சத்யத்தின் கதை (6)

இதெல்லாம் எப்படி சார் முடியும்?

அத்தனை போர்டு மெம்பர்களையும் வெளியேற்றி விட்டு, சம்பந்தப்பட்ட துறைகளில் மதிப்புக்குரிய சிலரை டைரக்டர்களாக்கி புதிய போர்டு அமைத்தார்களே, அப்போது புதிய ஏற்பாட்டில் முதன்மை நிர்வாக அதிகாரியாக யாரை நியமித்தார்கள் தெரியுமோ? ஏ.எஸ்.மூர்த்தி என்பவரை. இவர் ராஜுவின் வலது கை. அவருக்குத் தெரியாமல் எந்த விஷயமும் சத்யத்தில் நடந்திருக்க முடியாது என்று பேசிக் கொள்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் தம் கையில் இருந்த சத்யம் பங்குகளில் பெரும்பான்மையானவற்றை விற்றுத் தள்ளி விட்டார் மூர்த்தி. விலை ரூ. 150 – 200 அளவில். ஜனவரி 7ம் தேதி மனசாட்சியின் தொந்தரவு தாங்காமல் ராஜு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்பதை நினைவு வைத்துக்கொண்டால் இது விளங்கும். மூர்த்தி செய்தது Insider Trading என்ற குற்றத்தின் பாற்படும். இவரை நிர்வாக அதிகாரியாக ஆக்கியதை சாதாரண அறிவு படைத்த யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

இது ஒரு புறம் இருக்க, ஒப்புதல் வாக்குமூலம் வெளியான ஓரிரு தினங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள். பத்திரிகையாளர்களைக் கேட்கவும் வேண்டுமா? கேள்வி மேல் கேள்வி போட்டுத் துளைத்தெடுத்து விட்டார்கள். அத்தனைக்கும் அங்கிருந்த உயர் அதிகாரிகள் அத்தனை பேரும் ஆட்டு மந்தை, "மேஎ.." என்பதுபோல் ஒரே குரலில் சொன்ன பதில், "எங்களுக்கு எதுவுமே தெரியாது.." பத்திரிகைக்காரர்கள் புன்னகைத்துக் கொண்டு போனார்கள்.

வாக்குமூலம் கிடைத்த அன்றைக்கே செபி விசாரணைக்கு உத்தரவிடுகிறது. உயர் அதிகாரிகள் ஐதராபாத் விரைகிறார்கள். அன்று மாலை ராஜுவைச் சந்தித்து விசாரிப்பதாக ஏற்பாடு. ஆனால் அதிகாரிகளை வரவேற்றவர் ராஜுவின் வக்கீல். "அவர் ரொம்ப படபடப்பாக இருக்கிறார். நாளைக்குக் கண்டிப்பாக விசாரிக்கலாம்."

மறுநாள், ராஜு ஆந்திரப் போலீசாரால் கைது செய்யப்பட்டு விட்டார். "சரணடைந்து விட்டார்" என்று ஒரு பாடபேதம்! விசாரித்த நீதிபதி அவரை நீதிமன்றக் காவலில் வைத்து விட்டார். எனவே, நீதிமன்ற உத்தரவின்றி அவரை செபியோ அல்லது போலீசோ கூட விசாரிக்க முடியாது. இதற்கிடையில், நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் வாட்லா மணியும் கைதாகி நீதிமன்றக் காவலில். போலீஸ் காவலுக்கு மாறிய பிறகும் கூட ஆந்திர போலீஸ் செபிக்கு விசாரணை நடத்த அனுமதி மறுத்து விட்டது. பிறகு அரும்பாடுபட்டு உயர் நீதிமன்றம் வரை சென்று விசாரணைக்கு உத்தரவு வாங்குவதற்குள் 35 நாட்கள் உருண்டோடி விட்டன!

