சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

நிலாச்சாரல் வாசகர்கள் எல்லோருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கிறேன். என்னங்க எல்லோரும் நலம்தானே?

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நமக்கிருப்பது போல் நிறைய பண்டிகைகள் கிடையாது. அதனாலேயே என்னவோ புத்தாண்டை வெகு விமரிசையாகவே கொண்டாடுகிறார்கள். பட்டாசுகள் வெடிப்பதன் மூலமாக மக்கள் தங்களுடைய சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மட்டுமில்லாமல், பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் இரைச்சலின் வாயிலாக ஆங்காங்கே ஒளிந்திருக்கும் கெட்ட ஆவிகள் விரட்டப்படுவதாகவும் நம்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வட்டவடிவத்தில் உள்ள உணவினை உண்பதன் மூலம் பல்வேறு நலன்கள் வந்து சேரும் என்ற நம்பிக்கையினாலேயே Doughnutகள் புத்தாண்டு அன்று அதிகமாக விற்பனையாகுமாம். இப்படி பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு மக்களிடம் பல நம்பிக்கைகள் இருந்துட்டு வருது!

*********

ரொம்பவும் ஆர்வத்தோட கீழே கிடக்கும் மரத்துண்டுகள் மற்றும் மரக் கிளைகளை எல்லாம் கவனமாக எடுத்து பக்கத்தில் இருக்கும் திறந்தவெளி அடுப்பில் (Barbecue) நேர்த்தியாக அடுக்குகிறான் கன்சி. கையை சுட்டுக்கொள்ளாமல் ஜாக்கிரதையாவே நெருப்புக் குச்சியைக் கிழிச்சு அடுப்பைப் பற்ற வைக்கிறான். என்னதான் சமையல் செய்வதில் ஆர்வமிருந்தாலும் சமையல் செய்து முடிக்கும்போது திறந்தவெளி அடுப்பை ஒரு வழி செய்துடறானாம் கன்சி. என்ன எல்லா ஆண்களும் இப்படித்தான் சமைப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? (ஆண்கள் எல்லாம் கோபமா முறைக்கிறது தெரியுது! சரி விடுங்க விடுங்க அரட்டையில் இதெல்லாம் சகஜமப்பா…) அதுதான் இல்லை. (ஹப்பா… தப்பிச்சேன்!)

நான் சொல்றது, சொல்லப்போறது எல்லாமே நம்முடைய மூதாதையர்களான மனித குரங்கைப் பற்றித்தான். கன்சி, பிக்மி மனிதக்குரங்கு வகையைச் சேர்ந்தது. பொதுவாக மனிதக் குரங்குகள் இலைகளை, மரக்கிளைகளை ஆயுதமாகப் பயனபடுத்துவது இயல்பாம். ஆனால் நெருப்பை ரொம்பவும் ஆர்வத்தொடும் கவனத்துடனும் மனிதனைப் போலவே கையாள்வதன் மூலம் கன்சி பலருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கு.

31 வயதான கன்சி தன்னுடைய ஐந்தாவது வயதில் ‘Quest For Fire’ என்கிற திரைப்படத்தை பார்த்திருக்கிறான். அதில் மனிதன் நெருப்பை எப்படி தன்னுடையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான் என்பதைப் படமாக்கியிருக்கிறார்கள். கன்சி இத்திரைப்படத்தைப் பல நூறு தடவைகள் விரும்பிப் பார்த்ததோடு மட்டுமில்லாமல், தன்னுடைய காவலாளிகள் மூலம் முகாமில் தீ மூட்டி சமைப்பதையும் கற்றுக் கொண்டிருக்கிறானாம். அதன்பிறகு தீப்பெட்டி உதவியுடன் நெருப்பு மூட்டுவதை ரொம்பவும் வேகமாகவே கற்றுக் கொண்டானாம். ‘கன்சி’ என்றால் ஸ்வாஹிலி மொழியில் ‘புதையல்’ என்று அர்த்தமாம்.

கன்சியைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டது போதும். கன்சியின் சமையல் என்ன ஆச்சுன்னு பார்க்கலாமா? நெருப்பை மூட்டிய பிறகு கிரில் பான் (grill pan) உதவியுடன் ஹம்பர்கர்களை (Hamburger) நேர்த்தியாக சமைக்கிறான். சமைத்து முடித்தவுடன் திறந்தவெளி அடுப்பின் அருகிலுள்ள இருக்கும் பாட்டிலில் உள்ள தண்ணீரைக் கொண்டு நெருப்பை அணைத்து விடுகிறான். நான் சொல்வதில் நம்பிக்கையில்லையா… சரி கீழேயிருக்கும் சுட்டியை சொடுக்கி அதில் இருக்கும் வீடியோவைப் பாருங்க, உங்களுக்கே புரியும்.

