சிபி (39)

காலையில் காரைத் துடைத்துக் கொண்டிருந்தபோது நினைவுக்கு வந்தது, இன்ஷ்யூரன்ஸ் கட்ட வேண்டுமே என்பது. இன்ஷ்யூரன்ஸ் கம்ப்பெனி பாரிமுனையில் இருக்கிறது, ஆர்மேனியன் ஸ்ட்ரீட் எனப்படுகிற, அரண்மனைக் காரத் தெருவில்.

பூக்கடைப் போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டிப் போய், ஏதோ ஒரு தெருவில் இடது பக்கம் திரும்ப வேண்டும். எங்கே திரும்ப வேண்டும் என்று சரியாய் நினைவில்லை. போன வருஷம் இன்ஷ்யூரன்ஸ் கட்ட வந்த போது திரும்பியது தான். அதற்குப் பிறகு அந்தப் பக்கம் திரும்பியேப் பார்க்கவில்லை.

தேவநேசனுக்கு ஃபோன் அடித்தால் சரியாய் வழி சொல்லுவான்.

அடித்தேன்.

"ஆர்மேனியன் ஸ்ட்ரீட்க்கு எதுக்குப் போற?"

"காருக்கு இன்ஷ்யூரன்ஸ் கட்டணும்."

"எந்தக் காருக்கு?"

"எந்தக் காருக்கா? இருக்கறது ஒரேயொரு கார் தானேடா, நம்மப் புராதன மாருதி 800, பச்சக் கலர்."

"புது வண்டி வாங்கலியா?"

"சைக்கிள் வேணா, அட் ய டைம் ரெண்டு ஓட்டலாம். காரெல்லாம் அப்டி ஓட்ட முடியாது."

"டேய், நீ இப்பக் கோடீஸ்வரன். இன்னும் ஏன் இந்த 87 மாடல் மாருதியக் கட்டி மாரடிச்சிட்டிருக்க?"

"நன்றி மறக்கக் கூடாது நண்பா. என்னையும் நம்ம மாநிலத் தலைவரையும் சொமந்துக்கிட்டு இந்த வண்டி எங்கெங்கெல்லாம் போயிருக்கு! பாசமுள்ள வண்டிடா இது."

"ஸென்ட்டிமென்ட்டான ஆளுடா நீ. சரி, பாசத்துக்கு இத வச்சிக்க. ஃபேஷனுக்கு ஒரு புது வண்டி வாங்கிக்க."

"ஒண்டிக்கட்டக்கி ஒரு வண்டி போதும். வழியச் சொல்லுடா நீ."

"லிங்கிச் செட்டித் தெரு, அங்கப்ப நாயக்கன் தெரு எல்லாம் இருக்கே, அந்த ஏரியா தான். அங்க போய்க் கேளு சொல்லுவாங்க."

ஜாதிப் பெயர்கள் கூடாது என்று ரொம்ப நாள் முந்தியே லிங்கிச் செட்டித் தெருவை லிங்கித் தெரு என்றும் அங்கப்ப நாயக்கன் தெருவை அங்கப்பன் தெரு என்றும் சுருக்கினார்களில்லையோ?

அங்கப்ப நாயக்கன் தெருவுக்குக் கூட ஒரு முறை போயிருக்கிறேன், திருவனந்தபுரத்து மச்சானுக்கு மௌலானா லுங்கி வாங்குவதற்காக.

சங்கு மார்க் லுங்கி, கிப்ஸ் மார்க் லுங்கி, மௌலானா லுங்கி என்று பிரதானமாய் லுங்கி வியாபாரம் நடக்கிற தெரு அது.

இந்தப் பக்கம் லிங்கித் தெரு. அந்தப் பக்கம் லுங்கித் தெரு.

ஆனால், அந்த ஏரியாவில் போய் லிங்கித் தெரு என்றால் வில்லங்கமாய்ப் பார்த்தார்கள். லிங்கிச் செட்டித் தெரு என்று விரிவாய்ச் சொன்னால் தான் புரிகிறது.

