‘சோளகர் தொட்டி’ புதினம் காட்டும் இனக்குழுச் சூழல் (2)

திருமண முறை

மானிடவியலார் குறிப்பிடும் அகமண முறை மற்றும் புறமண முறை என்ற இரண்டு முறைகளில் சோளகர்கள் அகமண முறையையே மேற்கொள்கின்றனர். தங்கள் இனத்தைத் தவிர வேறு இனப் பெண்களையோ அல்லது ஆண்களையோ மணப்பதில்லை. மேலும் அவர்களது திருமண முறையில் பின்வரும் மாற்றங்கள் காணப்படுகின்றன.

1. பெண்ணுக்குப் பரிசப்பணம் அளித்து திருமணம் செய்துகொள்ளுதல்.
2. கணவன் இறந்துபட்ட நிலையில் அவன் தம்பியை மணத்தல்
3. திருமணத்தில் வயது பொருத்தம் பாராமை
4. விரும்பும் பொழுது சேர்ந்து வாழ்ந்துவிட்டு ஒரு நாள் தனது சமூகத்தினரை அழைத்து விருந்து வைத்தல்.
5. கணவனை விட்டு மனைவி பிரிந்து சென்றால் பரிசப்பணத்தைத் திரும்பப் பெறுதல்
6. மணப்பெண் வீட்டில் திருமண நிகழ்வு.

1. பெண்ணுக்குப் பரிசப்பணம் அளித்தல்

பெண்ணை மணக்கவிருக்கும் மணமகன் வீட்டினைச் சேர்ந்தவர்கள் பெண் வீட்டாருக்குப் பரிசத் தொகையினை அளித்து அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பரிசத் தொகை அவரவர் தகுதிக்கு ஏற்றாற் போன்று நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் பெண்ணிற்குக் கொடுக்கப்படும் பரிசப்பணம் கணவனை விட்டு மனைவி பிரியும் நேரத்தில் அப்பணத்தைத் திருப்பி அளித்துவிட வேண்டும். பொதுவாக பன்னிரண்டு ரூபாய் என்பது இவ்வின மக்களின் பொதுத் தொகையாகக் காணப்படுகிறது. மேலும் இவர்களது பண்பாட்டில் இந்தப் பன்னிரண்டு என்பது பல்வேறு நிலைகளில் இடம்பெறுவதை எட்கர் தர்ஸ்டன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு குழந்தை பிறந்த பன்னிரண்டாம் நாள் பன்னிரண்டு பெரியவர்களை வீட்டுக்கு அழைத்துக் குழந்தையை வாழ்த்தும்படி வேண்டுவதை இந்த வழக்கத்திற்கு உதாரணமாகக் கூறலாம். மண நாளன்று மணமகன் இல்லத்தைச் சேர்ந்த பன்னிருவர் பந்தல் கால்கள் நடுவதும் மணமகன் பெற்றோர் மணமகளுக்குப் பரிசத் தொகையாகப் பன்னிரண்டு ரூபாய் தருதலும் பன்னிரண்டனா மதிப்புடைய தாலி மணமகளுக்கு அணிவிக்கப்படுதலும் இந்த வழக்கத்தின் அடிப்படையில் நிகழ்த்தப் பெறுவதாகும்"

மேலும், சாவின் போது பன்னிரண்டு மூங்கில்களைப் பயன்படுத்திப் பாடை கட்டுவதோடு சாவுத்தீட்டினையும் பன்னிரண்டு நாட்களுக்கு இவர்கள் மேற்கொள்கின்றனர். இவ்வாறு இவர்கள் பன்னிரண்டைத் தங்களுடன் தொடர்புபடுத்தக் காரணம், இவர்கள் பன்னிரண்டு குலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வழக்கொன்று இவர்களிடையே காணப்படுகிறது.

2. கணவன் இறந்த நிலையில் அவன் தம்பியை மணம் செய்தல்

தனது கணவனை இழந்த பெண் தனக்குத் துணையாக வேறு ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையுடையவளாகிறாள். அவளது கணவனுக்கு அடுத்த நிலையில் கணவனின் தம்பி பருவமடைந்தவனாக இருப்பின் அவனே அவளுக்கு உரிமையுடையவனாகிறான். ஆனால் வயது வேறுபாடு காணும் வழக்கம் இல்லை. இவ்வழக்கம் புதினத்தில் பின்வருமாறு இடம்பெறுகிறது.

"அவன் கெப்பமாளைவிட ஏழு வயது சிறியவன், கோல்காரன் கத்தினான், கூட்டத்தினர் சிரித்தார்கள். கொத்தல்லி, கோல்காரனிடம் ‘எப்போது வயது பார்க்கும் முறை நமது தொட்டியில் வந்தது என்றான்" (ப.52)

மேற்கண்ட செய்தி அவர்களின் திருமண முறையில் காணப்படும் வயது பாராத வழக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.

