சில்லுனு ஒரு அரட்டை

‘வந்தனம் வந்தனம்’னு வாசகர்களுக்கு வணக்கம் சொல்றது கொங்கு நாட்டு சிங்கி.

கோடை விழாக்களை கொண்டாட ஆரம்பிச்சிடிங்களா..? எங்க ஊர்ல அம்மனுக்கு பொங்கல் சாடிட்டாங்க. நான் பள்ளிக்கூடம் போன காலத்தில் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து மே கடைசி வாரம் வரைக்கும், சுத்தியிருக்கிற கிராமங்களில் ஒவ்வொரு வாரமும் ஒரு கிராமத்தில் அம்மனுக்கு பொங்கல் வைப்பாங்க. நம்ம தாத்தா, பாட்டியோட கூடப் பொறந்தவங்க பொறந்த வீடோ, புகுந்த வீடோ அந்த ஊரில் இருந்தாக்க, 5 வாரமும் அத்தனை பொடிசுகளும் ஒரே ஆட்டம், பாட்டம்தான்.

விடிய, விடிய கோயிலில் பெரியவங்களோட கும்மியாட்டம் பார்த்துக்கிட்டே, பானகம், நீர் மோரைக் குடிச்சிட்டு, பாதி இராத்திரியில் வேப்ப மரத்தடியில் தூங்கிவிடுவோம். காலையில் ஆற அமர எழுந்து, அப்பத்தா தரும் ராகி களி, பழைய சோற்று தண்ணியைக் குடிச்சிட்டு வாய்க்காலுக்கோ, கிணத்துக்கோ, குளத்துக்கோ நீச்சலடிக்க ஓடிடுவோம். காலையில பதினொரு மணிக்கு போனா மூணு, நாலு மணிவரைக்கும் வீட்டுக்கு வரமாட்டோம்.

எங்களை வர வைக்க, அப்பா, தாத்தா, சித்தப்பான்னு ஆளாளுக்கு மாட்டுச்சாணியை எடுத்து எங்க மேல வீசுவாங்க. நாங்க யாரு தண்ணியிலேயே தலை கீழா நிக்கறவங்களாச்சே! பாறை இடுக்குகளில் ஒளிஞ்சுக்குவோம்.

ஒரு வழியா பசியெடுக்க, ஒரு தட்டுல ஒன்பது பேர் சாப்பிடுவோம். தண்ணியில குதிச்சதுனால எல்லோருக்கும் ரொம்ப பசியிருக்கும்.. ஒவ்வொருத்தருக்கா சாதம் பிசைந்து வைக்க முடியாதுன்னு, முறுக்கு சுத்தற பாராத்தில (பெரிய தட்டு) மொத்தமா பிசைந்து வைச்சிருவாங்க எங்க அப்பச்சி.

வெயில் தாழும்வரைக்கும் தாயக்கட்டை, பல்லாங்குழி. அப்புறம் வெளியே போய் பாண்டி, கபடி, கோகோன்னு கலக்குவோம் கோயிலுக்கு போற வரைக்கும்தான்.

இதே போல கிராமத்து வாழ்க்கையை கருப்பொருளாகக் கொண்டு நிலா எழுதின கதையை நீங்க படிக்க :

https://www.nilacharal.com/ocms/log/02040807.asp

எங்க ஊரில் இப்ப யாரும் பொங்கல் கொண்டாடறதில்லை. அப்படியே பொங்கல் வைச்சாலும் தன் மகன், மகள் குடும்பத்தை மட்டும் அழைக்கிறாங்க. மே 5ம் தேதி எங்க பாளையத்து அம்மனுக்கு பண்டிகை. ஊரில் அப்பத்தா, அப்பச்சியைத் தவிர ஒருத்தரும் இல்லை. வேலை, படிப்புனு ஆளுக்கு ஒரு நாட்டில், ஊரில் இருக்கிறோம்.

