சிபி (40)

"நாந்தான் இங்க இன்ச்சார்ஜ் சார். ஒங்கப் புகாரப் பார்த்தேன். ஸாரி சொல்ல ஓடி வந்தேன்."

"எனக்கு ஸாரி சொல்லிப் பிரயோஜனமில்ல சார். அந்த வெளிநாட்டுக் காரங்க மூக்கப் புடிச்சிக்கிட்டுப் போறாங்க. இந்த மஹால் ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷன்னு நாம வச்சிருக்கோம். அந்த டூரிஸ்ட்களுக்கு இந்த எடத்தப்பத்தி என்ன அபிப்ராயம் ஏற்படும், இந்த ஊரப்பத்தி என்ன அபிப்ராயம் ஏற்படும், இந்தத் தமிழ் நாட்டப்பத்தி என்ன அபிப்ராயம் ஏற்படும், நம்ம இந்தியாவப் பத்தி என்ன அபிப்ராயம் ஏற்படும், சொல்லுங்க."

"நீங்க சொல்றதெல்லாம் சரி தான் சார். டாய்லெட் மட்டுமில்ல, மொத்த இடமுமே சரியாப் பராமரிக்கப் படாமத்தான் இருக்கு. மேலிடம் இதையெல்லாம் கண்டுக்கறதில்ல. நாம ஏதும் செய்யப் போனா அவங்களுக்குப் புடிக்கறதில்ல. எதுக்குடா வம்புன்னு நா கப்சிப்னு ஒக்காந்துருக்கேன். இந்த மஹால் மட்டுமா? நம்ம மாநிலமே இப்டித்தானே சார் இருக்கு! இதெல்லாம் சரியாகணும்னா ஒரேயொரு வழிதான் சார் இருக்கு."

"என்ன வழி சார் அது?"

"ஒங்கக் கட்சிப் பேர எழுதியிருந்தீங்க. அதப்பாத் துட்டுத்தான் ஒங்க பின்னால ஓடி வந்தேன். ஒங்கக் கட்சியப்பத்தி எனக்குத் தெரியும் சார். ஒங்க மாநிலத் தலைவரப் பத்தியும் கேள்விப்பட்டிருக்கேன்."

"சந்தோஷம் சார். இதெல்லாம் சரியாகறதுக்கு ஒரேயொரு வழிதான் இருக்குன்னு சொன்னீங்களே, அதச் சொல்லுங்க."

"அந்த ஒரே வழி இது தான் சார். தமிழ் நாட்ல ஒங்கக் கட்சி ஆட்சிக்கி வரணும்."

பாலன்ஸ் பிசகிக் கீழே விழப் போனேன் நான். இந்த மஹால் நிர்வாகியின் வாயிலிருந்து இப்படியொரு மனதைக் கிறங்கடிக்கிற வசனத்தை எதிர்பார்த்தேயிருக்கவில்லை. கொஞ்ச நாட்களாய் இந்தத் தலைப்புச் செய்தியை மறந்திருந்தவனைத் திரும்பவும் உசுப்பேத்தி விட்டு விட்டார் இந்த மதுரைக்கார மனிதர்.

எடுத்தேன் ஸெல்ஃபோனை. அழைத்தேன் தலைவரை.

மாநிலத் தலைவரையா?

இல்லை. மதுரைத் தலைவரை.

பீட்டரை.

"சிறுபான்மையர்ப் பிரிவுத் தலைவரே, வணக்கம், எப்டியிருக்கீங்க? கடசியா ஒங்க இஃப்தார் பார்ட்டில பாத்தது தான். மதுரப் பக்கம்லாம் வர்றதேயில்ல நீங்க."

"மதுரைலதான் சார் இப்ப இருக்கேன்."

"மதுரைல இருக்கீங்களா? ஒரு வார்த்த சொல்லப் படாதா? எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, நா பொறப்பட்டு வர்றேன்."

"வேண்டாம் சார் சிரமப்படாதீங்க. நா ஒரு கல்யாணத்துக்காக வந்தேன். இப்ப மஹால்ல இருக்கேன்."

"நா மஹால்க்கு வந்துரவா?"

"வேண்டாம், நீங்க அங்கயே இருங்க. நா சொல்றத மட்டும் கேட்டுக்கங்க. இந்த மஹால்ல மெய்ன்ட்டனன்ஸ் சரியில்ல. கேட்டதுக்கு இங்க உள்ள இன்ச்சார்ஜ் சொல்றார், ஒங்கக் கட்சி, அதாவது நம்மக் கட்சி தமிழ் நாட்ல ஆட்சிக்கி வந்தாத்தான் இந்த மஹாலும் சரியாகும், நம்ம மாநிலமும் சரியாகும்ங்கறார்."

