சத்யத்தின் கதை (3)

கார்ப்பொரேட் தேசத்து பூகம்பம்

‘சற்று முன் கிடைத்த தகவல்’ என்று பத்திரிகைகள் வெளியிட்ட தகவல்தான் அது. உலக வங்கியிலிருந்து வந்திருந்தது. "சத்யம் கம்பெனியா? அதைப் பற்றி எங்களுக்கு முன்னாலேயே தெரியுமே? எட்டு வருஷங்களுக்கு அவர்களுடன் தொழில் முறை ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்வதில்லை என்று ஒதுக்கி வைத்திருக்கிறோமே?… ஏனா..? எங்கள் ஊழியர்களுக்கு முறையற்ற சலுகை கொடுத்திருக்கிறார்கள். கணக்குகளை ஒழுங்காகத் தரவில்லை. அது மட்டுமில்லை, இன்னொரு பெரிய விஷயம். எங்களிடமிருந்து தகவல்களைத் திருடியிருக்கிறார்கள்… செப்டம்பரிலேயே அவர்களை பிளாக் லிஸ்ட் செய்து விட்டோம்.."

உள்ளூர்த் தகவல் இது. ஒரு காலகட்டத்தில் ராஜு குடும்பம் வசம் 21% சத்யம் பங்குகள் இருந்தன. இப்போது 8.61% ஆகக் குறைந்து விட்டது. அபெர்டீன் அஸெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, ஃபிடெலிட்டி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரூடென்ஷியல் ஆகியவைகளை உள்ளடக்கிய ஸ்தாபன முதலீட்டாளர்கள் வசம் 61% பங்குகள் இருந்தன. கம்பெனி நிர்வாகத்தை அவர்கள் சுலபமாக மேற்கொண்டிருக்க முடியும். என்றாலும் அவர்கள், நிலைமையை ஊன்றிக் கவனிப்போம்; அவசரப்பட வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள்.

பொழுது போகாத பொம்மு, குண்டூசியால் பல்லைக் குத்தியபடியே ஏதோ ஒரு பேலன்ஸ் ஷீட்டை ஆராய்ந்து கொண்டிருந்தார். அவ்வப்போது "அஞ்சு, பத்து" ஷேர் மார்க்கெட்டில் அவர் விடுவதுண்டு. திடீரென்று துள்ளிக் குதித்தார். பல்லிடுக்கில் குண்டூசி குத்தியதால் அல்ல! பேலன்ஸ் ஷீட்டில் அவர் கண்ணுக்குப் புலப்பட்ட சமாசாரம். கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தார். அச்சுப்பிழையாக ஒரு பூஜ்யம் கூடுதலாக இருக்குமோ என்று நினைத்து கூட்டலை சரிபார்த்தார்.. பின்னே? வட்டியே வராத கரண்ட் அக்கவுண்டில் கம்பெனி கிட்டத்தட்ட 5300 கோடி வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா, என்ன? அதாவது, மொத்தக் கையிருப்புத் தொகையில் 38% வட்டியில்லாமல்! 2007ல் 16.4% சதவீத அளவுக்கு இருந்த இந்தத் தொகை இப்போது உருண்டு திரண்டு இந்த அளவுக்கு வந்து நிற்கிறது.

பொ.போ.பொம்முவுக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. "நிஜமாகவே இவ்வளவு தொகை கையிருப்பில் இருக்குமா? டுபாக்கூராக இருக்குமோ?" "ஆடிட் பண்ணியிருப்பது ப்ரைஸ்வாட்டர் கம்பெனியாக்கும்.. அப்படியெல்லாம் இருக்க சான்ஸே இல்லை" என்று தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்டார். அப்போதுதான் பத்திரிகையில் இன்னொரு செய்தி அவர் கண்ணில் பட்டது. இதே விஷயம் குறித்து Kotak Institutional securities என்ற நிறுவனம் ஓர் அறிக்கை விடுத்திருந்தார்கள். அவர்கள் இது பற்றிக் கேள்வி எழுப்பியதற்கு சத்யம் நிர்வாகத்திடமிருந்து சரியான பதில் இல்லையாம்.

அடுத்து வந்த அதிர்ச்சித் தகவல், ராஜு குடும்ப பங்குகள் 5.13% சதவீதமாகக் குறைந்து விட்டன. இதில், 3.23% அளவுக்கான ஷேர்கள் அடமானத்தில் இருக்க, அவர்களிடம் உள்ள பங்குகளின் அளவு 1.90%. நிஜமாகவே, "மைனாரிட்டி ராஜு அரசு"தான்!

