சிபி (21)

நமக்குப் புரியவே புரியாத ரெண்டு விஷயங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

(நமக்கு என்றிருப்பதை எனக்கு என்றும் வாசிக்கலாம். சுயமரியாதையின் நிமித்தம் பல சமயங்களில் பன்மை வந்து விழுந்து விடுகிறது.)

ஒன்று, தமிழ்த் தொலைக்காட்சிச் சேனல்கள் சம்மந்தப்பட்டது.

"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக! உங்கள் தத்தனேரித் தொலைக்காட்சியில்!!" என்று உச்ச ஸ்தாயியில் அலறுவார்கள். மைக்கில் தானே பேசுகிறார்கள், பின் ஏன் இப்படித் தொண்டை கிழியக் கத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது, பதிமூணாம் வாய்ப்பாடை விடக் கடினமாயிருக்கிறது.

ஒரு கல்யாண சீஸனில், மேளக்காரர்கள் எல்லாருமே பிஸியாகி விட்டதால், பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுக் கல்யாணத்துக்கு மேளக்காரர் யாரும் சிக்கவில்லையாம்.

வேறு வழியில்லாமல், தமுக்கடித்து ஊருக்கு தண்டோராப் போடுகிறவரை சரிக்கட்டிக் கூட்டிக் கொண்டு வந்தார்களாம். தாலி கட்டுகிற நேரத்தில், கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று

குரலெழும்பவும், ‘மேளக்காரர்’ ஆரம்பித்தாரம், "இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால்" என்று.

அந்த முன்னுரையோடு ஆரம்பித்தால் தான் அவருக்குக் கொட்டடிக்கவே வரும்.

அதே மாதிரி இந்தத் தொலைக்காட்சி அறிவிப்பாளர்களுக்கு, வால்யூமை உச்சத்தில் வைத்தால் தான் வாயே திறக்கும் போல!

புரிதல்க் குறைபாடுள்ள ரெண்டாவது சங்கதி, மழை சம்மந்தப்பட்டது. மழை இல்லை, மழை இல்லை என்று மாய்ந்து போவார்கள். ஆண்டவனுக்கு வேண்டுதல்கள் வைப்பார்கள்.

வருண பகவானை நோக்கி வயலின் வாசிப்பார்கள்.

முஸ்லிம்கள், வெட்ட வெளியில் வெயிலில் நின்று மழைத் தொழுகை நடத்துவார்கள். பிரார்த்தனைகளை ஏற்றுக்கொண்டு கடவுள் மழைத்துளிகளை அனுப்பி வைத்து விட்டாலோ, தலைதெறிக்க ஓடுவார்கள், மழை மறைவுப் பிரதேசங்களை நோக்கி.

மழைத் தொழுகையை முடித்து விட்டு, வரிசையாய் நின்றிருந்த தொழுகையாளிகளிடம் பேஷ் இமாம் ஒரு பழைய கதையை நினைவுபடுத்தினார்.

இப்படித்தான், கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் மழைக்காகப் பிரார்த்தனை நடந்தது. அப்போது பிரசங்கம் செய்த பாதிரியார், பக்தர்களை நோக்கிக் கேட்டார், நம்முடைய பிரார்த்தனையைக் கர்த்தர் ஏற்றுக்கொள்வாரா?

"ஆமாம், ஏற்றுக் கொள்வார்"என்று ஏகோபித்த குரலில் பதில் வந்தது.

"தேவன் மழையை அனுப்பி வைப்பாரா?"

"நிச்சயம் அனுப்பி வைப்பார்."

"உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?"

"நம்பிக்கை இருக்கிறது."

"சரி. உங்களில் எத்தனை பேர் நம்பிக்கையோடு குடை கொண்டு வந்திருக்கிறீர்கள்?"

ஒரே ஒரு கை மட்டும் உயர்ந்தது.

பாதிரியார் சொன்னார்,

"நீங்கள் எல்லோரும் உதட்டளவில் தான் நம்பிக்கை கொண்டிருந்திருக்கிறீர்கள். இந்த ஒரே ஒரு பக்தர் தான் மனத்தளவில் நம்பிக்கை கொண்டு குடையோடு வந்திருக்கிறார்."

இந்தக் கதையைச் சொல்லிவிட்டுப் பேஷ்இமாம் தொழுகையாளிகளை நோக்கிக் கேட்டார்,

"அல்லாஹ்வின் நல்லடியார்களே, அந்தப் பாதிரியார் கேட்ட அதே கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன். நம்முடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா?"

"ஏற்றுக் கொள்வான்."

"ஏற்றுக் கொண்டு, மழையை நம்மேல் இறக்கி வைப்பானா?"

"நிச்சயம் இறக்கி வைப்பான்."

"உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?"

"இருக்கிறது."

