சிபி (42)

ராம ராஜ்யத்தைக் கனவு கண்ட காந்திஜி, நம்முடைய சிறுகதைகளில் ஏழெட்டில் இடம் பெற்றிருக்கிறார்.

இறந்தவன் எழுதுகிறேன் என்றொரு சிறுகதை.

தலைப்பே வித்யாசமாயில்லை?

கதை கூட வித்யாசமானது தான்.

அந்தக் கதையில் மஹாத்மா காந்தி வருவார்.

மஹாத்மாவுக்கு மோட்சமில்லை என்று உளறிக் கொட்டிய ஒரு மௌலானாவை நம்ம அம்மா கன்னாபின்னாவென்று திட்டி, சின்னாபின்னப்படுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்ட உண்மைச் சம்பவம் அந்தக் கதையில் இருக்கிறது.

மஹாத்மா மேலே அம்மாவுக்கு ரொம்ப மரியாதை.

எனக்கும் தான்.

ஸர் ரிச்சர்டு ஆட்டன்பரோவுடைய காந்தி திரைப்படம் ரொம்பப் பிடித்திருந்தது.

மஹாத்மாவின் படத்தை வீட்டின் முகப்பில் மாட்டி வைத்திருந்த தாத்தாவிடம் பேரன் கேட்டானாம், "தாத்தா தாத்தா, நீங்க ஏன் பென் கிங்ஸ்லி படத்த நம்ம வீட்ல மாட்டிவச்ர்க்கீங்க?" என்று. எண்பதுகளில் வந்த ஒரு பத்திரிகைத் துணுக்கு அது.

பென் கிங்ஸ்லி, காந்தியாகவே மாறியிருந்தார். காந்தியைக் கண்ணால் காணக் கொடுத்து வைக்காத தலைமுறைக்கெல்லாம் பென் கிங்ஸ்லியை காந்தியாய்ப் பார்த்துக் கண்கள் பனித்துப் போயின.

காந்தி திரைப்படத்துக்கு அகில உலக ஆஸ்கார் விருது கிடைத்த போது, அகில உலகமும் ஆனந்தப் பட்டது. ஒட்டு மொத்தமாய் பாரதம் பெருமைப்பட்டது. நான் கர்வமடைந்தேன்.

காந்தி படத்தின் காஸ்ட்யூம் டிஸைனர், பாரதத்தின் பானு அத்தய்யாவுக்கு ஆஸ்கார் கிடைத்தது கூட செம சந்தோஷமான சங்கதியாயிருந்தது.

காந்தி படத்துக்குப் பிறகு, சமீபத்தில் இன்னொரு இந்தியப் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்த போது கூட பாரதம் பெருமைப்பட்டது.

ஆனால், எனக்கோ பெருமை கொள்ளவும் முடியவில்லை, கர்வங் கொள்ளவும் முடியவில்லை.

அபத்தக் களஞ்சியமான ஒரு படத்துக்கு ஆஸ்கார் விருதா!

டெலிவிஷன் க்விஸ் போட்டி ஒன்றில், சரியான விடைகளைச் சொல்கிற ஏழை இளைஞனொருவனைப் போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டுபோய் சித்ரவதை செய்கிற கதையை அபத்தமென்று சொல்லாமல் வேறு எந்த வார்த்தையால் வர்ணிப்பது!

கதையல்ல. வதை.

சேரிக்காரச் சிறுவனொருவன் மலக் குழிக்குள்ளே குதிக்கிறானாம், முங்கு நீச்சல் போட்டு மறுபக்கம் கரையேறுகிறானாம், உடம்பெல்லாம் மலம் வழிய அமிதாப் பச்சனிடம் போய் ஆட்டோகிராஃப் வாங்குகிறானாம். குமட்டலெடுக்கிற காதுகுத்தல். மலக் குழி என்ன மலர்த் தடாகையா, இல்லை நீச்சல் குளமா? அதற்குள் குதித்த ஆறேழு விநாடிகளிலேயே மூச்சுத்திணறி, மலசமாதியடைந்து விடுவான்.

இந்த அசிங்கமான படத்துக்கு ஆஸ்கார் கொடுத்ததோடு விட்டார்களா? கொசுறாய், அந்தப் படத்தின் இசையமைப்பாளருக்கும் விருதாம். அவர் இசையமைத்த, ஜெய்ஹோ என்கிற கூட்டுக் கூப்பாட்டை, காட்டுக் கூட்டுக் கூப்பாட்டை விட்டால் அந்த வருஷம் வேறு நல்ல இசையே அகில உலகிலும் இல்லையாம்.

