சாக்லேட்

உலகில் உள்ள அனைவருக்கும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தின்பண்டங்களுள் சாக்லேட்டும் ஒன்றாகும். கிறிஸ்டபர் கொலம்பஸ் 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அப்போது அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்களைப் பயன்படுத்தி வந்ததைக் கண்டு பின்னர் ஸ்பெயின் நாட்டுக்கு அதனை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பழைய பதிவேடுகளின்படி சாக்லேட் கி.பி. 1350ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் பயன்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்டை கோகா மரங்களில் இருந்து பெற்றனர். பின்னர் ஸ்பெயின் நாட்டிலும் இத்திரவப் பொருள் ஓர் உணவாகப் பரவியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம் இது ஸ்பெயினில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது.

பிரான்சு நாட்டில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவர்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. உணவுத் துறை வல்லுநர்கள் சோதனை செய்து, உடல் நலத்திற்குத் தீங்கு ஏதும் விளைவிக்காது என்று சான்றளித்த பின்னரே பிரஞ்சு அரசு 1650 இல் இதனை பொது மக்கள் அருந்துவதற்கான ஒரு பானமாக ஏற்றுக்கொண்டது.

பின்னர் 1657இல் பிரெஞ்சு நாட்டைச் சர்ந்த ஒருவர் லண்டனிலும், ஐரோப்பாவின் பிற நகரங்களிலும் சாக்லேட் பானம் விற்கும் கடைகளைத் துவக்கினார். அப்போது இது பணக்காரர்களின் பானமாகக் கருதப்பட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாட்டைச் சார்ந்த ஒருவர் சாக்லேட்டை, பால் மற்றும் சக்கரையுடன் கலந்து ஒர் குளிர்பானமாக அறிமுகப்படுத்தினார்.

பின்னர் கெய்லர் என்ற ஸ்வீடிஷ் நாட்டைச் சார்ந்த ஒருவர் சாக்லேட்டைத் துண்டுகளாகவும், கட்டிகளாகவும் திட வடிவத்தில் உருவாக்கினார்.

இதற்கிடையில் காட்பரி சகோதரர்கள் எனப்பட்ட புரோஜான் மற்றும் பெஞ்சமின் என்ற இருவரும் பல்வகை வடிவங்களில், பல்வகை மூலப்பொருட்களைக் கொண்டு பல்வேறு வகையான சாக்லேட்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கோஹன்ரிட் ஜே. வான் ஹட்டன் என்ற டச்சு நாட்டு வேதியியல் அறிஞர் 1860 ஆம் ஆண்டில் சாக்லேட் திரவத்தை, சாக்லேட் தூளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பச் செயல் முறையைக் கண்டுபிடித்தார். இக்கோட்பாட்டின் அடிப்படையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டேனியல் பீட்டர் என்பவர் பால் சாக்லேட்டைத் தயாரிக்கத் துவங்கினார்.

இரண்டாம் உலகப்போரின் போது போர் வீரர்கள் உண்பதற்கென்று பலவகைச் சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் வகை வகையான சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வோரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் தமது தயாரிப்பே சுவையிலும், ஊட்டத்திலும் சிறந்தது என விளம்பரப் படுத்துகின்றது.

****

About The Author