"நம்மக் கட்சின்னா எல்லாருக்கும் கிண்டலாப் போச்சி."

"கிண்டல் இல்ல சார், அவர் ஸீரியஸ்ஸா சொல்றார். நானும் ஸீரியஸ்ஸா சொல்றேன் சார், தமிழ்நாட்ல நம்மக் கட்சி ஆட்சியப் புடிக்கணும். அதப்பத்தி நாம தீவிரமா யோசிக்கணும்."

"தம்பி, எனக்கு இந்த வலது பக்கக் காது சரியாக் கேக்றதில்ல. கொஞ்சம் இருங்க, ஃபோன இடது பக்கம் மாத்தி வச்சிக்கிறேன். ம். இப்ப சொல்லுங்க. தமிழ் நாட்ல?"

"தமிழ் நாட்ல நம்மக் கட்சி ஆட்சியப் புடிக்கிறதப்பத்தி நாம தீவிரமா யோசிக்கணும் சார்."

"தம்பி, ஒங்க ஒடம்புக்கு ஒண்ணும் இல்லியே?"

"ஒடம்பு நல்லா இருக்கு. மனசும் நல்லாத்தான் இருக்கு. சார், நா நெஜம்மாத்தான் சொல்றேன். நம்ம மாநிலத் தலைவர்ட்ட பல தடவ இதப்பத்திப் பேசியிருக்கேன். ஆனா அவர் நா சொன்னத ஸீரியஸ்ஸா எடுத்துக்கிட்டாரான்னு தெரியல. ஒங்கள மாதிரி ஸீனியர்ஸ் எடுத்துச் சொன்னீங்கன்னா மாநிலத் தலைவர் அக்கறையா யோசிப்பார்."

"தம்பி, நீங்க தெளிவோடத்தான் பேசறீங்களா? நாம தேர்தல்ல போட்டி போடறதே பெரிய விஷயம், நீங்க ஆட்சியப் புடிக்கிறதப் பத்திப் பேசறீங்க. இந்தத் திராவிடத் திமிங்கிலங்களோடயும் தேசிய முதலைகளோடயும் நாம மோத முடியுமா? மோதி ஜெயிக்க முடியுமா?"

"ஏன் சார் முடியாது? நம்மக்கிட்ட பணபலம் இல்லாமலிருக்கலாம், படைபலம் குறைவாயிருக்கலாம். ஆனா, நம்மக் கட்சியப் பத்தித் தெரிஞ்ச மக்கள் நம்ம மேல நல்ல அபிப்ராயம் வச்சிருக்காங்க. நல்ல மரியாத வச்சிருக்காங்க. நம்மக் கட்சி ஆட்சிக்கு வந்தாத்தான் நிலைமை சீராகும்னு இந்த மஹால் மேனேஜர் சொல்றது வெறும் வாய் வார்த்த இல்ல. அவர் உள்ளத்லயிருந்து சொல்றார். அவர மாதிரி விவரமானவங்க, நம்மக் கட்சிக்கி விஸ்வாசமானவங்க தமிழ் நாட்ல நூத்துக் கணக்ல இருக்காங்க. அந்த நூறுகள ஆயிரங்களாக்கறதும், ஆயிரங்கள லட்சங்களாக்கறதும் நம்மோட ஒத்துமைலயும் உழைப்புலயும் இருக்கு. நம்மக் கட்சில இல்லாமயிருந்த ஒத்துமை இப்ப வந்துருச்சி. நாம எல்லாரும் சேந்து இப்பவே உழைக்க ஆரம்பிச்சா, மக்களுடைய ஆதரவத் திரட்டி, மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சிய ஏற்படுத்தி, ஓட்டுகள வாங்கி ஆட்சியப் புடிக்கிறது முடியாத காரியம்னு நெனக்கறீங்களா நீங்க?"

"தம்பி, நீங்க சொல்றதுல ஒரு பாய்ன்ட் இருக்கத்தான் செய்யுது தம்பி. நா யோசிக்கிறேன். யோசிச்சி, காலைல நா ஒங்களக் கூப்புடறேன்."

ஆனால் அவர் காலை வரைக் காத்திருக்கவில்லை. ராத்திரி, பாண்டியனில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறபோதே ஃபோன் வந்து விட்டது.

