சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

நான் நல்லாயிருக்கேன் நீங்க எல்லோரும் நலமாயிருக்கீங்களா?

டொராண்டோ நகரத்தில் நடைபெற்ற டொராண்டோ நீர் நிலையை ஒட்டி இருக்கும் Toronto Waterfront Marathon இந்த மாதம் 16ஆம் தேதி நடந்துதாம். அதில் வெற்றி பெற்றதென்னவோ கென்யாவைச் சேர்ந்த கென்னத் முங்காரா. ஆனாலும் போட்டியில் கடைசியா வந்த நம்ம இந்தியாவைச் சேர்ந்த ஃபௌஜா சிங் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளரா இடம் பெற்றிருக்கிறார். என்னது கடைசியா வந்தவரை கின்னஸ் சாதனையாளரா அறிவிச்சிருக்காங்களாங்கிற எண்ணம் வருதில்லையா? ஆனா அவருடைய வயது 100 என்று தெரியும்போது கின்னஸ் புத்தகத்தின் சாதனையாளரா அறிவிச்சதின் காரணம் நமக்குப் புரியுது.

42 கி.மீ. நெடுந்தூர ஓட்டப்போட்டியில் ஓடி முடித்த முதல் வயதானவர் என்ற வகையில் 100 வயதான ஃபௌஜா சிங் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். பஞ்சாபி மொழி மட்டுமே ஃபௌஜா சிங்கிற்கு தெரியும் என்ற போதிலும் தன்னுடைய மொழி பெயர்ப்பாளர் மூலமாக இந்த ஓட்டப்போட்டி தொடர்பான தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார். பெற்றி பெற்றவரை விட 6 மணி நேரம் அதிகம் என்ற கணக்குப்படி பார்த்தாலும் 8 மணி நேரத்தில் ஓடி முடித்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறார். ஏன்னா அவர் இந்த பந்தயத்தை 9 மணி நேரத்தில் ஓடி முடிக்கணும்னு நினைத்திருந்தாராம். இது அவர் பங்கெடுத்துக் கொள்ளும் 8வது நெடுந்தூர ஓட்டப்போட்டி. முதல் நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ளும் போது இவருடைய வயது என்ன தெரியுமா? 89! ஆனாலும் விடாமுயற்சியோட தொடர்ந்து இது போன்ற பந்தயங்களில் பங்கெடுத்து தன்னுடைய நீண்ட நாள் எண்ணத்தை நிறைவேற்றியிருக்காரு நம்ம ஃபௌஜா சிங். நடை ப் பயிற்சி உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லதுன்னு தெரியும். ஆனாலும் தினமும் நடைபயிற்சிக்குப் போகாம எப்படி எல்லாம் டிமிக்கி கொடுக்கலாம்னு யோசிக்கிறேன். இவருடைய சாதனைகளைப் படிச்சப்புறம் கொஞ்சம் ரோஷம் வந்திருக்கு. இனிமே என்ன ஆனாலும் கண்டிப்பா தினமும் நடைபயிற்சிக்கு போகணும்னு முடிவு எடுத்திருக்கேன்!

**************

நம்ம திரைப்படங்கள்லே வருமே குடும்பச் சொத்து, குடும்பப் பாட்டு அப்படீன்னு.. அந்த மாதிரி எங்க வீட்டுல ஒரு குடும்ப கதை உண்டு. ரொம்ப அரத பழசான கதையெல்லாம் இல்லை பயப்படாதீங்க. எல்லாம் என் தங்கைக்காக உருவான கதைதான் இது. நானெல்லாம் ரொம்ப சமத்தாம். ஒரே கதையை தினமும் சொன்னாலும் பிகு பண்ணாம சமத்தா சாப்பிட்டுடுவேனாம். ஆனா, என் தங்கைக்கு தினமும் புதுப் புது கதை சொல்லணுமாம். எங்க அம்மாகிட்ட இருந்த சரக்கெல்லாம் தீர்ந்ததும் சொந்தமா தானே கதை சொல்ல ஆரம்பிச்சாங்க. எல்லாம் சரி.. அதுல என்னை எதுக்கு வில்லியாக்கினாங்கன்னு இன்னும் புரியலை. இருங்க கதையை முழுசா சொல்லிடறேன். கதையில லாஜிக் கண்டிப்பா இருக்காது. இப்பவே சொல்லிட்டேன்.

