சத்தியத்திற்கு சோதனை இல்லை

"டீச்சர். உங்களைத் தலைமை ஆசிரியை கூப்பிடறாங்க…" ஆயா வந்து சொல்லிவிட்டுப் போனாள்.

மீனா முகத்தில் இறுக்கம் படர்ந்தது. எதிர்பாராத விநாடி வந்துவிட்டது. "… சுபா… வகுப்பைப் பார்த்துக்க…" என்றாள் மீனா.

"சத்தம் போடாம… ஹோம் வொர்க்கைச் செய்யுங்க. இதோ வந்திடறேன்…"

தலைமை ஆசிரியை அறைக்குப் போகிற வழியில் வலதுபுறம் முழுதும் வரிசையாய்ப் பூச்செடிகள். சற்றுத் தள்ளிக் குடிநீர்க் குழாய்கள். இடது புறம் வரிசையாய் வகுப்பறைகள். இவள் பாதி வகுப்பில் வராந்தாவில் நடந்து செல்வதைத் தனலக்ஷ்மி ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.

"மீனா…"

தனலக்ஷ்மியின் அழைப்பு கேட்டு நின்றாள்.

"என்ன… உடம்பு சரியில்லையா…"

"இல்லே… தலைமை ஆசிரியை அறைக்குப் போறேன்…"

"ஓ… அழைப்பு வந்திருச்சா.."

தனலக்ஷ்மியின் முகத்தில் தெரிந்த வருத்தம் இவளைச் சங்கடப்படுத்தியது.

"நான் போகணும்… வரட்டுமா…" விடை பெற்று நகர்ந்தவளைப் பார்த்துச் சொன்னாள்: “திரும்பிவரும்போது… என்னைப் பார்த்துட்டுப் போ… என்ன சொன்னாங்கன்னு…"

மீனா தலையசைக்கக் கூட இல்லை. வெற்று அனுதாபமும், வீண் வம்பும் உடன் பிறந்தவை. ஒன்றுக்கொன்று இணை, இவள் தலை உருளப் போவதை ஆர்வமாய் வேடிக்கைப் பார்த்து ரசிக்கவென்றே காத்திருக்கிறார்கள்.

"மேடம் இருக்காங்களா…?" என்றாள் வாசலில் இருந்த அட்டெண்டரிடம்.

"உள்ளே போங்க…" என்றான். இவள் வரப் போகிறாள் என்று ஏற்கெனவே தெரிந்திருக்க வேண்டும்.

மேடம் குனிந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தாள். இவள் வந்து நின்றதைக் கவனித்த மாதிரி நிமிர்ந்தாள்.

"உட்கார்…"

சீட்டு நுனியில் அமர்ந்தாள்.

"சிலபஸ் எல்லாம் எவ்வளவு தூரம் கவர் பண்ணியிருக்கே…"

சொன்னாள். இன்னும் எதிர்பார்த்த கேள்விக்கு வரவில்லை. தயார் செய்து கொள்கிறாளா…?

"உன்னை இப்ப எதுக்கு வரவழைச்சேன் தெரியுமா…?” மேடத்தின் கண்ணாடியை மீறி விழிகள் உற்றுப் பார்த்தன உள்ளூர நடுங்கியது.

" எ …துக்கு மேடம்…"

"இந்தக் கடிதாசியை படி.."

படிக்கவே வேண்டாம். புரியும். தெரிந்த விஷயம்தான். "கடவுளே… என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்…"

" என் மகள் சரஸ்வதி… இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு… இரவில் உறக்கத்தில் பிதற்றுகிறாள். வேறு வழியின்றி மன நல மருத்துவரிடம் அழைத்துப் போனதில்… தீவிரமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்… இதே நிலை நீடித்தால்… அவளின் மனநிலை பெரிதும் பாதிக்கப்படும் என்றும் டாக்டர் சொல்கிறார். வகுப்பில் படிக்கும் மாணவியை அநாகரிகமாக நடத்துவதும், மிரட்டுவதும் ஒரு ஆசிரியரின் செயலல்ல. அதனால் தங்களின் கவனத்திற்கு இதைக் கொண்டு வருகிறேன். மேற்படி டீச்சரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தவறினால் வரும் பின்விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்…"

மீனாவுக்கு மறுபடி உடல் நடுங்கியது.

"என்ன சொல்றே இதுக்கு…?"

மீனாவிற்கு அழுகை பீறிட்டது.

"என்ன நடந்தது? என்ன செய்தே?"

தலைமை ஆசிரியையின் குரலில் திடீரெனக் கரிசனம் தெரிந்தது.

என்னவென்று சொல்ல…?

