிவிச்சுடுவேன். இல்லே பத்திரிக்கை பேட்டியிலே சொல்லி விடுவேன். மான அவமானப் பிரச்னை எனக்கு இல்லே. என் குலத்தைப் பத்தி உங்களுக்கு தெரியுமே?"

பிறகு ஸ்ரீனிவாஸன் எட்டிப் பார்க்கவில்லை. நாட்கள் நழுவின. விரல்களிடையே ஆற்று மணலாய். ஒரு நாள் மூர்த்தி ரௌத்ரகாரமாய் வீட்டுக்கு வந்தார்.

"எப்படி நடந்துண்டே அந்த ஸ்ரீனிவாஸன் கிட்ட டில்லி போன போது சொல்லு!"அவள் ஒரு விநாடி பயந்து போனாள்.

"நீங்க என்ன சொல்றேள்னு எனக்குப் புரியல்லே!"

"உனக்கு ஒண்ணும் புரியாது. சரியான அழுமூஞ்சி. அந்த ஸ்ரீனிவாஸன் கிட்ட நீ சரியா நடந்துண்டிருக்கமாட்டே. அவருக்கு உன் மேலே ஏதோ அதிருப்தி. அசமாதானம். ஒரு பெரிய யூரோப்பியன் டூர் காண்ட்ராக்ட் ஏற்பாடு பண்ணித் தர்றதா சொல்லியிருந்தார். இப்போ வேற யாருக்கோ சிபாரிசு பண்ணியிருக்கார். சரியான மூடம் நீ. சரியான தரித்திரம் நீ. எந்த மாதிரி டிரெயினிங் உங்கம்மா உனக்குக் கொடுத்திருக்கான்னே புரியல்லே…"நாராசமாய் விழுந்தன வார்த்தைகள். அதன் தாத்பர்யத்தை ஜீரணிக்கையில் மனசு அதிர்ந்து குலுங்கியது. காண்ட்ராக்ட் நழுவிப் போன கோபத்தில் அவர் மேற்கொண்டு இன்னும் ஏதோ அசிங்கமாகக் கத்திவிட்டுப் போனார்.

அவள் வெகு நேரம்வரை பிரமை பிடித்தவளாய் உட்கார்ந்திருந்தாள். இந்த ஜன்மத்தில் எனக்கு விமோசனமில்லை என்று சொல்லிக் கொண்டாள்.

திடீரென்று கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. வயிற்றை என்னவோ செய்தது. அவள் தள்ளாடியபடி குளியலறைக்குச் சென்றாள். கடகடவென்று வாந்தி வந்தது.

ஓ, என்ன நேர்ந்துவிட்டது நமக்கு என்று பலஹீனமாக நினைக்கையில் பிரக்ஞையில் ஒரு உணர்வு தாக்கியது. திடீரென்று அவளுள் ஒரு சீற்றம் எழுந்தது. அடக்க முடியாமல் காட்டுத் தீயாய் வெடித்தது. ஒரு உத்வேகம் கிளம்பி விசுவரூப தரிசனம் ஆனாற் போல் நெஞ்சு விம்மியது.

தூ!

அவளை ஏமாற்றிய ஆண்வர்க்கம் ஒட்டு மொத்தமாய் எதிரே நிற்கிற மாதிரி அவள் காரி உமிழ்ந்தாள்.

தூ!

‘நான் தோற்கவில்லை. இது என் வெற்றி’ என்று சொல்லிக் கொண்டாள். நீங்கள் என்னை உபயோகித்தீர்கள். ‘நான் உங்களை உபயோகித்துக் கொண்டு விட்டேன். என் வேண்டுகோள் பலிக்கப் போகிறது. என் ரத்தமாய், என் பிம்பமாய், என் பாஷை பேசக் கூடியதாய் ஒரு பிரகிருதியை உருவாக்கப் போகிறேன்..’

ஸ்ரீனிவாஸன்! நீங்கள் சொன்னது சத்தியமான வார்த்தை. இந்த சரீரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என் சரீரத்துக்கு ஏற்பட்ட அவமானம் என்னைச் சேர்ந்ததில்லை…

அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். சொற்பமான உடைகளையும் பணத்தையும் நகைகளையும் அவசரமாக்க் கைப் பெட்டியில் திணித்துக் கொண்டாள். சில நிமிஷங்களில் ரயில் நிலையத்தை அடைந்து காத்திருந்த ஒரு ரயில் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

எங்கேயாவது போய்விட வேண்டும். மூர்த்தி கேள்விப் பட்டிராத எந்த மூலைக்காவது. மூர்த்தி தேடிப் பிடிப்பதற்குள் அகப்படாமல் போய்விட வேண்டும்.

சாத்தியமா?

சாத்தியம்… சாத்தியமாக்குவேன்.

என் வயிற்றில் இருக்கும் கருவைப் பற்றி நீ அறிந்தால் அதை நீ வளர விடமாட்டாய். இதுநாள்வரை என்னை நீ அவமானப் படுத்தியதை நான் தாங்கிக் கொண்டேன். என் சிசுவை நீ அவமானப் படுத்தினால் அதை நான் தாங்க மாட்டேன். அதனால்தான் போகிறேன் மூர்த்தி… கண் காணாத ஊருக்கு. நீ எட்டமுடியாத தொலைவுக்கு… தன்னிச்சையாய் பறக்கும் அந்தப் பட்சி மாதிரி…

ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் துரிதமாக நகர்ந்தன. இருள் சரசரவென்று விரிந்தது. அவள் தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள். வாழ்க்கை என்னும் சதுரங்கப் பலகையில் இரவுகள் மட்டும் இல்லை என்று சொல்லிக் கொண்டாள்.

(முடிந்தது)

About The Author