http://bcove.me/7q5jk601

*********

சீதோஷ்ணநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக போன வாரம் காது வலி வந்து ரொம்பவே கஷ்டப்பட்டு போயிட்டேன். எங்கிட்டே வீட்டிலிருந்த காது வலிக்கான சொட்டு மருந்தால் எந்தவிதத்திலும் நிவாரணம் கிடைக்கவேயில்லை. எனக்கு எப்பவுமே டாக்டர்கிட்டே போகணும்னா கொஞ்சம் இல்லை.. நிறையவே தயங்குவேன். ஒரு சின்ன காதுவலிக்கு அவங்க கை நிறைய மாத்திரைகளை வாரி வழங்கிடுவாங்க. அந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதனால் வரக்கூடிய பக்க விளைவுகள் தரும் அவதி, ஆரம்பவலியைவிட அதிகமாகவே இருக்கும். இதுக்கு பயந்தே நான் டாக்டரிடம் போவதை முடிந்தவரை தவிர்ப்பேன். அப்புறம் கடைசியில் எங்க அம்மா ஒரு கைவைத்தியம் சொன்னாங்க. இலுப்பக்கரண்டியில் நம்ம எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய தேங்காய் எண்ணையை கொஞ்சமா விட்டு ஒரு பெரிய கல் உப்பை அதில் போட்டு அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் பொறிஞ்சு வரும்வரை சூடுபடுத்தி அதை ஆறவிடணும். நல்லா ஆறினதுக்கப்புறமா எண்ணையைக் கொஞ்சமா எடுத்து காதுல ஒரு நாளைக்கு 3 முறை விட்டேன். வலி தன்னாலே சரியாகிடுச்சு. இது மாதிரியான பல கைவைத்தியங்களை எளிமையா நம்ம வீட்டிலேயே எப்படி செய்துக்கலாம் என்பதை தெரஸா அம்மா ‘கைமருந்து’ அப்படீங்கிற தலைப்பில் புத்தகமா எழுதியிருக்காங்க. இப்போ அது நிலாச்சாரலில் மின்னூல் வடிவத்துலக் கிடைக்குது. விவரங்களுக்கு கீழே இருக்கும் சுட்டியைச் சொடுக்குங்க.

https://www.nilacharal.com/ebooks_list.asp

சரி… கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். எனக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள்/இழப்புகள் ஏற்படும்போதெல்லாம் ‘ஏன்தான் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் பிரச்சனைகள் வருதோ? நமக்குன்னு தேடித் தேடி பிரச்சனைகளை உருவாக்குவாரோ கடவுள்?’ இப்படியெல்லாம் நான் நினைக்கிறதுண்டு. கொஞ்ச நேரம் கழிச்சு, அடுத்து என்ன செய்யலாம்னு யோசித்து அதற்கு செயல்பாடுகளில் இறங்குவதென்னவோ வழக்கமாக இருந்தாலும், இதைவிட பெரிய பெரிய பிரச்சனைகள் எத்தனையோ பேருக்கு உண்டு என்கிற விஷயம் பல நேரங்களில் நினைவுக்கு வருவதில்லை. ஆனால் கீழேயிருக்கும் சுட்டியில் உள்ள வீடியோவைப் பார்க்கும்போது, நமக்கு இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனையா? இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்குங்கிற எண்ணம் வருவதோடு பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ளும் திடமும் ஏற்படுவதை ஒப்புக்கொண்டேயாகணும்.

http://youtu.be/LnLVRQCjh8c

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

3 Comments

  1. Dr. S. Subramanian

    காது வலி சரியானது எதனால்–உப்பினாலா அல்லது தேங்காய் எண்ணையினாலா? காதுக்குள் எண்ணை விடும்போது உப்பும் கூட இருந்ததா? உப்பு எதற்கு? உப்பு எண்ணையில் கொஞ்சம் கூடக் கறையாது என்பதை நினைவில் கொள்ளவும்.

    பி. கு. அது எண்ணையா அல்லது எண்ணெயா? எள் + நெய் = எண்ணெய்
    நல்லெண்ணெய் (நல்லெண்ணை) என்று நாம் சொல்வது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய் என்பதாகும்.

  2. Dr. S. Subramanian

    காது வலி சரியானது எதனால்–உப்பினாலா அல்லது தேங்காய் எண்ணையினாலா? காதுக்குள் எண்ணை விடும்போது உப்பும் கூட இருந்ததா? உப்பு எதற்கு? உப்பு எண்ணையில் கொஞ்சம் கூடக் கறையாது என்பதை நினைவில் கொள்ளவும்.

    பி. கு. அது எண்ணையா அல்லது எண்ணெயா? எள் + நெய் = எண்ணெய்
    நல்லெண்ணெய் (நல்லெண்ணை) என்று நாம் சொல்வது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய் என்பதாகும்.

  3. Dr. S. Subramanian

    Apart from the oil being unable to dissolve the salt, I am wondering why the oil is heated with salt. Assuming some change in the structure (we call it conformation in chemistry) takes place, it will revert to its orignal state upon cooling. So there is no need to heat the oil before pouring it into the ear. Perhaps the oil goes through the eustachian canal and empties into the throat thereby clearing an obstruction in the middle/inner ear. If so even water might do the trick. Next time try dissolving some salt in hot water and add it into the ear through a dropper.(I really mean it!).
    There are many folk remedies which are believed to work based on what is known as placebo effect”. If you believe some recipe will work, your mind makes the changes in the body (called psycho-somatic effect) and the treatment works. I could pretend to pour something in your ear (without pouring) and tell you what I poured is going to relieve you of your pain. The next day your pain might be gone.”

Comments are closed.