சிபி (4)

லொக்கு லொக்கென்று இந்தியாவின் தென்கோடிக்குக் கொட்டக் கொட்ட விழித்தபடிப் போய்ச் சேர வேண்டுமே என்கிற அயர்வு துளி கூட அவரிடமில்லை. நான் தான் துடித்துக் கொண்டிருந்தேன், அவரை அப்படிப் போக விட்டுவிடக் கூடாது என்று.

"எப்டித் தலைவர், ராத்திரி பூரா முழிச்சி பஸ்ல போறீங்க! ஒரு பாத்ரூமுக்கு, யூரினுக்குப் போக முடியாது, கண்ண மூட முடியாது, குறுக்கு ஒடிஞ்சி போகும்…"

"இப்பப் பரவாயில்ல தம்பி, அறுபதுகள்ள நாகர்கோவில்லயிருந்து மெட்ராஸ்க்கு ஸ்ட்ரெய்ட் பஸ் கெடையாது. தடம் எண் 511 -ன்னு திருச்சி – நாகர்கோவில் பஸ் ஒண்ணுதான். திருநெல்வேலிக்கித் தெற்கே ட்ரெய்ன் கெடையாது. நாகர்கோவில்ல தண்டவாளமே கெடையாது. மெட்ராஸ்க்கு வரணும்னா ரெண்டு பஸ் மாறித்தான் வரணும். அப்ப, பிளவுபடாத காங்கிரஸ் கட்சியில நா கன்யாகுமரி மாவட்டத் தலைவர். பெருந்தலைவர் திடீர் திடீர்னு மெட்ராஸ்க்கு வரச் சொல்லுவார். ரெண்டு பஸ் மாறித்தான் வரணும்."

அறுபதுகளில் இவர் கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் என்றதும், சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இவர் வாயால் கேட்க வேண்டுமென்று ஆர்வமேற்பட்டது. எனக்கு ஆர்வமேற்பட்ட அதே நேரத்தில், அறிவிப்பு ஒன்று ஒலிபெருக்கியில் ஒலிபரப்பானது, கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் அரைமணி நேரம் தாமதமாய்க் கிளம்பும் என்று. அந்த நேரத்தில் பெட்டிக்குள் பிரவேசித்த டிக்கட் பரிசோதகரிடம் பயணியொருவர் தாமதத்துக்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரொருவர் இந்த ரயிலில் பயணம் செய்யவிருப்பதாகவும், அமைச்சர் ஸ்டேஷனுக்கு வந்து சேருவது தாமதமாவதால் வண்டி அவருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது.

தலைவருடைய டிக்கட்டை நான் டிக்கட் பரிசோதகரிடம் நீட்டி, பெர்த் ஒன்றுக்கு விண்ணப்பம் வைத்தேன். "சான்ஸ் இல்ல சார்" என்று கையை விரித்து விட்டுப் பிற பயணிகளின் டிக்கட் பரிசோதனையில் அவர் ஈடுபட்டார். ஆத்திர ஆத்திரமாய் வந்தது எனக்கு. காலந்தவறாமையைக் கடைப்பிடிக்காத யாரோ ஒரு கத்துக்குட்டி மந்திரிக்காக, கரை வேட்டி மந்திரிக்காகப் பதினாலு
பதினஞ்சு பெட்டிகள் கொண்ட ரயில் நிறுத்தி வைக்கப் படுகிறது. ஆயிரத்திச் சொச்சம் பிரயாணிகள் தாமதப்படுத்தப் படுகிறார்கள். அரசியல் பாரம்பரியம் மிக்க, கண்ணியத்துக்கும் கை சுத்தத்துக்கும் அறியப்படுகிற என்னுடைய கதர்ச் சட்டைத் தலைவனுக்கு, காமராஜர் வழி வந்த தொண்டனுக்கு இந்த வண்டியில் ஓர் இருக்கை இல்லை.

இன்றைக்கு மட்டும் தலைவருக்கு பெர்த் கிடைக்காமற் போகட்டும், இந்த டிக்கட் பரிசோதகரை ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் கீழே இறங்க வேண்டும்.

தலைவரோ, இருக்கையின்மையைப் பற்றிக் கவலையே  கொள்ளாமல் சாந்தமாயிருந்தார். ஆனால், இந்தத் தலைவருக்குக்கூடக் கோபம் வரும் என்பதை நேற்றிரவு கண்கூடாய்ப் பார்க்க வாய்த்தது.

