சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

என்னங்க எல்லோரும் நல்லா இருக்கீங்கதானே? வாசகர்கள் எல்லோருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கிறேன்.

"அந்தக்காலத்தில் எல்லாம் நாங்க எதுவேணா சாப்பிடுவோம். உடம்புக்கு எதுவும் வராது. கல்லைத் தின்னாலும் ஜீரணமாகிடும் தெரியுமா? இப்போதான் நூத்தியெட்டு வியாதி… அதை சரி செய்ய ஆயிரக்கணக்கான மாத்திரைகள்." இது எங்க பாட்டி அடிக்கடி சொல்லும் டயலாக். ஆனால் அவங்க சொல்லுவதில் தப்பேதும் இல்லை. தினம் தினம் ஒரு புது வியாதியைக் கண்டுபிடித்து அதற்கான ஆராய்ச்சியில் இறங்குறாங்க நம்ம ஆராய்ச்சியாளர்கள். இது போன்ற செய்திகளை நாமும் பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையம் போன்றவற்றின் மூலமா தெரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கை அப்படீங்கிற பேர்ல ஏகப்பட்ட ரகளை செய்துட்டிருக்கோம். ஆனால் இதில் எத்தனை பேருக்கு அடிப்படை விஷயங்கள் தெரியும்னு கேள்வி கேட்டா எல்லோரிடமிருந்தும் பதில் வருமா அப்படீங்கிறது கொஞ்சம் சந்தேகம்தான். உதாரணமா, மனித உடலில் இருக்கும் முதுகுத் தண்டுடன் மொத்தம் 24 முதுகு எலும்புகள் பொருந்தியிருப்பது நம்ம எல்லோருக்குமே தெரியும். ஒவ்வொரு முதுகெலும்பும் நம் உடலின் எந்தெந்த பாகங்கள் மற்றும் உறுப்புகளுடன் இணைந்திருக்கு? மற்றும் அதன் செயல்பாடுகள் என்ன? அந்த முதுகெலும்புகளின் இட நழுவலின் காரணமாக என்ன மாதிரியான உடல் உபாதைகள் மற்றும் அதன் அறிகுறிகள் என்னென்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு எத்தனை பேருக்கு பதில் தெரியும்? விவரமா விளக்கம் சொன்னா யாரும் படிப்பாங்களோ இல்லையோன்னு சந்தேகப்பட்டு விவரங்களை அனிமேஷன் மூலமாக கீழேயுள்ள சுட்டியில் எளிமையா சொல்லியிருக்காங்க.

http://www.chiroone.net/why_chiropractic/index.html

சில நேரங்களில் எனக்கு ஏதாவது வரையலாமேன்னு தோனும். ஆனால் பேப்பர், பென்சில், ரப்பர் எல்லாம் தேடிக் கண்டுபிடிக்கறதே பெரிய வேலையாகிடும். (எதையாவது ஒரு இடத்துல வைத்தால்தானே! அங்கங்கே கண்டபடி போட்டுடறது. அப்புறம் தேடறது. இதே வேலை எனக்கு!) ஒரு வழியா தேடி எடுத்தால் என்ன வரையறதுன்னு யோசிக்க ஆரம்பிப்பேன். என்ன ஏதுன்னு யோசிச்சு முடிக்கிறதுக்குள்ளே படம் வரையும் ஆசையே போயிடறதுண்டு. என்னை மாதிரியான ஆளுங்களுக்காகவே இந்த இணையதளத்தை ஏற்படுத்தியிருக்காங்கன்னு நினைக்கிறேன். பிரச்சனை எதுவுமில்லாமல் சின்னச் சின்ன எளிமையான படங்களில் ஆரம்பிச்சு நல்ல நுட்பமான படங்கள் வரையறது எப்படின்னு இந்த இணையதளத்தில் அருமையான அனிமேஷன்கள் மூலம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது மட்டுமில்லாமல், படங்களை வரைந்து பார்க்கவும் வாய்ப்பளிக்கிறாங்க. இணையதளத்தில் இருக்கும் படத்தையே வரைந்து பார்க்க விரும்பினால் அதை முதலில் எப்படி வரையறதுன்னு (அனிமேஷன் படங்கள் மூலமாக) பார்த்துட்டு அங்கேயே வரைந்தும் பார்க்கலாம். முயற்சி செய்து பாருங்க. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்.