கொலவெறிக்cacophony ஆஸ்கார்க் காரர்கள் காதில் விழுந்து தொலைத்திருந்தால், அதற்கும் ஒரு விருதை வழங்கி வேடிக்கைப் பார்த்திருப்பார்களோ என்னமோ!

தெற்கே, விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே வி மஹாதேவன், ஜி ராமநாதன், டி ஜி லிங்கப்பா, ஆர் சுதர்சனம், டி ஆர் பாப்பா, ஏ எம் ராஜா, வேதா, எம் பி ஸ்ரீநிவாசன், ஜி தேவராஜன் போன்ற மெலடி மன்னர்கள் இருந்தார்கள். ஷங்கர் ஜெய்கிஷன், லஷ்மிகாந்த் ப்யாரேலால், நௌஷாத், மதன் மோஹன், ரவி, ரோஷன், ஓ பி நய்யர், சலீல் சவுத்ரி, எஸ் டி பர்மன், கய்யாம், ராம்லால், ஜி எஸ் கோலி, ஜெய் தேவ், கல்யாண்ஜி ஆனந்ஜி, ஸி ராம்ச்சந்தர், என் தத்தா, வஸந்த் தேசாய், என்றொரு மெல்லிசை மந்திரவாதிகளின் பெரும் படையே வடக்கே இருந்தது.

இந்திய இசையமைப்பாளரொருவரை கவுரவிக்க வேண்டுமென்று தோன்றியிருந்தால் ஆஸ்கார் அமைப்பாளர்கள், மேற்கண்ட அணிவகுப்பிலிருந்து ஒரு மணியைப் பொறுக்கியெடுத்து மகுடம் சூட்டியிருக்கலாம்.

நாமும் கர்வங் கொண்டிருக்கலாம். ஹ்ம்ம்.

ஓக்கே. அந்த அபத்தத்தையும் அபஸ்வரத்தையும் அப்படியே விட்டு விட்டு நாம் திரும்ப வருவோம், நம்ம அரசியலுக்கு. காமராஜ் ராஜ்யம் அமைக்க மாநிலத் தலைவர் அறைகூவல் விடவும், நம்மக் கட்சியின் ரெண்டாம் நிலைத் தலைவர்கள், மூன்றாம் நிலைத் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு ஆக்ஷனில் இறங்கி விட்டார்கள்.

மக்களைத் திரட்டி, மாதம் ஒரு மாநாடு, பட்டி தொட்டியெங்கும் வாராவாரம் பொதுக் கூட்டம், தினந்தோறும் தெருமுனைக் கூட்டங்கள்.

நாற்சந்திகளிலெல்லாம் நம்மக் கட்சியின் பச்சைக் கொடி.

குக்கிராமங்களிலெல்லாம் கொடியேற்றம்.

மாநிலத் தலைவரோடு, முன்னணித் தலைவர்களெல்லோரும் சுனாமி சுற்றுப்பயணங்கள்.

நம்மக் கட்சியை மற்றக் கட்சிக்காரர்களெல்லாம், பிரதான எதிரியாய்ப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் மக்களெல்லோரும் மரியாதையோடு பார்க்கிறார்கள்.

தினங்களும், வாரங்களும், மாதங்களும் உற்சாகமாய் ஓடி மறைகின்றன.

மூன்று வருடங்கள் மின்னலாய் ஓடி மறைந்து விடுகின்றன. இப்போது நாம் எல்லோரும் எதிர்காலத்தில் இருக்கிறோம்.

தேர்தல் காலத்தில்.

சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது.

அஞ்சு வருஷம் தொகுதிப்பக்கமே எட்டிப்பார்த்திராத எம் எல் ஏக்களெல்லாம் கூப்பிய கரங்களோடு போய் வாக்காளர் முன்னே ஜொள்ஸ் விட்டுக் கொண்டு நிற்கிறார்கள்.

இந்த இடத்தில், சூழ்ச்சியான புள்ளி விவரமொன்றை இடைச் செருகல் பண்ண வேண்டியிருக்கிறது.