******

மீனா பாடம் நடத்திக் கொண்டிருக்க… சரஸ்வதியும் இன்னொரு பெண்ணும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"நேத்து படம் போனோம். சுகன்யாவுக்கு ஒவ்வொரு சீன்லயும் அசத்தற டிரஸ்டி. அதுவும் பிரபு ஒரு சீன்ல…"

"ஏய் சரஸ்வதி… அங்கே என்ன பேச்சு.." மீனாவின் குரல் உரத்துக் கேட்டது.

"ஒண்ணுமில்லே… மிஸ்…"

"பொய் சொல்லாதே… ஏய் புவனா… அவ என்ன பேசினா… சொல்லு."

புவனாவிற்கு சட்டென்று பொய் வரவில்லை. "நேத்து பார்த்த சினிமா.. மிஸ்.."

"இங்கே நான் உயிரை விட்டுப் பாடம் நடத்தறேன். அங்கே சினிமா… ஜ ஸே… கெட் அவுட் ஆஃப் தி கிளாஸ்.."

சரஸ்வதி வெளியில் போனாள். இது முதல் தடவை. மறு சந்தர்ப்பங்களில், ஹோம் வொர்க் செய்யாதது… கேட்ட கேள்விக்குச் சரியான பதில் சொல்லாதது… தவறான விடை எழுதியது… என்று நிறைய கோபிக்க வேண்டி வந்தது. அதன் உச்சக் கட்டமாய்…

"நீயெல்லாம் ஏண்டி எங்க உயிரை எடுக்க வரீங்க. படிப்புல இண்ட்ரெஸ்ட் இல்லே… கவனம் பூரா.. சினிமாவுல… எப்படி உருப்படுவே… இதுவே கொஞ்சம் லட்சணமா நீ இருந்திருந்தா… நடிக்கவே போயிருப்பே.."

எரிச்சலில் வந்த அத்து மீறிய வார்த்தைகள், வகுப்பில் கேலிச் சிரிப்பைத் தூண்டிவிட்டன. சரஸ்வதிக்கு அவமானமாகிப் போய்விட்டது.

அழுதவளைப் பார்த்தும் இரக்கம் வரவில்லை. மாறாகக் கோபம்தான் பீறிட்டது.

"ரோஷப்பட்டுப் பிரயோசனம் இல்லே… முட்டை வாங்காம… மார்க்க வாங்கறதுல புத்தியைச் செலுத்து.."

அடுத்த நாள் சரஸ்வதி வரும்போது.. வகுப்பில் கோழி கூவியது. மீனா கண்டித்ததும் ஏற்படவில்லை. இன்று சரஸ்வதியின் அப்பா கடிதம் எழுதுகிற நிலைமைக்கு வந்துவிட்டது.

******

தலைமை ஆசிரியை அவளை சுய நினைவுக்குக் கொண்டுவந்தார்.

"இதுக்கு என்ன பதில் சொல்றது…"

"மேடம்… நான் எந்தத் தப்பும் செய்யலே… அத்தப் பொண்ணு தானும் படிக்காமே… கிளாசையும் குட்டிச் சுவர் பண்ணினாள். லேசா கண்டிக்கப் போனா…"

தலைமை ஆசிரியையின் முகத்தில் அழுத்தம் தெரிந்தது. "நோ… நோ… மீனா… தேர் ஈஸ் எ லிமிட்… இப்ப அந்தப் பெண்ணோட தந்தை நிறைய அரசியல்வாதிகளின் ஆதரவுடன் வரப்போறார். வீ ஹாவ் டு ஃபேஸ் எ டஃப் டைம்…"

"ஜ யாம் ஸாரி, மேடம்… நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்.."

"இப்ப இப்படி சொல்லிருங்க. அவர் என்னடான்னா.. என் பொண்ணு உயிரையே விட்டிருக்கும். ஒரு மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டற டீச்சரை வெளியே தள்ளுங்கிறார். நீ ரொம்ப சுலபமா சாரி சொல்லிட்டே. நீ நினைக்கிற மாதிரி இது இல்லைமா..”

மீனா பேசாமல் இருந்தாள்.

"ஓகே… மதியம் அவரை வரச் சொல்லியிருக்கேன். வேற கிளாசுக்கு அந்தப் பொண்ணை மாத்திடறதாகவும் அடுத்த வருடம் உன்னை வேற ஸ்கூலுக்கு மாத்தறதாகவும் சொல்லிடப் போறேன். குறைந்தபட்சம் பிராப்ளத்தைத் தள்ளிப் போடலாம். பார்க்கலாம்… கன்வின்ஸ் பண்ண முடியுதான்னு. நீயும் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுரு.. புரிஞ்சுதா."

மீனா மெளனமாய்த் தலையசைத்தாள். உள்ளூர அழுகை பொங்கியது. தலைமை ஆசிரியை தலை அசைக்க எழுந்து வெளியில் வந்தாள்..