http://slimber.com/

ஸ்டார் வேர்ல்ட் சானலில் ‘Necessary Roughness’ என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகுது. வார நாட்களில் மதிய நேரங்களில் அதே நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பும் செய்யறாங்க. ஒரு கால்பந்து அணியின் உளவியல் சிகிச்சை நிபுணராக (PsychoTherapist) இருக்கறமருத்துவர் டேனியல் சான்டினோ (சுருக்கமாக "டானி"). பிரபலமானவர்களுக்கும் பகுதி நேரமா டானி உளவியல் சிகிச்சையளிக்கிறாங்க. ஒவ்வொரு வாரமும் டாக்டர் டானி தன்னுடைய பகுதி நேரப் பணியில் அவங்க சந்திக்கும் பிரபலங்கள் மற்றும் அவர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகளை எப்படி கையாண்டு அவங்களுக்கு உதவுறாங்கன்னு ‘Necessary Roughness’ல் விவரிச்சுருப்பாங்க. சனிக்கிழமைகள்ல பார்க்க முடியலைன்னாலும் மறு ஒளிபரப்பை கண்டிப்பாகப் பார்த்துடுவேன். போன வாரம் ஒரு பிரபல நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரியும் பெண்மணி மன அழுத்தம் காரணமாக தன்னுடைய சக அலுவலர்களிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார். அவருடைய நிறுவனம் அவருக்கு டாக்டர் டானியின் உளவியல் சிகிச்சையை சிபாரிசு செய்யுது. ஆரம்பத்தில் அந்த பெண்மணியால் தனக்கு இருக்கக்கூடிய மனப் பிரச்சனையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இன்னும் அதிகமாகக் கோபமடையறாங்க. கொஞ்சம் கொஞ்சமா டாக்டர் டானியின் பாஸிடிவ் அணுகுமுறையால அவங்களுடைய பிரச்சனை வெளி உலகத்துடன் இல்லை. பிரச்சனையின் ஆரம்பமும் முடிவும் தனக்குள்ளேதான் இருக்குன்னு உணர்ந்து டானியின் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறாங்க.

சிகிச்சையின்போது அந்த பெண்மணி யாருடனும் நெருங்கி பழகுவதில்லை, அவருக்கு நண்பர்கள் யாரும் இல்லை, உறவினர்கள் யாருமில்லை. சில மாதங்களாகத்தான் அவங்க அடிக்கடி கோபமடையறாங்க. அத்தோடு இந்த சில மாதங்களாக அவங்க ஒருவரை விரும்பறாங்க அப்படீங்கிற விஷயமும் டானிக்கு தெரியவருது. பிரச்சனை லேசாக புரிவது போலிருக்கும்போது டானிக்கு இன்னொரு விஷயமும் தெரிய வருது. அதாவது அந்த பெண்மணி தன்னுடைய வீட்டிற்கு யாரையும் அழைப்பதில்லை, வீட்டிற்குள் யாரையும் அனுமதிப்பதும் இல்லை. அதற்கான காரணம் ஆராயும்போது, தேவையா இல்லையா என்ற யோசனையே இல்லாமல் பார்ப்பதையெல்லாம் வாங்கி சேமிக்கும் பழக்கம் கொண்டவர் அந்த பெண்மணி. பொருள்கள் மட்டுமில்லாமல் வங்கியிலிருந்து 10 வருடங்களுக்கு முன்பு தனக்கு வந்து கடிதங்கள் எல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்காங்க. இதை மத்தவங்க பார்த்தால் தன்னை கேலி செய்வாங்களோ என்கிற எண்ணத்துலே யாருடனும் பழகுவதைத் தவிர்த்திருக்காங்க. அவருக்கு காதல் ஏற்பட்டதும் எங்கே தன்னைப் பற்றித் தெரிந்தால் அந்த நபர் தன்னைவிட்டு விலகிடுவாரோன்னு பயத்தினால் மன அழுத்தம் ஏற்பட்டு அது கோபமா வெளிப்படுதுன்னு தெரிஞ்சுக்கிறாங்க டானி. அதுக்கப்புறம் கொஞ்சமா கொஞ்சமா அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவங்களுடைய மன அழுத்தத்தைக் குணப்படுத்தறாங்க டானி.

நிகழ்ச்சியை படமாக்கியிருந்த விதம் எனக்கு பிடிச்சிருந்தது. மனதளவில் பிரச்சனைகள் ஏற்படும்போது அதைப் புறக்கணிக்காமல் பிரச்சனைக்கான காரணத்தை ஆராய்ந்து அறிந்து சிகிச்சை அளிப்பதே அதற்கான நிரந்தர தீர்வு கொடுக்கும் என்பதை இதன் மூலமாக ரொம்ப அருமையாக விளக்கியிருந்தாங்க.

சரி… கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். கடினமான பல தொழில்நுட்பம் சம்பந்தமான விஷயங்களை ரொம்பவும் அழகாக ஃப்ளாஷ் மூலமாக அனிமேஷன் படங்களாக வெளிப்படுத்துவதில் நம்ம அனிமேட்டர்களுக்கு ஏகப்பட்ட திறமை உண்டு. அதுமாதியான ஒரு அனிமேட்டர் கொஞ்சம் விபரீதமாக யோசிச்சா என்ன நடக்கும்? அவர் உருவாக்கும் அனிமேஷனுக்கு உயிர் வந்து இப்படி எல்லாம் நடந்தா எப்படியிருக்கும்னு கற்பனை செய்திருக்காரு? இது கொஞ்சம் டூ மச் கற்பனையா இருக்கு.

http://youtu.be/0_fPV13lKm4

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author