சிபி (14)

மதுரையிலிருந்து உதகமண்டலம் வழியாய்ப் பாளையங்கோட்டையை அடைந்து, சேவியர்க் கல்லூரியில் படித்த போது தான் ‘தி ஸிக்ஸ்த் ரேஸ்’ பாடமாயிருந்தது.

ஐந்து இனமாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிற மனித சமூகத்துக்கு அப்பாற்பட்டு ஆறாவது இனம் ஒன்று இருக்கிறதாம். தன்னலம் கருதாமல், தன்னுடைய சுக துக்கங்களைத் தியாகம் செய்து, சக மனிதர்களின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருந்த உன்னத மனிதர்கள் தான் அந்த ஆறாவது இனமாம்.

ஃப்ரான்ஸ் நாட்டின் சீர்த்திருத்தவாதி ஆபேப் பியர், Blind liberater என்று புகழப்பட்ட எகிப்தின் தாஹா ஹுசேன், ஜப்பானின் டோயோஹிகோ ககாவா முதலியோரோடு, இந்திய மகான் ஒருவரும் அந்த ஆறாவது இனப் பட்டியலில் இருந்தார்.

வினோபா பாவே.

மஹாத்மா காந்தியின் ஆன்மீகச் சீடர். மஹாத்மாவைப் போலவே, இடையில் மட்டும் உடையணிந்த ஓர் "அரை நிர்வாணப் பக்கிரி."

அந்த ஆறாவது இனப் புத்தகம் ஒரு அரை நூற்றாண்டு பிற்படுத்தப்பட்டு எழுதப்பட்டிருந்தால், அதில், போலந்து தொழிற்ச்சங்கத் தலைவர் லெக் வவென்ஸô, தென்னாப்பிரிக்க நிற வெறிக் கெதிராய்ப் போராடி 27 வருடம் சிறையிருந்த நெல்ஸன் மண்டேலா, பலவந்தமாய், மூக்கு வழியாய் உணவு புகட்டப்படுகிற நிலையிலும் மனந்தளராது மனித உரிமைக்காகப் போராடி வருகிற மணிப்பூரின் எஃகு மங்கை ஐரோம் ஷர்மிளா, மியன்மாரின் வருங்கால ஜனாதிபதி ஆங் சான் சூ ச்சி ஆகியோரும் இடம் பெற்றிருப்பார்கள்.

இவர்களெல்லாம் அகில உலகமும் அறிந்திருக்கிற பிரபலத் தியாகிகள்.

ஆனால், உலக அளவில் அறியப்படாத உன்னத மனிதர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைப் பட்டியல் போட்டால், அதை ‘ஏழாவது இனம்’ என்று அழைக்கலாமா?

அழகாய் அழைக்கலாம். யார் தட்டிக் கேட்கப் போகிறார்கள்?

எளிமையையும் நேர்மையையும் இந்த ஏழாவது இனத்துக்கு இலக்கணமாய்ச் சொல்லலாம். ஏழாவது இனத்தவர் அநேகமாய் அரசியலுக்கு வெளியே இருப்பார்கள், அபூர்வமாய் அரசியலிலும் இருப்பார்கள்.

அரசியலுக்கு அப்பாலிருக்கிற ஏழாவது இனத்தவரைக் கண்டாலே அதிர்வேட்டு அரசியல்வாதிகளுக்கு ஆகாது. முடிந்த வரை அவர்களைப் பந்தாடுவார்கள், பழி தீர்ப்பார்கள்.

நம்மத் தமிழ்நாட்டில்கூட இந்த ஏற்றமிகு ஏழாவது இனத்தவர் இருக்கிறார்கள் என்பது நமக்கு கர்வமளிக்கிற ஒரு விஷயம்.

எடுத்துக்காட்டாய் ரெண்டு பேர்.

அரசியலில், தோழர் நல்லகண்ணு. அரசியலுக்கு வெளியே, முன்னாள் மதுரைக் கலெக்டர் சகாயம்.

தோழர் நல்லகண்ணுவின் முன்னோடியான தோழர் ஜீவானந்தம் கூட ரொம்ப எளிமையானவர் என்று சொல்லுவார்கள். குடிசையில் வசித்த கம்யூனிஸ்ட் தலைவர் அவர்.

இடது சாரிகளே பொதுவாய் எளிமையானவர்கள் என்றொரு அபிப்பிராயம் இருக்கிறது.