ராஜுவை விசாரணை செய்யாமலே இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. ராஜசேகர ரெட்டி அரசின் சி.ஐ.டி. இலாகா விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு அக்கவுண்ட்ஸ் மற்றும் கம்பெனி சட்டம் சம்பந்தமான விவகாரங்களில் பயிற்சி இல்லை. அதனால் என்ன பரவாயில்லை! விசாரணை செய்யும் அதிகாரி ராஜசேகர ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் முன் சில வழக்குகளில் அரசுக்கு மிகவும் "உதவிகரமாக" இருந்தவர் என்றும் சொல்கிறார்கள். அதனால் என்ன? விசாரணை என்றால் சட்டப்படிதானே நடக்கும்?! சாதாரண பிக்பாக்கெட்டைக் கூட முட்டிக்கு முட்டி தட்டி, தொங்க விட்டெல்லாம் விசாரிப்பார்கள் என்கிறார்களே? இங்கு எப்படி? விசாரணை அறையிலிருந்து அதிரடிச் சிரிப்பும் கூத்தும் கும்மாளமுமாக வெளியில் சப்தம் கேட்கிறது என்று அருகிலிருப்பவர்கள் சொல்கிறார்கள்!

இதுவும் சொல்கிறார்கள், ராஜுவுக்கு ஜெயிலில் "ராஜுவோபசாரமாம்!"

இப்போது விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு விட்டது. 40 நாட்கள் தாமதம். இன்னும் ஐம்பதே நாட்களில் சி.பி.ஐ. விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் ராஜு வெளியே வந்துவிட முடியும். குற்றத்தின் மகத்தான அளவைப் பார்க்கும்போது இது எவ்வளவு குறுகிய அவகாசம் என்பது தெரியும்.

ராஜசேகர ரெட்டிக்கு மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் ரொம்ப அக்கறை. இல்லாவிட்டால், மைட்டாஸ் கம்பெனிக்கு ஏக்கர் 5 கோடி பெறுமான நிலத்தை ஏக்கர் 10 லட்சம் ரூபாய் என்ற விலைக்கு 50 ஏக்கர் தருவாரா?

மைட்டாஸ் கம்பெனியைப் பற்றி அதிகம் பேசவில்லையே? இது Maytas. Maidas இல்லை. மைதாஸ் என்பவன் பேராசை பிடித்த மன்னன். தொட்டதெல்லாம் தங்கமாக வேண்டும் என்று வரம் வாங்கியவன். கையில் எடுத்த சோறும், கண்ணுக்குக் கண்ணான குழந்தையும் அவன் கை பட்டுத் தங்கமானதும் தன் முட்டாள்தனத்தை, பேராசையை நினைத்து வருந்தியவன். (ஏதோ நினைவு வந்தது, சொன்னோம்!)

மைட்டாஸ் கம்பெனியின் பெய்ட் அப் முதல் ரூ. 5 லட்சம். கம்பெனி சட்டப்படி அவர்கள் 3 லட்சம்தான் கம்பெனிகளில் முதலீடு செய்யலாம். ஆனால், அவர்கள் செய்துள்ள முதலீடு 90 கோடி ரூபாய். வாங்கியுள்ள கடன் 420 கோடி ரூபாய். (பொருத்தமாகத்தான் இருக்கிறது என்று அங்கே யாரோ முணுமுணுக்கிறார்கள்!).

நம் சந்தேகம் எல்லாம், கம்பெனி ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு இவர்கள் ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டுமே! அனுப்பவே இல்லையா? இல்லை என்றால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க மாட்டார்களா? அனுப்பி தவறான தகவல் தந்திருந்தால் அதைக் கண்டுபிடிக்க வழிமுறை எதுவும் இல்லையா? சரியான தகவல் தந்திருந்தால் விதி மீறலைப் பற்றி எல்லாம் கேள்வி எழுப்ப மாட்டார்களா?

இது குறித்து விசாரித்த போது பெயர் சொல்ல விரும்பாத ஓர் அதிகாரி சொன்னது: "35000 கம்பெனிகள் இருக்கின்றன. இதெல்லாம் எப்படி சார் முடியும்? உள்ள வேலையைப் பார்க்கிறதுக்கே இங்கே ஆளும் இல்லை; தேளும் இல்லை!"

(தொடரும்)

About The Author