சிபி (46)

"மொரார்ஜி தேசாயும் உங்களுடைய முன்னோடி என்று சொன்னீர்கள். ஆனால் மொரார்ஜியைத் தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது?"

"அதிகார வர்க்கத்தால் திட்டமிடப்பட்டுத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு மாபெரும் தலைவர் மொரார்ஜி தேசாய். மொரார்ஜியின் மேன்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல, குறிப்பாய் இளைய தலைமுறைக்கு அவரை அறிமுகப்படுத்த எங்கள் அரசு முயற்சிகளை மேற்கொள்ளும். தந்தை சாதகமாய்த் தலையசைக்க மறுத்ததால் மதிப்பெண்கள் குறைந்து போய்த் தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி மொரார்ஜியின் மகள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களுக்குத் தெரிந்திராத ஒரு விஷயத்தைத் தெரிவிக்கிறேன். தன்னுடைய சுயசரிதையில் மொரார்ஜி இப்படி எழுதுகிறார்:

"பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற ஒருவனுக்குத் தன்னுடைய குடும்பத்தோடு பாசப்பிணைப்பு இருக்கவே கூடாது என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான், நான் சம்பாதித்த சொத்து எதையும் என் குடும்பத்துக்கு விட்டுச் செல்வது இல்லை என்று நான் தீர்மானித்தேன். அதன்படியே, நான் சேமித்து வைத்தது எதையுமே என் குழந்தைகளுக்கு நான் எழுதி வைக்கவில்லை. எனக்குப் பின்னால், என் சொத்துக்கள் எல்லாமே பொதுக்காரியங்களுக்கு என்று உயில் எழுதி விட்டேன்."

"மத்தியிலும் மாநிலத்திலும் வாரிசு அரசியல் நாற்றமெடுத்துக் கொண்டு கிடக்கிறது இப்போது. இவர்களுக்கெல்லாம் மொரார்ஜி போன்ற ஒரு தியாகத் தலைவரை எப்படிப் பிடிக்கும்! இருட்டடிப்பு செய்யத்தான் செய்வார்கள். அகில இந்தியாவிலும் மொரார்ஜி தேசாயைப் பெருமைப் படுத்துவது எங்களுடைய கட்சி மட்டுந்தான், எங்களுக்கு மட்டுமே சொந்தமானவர் அந்த மனிதப் புனிதர் என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். எங்களுடைய ஆட்சியில், சென்னையில் மொரார்ஜி பெயரில் ஒரு சாலையும், மொரார்ஜிக்கு ஒரு சிலையும் அமைக்கிற திட்டம் கைவசம் இருக்கிறது."

"மொரார்ஜி தேசாயைப் பற்றிய சிறப்புச் செய்தி ஒன்றைச் சொன்னீர்கள். அதே போல, வி பி சிங்கைப் பற்றியும் சிறப்புச் செய்தி ஏதாவது இருக்குமே?"

"எத்தனையோ இருக்கின்றன, ஒன்றை மட்டும் சொல்கிறேன். உத்திரப் பிரதேச முதலமைச்சராய்ப் பதவியேற்கிற போது, ‘என்னுடைய ஆட்சிக் காலத்தில், சம்பல் கொள்ளைக்காரர்களை முற்றிலுமாய் ஒழிப்பேன். அது முடியாமற் போனால், என்னுடைய பதவியை ராஜினாமாச் செய்வேன்’ என்கிற சூளுரையோடு பதவியேற்கிறார் வி பி சிங். ஆனால், எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் கூடக் கொள்ளைக்காரர்களை ஒழிக்கிற திட்டம் வெற்றி பெறவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்கிறார் வி பி சிங். சொன்ன மாதிரியே, முதலமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்கிறார். அதன் பிறகு, சில வருடங்கள் கழித்துச் சம்பல் கொள்ளைக்காரர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணின் பாதங்களில் சரணடைந்த சரித்திரத்தை நீங்கள் அறிவீர்கள். ஐந்து வருட காலத்துக்கு, இம்மியளவு கூட இங்கே அங்கே அசைக்க முடியாதபடி, சிம்மாசனத்தோடு சேர்த்து வெல்டிங் செய்யப்பட்டிருக்கிற முதலமைச்சர்களையும் பிரதம மந்திரியையும் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற போது, மன சாட்சிக்குக் கட்டுப்பட்டு முதலமைச்சர் நாற்காலியை வி பி சிங் துறந்தார் என்பது எவ்வளவு பெரிய தியாகம்! அந்த தியாகத்துக்கு வெகுமதியாய்த்தான், பிற்காலத்தில் பாரதப் பிரதமர் பதவியை அவருக்கு வழங்கி சிறப்பித்தான் இறைவன்."

"பெருந்தலைவர் காமராஜரின் பெயரை நீங்கள் சொன்னீர்கள். ஆனால் காமராஜ் ஆட்சியை அமைக்கப் போவதாகக் காங்கிரஸ்காரர்களல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?"

"ஒரு திருத்தம். அவர்கள் காங்கிரஸ்காரர்களில்லை. இந்திராக் காங்கிரஸ்காரர்கள். காமராஜரின் பெயர் அவர்களுக்கு ஒரு வியாபாரப் பொருள் தானேயொழிய, காமராஜர் மேலே அவர்களுக்கு மரியாதை எதுவும் கிடையாது. காமராஜருடைய கார்பன் காப்பி, ஸைக்ளோஸ்டைல்டு காப்பி, ஃபோட்டோக் காப்பி என்று யார் யார் மேலேயோ அவர்கள் ஸ்டாம்ப் ஒட்டிக் கொள்வார்கள். ‘வாழும் காமராஜர்’ என்று ஒரு அரைடஜன் கோஷ்டித் தலைவர்கள் அந்தக் கட்சியில் அவரவர் பெயரைப் போட்டுப் போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வழிபடுகிற தலைவர்கள், சோனியா காந்தியிலிருந்து ராபர்ட் வத்ரா வரையிலான குடும்பத் தலைவர்கள் தான்."