"சரி, உங்களில் எத்தனை பேர் நம்பிக்கையோடு குடை கொண்டு வந்திருக்கிறீர்கள்."

"எல்லோரும் கொண்டு வந்திருக்கிறோம்."

"வெயிலுக்குக் கொண்டு வந்திருப்பீர்கள்."

"இல்லை ஹஜ்ரத், மழைக்காகத்தான் கொண்டு வந்தோம். நீங்கள் சொன்ன தேவாலயக் கதை ஏற்கனவே எங்களுக்குத் தெரியும்."

"நல்லது, அல்லாஹ்வின் அடியார்களே, உங்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. இதோ தூறல் போட ஆரம்பித்து விட்டது. இதோ அல்லாஹ் மழையை அனுப்பிவைத்து விட்டான்."

வானிலிருந்து மழைத்துளிகள் விழுந்தன. குடைகள் அத்தனையும் விரிந்தன.

ஒரேயொருவன் மட்டும் குடையில்லாமல் வந்திருந்தான். நனைந்து கொண்டு நின்றிருந்தான்.

ஹஜ்ரத் அவனை ஆழமாய்ப் பார்த்தார்.

"உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்றார் அவர் ஏளனத்தோடு.

"எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது" என்றான் அவன் ஈரத்தோடு.

"பின் ஏன் குடை கொண்டு வரவில்லை?"

"நான் மழையில் நனைவதற்காக வந்தேன். மழையிலிருந்து ஒளிந்து கொள்வதற்காக வரவில்லை."

எல்லா விழிகளும் அவனை நோக்கித் திரும்பின.

"நாமெல்லோரும் மழையை வேண்டி வந்திருக்கிறோம். மழைக்காகப் பிரார்த்திக்க வந்திருக்கிறோம். நம்முடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு, இறைவனுடைய அருட்கொடையாய் நம் மேல் மழை இறங்குகிற போது, குடையை விரித்து அந்த மழையிலிருந்து பாதுகாப்புத் தேடுவது, அந்த மழையை அவமானப்படுத்துகிற செயலில்லையா? நம்முடைய இறைஞ்சலை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய அருள்மாரியை நம் மீது சொரிகிற இறைவனை இழிவு படுத்துகிற முயற்சியில்லையா இது?"

அவனைப் பார்த்த விழிகளெல்லாம் தரையைப் பார்த்தன.

தலைக்கு மேல் விரிந்த குடைகளெல்லாம் மடங்கித் தலை கவிழ்ந்தன.

அந்த அவன், நம்ம ஜாதி.

அவனைப் போலவே, மழை நமக்குப் பிரியமான சங்கதி.

‘வெள்ளிச் சங்கிலித் தோரணமாய் சரிவாய் அலைந்திறங்கும் அழகைப் பார் வாய் திறந்து’ என்று ஆரம்பித்துக் கணையாழியில் பிரசுரமான நம்ம மழைக்கவிதை ஏற்கனவே நம்ம முதல் நாவலில் கோட் செய்யப்பட்டு விட்டது. திரும்பவும் அதை இங்கே சொல்லிக் காட்டுவது கூறியது கூறல். வேண்டாம்.

கூரியர் ஆஃபீஸுக்குப் போய் நம்மப் புத்தகங்களை சேர்க்கவென்று கிளம்புகிற போதே ஒரு சாடையான மழைக்குணம் இருந்தது.

முந்தின நாள், கூரியர் ஆஃபிஸூக்குப் பக்கத்திலேயே போய்க் கவர்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, பிறந்த மேனியாய்ப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பின மாதிரி இல்லாமல், ராத்திரியே கவர்களில் போட்டு ஒட்டி, முகவரிகளெல்லாம் எழுதி தயார் நிலையில் வைத்தாகி விட்டது.

யார் யாருடைய முகவரிகள்?

பாளையங்கோட்டைப் பள்ளிக்கூட சிநேகிதன் சானா கானாவுடையது ஒன்று. கலைஞரின் போர்வாளாய் வை கோ இருந்த காலத்தில், வை கோவின் போர்வாளாய் இருந்த சானா கானா.

பிறகு, நம்மத் தூத்துக்குடித் தோழர்கள் சங்கர், கலைமணி, இ பாலச்சந்தர். எமர்ஜன்ஸி காலத்தில், குமரி அனந்தனும் பா ராமச்சந்திரனும் ஊர் ஊராய்ப் போய் ஸ்தாபனக் காங்கிரஸ் தொண்டர்களிடையே கல்யாண மண்டபங்களில் புரட்சிப் பேருரைகள் ஆற்றிக் கொண்டிருந்த நெருக்கடியான சூழ்நிலையில், தூத்துக்குடிக் கல்யாண மண்டபமொன்றில் எனக்குக் கம்ப்பெனி கொடுத்த தேசியத் தோழர்கள்.

