சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம் நண்பர்களே..!

எப்படி இருக்கீங்க? உங்களோட பேசி நீண்ட நாள் ஆயிருச்சு. இப்பொழுதுதான் என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. அதான் அரட்டை களத்துல திரும்பவும் இறங்கியாச்சு.

பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம், நமக்கு ஏதேனும் தகவல் வேண்டும் என்றால் மெத்தப் படித்தவர்களைக் கேட்போம். அல்லது ஏதேனும் நூலகத்துக்குச் சென்று அச்சடித்த புத்தகங்களைத் தேடிப் பார்ப்போம். ஆனால் இப்பொழுதோ, இன்டெர்நெட்டில் விக்கிபீடியா மற்றும் ஆன்லைன் என்சைக்ளோபீடியாக்களில் தேடிக்கொள்கிறோம். காலம் எவ்வளவு வேகமாக மாறிவிட்டது பாருங்கள்.

டீக்கடைகளிலும் அப்புறம் பார்களிலும் நண்பர்களைப் பார்த்தவர்கள் இப்போது சாட்டிங், ஃபேஸ்புக் வழியாக பார்க்கிறார்கள் (நாமும் கூகுள் டாக் வழியாக பேச அறிவித்துவிட்டோமே!).

முன்பெல்லாம் ஒரு சில ஆஸ்தான நண்பர்களே இருந்தனர். இப்பொழுதோ ஏகப்பட்ட நண்பர்கள் ஒருபுறம்.. அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் மறுபுறம் என்று ஒரு நட்புடன் கூடிய கருத்து யுத்தமே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அடுத்த ஓரிரு நட்கள் விடுமுறை என்றால், ரெயில் டிக்கெட்டுக்காக பரபரக்க வங்கிகளுக்கு ஓடி பணம் எடுத்து, ரெயில் நிலையம் நோக்கி சென்ற காலம் ஓடியே போய்விட்டது. இப்பொழுது கணினி முன்னால் உட்கார்ந்தால் போதும், கையில் டிக்கெட் வந்துவிடுகிறது. ரெயில் டிக்கெட் மட்டுமின்றி பேருந்துகளுக்கான பயணச் சீட்டுகளையும் நொடியில் இருந்த இடத்திலிருந்தே பெற்றுவிடுகின்றனர். இவ்வளவு ஏன்? அந்தக் கடவுளையே இணையம் வழியாக பூஜிக்கிறோம். கோவிலில் நடக்கும் பூஜை அல்லது கும்பாபிஷேகங்களை நேரடியாகவே இணையத்தில் பார்க்க முடிகிறது. இன்னும் ஒருபடி மேலே போய் வெளிநாட்டில் வசிக்கும் உறவினரின் திருமணத்தையே வெப்கேமரா மூலம் பார்த்துவிட முடிகிறது. சில வருடங்களுக்கு முன்புவரை நிலாவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்ததை இங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்த நாம், அங்கேயே சென்று என்ன இருக்கிறது என்பதை அறிந்துவிட்டோம்.

இந்த உலக அதிவிரைவு வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையின் அறிவியல் வளர்ச்சி நாளுக்குநாள் மேம்பட்டு வருகிறது. இப்போது கண், நுரையீரல், கிட்னி பழுதடைந்தவர்களுக்கு வேறொருவருடைய உறுப்பைப் பொருத்தி வெற்றி கண்டுவிட்டோம்.

ஆனால் ஹார்ட் அட்டாக் வந்தால் அதிலிருந்து தப்பிப் பிழைப்பவர்கள் மிகச் சிலரே. தற்போது நம் அறிவியல் உலகம் அதிலும் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டது. ஜப்பானில் செயற்கை இருதயம் ஒன்றை தயாரித்து அதை வெற்றிகரமாக செயல்படவும் வைத்துவிட்டனர். ஆனால் இந்த இருதயம் நான்கு ஆண்டுகள் மட்டுமே செயல்படுமாம். மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவாகுமாம். இன்னும் நம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் மூளை ஒன்றுதான் பாக்கி! அதுவும் கூடிய விரைவில் நடந்தேறிவிடும் என்று நம்பலாம்.

சமீபத்திய காலங்கள்வரை சைக்கிள் ரிக்க்ஷாக்களை அதிகம் கொண்டிருந்தது நம் இந்தியா. வசதியிருப்பவர்கள் மட்டும் ஆட்டோக்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்றோ அந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இப்பொழுது சைக்கிள் ரிக்க்ஷாக்களை அதிகம் காணமுடிவதில்லை.

அந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை நாம் பெற்றுவிட்டோம் என்று மார் தட்டிக் கொண்டிருக்கிற வேளையில் நம்முடைய அறிவியல் வளர்ச்சியின் முன்னோடியாக இருந்த பிரிட்டனோ ஓசைப்படாமல் ஆட்டோ ரிக்ஷாக்களை ஓரங்கட்டிவிட்டு சைக்கிள் ரிக்ஷாக்களுக்கு முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சைக்கிள் ரிக்க்ஷாவிற்கு பெட்ரோல் போன்ற எரிசக்தி எதுவும் தேவை இல்லை. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. நல்ல உடற்பயிற்சியுமாயிற்று. நம்மவர்கள் சைக்கிள் ரிக்க்ஷாக்களையும் மோட்டார் வைத்து இயக்குகின்றனர். அவர்களை குற்றம் சொல்வது நியாயம் இல்லைதான்.. நம்முடைய சாலைகளும் அந்த அளவுக்கு மோசமாகத்தானே இருக்கின்றன!