தம்மிடம் இருந்த பெருவாரியான ஷேர்களை ராஜு ஏற்கெனவே அடமானம் வைத்திருக்கிறார். பங்குகளுக்காக பாக்கி செலுத்த வேண்டிய தொகைக்கு அழைப்பு வந்ததும் கட்ட பணம் இல்லாமல் அவற்றை விற்கச் சொல்லி விட்டார். இதுதான் சங்கதி.

டிசம்பர் 23 முதல் ஜனவரி 5 வரை I.L.F & Trust என்ற நிறுவனம் 245.2 லட்சம் சத்யம் ஷேர்களை விற்றிருக்கிறது. இவை D.S.P.Merryl Lynch, D.S.P.Black Rock, Deutsch Bank, H.D.F.C. Mutual Fund, I.L&F financial Services என்ற கம்பெனிகளிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தவை. ஏறத்தாழ, 150-200 ரூபாய் விலையில் இந்தப் பங்குகள் விற்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.

ஒரு உபரித் தகவல் : 24.12.2008 அன்று பங்கு மார்க்கெட்டில் சத்யம் பங்குகள் சுடச் சுட விற்பனை, 148.25 ரூபாய் என்ற அளவில். கை மாறிய பங்குகள் எண்ணிக்கை 10 கோடி. மொத்தப் பங்குகளில் 15%.

இத்தனைக்கும் இடையே, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்களிடையே கலவரமும் சஞ்சலமும் காணப்பட்டன. அவர்களுக்குத் தெம்பும், உற்சாகமும் ஊட்டும் வகையில் செய்திகள் அனுப்பினார் ராஜு. "நம்மைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருக்கிற இந்தச் சூழ்நிலையில் நாம் கம்பெனி நலனைக் காப்பாற்றியாக வேண்டும். ஊழியர்களான நீங்கள் கூடித் தொழில் செய்ய வேண்டும். வாடிக்கையாளர் சேவையில் முழு மூச்சுடன் ஈடுபட்டு அவர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்" என்ற ரீதியில் அமைந்தது ஊழியர்களுக்கான அவரது மெயில். வாடிக்கையாளர்களுக்கு அவர் சொன்னது: முதலீட்டாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே உள்ள விஷயங்கள் உங்களைப் பாதிக்கா. நம்பிக்கையோடு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்."

எல்லாம் கிடக்க, ஆந்திரப் பிரதேச முதல்வர் மாண்புமிகு ராஜசேகர ரெட்டி தம் பங்குக்குக் கொஞ்சம் குட்டையைக் குழப்பினார். "சத்யத்தில் என்ன பிரச்னை? ஏதோ முடிவெடுத்தார்கள், மாற்றி விட்டார்கள், அதனால் என்ன? அப்படியே இருந்தாலும் அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை" என்று திருவாய் மலர்ந்தருளினார். விஷயம் தெரியாதவர்கள் "ஏன் இதை, இவர், இப்போது, சொல்கிறார்?" என்று ஒன்றும் புரியாமல் குழம்பினார்கள்.

ஜனவரி மாதம் ஏழாம் தேதி, காலை 10.53 ராஜுவை அவரது மனசாட்சி உந்தித் தள்ளியது. "யானே கள்வன்! யானே கள்வன்!" என்று கழிவிரக்கப்பட்டு பரிதவித்துப் போனார். பட்டனை அழுத்தினார். படபடவென்று தட்டினார் ஒரு மெய்யுருகும் ஒப்புதல் கடிதம்.

அதற்கு முன் சற்றுப் பின் நோக்கிச் செல்வோம். ஜனவரி 6ம்தேதி D.S.P. Merril Lynch அவருக்கு ஒரு தொலை நகல் செய்தி அனுப்பியது. "உங்கள் கணக்கு வழக்குகளில் ஏகப்பட்ட ஊழல். ஆட்டத்துக்கு நாங்கள் வரலை. ஆளை விடுங்க சாமி"

இதே விஷயத்தை ஜனவரி 7ம்தேதி காலை 10.18க்கு அவர்கள் செபிக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். அதாவது ராமலிங்க ராஜுவின் மனசாட்சி அவரை உந்தித் தள்ளியதற்கு 35 மணித்துளிகளுக்கு முன்னாடி.

11.11க்கு அவர் தமது கடிதத்தை தமது இணைய தளத்தில் வெளியிட்டு விட்டார். 11.34க்கு மெர்ரில் லின்ச்சின் முடிவை சத்யம் கம்பெனி முறைப்படி செபிக்கு அறிவித்தது.

கார்ப்பொரேட் தேசத்தில் பூகம்பம் விளைவித்த அந்தக் கடிதத்தில் என்ன இருந்தது?

(தொடரும்)

About The Author