ஃபீனிக்ஸ் வெயிலுக்கு பானகம், பழைய சோற்று தண்ணி, களி சாப்பிடும்போதெல்லாம் எங்களின் குழந்தைப் பருவம் நினைவிற்கு வருகிறது. பானகத்திலிருக்கிற புளி உடல் சூட்டைக் குறைக்கும். என் கணவருக்கு பானகம் செய்யும்போது என் பொண்ணு பண்ணின கைவினைப் பொருள்தான் கீழேயுள்ள போட்டோ.

என்ன இதுன்னு ரொம்ப ஆராயாதீங்க. மேடம் அவங்க போடற உடைக்குப் பொருத்தமா வளையல், செயின் போடுவாங்க. ஒவ்வொரு நாளும் எல்லாத்தையும் கீழ கொட்டி, பிடிச்சதை எடுத்துக்கிட்டு மிச்சத்தை அப்படியே விட்டுட்டு போவாங்க. அதை ஒழுங்கு பண்ணியே என் நேரம் போச்சு.

ஒரு நாள் என் கஷ்டத்தைச் சொல்ல, அவளோட ரேஸ் கார் பொம்மையில் அடுக்கி வைச்சிட்டு, "மிஸஸ் கவிதா இங்க வந்து பாருங்க"னு சொல்றங்க. அதைப் பார்த்ததும் தமிழ் நம்பியோட பாட்டுத்தான் எனக்கு நினைவுக்கு வந்துச்சு

https://www.nilacharal.com/ocms/log/12140913.asp

எங்க சின்ன தாத்தா பல வருஷம் கஷ்டப்பட்டு நேர்மையாய் உழைத்து ஒரு பனியன் கம்பெனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இப்போ தாத்தாவுக்கு வயசாகிவிட, அவரோட கம்பெனியை நிர்வாகிக்க, இரு மாப்பிள்ளைகளும் தயாரா இல்லை. அவங்களோட வியாபாரத்தை பார்க்கவே நேரம் இல்லைனு சொல்லி, தாத்தாவோட நிறுவனத்தை விற்கப் போகிறார்கள். தன்னோட வியர்வையாலும் இரத்தத்தாலும் கட்டின கோட்டை இன்னொருவருக்கு சொந்தமாவதை தாத்தாவால தாங்க முடியலை.

தன் குழந்தையை யாரிடமோ விற்பதைப் போல, வாங்கறவங்க நல்லா பார்த்துப்பாங்களா, இங்கே இருக்கிற மரத்தை வெட்டாம வச்சிருப்பங்களான்னு ஏகப்பட்ட வேதனைகள்.

பள்ளி, வீடுன்னு ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே குழந்தைகளை வளர்க்காம, கொஞ்சம் தொழிலையும் எங்க தாத்தா சித்திகளுக்கு சொல்லித் தந்திருக்கலாம் என்பது என்னோட எண்ணம். குறைந்தபட்சம், கம்பெனி நிர்வாகம் மற்றும் உழைப்பது தவறில்லை என்பதையாவது.

உழைத்துக் கொண்டே படிப்பதில் என்ன தவறு? ஆனால் நம்ம நாட்டில் பெரும்பாலும் பெற்றோர்களே அதை விரும்புவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக¸ ஒரு சிலர் அப்படிச் செய்தால் அவர்களை ஏதோ பாவபட்ட செயல் செய்வதைப் போல பரிதாபமாய் பார்ப்பதை என் கல்லூரி நாட்களில் பார்த்திருக்கிறேன்.