இப்படித்தான், திண்டுக்கல் வெற்றி வீரர் மாயத் தேவரை மாயன் என்று மாற்றினார்கள். கோபித்துக் கொண்டு அவர் கட்சி மாறிவிட்டார். எம் ஜி ஆரை வைத்துப் பல படங்கள் எடுத்த சாண்டோ எம் எம் ஏ சின்னப்பாத் தேவரை சின்னப்பா என்று மொட்டையாய்க் குறிப்பிட்டால் ஆட்சேபம் எழாதோ? அவருடைய படக் கம்ப்பெனியின் பெயர் தேவர் பிலிம்ஸ். ஜாதிப் பெயரான தேவரை வெட்டி விட்டு, வெறுமனே பிலிம்ஸ் என்று சொன்னால் சிரிப்புக்கிடமாகாதோ?

மூதறிஞர் ராஜாஜியை, ராஜகோபாலச்சாரியார் என்று பன்மையில் தான் சொல்லவேண்டும். ராஜ கோபால் என்று உரிமையோடு ஒருமையில் குறிப்பிடுவது முறையாயிருக்காது.

அதே போலத்தான் டி டி கிருஷ்ணமாச்சாரி. நுங்கம்பாக்கத்தில் ஒரு சாலைக்குக் கிருஷ்ணமாச்சாரி சாலை என்று பெயரிட்டு டி டி கே யைப் பெருமைப் படுத்தியிருந்தார்கள். பிறகு, கிருஷ்ணமா சாலை என்று பெயர் குறுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அதன் பெயர் ‘கிருஷ்ணம்மா ரோடு’ என்று பெயர்ப் பலகை இருக்கிறது! கிருஷ்ணமாச் சாரியின் chari யைப் பிடிங்கி எடுத்துவிட்டு sari யைக் கட்டி விட்டு விட்டார்கள்.

தி நகரில் சாரி தெரு என்றொரு தெரு இருப்பது கார்ப்பரேஷன் காரர்களின் கண்களில் படவில்லையா அல்லது கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விட்டார்களா என்று தெரியவில்லை. நியதிப்படிப் பார்த்தால் அது பெயரில்லாத வெற்றுத் ‘தெரு’வாய்த்தான் இருக்க வேண்டும்.

தலை நகரில் மட்டும்தான் இந்தக் கூத்தா அல்லது எல்லா நகரங்களிலும் அரங்கேற்றப்பட்டதா என்று பார்க்க வேண்டும், முதற்கட்டமாய் மதுரையில் பார்க்க வேண்டுமென்று பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் போய் இறங்கிய போது நினைத்தேன்.

ஆனால் கல்யாண வீட்டுக்குப் போய் சொந்தக்காரங்களுக்கெல்லாம் சலாம் சொல்லி, நிக்காஹ் முடிந்து, மதுரை மட்டன் பிரியாணி தின்கிற அத்தியாவசியக் கடமையெல்லாம் முடிந்த பின்னால், சந்து பொந்துகளுக்குள்ளெல்லாம் புகுந்து புறப்பட அவகாசமில்லை. ராத்திரி திரும்பவும் பாண்டியனைப் பிடிக்க வேண்டும்.

ஆனால், திருமலை நாயக்கர் மஹாலைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை தீவிரமாய் இருந்தது.

ஸெயின்ட் மேரீஸ் ஹைஸ்கூலில் எஸ் எஸ் எல் ஸி தேர்வு எழுதி முடிந்த சாயங்காலம், ரமேஷ் பாபு, மற்றும் இப்போது பெயர் மறந்து போன மூன்று சிநேகிதர்களோடு மஹாலுக்குப் போனது தான் நம்மக் கடைசி விஜயம். மஹாலின் மொட்டை மாடிக் கூரையில் பென்ஸில் கொண்டு நம்மப் பெயரைப் பதிவு செய்து விட்டு வந்ததெல்லாம் அழிந்து போகாமலிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

வாப்பா அப்போது மதுரை நகராட்சி மின்சார இன்ஜினியராயிருந்தார். சுப்பிரமணியபுரம் பவர்ஹவுஸ் வளாகத்துக்குள்ளே, ஒரு பத்து கிரவுண்ட் பரப்பளவுள்ள தோட்டத்துக்கு நடுவே அட்டகாசமான பங்களா.

இருங்க இருங்க. நம்ம மதுரை பங்களா பற்றிய புள்ளி விவரங்களும், பிரதாபங்களும் ஏற்கனவே ஆறாவது அத்தியாயத்தில் வந்தாச்சு. ஆகையால் மேற்கண்ட ரெண்டு வாக்கியங்களையும் தயவுசெய்து டிலிட் செய்து விடவும்.