எங்கள் அலுவலகத்தில் முன்பு மேலாளரா இருந்த ஒருத்தர் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ரொம்ப ஈடுபாடு உள்ளவரா இருந்தார். "இன்னைக்கு பத்தாயிரம் லம்ப்பா கிடைச்சுது.. இருபதாயிரம் கிடைச்சது" அப்படிம்பார். வேறொரு நாள் "இன்னைக்கு ஐயாயிரம் போச்சு; பத்தாயிரம் போச்சு"ன்னு சர்வசாதாரணமாகச் சொல்வார். அவருக்கு இந்த வர்த்தகமுறை தண்ணிபட்டபாடு. தினமும் காலையில் விழிப்பது இந்த ஆன்லைன் வர்த்தகத்தில்தானாம்.

சரி நாமும் சில விஷயங்களை கேட்டறிந்து கொண்டால் நமக்கும் பின்னால் உதவுமே என்று அவரிடம் பேச்சு கொடுத்தோம். "அட.. போப்பா இது ஒரு வியாதி மாதிரி.. உங்களுக்கு இதெல்லாம் வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் இந்த வர்த்தகத்தை ஒரு சூதாட்டம்ன்னுதான் சொல்லணும். ஏன் என்னையே எடுத்துக்குங்க, எனக்கு அளவுக்கு மீறி சம்பாதிக்கத் தேவையில்லை. ஆனாலும் ஒருநாள் பணத்தை விட்டாக்கூட அடுத்த நாள் கை பரபரங்கும். உட்கார்ந்த அன்னிக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கொள்ளை லாபம். இல்லையேல் விதிவிட்டபாடுதான்.

பெரிய பெரிய நிறுவனங்களெல்லாம் தங்கள் முதலீட்டுக்கு நிலையான லாபம் உள்ள நிறுவனங்களைத் தேர்வு செய்றாங்க. அதனால அவுங்களுக்கு எப்பொழுதாவதுதான் சறுக்கும். ஆனால் நம் போன்ற சிறு சிறு முதலீட்டாளர்களுக்கு அடிமேல் அடிதான் கிடைக்கும். இன்னும் உங்களுக்கு ஒண்ணு சொல்றேன், இந்த வர்த்தகத்தால மாதம் லட்சக்கணக்குல சம்பாதிக்கிறவங்களும் இருக்காங்க. அதிஷ்டம் மட்டும் இருந்தா பத்தாது; கூர்மையான புத்தியும் வேணும்." என்றார்.

அது சரிங்க! நம்ம வாசகர்கள் யாராவது இந்த மாதிரி ஆன்லைன் பங்கு வர்த்தகத்துல வல்லவர்களா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா உங்களோட வர்த்தக அனுபவங்களை பகிர்ந்துக்கலாமே…

சரி, உங்களுக்காக இப்ப ஒரு சின்ன ஜோக்…

ஒரு விழாவிற்குப் போயிருந்த டாக்டர் ஒருவர் தன் வக்கீல் நண்பரை சந்திக்க நேர்ந்தது. இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து டாக்டரிடம் உடல் நோய்க்கு மருந்து சம்பந்தமாக டிப்ஸ் கேட்க அதற்கு பதில் சொல்ல வேண்டியதாயிற்று. இதே போல் ஐந்தாறு பேர் இடையிடையே வந்து கேட்க டாக்டருக்கு எரிச்சல் ஆகிவிட்டது. "இது மாதிரி உங்களுக்கு தொந்தரவு தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று வக்கீலிடம் கேட்டார் டாக்டர்.

உடனே, "விளக்கம் சொல்வேன், ஆனால் மறுநாள் நூறு ரூபாய்க்கு பில் அனுப்பிவிடுவேன்" என்றார் வக்கீல்.

டாக்டரும் அந்த வக்கீல் கொடுத்த டிப்ஸை கடைபிடிக்க எண்ணினார். மறுநாள் அனைவருக்கும் பில் அனுப்ப நினைத்த போது அது தர்மசங்கடமாக இருக்கவே, வேண்டாமென்று முடிவு செய்து அலுவலகம் திரும்பினார். அங்கே நூறு ரூபாய்க்கான பில் வக்கீலிடமிருந்து வந்திருந்தது.

சரி நண்பர்களே, மீண்டும் அடுத்த அரட்டையில் உங்களைச் சந்திக்கிறேன்.

அன்புடன்,
மாயன்.

About The Author

4 Comments

  1. SANTHOSHI

    மாயன்! செய்திகளை அள்ளித் தந்து விட்டீர்கள். அறிவியல் வளர்ச்சியிலிருந்து பங்கு வர்த்தகம் வரை வந்து இறுதியில் நகைச்சுசுவையுடன் சுவையாய் முடித்திருக்கிறீர்கள். ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் வல்லவர்களாக இல்லை நல்லவர்களாக ஒரு சில நண்பர்களின் பங்கு வர்த்தகத்தில் மட்டும் வலம் வந்து கொண்டிருக்கிறோம்.

  2. Jo

    மாயன், நச்சுன்னு நறுக்குத் தெரிச்சாப்போல சொல்றீங்க. வாழ்த்துக்கள்

  3. maayan

    நன்றி சந்தோஷி, உங்களுக்கு தெரிந்த சின்ன சின்ன டிப்ஸ்களை பகிர்ந்துக்களாமே?

Comments are closed.