சினி சிப்ஸ் கொறிக்க, சுவைக்க (4)

ஜக்குபாயில் சரத்குமார்!!!

பாபா படத்திற்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமாரின் ‘ஜக்குபாயில்’ ரஜினி நடிப்பதாக இஆருந்து கைவிடப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. பல வருடங்களுக்குப் பிறகு இஆயக்குனர், சரத்குமாரைக் கொண்டு ‘ஜக்குபாயை’ படமாக்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

*****

இசையமைப்பாளர் பேத்தி பாடிய ரீமிக்ஸ்

பாண்டிச்சேரி அன்னையின் நினைவாக இசையமைப்பாளர் கங்கை அமரன் வெளியிட்டுள்ள ‘தாய்’ ஆல்பத்தில் சித்ரா, அனுராதா ஸ்ரீராம், விஜய் ஜேசுதாஸ், ஹரி சரண் போன்ற பல முன்னணிப் பாடகர்கள் பாடியுள்ளார்கள். இவர்களுடன் கங்கை அமரனின் பேத்தியும், வெங்கட் பிரபுவின் மகளுமான ஷிவானி ‘களத்தூர் கண்ணம்மா’வில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘அம்மாவும் நீயே’ பாடலை ரீமிக்ஸ் பாடலாக பாடியுள்ளார். யூ.கே.ஜி படிக்கும் இந்த சுட்டிக் குழந்தை சங்கீதம் பயில்கிறாளாம்.

*****

தசாவதாரத்தின் பாடல் வெளியீடு

சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில், ஏப்ரல் 2 அன்று தசாவதாரப் பாடல்களை வெளியிட உள்ளனர். நடிகர் ஜாக்கிசான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது விழாவின் சிறப்பம்சம். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவீ, நாகார்ஜுனா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளனர்.

*****

ஹ்ருதயராகம்

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 125 குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக ‘ஷோபா ஹ்ருதய ராகம்’ நிகழ்ச்சியை உலக மலையாளர்கள் மன்றம் நடத்தியது. இதில் மலையாள திரைப்பட உலகைச் சேர்ந்த 32 பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பங்கேற்றனர். நடிகை ஷோபனா குழந்தைகளுடன் இணைந்து நாட்டியமாடினார். கமலஹாசன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

*****

அக்கு (ஃ)

பிரபலங்கள் யாரும் இல்லாமல் எடுக்கப்பட்டு, வெளிவந்த சில நாட்களிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது இயக்குனர் மாமணியின் அக்கு (ஃ). பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் எதுவுமில்லாத இத்திரைப்படத்தின் மொத்த நீளம் 90 நிமிடங்களே. தீவிரவாதி ஒருவனால் தன்னுடைய ஷூவில் பொருத்தப்பட்டுள்ள வெடிகுண்டிலிருந்து தன்னையும், நகரத்தையும் காப்பாற்றுகிறார் ஓர் தொழில் நுட்பப் பொறியாளர் என்பதே படத்தின் கரு. ‘ஸ்பீட்’ ஹாலிவுட் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

*****

சில நேரங்களில்

வெவ்வேறுவிதமான காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களை வைத்துப் படமாக்கப்பட்டுள்ளதே ‘சில நேரங்களில்’ திரைப்படத்தின் சிறப்பம்சம். நவ்யா நாயர், கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள (வில்லன் நடிகர்) வின்சென்ட் அசோகன், ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் கலை இயக்குனர், 60பதுகளின் செட்டிங்களுக்காக அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

*****

‘அஞ்சாதே’யின் வெற்றி

மிஷ்கின் இயக்கத்தில் நரேன் நடித்து வெளிவந்துள்ள ‘அஞ்சாதே’ திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது. சற்று நீளமான படமானாலும் (மூன்றரை மணி நேரம்) தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நடிகர்கள் பாண்டியராஜன், பிரசன்னா வில்லன்களாக நடித்துள்ளது படத்தின் ஹைலைட். அதே போல் 2008ம் ஆண்டின் முதல் வெற்றிப்படம் என்ற சிறப்பையும் தட்டிச் செல்கிறது இத்திரைப்படம்.

*****

குறும்படப் பயிற்சிப் பட்டறைகள்

மார்ச் 10 முதல் ஏழு நாட்களுக்கு குறும்படப் பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளன நிழல் மற்றும் பதியம் குறும்பட இயக்கங்கள். ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பளிப்பதே இதன் நோக்கமென்று தெரிவித்துள்ளார் நிழல் திருநாவுக்கரசர். இப்பயிற்சிகளின்போது இயக்குனர்கள் அமீர், பாலாஜி சக்திவேல் போன்றவர்கள் உரையாற்ற உள்ளனர்.

*****

குசேலனில் சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் பி.வாசுவின் ‘குசேலன்’ திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் பூஜை மார்ச் 7ம் தேதி நடைபெற்றது. இதில் வெயில் புகழ் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மலையாள வெற்றிப்படமான ‘கத பறையும் போல்’ படத்தின் தமிழ் மொழியாக்கம்தான் இந்தக் குசேலன்.

*****

About The Author