3. திருமண விருந்தளித்தல்

திருமணம் முடிந்த பின்பு ஏதோ ஒரு நாளன்று தனது இனத்தாரை அழைத்து அவர்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது. இவ்வாறான விருந்தில் ராகியினால் ஆன களியோ அல்லது அரிசி உணவோ வழங்கப்படுகிறது.

சோளகர் இன மக்களின் வாழ்வியல் இடையூறுகள்

விலங்கனைய நாடோடியாய் வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் தனக்கென்ற ஒரு இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு குழுவாக வாழ ஆரம்பித்தான். இதனால் குடும்பம் என்ற ஒரு அமைப்பு உருவாயிற்று. ‘சமுதாயத்தின் மிகச்சிறிய நிறுவனம் குடும்பம்’ என்பர் சமூகவியல் அறிஞர்கள். எனவே இத்தகைய குடும்ப அமைப்பு முறையே காலப்போக்கில் வளர்ச்சியடைந்து பல்வேறு குடும்பங்களாகவும் குழுக்களாகவும் மாற்றம் பெற்றது எனலாம். எனினும் இத்தகைய அமைப்பு ஒரே அமைப்பினின்று தோன்றினாலும் வாழ்வியல் மாற்றங்களின் காரணமாகக் குழுக்களுக்கிடையே முரண்படும் போக்கினால் ஒரு இனக்குழுவானது மற்ற இனக்குழுவைப் பல்வேறு நிலைகளில் அடக்கி ஆள்வதும் துன்புறுத்துவதும் வாழ்வின் இடையூறுகளில் ஒன்றாக அமைகின்றது. அவ்வகையில் வனப்பகுதியில் வசிக்கும் இம்மக்களின் வாழ்வில் ஏற்படும் பல்வேறு இடையூறுகளைப் புதினத்தின்வழி பின்வருமாறு வகைபடுத்திக் காணலாம்.

1. வனவிலங்குகளால் ஏற்படும் இடையூறுகள்
2. பிற இனக்குழுவினைச் சார்ந்தவர்களால் ஏற்படும் இடையூறுகள்
3. அரசு ஊழியர்களால் ஏற்படும் இடையூறுகள்

காட்டு விலங்குகளான யானை, பன்றி, போன்ற பிற விலங்குகள் இவர்களின் விவசாயம் மற்றும் இருப்பிடங்களை அழித்து இன்னல்களை விளைவிக்கின்றன. பிற இனக்குழு இடையூறுகளில் குறிப்பிடத்தக்க இடையூறாக இவர்களது தொட்டிப் பகுதியை அடுத்த கிராமங்களில் வாழும் குடியானவர்கள் இம்மக்களின் நிலங்களை அபகரித்தல் மற்றும் வனத்தில் உள்ள மரங்களை வெட்டி விற்றுவிட்டு சோளகர்கள் மீது சுமத்துதல் போன்ற இடையூறுகளை விளைவிக்கின்றனர். இன ஒடுக்குமுறை என்பது "வேட்டையாடும் இனக்குழு வாழ்க்கையும், ஆடு மேய்க்கும் இனக்குழு வாழ்க்கையும் அழிந்து தனிச் சொத்துடமையும் அரசும் தோன்றிய காலம் எனலாம், இதனால் தொன்மைச் சமுதாயம் (Primitive Tribal Society) மறைந்து நிலவுடமை அமைப்பு (Feudal Society) தோன்றியது. ஒருபுறம் தனிச்சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட வர்க்க சமுதாயமும் மற்றொரு புறம் தொன்மைப் பொதுவுடைமைச் சமுதாயமும் ஏககாலத்தில் நிலவின. ஒன்று அழிந்து வந்தது மற்றொன்று வளர்ந்து வந்தது" என்கிறார் வானமாமலை (பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் ப.15). வளர்ந்து வந்த சமுதாயம் வளராத சமுதாயத்தை பின்னுக்குத் தள்ள ஆரம்பித்ததனையே இக்கூற்று நிறுவுகிறது.