"தம்பி, நீங்க சொன்னது ரொம்ப சரி தம்பி. இத்தன நாள் நாம செஞ்சிட்டிருந்த தப்பு, நம்மளப் பத்தி நாமே நம்பிக்கையில்லாம இருந்தது தான். மக்களத் தேடி நாம போகல. நாம போனா, நம்மளத் தேடி மக்கள் வருவாங்க. தேர்தலுக்கு இன்னும் மூணு வருஷம் இருக்கு தம்பி. இப்பவே நாம நம்ம வேலய ஆரம்பிச்சா, மூணு வருஷத்ல ஒரு அதிசயத்த நடத்திக் காட்டிரலாம். இனிமே நாம நேரத்த வீணடிக்கக் கூடாது தம்பி. உடனடியா ஒரு செயற்குழுக் கூட்டம் கூட்டி இந்த விஷயத்த விவாதிக்கணும். செயற்குழுக் கூட்டம், எங்க மதுரைல. மாநிலத் தலைவர்ட்ட நாளக்யே நா பேசிர்றேன். அவர்ட்ட தேதி வாங்கிட்டு உடனடியா வேலய ஆரம்பிச்சிர்றேன். நாளக்கி ஏன், இன்னிக்கே, இப்பவே தலைவர்ட்ட பேசறேன்."

செயற்குழுக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய பீட்டர் ரொம்ப உற்சாகமாயிருந்தார். ஃபோனில் என்னிடம் அவர் சொன்ன, மக்களை நாடிப் போகிற விஷயத்தை விவரமாய் செயற்குழு உறுப்பினர்கள் முன்னால் எடுத்து வைத்தார். பீட்டரின் கூற்றை ஆமோதித்துப் பேசினார் மோத்திலால்.

"நாம் நடத்திய மதுக்கடை மறியல் போராட்டத்தின் போதே, நம்முடைய கட்சியின் மேலே பொது மக்களுக்கிருக்கிற நல்லெண்ணம் கண்கூடாய்த் தெரிந்தது. நாம் நடத்திய போராட்டம், பிற கட்சியினர் நடத்துவதைப் போல ஒரு நாள் சிறை நிரப்புப் பகட்டுப் போராட்டம் அல்ல, நம்முடைய போராட்டம் இதயசுத்தியோடு நடத்தப்பட்டது என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொண்டார்கள். திருநெல்வேலியில் நாம் மதுக்கடை மறியலில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியே போன தாய்மாரெல்லாம் நம்மைக் கைகுவித்து வணங்கிவிட்டுப் போனதைப் பார்த்த போது, இந்தத் தாய்க்குலம் நம் மேலே ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறது, இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று அப்போதே நான் யோசித்தேன். இந்த செயற்குழுக் கூட்டத்தில் அதற்கொரு தீர்வு கிடைத்திருக்கிறது. தாய்க்குலத்தின் ஆதரவை ஒருமுகப்படுத்தினாலே நாம் ஆட்சியைப் பிடித்து விடலாம்."

தொடர்ந்து சந்தான கிருஷ்ணன்.

"பள்ளிக்கூட மாணவர்கள், வகுப்பறையில் அவர்கள் அமர்ந்து பாடம் படிக்கிற பெஞ்ச்சை உடைத்து விற்று அந்தப் பணத்தை டாஸ்மாக்கில் கொடுத்துத் தண்ணியடிக்கிற காலம் இது. இந்த மாதிரி தான் இந்த அரசின் கஜானா நிரம்புகிறது. மது வியாபாரத்தில் அரசுக்கு வருகிற வருமானம் கறை படிந்த காசு என்று மஹாத்மா காந்தி சொன்னார். அந்தக் கறை படிந்த கரன்ஸியில் தான் அரிசி கொள்முதல் செய்து ரேஷனில் இலவச அரிசி வழங்குகிறது இந்த அரசு. அந்த அரிசியில் கல் பொறுக்கியே கை வலித்து விடுகிறது. கல்லைப் பொறுக்கி சுத்தம் பண்ணி அந்த அரிசியை உலையில் போட்டால் பொங்காது, பொங்கினாலும் அந்தச் சோற்றை வாயில் வைக்க முடியாது. குடிகாரர்களிடமிருந்து பிடுங்கிய பணத்தில் அரிசி கொள்முதல் செய்தால் அது இப்படித்தானிருக்கும். தமிழ் நாட்டில் நாம் ஆட்சியைப் பிடித்தால், முதலில் மதுக்கடைகளை ஒழிப்போம். அடுத்து இலவசங்களை ஒழிப்போம். ஐந்து ரூபாய்க்குத் தரமான அரிசி வழங்குவோம். முதலில் மக்களின் வாக்குகளைப் பெறுவோம். பிறகு வாழ்த்துக்களைப் பெறுவோம்."

"நேற்று கட்சி ஆரம்பித்தவனெல்லாம் இன்றைக்கு எம் எல் ஏ ஆகிவிட்டான்." என்று ஆரம்பித்தார் சக்திலிங்கம்.


(தொடர்வேன்)

About The Author