"நேத்து ராத்திரி என்ன ஊதச் சொன்ன அந்தப் போலீஸ்காரன ஒரு கொதறு கொதறிட்டீங்களே தலைவர்! ஒங்களுக்குக்கூடக் கோபம் வரும்னு நேத்து தான் பாத்தேன்."

"கோபத்துக்கு ஞாயம் இருக்கிறபோது கோபம் வந்துதான் ஆகணும் தம்பி. அந்த அவசியமான கோபம் வந்தாத் தான் அவன்
மனுஷன்."

"ஆனா, ஒங்களுக்கெதிரா கட்சிக்குள்ளேயே சதி  பண்ணிட்டிருக்கிற மூவரணி மேல ஒங்களுக்குக் கோபமே வர மாட்டேடோங்குதே தலைவர்!"

"அதான் சொன்னேனே தம்பி, கோபத்துக்கு ஞாயம்  இருக்கிறபோது தான் கோபம் வரணும். அனாவசியத்துக்குக்  கோபம் வந்தா அவன் மனுஷனே இல்ல."

"இந்த டி. டி. இ ஒங்களுக்கு பெர்த் இல்லன்னு சொல்லிட்டார்ன்னா அவர் மேல ஒங்களுக்குக் கோபம் வருமா வராதா தலைவர்?"

"எதுக்குக் கோபம் வரணும்? அவரோட கடமைய அவர் செய்யிறார். பெர்த் இருந்தா குடுக்கப் போறார், இல்லன்னா இல்லங்கப் போறார். அவ்ளோ தான்."

தலைவர் சொல்லி வாயை மூடவும், பெட்டியின் முகப்புக்குச் சென்று டிக்கட்டுகளைப் பரிசோதித்து விட்டுப் பரிசோதகர் எங்கள் பக்கம் வந்தார். அவராய்த் தலைவருக்கு  பெர்த் நல்குகிறரா பார்க்கலாம் என்று காத்திருந்தோம். காத்திருந்த நேரத்தில், தலைவர் கன்னியாகுமரி மாவட்டத் தலைவராயிருந்த போது நடந்த அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பற்றி, அவர் சொல்லக் கேட்க நினைத்துத் தடங்கல் ஏற்பட்டுப் போன சங்கதியைப் பற்றி அவரிடம் வாய் திறந்தேன்.

"தலைவர்!, நீங்க கன்யாகுமரி மாவட்டத் தலைவராயிருக்கும் போது தானே பெருந்தலைவர் போட்டியிட்டு ஜெயிச்ச நாகர்கோவில் எம். பி இடைத் தேர்தல் வந்தது?"

"ஆஹா! அத மறக்க முடியுமா? என்னுடைய முள்க் கீரிடத்ல ஒரு கோஹினூர் வைரமில்லியா அந்த இடைத் தேர்தல்!"

"அதப் பத்தி சொல்லுங்க தலைவர்!".

