சுற்றி வந்த கோவில்

தல வரலாறு சொல்ல
சுற்றிக் கொண்டவர்களில்
ஒருவருக்குக்
குடும்ப வரலாறே
அரை மணி ஆனது.
‘என் ஒருத்தன் வருமானத்துல
பெரிய குடும்பம் பொழைக்குது’

சிலைகளின் மீது
எல்லாமே தடவப்பட்டு..
எண்ணைக் கறை….
மஞ்சள் பொடி..
சுண்ணாம்பு..
நிறுவப்பட்ட முந்தைய நாளில்,
‘தொடாதே.. தள்ளி நில்லு..’
– நிச்சயம் ஒரு சேவகன்
விரட்டியிருப்பான்.

மதில் சுவற்றில்
‘ஹக்கும்’ ‘ஹக்கும்’
என்று முனகும் புறாக்கள்;
போன ஜன்மங்கள்
ஏதேனும் ஒன்றில்
சோழ ராஜா குடும்பமா?!

பாசி பிடித்த குளம்
அசையும்
கோபுர நிழலுடன்.
விளக்கொளி பட்டும் படாத
சிலைகள்
உயிர் கொண்டு எழும் பிரமை.

தட்டில் ஒரு பைசா கூடப்
போடாத பொதுஜனம்
சொல்லிப் போனது..
‘நல்ல வருமானம்தான் பூசாரிக்கு’

கூட வந்த கைடு
சொல்லாத கதை
மண்டபத்தில் கிறுக்கி இருந்த
"புவனா" "கணேஷ்"
கதைதான்.

About The Author