அரசு ஊழியர்களான வனக்காவலர்கள் மற்றும் வீரப்பனைப் பிடிப்பதற்காகச் சென்ற அதிரடிப்படையினர் தொட்டியின் பகுதியில் முகாமிட்டு அங்குள்ள சோளகப் பெண்களைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்குதல் மற்றும் வீரப்பன் குறித்த தகவல்களை தங்களுக்குத் தருமாறு மிருகத்தனமான முறையில் கொடுமைப்படுத்துதல் போன்ற இன்னல்களைச் செய்தனர். இதனால் தொட்டியின் சோளகரின மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயினர். மேலும் தாக்கப்படும் சந்தேகத்தின் பேரில் பிடித்து வருபவர்களை முரட்டுத்தனமாக அடிப்பதால் அவன் இறந்துபடின் அவனுக்கு வீரப்பன் ஆட்களைப் போன்ற உடையினைத் தைத்து, அவனுக்கு அதனை அணிவித்து அந்த சோளகனை ஒரு கடத்தல்காரனாக அரசுக்கும் மக்களுக்கும் அடையாளப்படுத்தியுள்ளதை நாவல் எடுத்துரைக்கின்றது. மேற்கண்ட இடையூறுகளில், ஒரு சில தற்காலிக இடையூறுகளாக இருப்பினும், ஒரு சில தினமும் நிகழக்கூடியனவாக உள்ளன.

சோளகர் மக்களின் இனக்குழு ஆட்சிமுறை

சோளகர் இன மக்கள் தங்களுக்குள்ளாகவே தொட்டிக்கென்று ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து, அவன் சொற்படிக் கேட்பதும், அவனது வழிகாட்டுதலில் தங்களது வாழ்நிலைகளை அமைத்துக் கொள்வதுமாக உள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அவன் ‘கோல்காரன்’ என்று அழைக்கப்படுகிறான். இவன் இராணுவ உடை போன்ற மேற்சட்டையையும் கையில் ஒரு கோலும் வைத்து நீதி வழங்குபவனாக மதிக்கப் பெறுகிறான். தொட்டியினருக்குள் எழும் பிரச்சினைகளை இவனே தீர்த்து வைக்கின்றான். ஆனால் இவனது குடும்பத்தில் பிரச்சினைகள் இருப்பின் அதனை ‘கொத்தல்லி’ என்பவன் ஊர் மக்களைக் கூட்டி அவர்கள் முன்பாகத் தீர்த்து வைக்கின்றான்.

இவ்வாறு தொட்டியின் கோல்காரனிடம் நீதி கேட்கச் செல்லும்போது ஒருபடி தானியம் எடுத்துச் செல்லும் வழக்கத்தினைப் இம்மக்கள் பின்பற்றுகின்றனர்.

"அவள் வீட்டிலிருந்த தானியக் குதிரிலிருந்து ஒரு படி ராகியை ஒரு முறத்தில் எடுத்துக்கொண்டு கொத்தல்லியின் குடிசைக்குப் போய் அங்கு அதனைக் கொத்தல்லியின் முன்வைத்து எனக்குக் கோல்காரன் சென்நெஞ்சா, அநீதி செய்யப் பார்க்கிறான். எனவே நியாயத்தை வழங்க வேண்டும் என்று பணிந்தாள்" (ப.51) இம்முறையில் நீதி கேட்பவர்களுக்கு கோல்காரன் (அ) கொத்தல்லி ஆகிய இருவரின் தலைமையில் தொட்டியினர் முன் நீதி வழங்கப்படுகிறது.

இனக்குழு வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்

தங்களுக்கான உணவுப் பொருட்களைத் தாங்களே உற்பத்தி செய்த சோளகர்களின் இயல்பு வாழ்க்கையில், மழை பொய்த்தல் மற்றும் காடு வளம் குன்றுதல், உயர்குடியினரின் தலையீடு போன்ற காரணங்களால் மாற்றங்கள் ஏற்பட்டன. உணவு உற்பத்தி செய்ய இயலாத மக்கள் வேற்றுப் புலம் பெயர்ந்து வேலை தேட ஆரம்பித்தனர், இதனை அறிந்து கொண்ட குடியானவர்கள் முன்னர் வழங்கி வந்த கூலித் தொகையினையும் குறைத்தளித்தனர்.

தங்களது கட்டுப்பாட்டிற்குள் இருந்த வனப்பகுதியில் பிறரின் ஊடுருவல் ஆரம்பித்தது. பொதுவாக ஒரு இனக்குழு தங்களுக்கான ஆட்சிப்பரப்பினைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என்பதை, "ஒரு நாட்டாட்சிப் பரப்பு என்பது ஒரு தனிமனிதன் அல்லது குழு சொந்தங்கொண்டாடித் தன் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளும் இடத்தைக் குறிக்கும். சமுதாயச் சூழலியலார் மூன்று வகையான நாட்டாட்சிப் பரப்புமுறையைப் பற்றிப் பேசுவர்.

1. வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொருள் கிடைக்கக் கூடிய ஒரு சிறிய இடத்தைப் பாதுகாப்பது.
2. சற்றே பெரிய ஓரிடத்தில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்கள் யாவும் தமக்கே சொந்தமென்று உரிமை பேசுவது.
3. பிறர் யாரும் உள்ளே நுழையா வண்ணம் ஒரு நாட்டாட்சிப் பரப்பின் எல்லைகளைக் காவலில் வைத்துக்கொள்வது.

மேற்கண்ட ஸ்மித் அவர்களின் நடத்தை முறைக் கோட்பாட்டின் (வளரும் மானிடவியல் ப.18) வாயிலாக இனக்குழுவின் நாட்டாட்சிப் பரப்பானது வரையறை செய்யப்படுகிறது.

ஸ்மித் அவர்களின் கூற்றுப்படி வன எல்லையைத் தங்களுக்குள் வைத்திருந்த சோளகர்கள் காலப்போக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பனாலும் அவனைக் கைது செய்வதற்காக வந்த அதிரடிப்படை வீரர்களாலும் வனத்திற்கும் தங்களுக்குமான உறவினை இழந்து அந்நியமாக்கப்பட்டனர்.

"காட்டிலே எல்லாத்தையும் காசாக்குறதுக்கு அவனவன் வெடிக்கட்டையும் (துப்பாக்கி) கையுமா அலையறாங்க. எந்த உசிரும் மிஞ்சாது, தாயி. ஒரு காலத்திலே இந்த காட்டோட எல்லைக்குள்ள வரவே நம்மகிட்ட அனுமதி வாங்கினாங்க. எனக்குப் பதினாறு வயதிருக்கும் போது கல்யாணம் ஆச்சு. அந்த சமயத்திலே வெள்ளைக்காரங்க இங்கே வேட்டையாட வந்தாங்க. அப்போ எங்க அப்பனைக் கூப்பிட்டு வேட்டையாடலாமான்னு கேட்டாங்க. அது ஒரு காலம். சோலையை ஆண்டவன்டா நாம. அதுதான் சோளகன்னு எங்கப்பன் சொல்லுவான்" (ப.84) என்று தனது இனத்தின் உரிமையை இழந்த சூழலைப் புதினம் எடுத்துரைக்கின்றது.

முடிவுகள்

1. ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் இலக்கியங்கள் சமுதாயச் சூழலைத் தன்னுள் கொண்டு விளங்குவதுடன் அச்சமூகத்தின் வளர்நிலை மாற்றங்களை முன் வைக்கின்றன.

2. இலக்கியங்களை இனக்குழு சார்ந்த கண்ணோட்டத்துடன் அணுகுவதன் வாயிலாக இலக்கியத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்டு அவ்வினக்குழு மக்களின் பிற பண்புகளையும் அடையாளம் காண முடியும்.

3. மானிடவியல் கோட்பாட்டினை இலக்கியத்துடன் ஒப்பிட்டுக் காண்பதன் வாயிலாக சமுதாய உயர்குடியாக்க நிலையினையும், தொன்மைச் சமுதாய அமைப்பினையும் வெளிக்கொணர இயலும்.

4. ஒவ்வொரு இனமும் தங்களுக்கென்ற பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களில் பல்வேறு நிலைகளில் பிற இனங்களுடன் மாறுபட்டுள்ளதை, இன ஒப்பீட்டு முறையை மேற்கொள்வதன் மூலம் பல இனக்குழுக்களின் ஒத்த தன்மையை அறிய இயலும்.

5. புதின ஆசிரியர் தனது முன்னுரையில் "சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அரசு இயந்திரங்களின் கொடூர அடக்குமுறையால் பழங்குடி மக்கள் எதிர் கொண்ட துயரங்களுக்கு இந்நாவல் மட்டுமே தமிழில் இலக்கிய சாட்சியாகும்" என்று கூறுவதற்கிணங்க இலக்கியங்கள் காலத்தின் சாட்சியாக ஒட்டு மொத்த சமுதாயத்தின் பிரதிநிதியாக விளங்குவதற்கு இந்நாவல் தக்கச் சான்றாக அமைகிறது.

துணை புரிந்த நூல்கள்

1. ச. பாலமுருகன், சோளகர் தொட்டி, வனம் வெளியீடு, பவானி. (முதன்மை ஆதார நூல்)
2. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2003.
3. வாழ்வியல் களஞ்சியம், தொகுதி – II.
4. பக்தவத்சல பாரதி, தமிழர் மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2002.
5. மிஹயீல் நெஸ்தூர்ஹ், பூ. சோமசுந்தரம் (மொ.ஆ), மீர் பதிப்பகம், மாஸ்கோ, சோவியத் நாடு. 1981.
6. க.ப. அறவாணன், தமிழ் மக்கள் வரலாறு, தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, சென்னை.”

About The Author

1 Comment

Comments are closed.