எமர்ஜன்ஸி முடிந்து எலக்ஷன் வந்த போது, நம்மக் கட்சிக்கும் தி.மு.க. வுக்கும் கூட்டு. திருநெல்வேலி – தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வுக்கு.

"வாழ்க்கைல நாம போடப்போற முதல் ஓட்டு உதயசூரியனுக்குப் போட வேண்டியிருக்கு பார்" என்று எனக்காகவும் தனக்காகவும் அனுதாபப்பட்ட கலைமணி, காலாவட்டத்தில் பார்ட் டைம் தி.மு.க. அனுதாபியாய் மாறிப் போய், இப்போது தான் அந்த மாயையிலிருந்து மீண்டிருக்கிறான்.

திருச்சியைச் சேர்ந்த நம்மக் கட்சிப் பிரமுகர் டாக்டர் பொன் குமாருக்கு ஒரு பிரதி.

அறிவரசனின் பத்திரிகை ஒருதலைப்பட்சமாய்த் திசைமாறிப் போனபிறகு, மாநிலத் தலைவரின் ஒப்புதலுடன் ஒரு கட்சிப் பத்திரிகையை ஆரம்பித்து சிறப்பாய் நடத்திக் கொண்டிருக்கிற கல்வியாளர். நம்ம நாவலுக்கு அவருடைய பத்திரிகையில் ஒரு விமர்சனம் வந்தால், சகலக் கட்சிக்காரர்களுக்கும் அது போய்ச் சேரும். கலகக் கட்சிக்காரர்களுக்குக் கூட போய்ச் சேரும்.

திருச்சி என்றதும் நம்ம ஜமால் முஹம்மது காலேஜ் சிநேகிதன் பழனிசாமி நினைவுக்கு வந்தான். கல்லூரிக் காலத்தில் அவன் ஒரு ஜெமினி கணேசன். ஒரே வீட்டில் சகோதரிகள் மூணு பேரையும் வசீகரித்து வைத்திருந்த காதல் மன்னன்.

"பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ" என்று டி ஆர் மஹாலிங்கம் பாடிய மாதிரி, ஆணுக்கு ஆணே ஆசை கொள்கிற அசத்தல் அழகன் பழனிசாமி. கடைசித் தங்கச்சியை அவன் கடத்திக் கொண்டு வந்த போது, நம்மக் கார் தான் காதல் வாகனமாய் பயன் பட்டது. கல்லூரிக் காலத்தில் எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கமாயிருந்தானோ, அவ்வளவுக்கவ்வளவு இப்போது தூர விலகிப் போய்விட்டான். எங்கேயிருக்கிறான் என்று தெரிந்தால் அவனுக்கும் ஒரு பிரதி அனுப்பி வைக்கலாம். மாணவப் பருவத்திலேயே சிகரெட் குடிக்கிறவன். நம்ம ஆன்ட்டி – ஸ்மோக்கிங் நாவலை வாசித்து விட்டு மனந்திருந்த வேண்டும் என்று அவனுக்கு விதித்திருந்தால் நிச்சயம் அவனோடு மீண்டும் தொடர்பு புதுப்பிக்கப்படும், இன்ஷா அல்லா.

ஐந்து பிரதிகளையும் பாக் செய்துப் பொலித்தீன் கவரில் போட்டுக் கொண்டு கிளம்புகிற போதே தூறல் போட ஆரம்பித்து விட்டது.

மழை நமக்குப் பிடித்த விஷயமானாலும், நம்ம   செல்ஃபோனுக்கு அது ஒத்துக் கொள்வதில்லை. ஜலதோஷம் பிடித்துக் கொண்டு செயலிழந்து போய்விடுகிறது. பாலித்தீன் பைக்குள்ளே ஃபோனையும் போட்டுக்கொண்டு அண்ணா நகரை நோக்கிப் போகிற போது, மேம்பாலத்தின் அடிவாரத்தில் ரெண்டு சக்கர வாகனங்களின் அணிவகுப்பு.

பாலத்துக்குக் கீழேயும் டாஸ்மாக் கடை திறந்து விட்டார்களா என்று உற்றுப் பார்த்தால் தெரிந்தது, வாகனங்கள்

மதுக்கடைக்கு ஒதுங்கியவை அல்ல, மழைக்கு ஒதுங்கியவை என்று. இந்தத் தூறலுக்கும் சாரலுக்குமே இப்படிப் பதுங்குகிறீர்களே தமிழர்களே என்று ஆரம்பித்து, நம்ம மெகா மழைத் திட்டத்தைப் பற்றிக் காலூன்றி நின்று அங்கே ஒரு கருத்துப் பரிமாற்றம் செய்யலாமா என்கிற எண்ணத்தைப் பின்னாலிருந்து எழுந்த ஹாண் இரைச்சல் சிதைத்துப் போட்டது.

அது என்ன மெகா மழைத் திட்டம்?

(தொடர்வேன்)

About The Author