கதை:-

ஒரு நாள் எங்க அம்மா நிறைய கொழுக்கட்டைகள் செய்து வைச்சிருந்தாங்களாம். பள்ளியில் இருந்து நான் வீட்டுக்கு வந்துட்டேனாம். எனக்கு ரொம்ப பசியாயிருந்ததாம். நானும் எங்க அம்மாகிட்ட சாப்பிட ஏதாவது குடுங்கன்னு கேட்டேனாம். அப்போ அம்மா ஏதோ வேலையாயிருந்ததாலே, சமையலறை மேடையில் உள்ள ரெண்டு கிண்ணங்களில் ஒன்று எனக்கும் இன்னொன்று என்னுடைய தங்கைக்கும் வைத்திருப்பதாச் சொல்லி எனக்கான கிண்ணத்தை எடுத்துக்கச் சொன்னாங்களாம். நானும் சமையலறை போய் அங்கேயிருந்த ரெண்டு கிண்ணங்களில் ஒன்றை எடுத்து அதிலிருந்த கொழுக்கட்டைகளை சாப்பிட்டேனாம். ரொம்பவே சுவையாயிருந்ததாலே கடகடன்னு சாப்பிட்டு முடிச்சுட்டேனாம். இன்னும் சில கொழுக்கட்டைகள் சாப்பிட கிடைச்சா நல்ல இருக்குமேன்னு நினைச்சு இரண்டாவது கிண்ணத்தைத் திறந்து பார்த்தேனாம். அதுலே இருந்த கொழுக்கட்டைகளால கவரப்பட்ட நான் ஏகப்பட்ட சந்தோஷத்தோட அதையும் ஒண்ணொன்னா சாப்பிட ஆரம்பிச்சேனாம். எல்லா கொழுக்கட்டைகளையும் முடிச்சப்புறம்தான் என் தங்கைக்கு வைத்திருந்த கொழுக்கட்டைகளையும் நானே சாப்பிட்டது ஞாபகத்துக்கு வந்துதாம். அம்மாவுக்கு தெரியறதுக்கு முன்னாடி ஏதாவது செய்யணுமேன்னு ரொம்பவும் யோசிச்சு அந்தப் பக்கமா போயிட்டிருந்த எலியை எடுத்து ரெண்டாவது கிண்ணத்துலே போட்டு, தட்டாலே மூடி வைச்சிட்டு அங்கேயிருந்து ஓடிப்போயிட்டேனாம்.

பள்ளியில இருந்து வந்த என் தங்கைகிட்ட எங்க அம்மா இன்னும் தன்னுடைய வேலை முடியாததால, அவளுக்காக கொழுக்கட்டைகள் செய்து வைத்திருப்பதைச் சொல்லி எடுத்துச் சாப்பிடச் சொன்னாங்களாம். என் தங்கையும் சமையலறையில இருக்கும் கிண்ணத்தைத் திறந்து பார்த்தாளாம். அதுலே எலி இருக்கிறதைப் பார்த்ததும் எங்க அம்மாகிட்டே வந்து, "அம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு கண்ணும் உண்டோடி" அப்படீன்னு கேட்டாளாம்.

அதுக்கு அம்மா, "என்னாச்சு உனக்கு? பேசாம போய் சாப்பிடு"ன்னு சொன்னாங்களாம்.

சில நொடிகளுக்கப்புறம், "அம்மா.. அம்மா.. கொழுக்கட்டைக்கு காலும் உண்டோடி" அப்படீன்னு மறுபடியும் என்னுடைய தங்கை கேட்டாளாம்.

"கண்ணும் இல்ல, காலும் இல்ல. பேசாம போய் சாப்பிடு"ன்னு அம்மா சொன்னாங்களாம்.

மறுபடியும் என்னோட தங்கை, "அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு வாலும் உண்டோடி" அப்படீன்னு கேட்டாளாம்.

இப்போ எங்க அம்மாவுக்கு சந்தேகம் வந்துடுச்சாம். ‘என்ன ஆச்சு இவளுக்கு? ஏன் இப்படியெல்லாம் கேக்கறா?’ அப்படின்னு யோசிச்ச எங்க அம்மா, சமையலறைக்குப் போய் கிண்ணத்தைத் திறந்து பார்த்தா… அதுல எலி இருந்துதாம்.

அதைப் பார்த்த அப்புறம்தான் ‘அடடா இந்த யஷ் தங்கைக்கு வைத்திருந்த கொழுக்கட்டைகளையும் சேர்த்து அவளே சாப்பிட்டுட்டாளா? அதனாலதான் பாவம் வித்யா இப்படியெல்லாம் கேட்டாளா?’ன்னு எங்கம்மாவுக்கு உண்மை புரிஞ்சுதாம்.