"என்னன்னு சொல்ல தம்பி! 1967 அஸெùஸம்ளி தேர்தல்ல நம்மக் காங்கிரஸ் கட்சி தோத்துப் போச்சு. விருதுநகர் சீனிவாசன்ட்ட பெருந்தலைவர் தோத்துப் போய்ட்டார். 1969- ல நாகர்கோவில் இடைத் தேர்தல். 1969 ஜனவரி எட்டு. பெருந்தலைவர எதுத்து மண்ணின் மைந்தர் டாக்டர் மத்தியாஸ். ராஜாஜியோட சுதந்திராக் கட்சி வேட்பாளர். அவருக்கு ஆதரவா ஆளுங்கட்சியான தி. மு. க. கருணாநிதியோட தி. மு. க. எம். ஜி. ஆரோட தி. மு. க. பெருந்தலைவருக்கு அது ஒரு ஜீவ மரணப் போராட்டம். அவருக்கு மட்டுமில்ல, மாவட்டத் தலைவரான எனக்கும் தான். காலைல எட்டு மணிக்கி ஜீப்ப எடுத்துக்கிட்டுக் கௌம்பினா, பிரச்சாரம் முடிஞ்சி வீட்டுக்கு வர நடுராத்திரி ஆயிரும். சரியா சாப்பாடு கெடையாது, தூக்கம் கெடையாது. பெருந்தலைவர் ஜெயிக்கணும், ஜெயிக்கணும், ஜெயிச்சே ஆகணும்னு ஜெபிச்சிக்டே இருந்தோம். தொண்டர்களெல்லாம் உணர்ச்சிப் பிளம்புகளாயிருந்தாங்க. உற்சாகத்தின் உச்சக்கட்டத்ல இருந்தாங்க. தேர்தல் முடியுது. ஓட்டு எண்ணிக்கை நடக்குது. இந்தியா முழுக்க கோடிக்கணக்கான நல்ல இதயங்கள் பக்கு பக்குன்னு அடிச்சிக்கிது. ராத்திரி ஒம்போது மணி இங்லீஷ் ந்யூஸ்ல சொல்றான், Doctor Mathias conceded defeatஈர்ஸ்ரீற்ர்ழ் ஙஹற்ட்ண்ஹள் ஸ்ரீர்ய்ஸ்ரீங்க்ங்க் க்ங்ச்ங்ஹற் -ன்னு. ஆஹா, எப்பேர்ப்பட்ட தருணம் அது தம்பி! இப்ப நெனச்சிப் பாத்தா ஒரு இன்பக் கனவு மாதிரி இருக்கு. ஒங்களுக்கு ஒரு கனாக்காகலாம் இருந்தது மாதிரி என்னோட கனாக்காலம் அது தம்பி. பெருந்தலைவர் ஜெயிக்கிறார், ஜெயிச்சி, அகில இந்திய அரசியல்ல திரும்பவும் தலை நிமிந்து நிக்கிறார். அவர் ஜெயிச்ச
தொகுதில நா மாவட்டத் தலைவர்! அவர ஜெயிக்க வக்ய ராவும் பகலும் உழைச்சவங்கள்ல நானும் ஒருத்தன்!"

"ஆனா, இதெல்லாம் தமிழ்நாட்ல எத்தன பேருக்கு இப்ப ஞாபகம் இருக்கு தலைவர்? ஒங்க பேர் இப்ப எத்தன பேருக்கு இங்க தெரியுது?"

"என்னோட பேர விடுங்க தம்பி. பெருந்தலைவர் பேரையே ரிப்பேர் பண்ணிட்டாங்களே! நாகர்கோவில் இடைத் தேர்தல்ல பெருந்தலைவர் ஜெயிச்ச ஒரு வருஷத்துக்குள்ளேயே அற்புதமான காங்கிரஸ் கட்சிய இந்திரா காந்தி அம்மா கூறு போட்ருச்சே! அது சரி தம்பி, வண்டி கௌம்பற நேரமாச்சே, நம்ம பெர்த் பத்தி ஒண்ணும் தெரியலியே!"

"இதோ டி. டி. இ- யப் பாத்துக் கேக்கறேன் தலைவர்" என்று ஸீட்டிலிருந்து எழுந்தேன். தேடிப்போக வேண்டிய  அவசியம் இருக்கவில்லை. தடுப்புக்கு அடுத்த ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார். தலைவரும் நானும் உரையாடிக் கொண்டிருந்ததை மனுஷன் கேட்டுக் கொண்டே தானிருந்திருக்கிறார்.

குரலில் கொஞ்சம் கடுமையைக் காட்ட முயற்சித்து, அவரிடம் டிக்கட்டை நீட்டினேன்.

டசார்!, எங்கத் தலைவரோட டிக்கட். அவருக்கு ஒரு பெர்த் வேணும். கட்டாயம் வேணும்!ட.

டபெர்த் ஒண்ணும் காலியில்லியே சார்" என்று என்னிட மிருந்து டிக்கட்டைக் கைப்பற்றிக் கொண்டார்.

"நகருங்க!. தலைவர்ட்ட நானே பேசிக்கிறேன்" என்று எழுந்து வந்து தலைவரை எதிர் கொண்டார்.

"ஐயா!, வணக்கம்ங்க ஐயா!".

"வணக்கம்!".

"ஐயா!, பெர்த் எதுவும் காலியில்லிங்க ஐயா!".

"அப்ப… நா… எறங்கிரவா?"

"வேண்டாங்க ஐயா!. ஒங்களுக்கு ஆட்சேபணை யில்லன்னா…"

"ஆட்சேபணையில்லன்னா?"

"நீங்க என்னோட பெர்த்ல படுத்துக்கலாங்க ஐயா!"

–தொடர்வேன்….

About The Author