வேலையும், படிப்பும் வெற்றி தோல்வியைச் சொல்லி தர, உழைத்தால் நிச்சயம் மனம் பக்குவப்படும். "உள்ளே மனம் சமாதானமாக இருக்கும்போது வெளியில் என்ன நடந்தாலும் மனம் கலையாது"ன்னு எடிட்டரம்மா சொல்வாங்க. அதற்கு உதாரணமா, நம்ம ரிஷியைச் சொல்லலாம். ரிஷியோட எழுத்துக்களிலேயே அதைப் படிக்க :

https://www.nilacharal.com/ocms/log/04051007.asp

ஒருவருக்கு இரு பிள்ளைகள் என்றால் வயதான காலத்தில் பெரியவன் வீட்டில் ஒரு மாதம், சின்னவன் வீட்டில் ஒரு மாதம் என மாறி மாறி தங்க வைப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. பெரியவர்களுக்கு எங்கே இருக்க விருப்பமோ, அங்கே தங்கட்டும். இன்னொரு மகன் வீட்டிற்கு அவர்கள் விரும்பினால் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இப்போது யாரும் அப்படி யோசிப்பதில்லை. இன்று காலையோடு ஒரு மாதம் முடிகிறது என்றால், மதிய சாப்பாடு இந்த வீட்டில் கிடைக்காது. என்னைத் தூக்கி வளர்த்தவர்கள் எல்லாம் இப்படி கஷ்டப்படுவதைக் கேட்டால், எடிட்டரம்மா கூறும் மனம் கலையாது நிலை வரவில்லை எனக்கு.

ஏதேனும் செய்ய வேண்டுமெனத் தோன்றியது. குறைந்த பட்சம் நம்ம அரட்டை அரங்கத்திலாவது பேச வேண்டுமென நினைத்தேன். உங்களோட கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!. வயதானவர்களுடைய இந்த பரிதாபமான நிலையை அழகான கதையா ஏ.ஏ.ஹெச் கோரி சொல்லியிருக்கிறார். அதை நீங்களும் படிக்க :

https://www.nilacharal.com/ocms/log/05040916.asp

ரொம்ப சீரியஸா பேசிட்டனா..? ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டுமா?

குஜராத்தில் உள்ள நதிகள், சாலைகள் எல்லாத்தையும் இணைச்சிருக்காங்க. அதன் மூலம் விவசாயம் 14 சதவீதம் உயர்ந்திருக்கு. பி.ஜே.பி. ஆளும் மாநிலம் என்பதாலோ மதவாத கட்சின்னு சிலர் நினைப்பதாலோ இதைப் பற்றிய செய்தியை எந்தப் பத்திரிக்கையும் பெரிதாய் கவர் ஸ்டோரியா போடலை. நமக்குத்தான் பாரட்டு விழாக்களில் நடக்கும் சண்டைக்கும், பரபரப்பான அடுத்தவங்களோட அந்தரங்கத்தைப் படிக்கவுமே நேரம் போதலையே.

ஜோ சொன்னது போல, மக்களின் மனோபாவம் மாற வேண்டும்!. மாறும் என்ற நம்பிக்கையுடன் போய் வருகிறேன் !.

மீண்டும் சந்திக்கும் வரை,

அன்பாய் இருங்கள் ! ஆரோக்கியமாய் இருங்கள் !

About The Author

3 Comments

  1. Radha

    Mam… vanga enga oru pongalukku nan ungal elaraium kupdrean… vanga nenga cinnapillaila vilayadiathu…saptathu pola nan ungalai kavaninthuk kolgirean… varungal… anbudan alaikkirean……Radha.

  2. KESAVABASHYAM

    நீங்க சொன்ன செய்தி குஜராத்தில் நதிகள் இணைக்கப்பட்டு 14 சதவிகிதம் விவசாயம் வளர்ந்திருப்பதாக சொன்னீங்க… அதுக்கு ஆதாரம் PLEASE …
    ரிவெர்-லின்கிங் ப்ரொஜெcட் ல் மோடி கையெழுத்து போட்டு ஒரு வாரம் ஆகுது. இன்னும் வேலையே தொடங்கல..

  3. Kavitha Prakash

    அழைப்பிற்கு நன்றி ராதா.

    கேசவபஷ்யம்,

    குஜராத்தில் இருக்கும் நண்பர்கள் கூறிய தகவலைத்தான் கூறியுள்ளேன்.

Comments are closed.