கட்டிலுக்கடியில் ஒளிஞ்சிட்டிருந்த என்னைக் கண்டுபிடிச்சு எங்கம்மா ரெண்டு சாத்து சாத்துனாங்களாம்! நானும் இனிமே இந்த மாதிரி செய்யமாட்டேன்னு சொல்லி மன்னிப்பு கேட்டானாம்.

இந்தக் கதையை எங்கம்மா என்னிக்கு சொல்ல ஆரம்பிச்சாங்களோ அன்னியில இருந்து தினமும் என் தங்கை சாதம் ஊட்டும்போது இதே கதையைச் சொல்லச் சொல்லுவா. (வேற ஒண்ணும் இல்லை. என் மேல அம்பூட்டு அன்பு என் தங்கைக்கு!) அதுவும் குறிப்பா சொல்லணும்னா கதையின் கடைசிப் பகுதி என் தங்கைக்கு ரொம்பவே பிடிக்கும். குறைந்தது மூன்று முறையாவது சொல்லச் சொல்லுவா. (அப்பவே அவ்வளவு கோபம் என்மேலே!) என்னோட தங்கை வளர்ந்தப்புறம் அந்தக் கதை அப்படியே என்னுடைய மாமா பொண்ணுக்கும் சொல்லப்பட்டது. அது என்ன ரகசியமோ தெரியாது. சாப்பிட ரொம்பவே சண்டித்தனம் செய்யும் என் மாமா பெண் இந்த கதையைக் சொன்னா சமத்தா சாப்பிடுவா. (‘இந்த யஷ் அக்கா ரொம்ப மோசம் இல்லை மம்மி?’ அப்படீன்னு நடுவில கமெண்ட் வேற வரும்!)

கொஞ்ச நாள் கழித்து அவளும் வளர்ந்தப்புறம், அப்பாடி ஒரு வழியா இந்த கதை தொல்லை விட்டுது அப்படீன்னு நான் நினைச்சிட்டிருந்தேன். தீபாவளிக்காக எங்க அம் மா வீட்டுக்கு ஒரு உறவினர் தன்னுடைய மனைவி குழந்தையோட வந்திருக்காங்க. குழந்தையின் அம்மா குழந்தைக்கு வாசலில் வேடிக்கை காட்டி சாதம் ஊட்ட முயற்சி செய்திட்டிருந்தாங்க. அப்போ அந்த பக்கம் எதேச்சையா போக நேர்ந்தது. அந்த குழந்தையின் பேச்சைக் கேட்கும் ஆவலில் அங்கே நின்னு கவனிக்க ஆரம்பிச்சேன்.

"அம்மா கதை சொல்லும்மா…"

"என்ன கதை சொல்லணும்?"

"அதுதான் யச் (மழலையில் ‘யஷ்’ ‘யச்’சாகி விட்டது) அக்கா அவங்க சிஸ்டருக்கு குடுக்காம கொழுக்கட்டை சாப்பிட்டாங்களே! அந்த கதைச் சொல்லும்மா…"

இதைக் கேட்டதும், நம்ம புகழ் பரவாத இடங்களே இல்லை போல இருக்கேன்னு நினைச்சேன். என் தங்கையை சாப்பிட வைக்கிறதுக்காக எங்கம்மா கற்பனையா இட்டுக்கட்டி சொன்ன கதை இத்தனை வருஷத்திற்கு அப்புறமும் இன்னமும் தொடர்ந்துட்டிருக்கு. இதுல கொடுமை என்ன தெரியுமா? இது மாதிரியெல்லாம் உண்மையில் நடக்கவே இல்லை. எந்த குழந்தையும் நம்பமாட்டேங்குது. ஃபிரெண்ட்ஸ், நீங்களாவது என்னை நம்புங்க. நிஜமா நான் அந்த கொழுக்கட்டைகளைச் சாப்பிடவேயில்லை.

இந்த வாரம் கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம்.

தீபங்கள் ஜொலிக்க,
பட்டாசு வெடிக்க,
புதுத்துணி உடுத்தி,
மகிழ்ச்சியுடன் இந்நாளை நீங்கள் கொண்டாட,
உங்க எல்லோருக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

1 Comment

  1. ss

    Hi
    Yush,Nan nambaren …………..Nan nambaren………..Nambitomulla……………..
    Athu yaru yush samathu…Katha Naduvila eatho sonnengale……………
    Lol
    Yahoooooooo….. I got a nice story to feed my kids…………Hope……Lets try……..

Comments are closed.