"மற்றக் கட்சிகளோடு ஒப்பிடும்போது உங்கள் கட்சி பணவசதி குறைந்த கட்சி. அந்தக் கோடீஸ்வரக் கட்சிகளைத் தேர்தலில் நீங்கள் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?"

திருத்துறைப்பூண்டியில் திருநாவுக்கரசு என்று ஒரு தியாகி இருந்தார். ஊரில் செல்வாக்குள்ளவர், ஆனால் பண வசதி குறைந்தவர். 1967 பொதுத் தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் திருநாவுக்கரசைத்தான் நிறுத்தவேண்டும் என்று பெருந்தலைவர் காமராஜர் திட்டமிட்டிருந்தார். அதை அவரிடம் சொல்லியும் விட்டார். ஆனால் பக்தவச்சலம் – சி சுப்ரமணியம் கோஷ்டி, தலைவருக்குத் தெரியாமல், மக்களிடம் அறிமுகமில்லாத, ஆனால் பசையுள்ள ஒரு பிரமுகரை வேட்பாளராய் அறிவித்து விட்டது. அந்தப் பணக்கார வேட்பாளரும் பெருந்தலைவரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டு, அதோடு தேர்தல் செலவுக்குக் கட்சி நிதியிலிருந்து காசும் வாங்கிக் கொண்டு வரலாம் என்று தலைவரைப் பார்க்க வருகிறார். "பணம் குடுத்து நிக்ய வக்கிறதாயிருந்தா திருநாவுக்கரசையே நிக்ய வச்சிருக்கலாமேன்னேன். நீ பணக்காரன்னு தான ஒன்ன நிக்ய வச்சிருக்காங்க? அப்ப ஏன் எங்கிட்ட வந்துத் தலைய சொறிஞ்சிட்டு நிக்கிற? ஒங்கிட்ட பணம் இருக்கலாம், ஆனா, ஜனம் அவன் கிட்டத்தான் இருக்கு’ என்று தலைவர் அந்த ஆளைத் திட்டி அனுப்பினாராம். பெருந்தலைவர் அன்றைக்குச் சொன்னதைத்தான் உங்களுக்கு நான் இன்றைக்குச் சொல்கிறேன். பணம் எந்தப் பக்கமும் இருக்கலாம். ஆனால், ஜனம் எங்கள் பக்கம் தான்."

"சுவரொட்டிக் கவிதைகள்னு ஒரு புதுமையான விளம்பர யுக்தியை உங்கள் கட்சி கடைப்பிடித்து வருகிறது. அதைப்பற்றி…"

"எங்கள் சுவரொட்டிக் கவிஞர் இங்கே தான் இருக்கிறார். அவரே அதைப்பற்றிச் சொல்லுவார்."

"கவிஞர்சார், உங்கள் புரட்சிக் கவிதைகளுக்கு இன்ஸ்பிரேஷன் யார் என்று சொல்ல முடியுமா?"

"தமிழ்க் கவிஞர்களில் முக்கால் வாசிப் பேருக்கு இன்ஸ்பிரேஷன் பாரதியார் தான். அடியேனுக்கும் அப்படியே."

"ஆனா, பாரதியார் காங்கிரஸ்காரராச்சே?"

"நான் கூடக் காங்கிரஸ்காரன் தான். எங்க மாநிலத் தலைவரும் காங்கிரஸ் காரர் தான். ஆனால் எங்களுடையது உண்மையான காங்கிரஸ். மஹாத்மா காந்தியுடைய, மொரார்ஜி தேசாயுடைய, காமராஜருடைய காங்கிரஸ் இப்போதிருக்கிற இந்திராக் காங்கிரஸ் அல்ல. இந்த இந்திராக் காங்கிரஸ்காரர்களைப்பற்றி பாரதியார் அன்றைக்கே பாடிவிட்டுப் போயிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமோ?"

"சிந்தையிற் கள் விரும்பி
சிவசிவ வென்பதுபோல்
வந்தேமா தரமென்பார் – கிளியே
மனதிலதனைக் கொள்ளார்.”

"பி ஜே பி க்காரங்களைப் பற்றிக்கூட பாரதியார் பாடியிருப்பாரே?"

"நறுக்னு ஒரே வரில சொல்லியிருக்கார்: கொடுமதப்பாவிகள்."

"திராவிடக் கட்சிகளைப் பற்றி?"

"வாய்ச் சொல்லில் வீரரடி" என்று அவங்களத் தானே சொன்னார்! பாரதியார் ரெண்டு வார்த்தைல சொன்னதப் பட்டுக் கோட்டையார் ரெண்டு வாக்கியத்ல சொல்லிட்டுப் போனார்.

"இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி."

"புதுமையான முறையில் கவிதைப் பிரச்சாரம் செய்கிறீர்கள். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது உண்மைதான். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கிற பலன் கிடைக்குமென்று நம்புகிறீர்களா? நினைப்பது நடக்கவில்லையென்றால் உங்கள் முயற்சியெல்லாம் வீணாய்ப் போகுமே என்கிற பயம் உங்களுக்கு இல்லையா?"

"கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? – அட
மண்ணில் தெரியுது வானமது நம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப் பலநாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ?"

"உங்கள் நூதன முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள். அடுத்த சுவரொட்டிக் கவிதை ரெடியா கவிஞரே?"

"ஓ, ரெடியாக் கைவசம் இருக்கு. நாளக்கி ரிலீஸ்."

(விரைவில் முடியும்)

About The Author