அந்த அபிப்ராயத்துக்கு வலு சேர்த்துக் கொண்டிருந்தவர் அச்சுத மேனன். முன்னாள் கேரள முதலமைச்சர். சட்டமன்றத்துக்கு சைக்கிளில் வந்து போய்க் கொண்டிருந்த முதலமைச்சர்.

நம்மத் தமிழ்நாட்டில் சில வருஷங்கள் முன்பு வரை, முதலமைச்சர், தோட்டத்திலிருந்து கோட்டைக்குப் போகிறாரென்றால், அந்த சாலையெங்கும் ஓர் அரைமணி நேரத்துக்கு முன்பாகவே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும். முதலமைச்சரின் காருக்கு முன்னால் நான்கு வாகனங்கள் பராக் பராக் என்று பறக்க, முதலமைச்சரின் வாகனத்தைத் தொடர்ந்து வால் போல ஒரு நான்கு கார்கள் விரையும். போதாததற்குப் பக்கவாட்டில் ரெண்டு ஜீப்களில் ஏ கே 47 சகிதம் கருப்புப் பூனைகள் தொங்கிக் கொண்டு போவது, இடி அமீனின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் உகாண்டாவில் வசிப்பது போன்ற கலக்கத்தை உண்டுபண்ணும்.

கோட்டையில் உட்கார்ந்து கோப்புகளைப் பார்வையிட்டுப் பொதுமக்களின் கஷ்டங்களையெல்லாம் களைந்து விட்டு முதலமைச்சர் சாயங்காலம் அரண்மனைக்குத் திரும்பி வருகிற போது, மறுபடியும் அதே கூத்தும் கெடுபிடியும். வேலையிலிருந்து திரும்புகிறவர்கள் வேளைக்கு வீட்டுக்குப் போக முடியாது, பள்ளிக்கூடப் பிள்ளைகள் காலா காலத்தில் வீடு போய்ச் சேர முடியாது.

எதெதெற்கெல்லாமோ வேலை நிறுத்தம் செய்கிற எதிர்க்கட்சிகள். இந்த பந்தாவைக் கண்டித்து ஒரு பந்த் கூட நடத்தவில்லை.

கேரளாவில், சைக்கிளில் வேலைக்குப் போகிற ஒரு முதலமைச்சர் இருந்தார் என்பதை அறியும் போது, ஒரே பிரமிப்பாயிருக்கிறது.

தமிழ்நாட்டைப் போலவே, கேரளாவிலும் கூட, அரசு அலுவலகங்களிலும், மந்திரிமார் மத்தியிலும் ஊழலும் லஞ்சமும் இருக்கத்தான் செய்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தார், நம்மத் திருவனந்தபுரத்து மச்சான், சில வருஷங்களுக்கு முன்னால் நான் சேரநாடு சென்றிருந்த போது.

அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால், மேற்கொண்டு அவர் தந்த ஒரு கூடுதல் தகவல் முக்கியமானது.

"வழக்கமாகவே கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சியும் இந்திராக் காங்கிரஸின் ஆட்சியும் மாறி மாறி வரும். இந்திராக் காங்கிரஸ் ஆட்சி செய்கிற அஞ்சு வருஷத்தை விட, இடதுசாரிகள் ஆட்சி செய்கிற அஞ்சு வருஷத்தில் லஞ்ச ஊழல் ரொம்பக் குறைவாகவே இருக்கும்."

சேர நாட்டுக்கு எதற்காகப் போனேன்?

அக்காவையும் மச்சானையும் பார்க்கப் போனேன். சைடு அட்ரக்ஷன், ஒரு மலையாளக் கல்யாணம். மலையாள முஸ்லிம் கல்யாணம். கல்யாணம் நமக்கு முக்கியமில்லை, கல்யாணத்தில் பரிமாறப்படுகிற கேரளத்து பிரியாணி முக்கியம்.

பிரியாணிகளின் பக்குவம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

மெட்ராஸ் பிரியாணியில், அரிசியில் மட்டன் போடுவார்கள். ஆனால் பெங்களூர் பிரியாணியில் மட்டனில் அரிசி போடுவார்கள். மொக்கை மொக்கையான மட்டன் பீஸ்களுக்கிடையே தலைமறைவாயிருக்கிற பாசுமதிப் பருக்கைகளைத் தேடித் தேடித்தான் பொறுக்கியெடுக்க வேண்டும்.

