சிரிக்க மட்டும்

(நன்றி: மின்னஞ்சல்கள்)

ஒருவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவனால் ஆபீசுக்கு செல்ல முடியவில்லை. எப்போதும் வீட்டிலிருக்கும் அவன் மனைவியைப் பொறாமையுடன் நினைத்துப் பார்த்தான். "எப்போதும் வீட்டிலிருந்தால் எவ்வளவு சுகம்!" என்று நினைத்த அவன் கடவுளிடம் உருக்கமாக "நான் தினமும் 8 மணி நேரம் ஆபீஸ் சென்று உழைத்து களைத்துப் போய் திரும்புகிறேன். என் மனைவி எப்போதும் வீட்டிலேயே சுகவாசியாக இருக்கிறாள். அதனால் என்னுடலை அவளுக்கும், அவளுடலை எனக்கும் மாற்றிவிடு" என்று வேண்டினான். கடவுள் அவன் மேல் இரக்கம் கொண்டு அந்த இரவில் இருவர் உடலையும் மாற்றிவிட்டார்.

மறுநாள் காலை அவன் ஒரு பெண் போல வெகு சீக்கிரம் எழுந்து இரு குழந்தைகளுக்கும், கணவருக்கும்(!!) காலை உணவு தயார் செய்து, குழந்தைகளை எழுப்பி, குளிக்க வைத்து, யூனிஃபார்ம் அணிவித்து, உணவு கொடுத்து, மதிய உணவுகளை பேக் செய்து, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டு வந்து, கணவருக்குக் காலை உணவு கொடுத்து, குளித்து, துணிகளைத் துவைத்து, அயர்ன் துணிகளைத் தனியாக எடுத்து வைத்து நிமிர்ந்தால் மணி 11.00.

பின்னர் பாங்க், மின்சார பில் போன்றவைகளை முடித்து, வரும் வழியில் கண்ணில் படும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டில் நுழைந்தால் மணி 1.00 வீட்டை சுத்தப்படுத்தி, பாத்திரங்கள் கழுவி, உலர்ந்த துணிகளை மடித்து நிமிர்ந்தால் மணி 4.00.

பள்ளிக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வந்து, வரும் வழியில் ஸ்கூலில் நடந்தவைகளை விசாரித்து, வீட்டிற்கு வந்ததும் பால், பிஸ்கட் கொடுத்து அவர்களை ஹோம் ஒர்க் செய்ய வைத்து நிமிர்ந்தால் மணி 6.30. பிறகு இரவு உணவிற்கான காய்கறி நறுக்கி, இரவு உணவு முடித்து, பாத்திரங்கள் தேய்த்து, குழந்தைகளைப் படுக்க வைத்து உறங்கச் செல்லும்போது மணி 10.00.

இதோடு அவள் வேலை முடிந்துவிடவில்லை. காத்திருக்கும் கணவரின் அன்புக்குப் பாத்திரமாகவும் நடந்து கொள்ள வேண்டுமே? அப்பொழுதுதானே வாழ்க்கை சிக்கலில்லாமல் போய்க் கொண்டிருக்கும்! எல்லாம் முடிந்த போது அவளு(னு)க்குத் தலை சுற்றியது!

அடுத்த நாள் எழுந்து முதல் வேலையாகக் கடவுளிடம் சென்று, "கடவுளே என்னை மன்னித்துவிடு. பொறாமையால் மனைவிமார்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன். என்னை மறுபடி பழைய நிலைக்கு மாற்றிவிடு" என்று கெஞ்சினான்.

கடவுள் அவனிடம், "மை சன்! நீ ஒரு பாடம் கற்றுக் கொண்டுவிட்டாய்! எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் உன் பழைய உருவம் கிடைக்க நீ சுமார் ஒன்பது மாதங்கள் பொறுத்திருக்க வேண்டுமே!"

"ஏன்?"

"ஏனென்றால் நேற்றிரவு நீ கருவுற்று விட்டாய்!"

About The Author

6 Comments

  1. gomathi mylraj

    சிந்திக்க வைக்கும் (ஆண்களை) சிரிப்பு.

  2. Francis

    இக்கரைக்கு அக்கரைப் பச்சை. என்ற பழமொழிக்கேற்ற அருமையான கற்பனைக் கதை.வாழ்த்துக்கள்.

Comments are closed.