சத்யத்தின் கதை (4)

"இன்ஸ்பெக்டர், உங்கள் கடமையைச் செய்யுங்கள்!"

***************************

அகில உலகப் புகழ் பெற்ற மூன்று மந்திரவாதிகள் ஒரு ‘பாரில்’ உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவரவர்களுக்கு அவரவர் பெருமை. முதலாமவர் சொன்னார்:- "நான் ஒரு காட்சியில் மூன்று பெண்களைக் காணாமல் போகச் செய்து விட்டேன், யாராலும் எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை." இரண்டாமவர் சொன்னார்: "நான் செய்தது மிகப் பெரிய விஷயம். எல்.ஐ.சி. கட்டடத்தையே அல்லவா காணாமல் செய்தேன்!" மூன்றாமவர் உதட்டைப் பிதுக்கினார். "ப்பூ! எல். ஐ.சி. கட்டடம் பிரமாதமாக்கும்! நான் பாரிஸ் போயிருந்தபோது மறைய வைத்தது ஈஃபெல் டவரை!!"

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, சாதாரணமாகத் தோற்றமளித்த ஓர் எளிய நபர் உள்ளே நுழைந்தார். அவரைப் பார்த்ததும் மூன்று பேர் முகத்திலும் அசடு வழிய, அவசர அவசரமாக வெளியேறினார்கள். இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஒரு நபருக்கு ஆச்சரியம். "இவ்வளவு பெரிய மந்திரவாதிகள், ஏன் இப்படி ஒரு சாதா ஆசாமியைக் கண்டு பயந்து ஓடுகிறார்கள்?"

வேகமாக அவர்களைப் பின் தொடர்ந்து சென்று தன் சந்தேகத்தைக் கேட்டே விட்டார், அவர்கள் சொன்ன பதில்: "அவர் எங்களை எல்லாம் விடப் பெரிய மந்திரவாதி. அவருக்கு முன்னால் நாங்கள் எல்லாம் மின்மினிப் பூச்சிகள். அவர் பெயர் ராமலிங்க ராஜு. பாலன்ஸ் ஷீட்டிலிருந்து 8000 கோடி ரூபாயை ஒரே நொடியில் மறைய வைத்து விட்டார். உலகத்தின் எந்த மூலையில் அது இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை!"

இது நிற்க. ராமலிங்க ராஜு போர்டு மெம்பர்களுக்கு எழுதிய "அணுகுண்டு" கடிதத்தின் சாராம்சம்:

2008, செப்டம்பர் 30ம் தேதிக்கான பாலன்ஸ் ஷீட்டில் கையிருப்புத் தொகையைக் கூடக் காட்டி விட்டேன். எப்படி?

5341 கோடி ரூபாய் பணம் கையில் இருக்கிறது என்று காண்பித்தேன். கையில் இருந்ததோ 321 கோடி ரூபாய்தான்.

வர வேண்டிய வட்டி 376 கோடி ரூபாய் என்று போட்டு வைத்தேன். உண்மையில் இந்த இனத்தில் வர வேண்டியது சுத்தமாக ஒரு பைசா கூட இல்லை!

கடன்காரர்கள் நமக்குத் தர வேண்டிய தொகையில் நைஸாக 490 கோடி ரூபாயை ஏற்றி விட்டேன்!
1230 கோடி ரூபாய் கம்பெனிக்காக, துணைக் கம்பெனிகளிடமிருந்து கடன் வாங்கி இருந்தேன். அதைக் கம்பெனி கணக்கில் காட்டவே இல்லை.

செப்டம்பர் 2வது காலாண்டில், நமது வருமானம் உள்ளபடியே 2112 கோடி ரூபாய்தான். இதில் லாபம் ரூ.61 கோடி (3%). நான் கணக்கில் வருமானம் ரூ.2700 கோடி என்று போட்டு லாபம் 649 கோடியாக (24%) காட்டி விட்டேன்.

பாலன்ஸ் ஷீட்டுக்கும் நிஜக் கையிருப்புக்குமான வித்தியாசம், பல வருஷங்களாக இப்படி லாபத்தைக் கூட்டிக் காண்பித்ததால் வந்தது. இதை சத்யம் கம்பெனியில் மட்டும்தான் செய்தேன். மற்ற துணைக் கம்பெனி பாலன்ஸ் ஷீட்கள் எல்லாம் பரம சுத்தம்!

சிறிய அளவில் ஆரம்பித்த இந்தக் கூடுதல் லாபக் கணக்கு, வருஷா வருஷம் அதிகமாகி, உருண்டு திரண்டு பெரிய தொகையாக வந்து விட்டது. அதிக லாபக் கணக்கு காட்ட வேண்டியிருந்ததால், வருமானத்தையும் சொத்துக் கணக்கையும் ஊதிப் பெரிதாக்க வேண்டியதாயிற்று. இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்ற நிலையும் வந்து விட்டது.