மதியம் சொன்னபடியே நடந்தது. வந்த மனிதர் எகிறிக் குதிக்க.. மீனா அசையாமல் நின்று மன்னிப்பு கேட்டாள். தலைமை ஆசிரியை மிகவும் கெஞ்சினாள். இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் விடுவதாகக் சொல்லிவிட்டுக் கடைசியில் ஒருவிதத் திருப்தியுடன் வந்தவர் போய்ச் சேர… சரஸ்வதியை தலைமை ஆசிரியையே வேறு வகுப்பில் கொண்டுபோய் உட்கார வைத்தாள்.

******

மீனா ஒரு வாரம் லீவு போட்டுவிட்டுப் போனாள். நிறைய அழ வேண்டியிருந்தது.

லீவு முடிந்து மீனா திரும்பினாள்.

இதோ… பீரியட் தொடங்க மணி அடிக்கிறது. மீனா வகுப்பறைக்குள் நுழைந்தாள்.

"குட்மார்னிங் மிஸ்.."

மாணவிகளுக்கு இந்நேரம் நிகழ்ந்தது எல்லாம் தெரிந்திருக்கும். டீச்சரின் முகம் சுருங்கிப்போனதை…. விதம் விதமாய்… கதைகளால் வர்ணித்திருப்பார்கள்.

புத்தகம் பிரிக்கக் கை நடுங்கியது. சமாளித்துக் கொண்டு பாடத்தை ஆரம்பித்தாள்.

"ஒவ்வொரு வினையும்… அதற்குச் சமமான… எதிரிடையான இன்னொரு வினையை…"

வகுப்பின் மூலையில் ஏதோ பேச்சுக்குரல்… பாடம் சொல்லத் தொந்தரவாய்… யாரது… முகம் முழுதும் மேக்கப் அப்பிக் கொண்டு மூலை பெஞ்சில் இரு மாணவிகள். பொருந்தாத மேக்கப். டீச்சரை ஏறெடுத்துப் பார்க்கும் திறனின்றி, விழிகளைத் திசை திருப்பி அப்பாவித்தனம் காட்டிக்கொண்டு…

மீனாவுக்கு சுரீலென்றது. நீயெல்லாம் படித்து முன்னுக்கு வர வேண்டாம்… உன்னை… எங்களை மாதிரி டீச்சரை நம்பித்தானே அனுப்பியிருக்கிறார்கள். உன் வீட்டில்… ஏன் இப்படி தரந்தாழ்ந்து போகிறாய்…

"யாரது. அங்கே பேசறது…"

வார்த்தைகள் வாய் வரை வந்து தயங்கின.

வேண்டாம். யார் மறுபடியும் மன்னிப்புக் கேட்பது… கூனிக் குறுகுவது… "உன் தலையெழுத்துப் படி நடக்கட்டும். எப்படியோ… போ… எனக்கு என்ன.. நான் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் எனக்குச் சம்பளம்… உன்னை ஏதாவது சொல்வானேன்… பிறகு அவதிப்படுவானேன்.

தீர்மானித்துவிட்டாள். எதுவும் நிகழாதது போல பாடத்தைத் தொடர்ந்தாள்.

"… எவரி ஆக்ஷன்… ஹெஸ் ஆப்போசிட்… அண்ட… ஈக்வலண்ட் ரியாக்ஷன்… பேசிய மாணவிக்குப் துணிச்சல் துளிர்விட… மீண்டும் கிசுகிசிக்க ஆரம்பித்தாள். இந்த டீச்சரால… நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. பயப்படுகிறாள் பிரச்சனை வரும் என்று. பேச்சு இன்னும் உரத்துக் கேட்டது.

எதிர்ச் சுவரில் மகாத்மா புகைப்படமாய் அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். சோதிக்க… இனிமேல் எது சத்தியம் என்றார்?

About The Author

3 Comments

  1. R.V.Raji

    ரிஷபன்!!
    ரெண்டு கைகளையுமே தட்டினாதான் சத்தம் வரும்னு சொல்றதைபோல ஆசிரியர்களும் உதவி செய்து, மாணவர்களும் ஒத்துழைத்தால் நிச்சயம் வெர்றி பெற முடியும். அர்த்தமுள்ள கதை அருமை.

  2. latha

    சூப்பர் சார். அருமையான கதை. கல்வி சொல்லித்தரும் ஆசிரியர் ஒவ்வொருவரும் கடவுளை போன்றவர்கள். அனைவரின் வாழ்விலும் வழிகாட்டியாக திகழ்ப்பவர்கள். கண்டிப்பு இருக்க வேண்டும். அது அக்கறையுடன் உள்ளாதாக இருக்க வேண்டும்.
    மிக மிக மிக அருமையான அனைவரும் படிக்க வேண்டிய நல்ல விஷயம்.

  3. Bhaskaran V

    அருமை மிக அருமையன கதை; ஆனால் டீச்சர் தன்னம்பிக்கை இழந்துவிட்டரே

Comments are closed.