இவ்விரண்டிலிருந்தும் அடியோடு மாறுபட்டது கேரளத்து பிரியாணி. தேக்ஷாவைத் திறந்து பார்த்தால் மேற்பரப்பில் வெறும் அரிசிச் சாதம்தான் வெண்மையாய்த் தெரியும். பக்கவாட்டில் கிளறிப் பார்த்தால் மட்டன் மசாலா தென்படும். மேலே ஒரு பாளம் அரிசி, அடுத்த பாளம் மட்டன் மசாலா, அதற்கடுத்த பாளம் திரும்பவும் அரிசி அதற்குக் கீழே மட்டன் பாளம் என்று மட்டனும் அரிசிச் சோறும் லேயர் லேயராயிருக்கும், லோயர் லேயரும் அப்பர் லேயருமாய். அரிசிச் சோற்றையும் மட்டன் மசாலாவையும் ஒரு சூட்சுமமான விகிதத்தில் கலந்து பிரியாணியாக்கிப் பரிமாறுவார்கள்.

மலையாள மட்டன் பிரியாணியை ஒரு வழி பண்ணி விட்டு ஊருக்குக் கிளம்பி, ரயிலேறுவதற்கு ஸ்டேஷனுக்குக் கிளம்பினோம், மச்சானும் நானும். பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த போது, கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு நபரை ஜாடையாய்ச் சுட்டிக்காட்டி மச்சான், “அந்த ஆள் யார்ன்னு தெரியுதா?” என்று கேட்டார்.

அந்த ஆளை நோட்டமிட்டேன். முழங்கை வரை மடித்து விட்ட வெள்ளைச் சட்டை, இடுப்பில், மடித்துக் கட்டிய வேஷ்டி, சட்டையின் காலரில் கோர்க்கப்பட்டு, முதுகில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த குடை, உதடுகளில் ஊசலாடிக் கொண்டிருந்த பீடி, உதட்டுக்கு மேலே, விவரமான மலையாள மீசை, கையிலே ஒரு துணிப் பை. மொத்தத்தில் ஒரு சராசரி மலையாள ஆண்மகன்.

"டிப்பிக்கல் மலையாளின்னு தெரியுது, ஆனா முன்னே பின்னே பாத்த மூஞ்சியாத் தெரியல. யாரு?"

"சொல்றேன்" என்று மச்சான் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு பஸ் வந்து நின்றது, பயணிகள் நிரம்பி வழிய. முட்டி மோதி உள்ளே புகுந்துவிட நான் முயற்சி மேற்கொண்டபோது, என் கையைப்பிடித்து மச்சான் பின்னுக்கிழுத்தார்.

"தம்பி கொஞ்சம் இருங்க, அவர் ஏறிக்கட்டும்."

பீடியைப் பிடுங்கிக் காலடியில் நசுக்கி விட்டு, அடித்துப் பிடித்துக் கொண்டு அவர் ஏறிக் கொண்டார். நாங்கள் ரெண்டு பேர் ஏறிக்கொண்டிருந்தால் அவரால் ஏறியிருக்க முடியாது.

"ட்ரெய்னுக்கு லேட்டாயிருச்சே மச்சான், அடுத்த பஸ் எப்ப வரும்?"

"அஞ்சு நிமிஷத்ல வந்துரும். நமக்கு இன்னும் டைம் இருக்கு. அவரும் ட்ரெய்னப் புடிக்கத் தான் போய்ட்டிருக்கார்னு நெனக்கிறேன். நீங்க பரவாயில்ல, டிக்கட் ரிஸர்வ் பண்ணிட்டீங்க. அவர் ரிஸர்வ் பண்ணியிருக்க மாட்டார். ஸ்டேஷன்ல க்யூல நின்னு டிக்கட் வேற அவர் வாங்கணும். அவர் சீக்கிரம் போய்ச் சேரட்டும்."

"ஒங்களுக்குத் தெரிஞ்சவரா மச்சான்?"

"கேரளத்ல எல்லாருக்கும் தெரிஞ்சவர் தான். ஈத் தேகம் கேரளத்திண்ட முன் முக்ய மந்திரியான. ஈ கே நாயனார்."

(தொடர்வேன்)

About The Author