இந்த வித்தியாசத்தைக் குறைக்க என்னென்னவோ செய்து பார்த்தும் முடியவில்லை. கம்பெனி நிறுவனர்கள் மொத்த பங்குத் தொகையில் மிகச் சிறிய அளவே வைத்திருந்தோம். கம்பெனி செயல்பாடு சரியாக இல்லை என்றால், யாராவது திமிங்கிலங்கள் கம்பெனியை எடுத்துக் கொண்டு விடுவார்கள். குட்டு வெளியாகி விடும். புலியின் மேல் ஏறி சவாரி செய்யத் தொடங்கியாயிற்று. கீழே இறங்க முடியாது, இறங்கினால் புலி அடித்துச் சாப்பிட்டு விடும்!

ஒரு ஐடியா தோன்றியது. இல்லாத பணத்தைக் கொடுத்ததாகச் சொல்லி மைட்டாஸ் (Maytas) கம்பெனிகளை விலைக்கு வாங்கிக் கொள்வது. அப்புறம் அவர்களுக்குப் பணத்தை மெதுவாகக் கொடுத்தால் போகிறது! பொய்ச் சொத்து நிஜ சொத்து ஆகி விடும்! இதற்காகத்தான் போர்டில் அப்படி ஒரு தீர்மானத்தைப் போட்டோம். அப்புறம் நடந்த சங்கதிகள் எல்லாம்தான் உங்களுக்குத் தெரியுமே?

நானோ, மேனேஜிங் டைரக்டரோ, எங்கள் மனைவிமார்களோ, கடந்த எட்டு வருஷமாக பங்குகளை விற்கவில்லை. தர்ம காரியங்களுக்காகக் கொஞ்சம் விற்றோம்; அவ்வளவுதான்! ஒரு ரூபாய் அல்லது டாலர் கூட கம்பெனி பணத்தில் கை வைக்கவில்லை. லாபக் கணக்கை அதிகரித்துக் காட்டியதால் எங்களுக்குப் பைசா அனுகூலமில்லை!

இந்த விஷயங்கள் எல்லாம் பழைய, புதிய டைரக்டர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ, எங்கள் குடும்பம், விஸ்தரிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாருக்குமோ தெரியாது.

"அப்பா! என் மன பாரத்தை இறக்கி வைத்து விட்டேன்!" என்று சொல்லித் தொடர்கிறார் ராஜு.

செயற்படை ஒன்று அமைத்திருக்கிறேன் என்று சொல்லி அதற்கு ராம் மைனம்பட்டியைத் தலைவராக்கிக் கொள்ளச் சொல்லிப் பரிந்துரை செய்கிறார். அவரே முதன்மை நிர்வாக அதிகாரியாக இடைக்காலத்துக்கு இருக்கட்டும் என்றும் ஆலோசனை தருகிறார். ஆடிட்டர்களை வைத்துப் புதிதாக சரியான கணக்கு எழுதிக் கொள்ளுங்கள் என்றும் அறிவுரை வீசுகிறார்.

கடிதத்தின் நிறைவுப் பகுதியில் ராஜு, "மனம் விட்டுப்" பேசுகிறார். சத்யத்துடன் தமக்கு இருந்த பிணைப்பையும் அதன் வளர்ச்சியையும் நினைவு கூர்கிறார். இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதற்காக சத்யத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பினரிடமும் ‘மனப்பூர்வமாக’ மன்னிப்பு கோருகிறார். போர்டு மெம்பர்கள் ஒன்று பட்டு நின்று உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இந்த நெருக்கடி நேரத்தில் அரசாங்க ஆதரவு பெற்றுத் தர, டி.ஆர்.பிரசாத் தகுதியானவர் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ராஜினாமாவைச் சமர்ப்பித்து நிலைமை சீரடையும் வரை பொறுப்பைத் தொடர்ந்து வகிப்பேன் என்று கூறுகிறார். நிறைவாக அவர் சொல்வது:
"நாட்டின் சட்டங்களுக்கு என்னை உட்படுத்திக் கொள்கிறேன். விளைவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்!"

அந்தக் கால தமிழ் சினிமாவில் வில்லன் இப்படித்தான் யாருக்கும் வேலை வைக்காமல் கடைசிக் காட்சியில், தான் செயல்பட்ட விதங்களையெல்லாம் விலாவாரியாகக் ‘கடகட’வென்று ஒப்பித்து விடுவான். கடைசி டயலாக் பின்வருமாறு இருக்கும்.

(விலங்குக்குத் தயாராக கைகளை நீட்டியபடி) "இன்ஸ்பெக்டர், உங்கள் கடமையைச் செய்யுங்கள்!"

அதுதான் நினைவுக்கு வருகிறது!

(தொடரும்)”

About The Author