க்ரைம் பிராஞ்ச் பஸ் ஸ்டாப்பில் வந்து தான் ஸ்கூலுக்கு பஸ் ஏற வேண்டும். ஸ்கூலுக்கு எதிரே இருந்த மிஷின் ஆஸ்பத்திரி ஸ்டாப்பில் இறங்கினால் ஆறு பைசா. அதற்கு முந்தின மஹால் ஸ்டாப்பில் இறங்கினால் அஞ்சு பைசா. அந்த ஒரு பைசாவை மிச்சம் பிடிப்பதற்காக, மஹால் ஸ்டாப்பில் இறங்கி நடப்போம்.

மஹால், மதுரையின் ஒரு சிறப்பு. மஹாலோடு சேர்ந்து பல சிறப்பு ‘எம்’கள் உண்டு.
மல்லிகைப் பூ, மருக் கொழுந்து, மீனாட்சி அம்மன் கோவில், மங்கம்மா சத்திரம், மஹால், மேல மாசி வீதி, முனியாண்டி விலாஸ், மாட்டுத் தாவணி, மினி ப்ரியா சினி ப்ரியா, மாப்பிள்ளை விநாயகர் சோடா, முருகன் இட்லிக் கடை, மஞ்சள் கலர்ப் பை, மதுரை.

இந்த ‘எம்’களில் அடங்காத இன்னொரு தனிப் பெருமை மதுரைக்கு இருந்தது.

டி வி எஸ் டவுன் பஸ்.

க்வாலிட்டிக்கும், பங்ச்சுவாலிட்டிக்கும் பேர் போன டி வி எஸ்.

சென்ட்ரல் – திருப்பரங்குன்றம் அஞ்சாம் நம்பர் பஸ், திருப்பரங்குன்றத்திலிருந்து கிளம்பி வரும். அந்த பஸ் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்கு வரவேண்டிய நேரம் 3. 58 என்று இருக்கும். 3. 56 க்கு பஸ், பஸ் ஸ்டாண்ட் வாயிலுக்கு வந்து விடும். ரெண்டு நிமிஷம் வாயிலில் நிற்கும். சரியாய் 3. 58க்கு உள்ளே நுழையும்.

அதெல்லாம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்.

இப்போது மஹாலுக்குள்ளே நுழைந்து பார்த்தால், மஹாப் பெரிய ஏமாற்றம். மாடிக்குப் போகிற பாதை அடைக்கப்பட்டிருந்தது. மேலே போய் நம்முடைய பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்துப் பரவசமடைய வழியில்லை.

பரவாயில்லை. பின்னொரு நாளில் இந்தப் பாதை திறக்கப்படும். அப்போது நம்மப் பேரன், கொள்ளுப் பேரன்களெல்லாம் மொட்டை மாடிக்குப் போய், தாத்தா, கொள்ளுத் தாத்தாவின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்துப் புல்லரித்துப் போவார்கள்.

அவர்களுடைய புல்லரிப்புக்குக் குறுக்கே நாம் நிற்கக் கூடாது என்று வந்த வழியே திரும்பி நடக்கவிருந்தபோது, வந்ததுக்கு டாய்லெட்டுக்காவது போய், சின்னதாய் ஒரு கையெழுத்துப் போட்டு விட்டுப் போவோமே என்று இடது பக்கம் திரும்பினால், அந்தப் பக்கத்திலிருந்து ரெண்டு வெளிநாட்டு வெள்ளைக்காரர்கள் வந்து கொண்டிருந்தார்கள், மூக்கைப் பொத்திக் கொண்டு.

‘Stinking O God, it is stinking shit’ என்று அந்த இருவரில் ஒருவருடைய வாய் முணுமுணுத்தது. மற்றவர் முணுமுணுக் கவில்லை. அவர், வாயையும் சேர்த்துப் பொத்திக் கொண்டிருந்தார்.

நான் டாய்லெட்டுக்குப் போகிற அபிலாஷையை அடக்கிக் கொண்டு, டிக்கட் கவுன்ட்டருக்குப் போய்ப் புகார்ப் புத்தகத்தைக் கேட்டேன்.

தயக்கத்தோடு கை மாறியது புகார்ப் புத்தகம். அந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் துர்ச்சான்றிதழையும், என்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்து, நம்மக் கட்சிப் பதவியை எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு நடந்தேன்.

"சார், சார்" என்று பின்னாலேயே ஓடி வந்தார் ஒரு மனிதர்.

(தொடர்வேன்)

About The Author