அதாவது, நம்ம இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543 பேரில் 153 பேரின் மேல் க்ரிமினல் வழக்குகள் இருக்கின்றனவாம். அந்த 153 இல், 54 எம் பிக்கள் மேலே ஆள் கடத்தல், கொலை முயற்சி, கொலை ஆகிய படு பயங்கரமான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றனவாம். சமூக ஆர்வலர்கள் யாராவது, எப்போதாவது இந்த வெட்கக்கேட்டைச் சுட்டிக் காட்டுகிற போது, கட்சி பேதமின்றி இந்த எம் பி இனத்துக்கே ஆத்திரம் புரையேறி விடுகிறது. இந்த பயங்கரவாத அரசியல்வாதிகள் தான் இந்திய மக்களின் பிரதிநிதிகளாய் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து தேசத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். புழல் சிறையில் இருக்க வேண்டியவர்களெல்லாம் பாளிமென்ட்டில் இருக்கிறார்கள்.

இந்த சுவையான தகவலுக்கு சூடான பிற்சேர்க்கையொன்றும் இருக்கிறது. அந்த 153 க்ரிமினல் எம் பிக்களில் 82 பேருக்கு இந்திய அரசு துப்பாக்கிகளை வழங்கி கௌரவித்திருக்கிறது என்கிற துர்பாக்கியமான செய்தியொன்று ஹிண்டுவில் வந்தது. இதிலும் என்ன பாரபட்சம் பாருங்கள். மீதி 71 பேருக்குத் துப்பாக்கி கிடையாதாம். அவர்கள் என்ன பாவம் செய்தார்களோ, அல்லது பாவத்தில் பாக்கியென்ன வைத்தார்களோ!

நம்ம நாடாளுமன்ற உறுப்பினர் அளவுக்கு உயர்வதற்கு, பீஹார், கர்நாடகா போன்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சியெடுத்து, ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் நாட்டு எம் எல் ஏக்களோ, மணற் கொள்ளை, நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து போன்ற சில்லறை சில்மிஷங்களில் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பீஹாரையும் கர்நாடகாவையும் பார்த்து இவர்கள் திருந்துவதற்கு முன்னால், கடவுளே, நம்மக் கட்சி ஆட்சியைப் பிடித்து விட வேண்டும்.

தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வாக்குறுதிகள் வாரியிறைக்கப்பட்டதில் வாக்காளர்கள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடக்கட்சிகள் வழக்கம்போல இலவசங்களை அறிவிக்கின்றன.

ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு சைக்கிள் என்று அறிவிக்கிறது ஆளுங்கட்சி.

அவ்வளவு தானா, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வீட்டுக்கொரு ஸ்கூட்டி என்கிறது எதிர்க்கட்சி.

ஸ்கூட்டி நீங்க குடுப்பீங்க, பெட்ரோல் ஒங்கப்பனா ஊத்துவான் என்று கிண்டலடிக்கிறது ஆளுங்கட்சி.

பிறகு, பெண்களுக்கெல்லாம் ப்ரஷர் குக்கர் என்கிறது எதிர்க்கட்சி.

இல்லந்தோறும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் என்று அசத்துகிறது ஆளுங்கட்சி.

எலக்ட்ரிக் குக்கர் நீங்க தருவீங்க எலக்ட்ரிஸிட்டி ஒங்கத் தாத்தாவா தருவார் என்று நக்கலடிக்கிறது எதிர்க்கட்சி.

இந்தக் கிண்டல்களையும் நக்கல்களையும் பார்த்து நமச்சலெடுக்கிறது நம்மப் பேனாவுக்கு.

உடனே உருவாகிறது ஒரு விழிப்புணர்ச்சிக் கவிதை

போட்டி போட்டு இன்றைக்கு இலவசங்கள்
ஆட்சிக்கு வந்த பின் கலையும் வேஷங்கள்
இலவசத்தை ஈடு செய்ய விலைவாசி ஏறும்
பல சரக்கும் காய்கறியும் வானத்துக்கு எகிறும்
பஸ் செலவும் பால் விலையும் கொடிகட்டிப் பறக்கும்
ஓசிகளுக்கிறைத்ததை அரசு உன்னிடம் தான் கறக்கும்
ஏமாற்றி ஓட்டு வாங்குவது அவர்களின் திட்டம்
எப்போது தமிழா உனக்கு முழிப்புத் தட்டும்

(தொடர்வேன்)

About The Author