சொன்னது நீதானா?(2)

"இப்ப நீங்க எங்கையால ஒதை வாங்கப் போறீங்க."

"எதை வாங்கப் போறேன்?"

"ஒதை."

"அதை நா அப்பறமா வாங்கிக்கிறேன். நீ மொதல்ல அந்த டிஸ்மிஸல் ஆர்டரை வாபஸ் வாங்கு. ஜனநாயத்தை நிலை நாட்டு. இல்லாட்டி மாதர் சங்க அமைப்புகள்ளாம் போர்க்கொடி தூக்கிக்கிட்டு நாளக்கி நம்ம வீடு தேடி வரும்."

"வரலைன்னா?"

"நானே போய்க் கூட்டிக்கிட்டு வருவேன்."

"த்யேட்டர் வந்துருச்சு, ஒங்கப் பினாத்தல நிறுத்துங்க."

நிறுத்தினேன்.

சினிமா சுவாரஸ்யத்தில் இந்த விவகாரம் வலுவிழந்து போனது.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை.

அதிகாலையில், அரைத் தூக்கத்திலிருந்த போது கதவு தட்டப்பட்டது.

ஜன்னல் வழியாய்ப் பார்த்த போது, வெளியே ஒரு மெர்ஸிடஸ் பென்ஸ்.

"நெனச்சேன்"என்று ஒரே வார்த்தையில் சலித்துக் கொண்டு ஆடையைச் சரி செய்துகொண்டு கதவைத் திறக்கப் போனாள்.

"என்னங்க, நீங்க இங்கயே இருங்க. முன்னால வராதீங்க.

அரசாணையா இது, அடிபணிந்து போவதற்கு?

மீறுவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

முன்னறையின் உரையாடல் தெளிவாய்க் கேட்டது.

"குட்மார்னிங் மேடம், நா லலிதாவோட மம்மி."

"நாந்தான் ஒங்கள மீட் பண்ணியிருக்கேனே மாமி. ஐ மீன்… மேடம், நீங்க இன்ட்ரடியூஸ் பண்ணிக்கணுமா என்ன?"

"மீட் பண்ணியிருக்கலாம். ஆனா, நீங்க இப்பக் கோபமான மூட்ல இருக்கீங்கன்னு லலிதா சொன்னா…."

"கோபமா? நானா? நோ நோ."

"இனிமே ட்யூஷனுக்கு வர வேண்டாம்னு சொன்னீங்களாம்."

"ஐயையோ. என்னோட ஹஸ்பண்ட் ஊர்லயிருந்து வந்திருக்கார் மேடம். ஈவ்னிங் ரெண்டு பேரும் வெளிய போய்ட்டு வரணும்னு அவர் ஒரே நச்சரிப்பு. அதனால, லலிதாக்கண்ணு, நீ போய்ட்டு மன்டே வாம்மான்னு சொன்னேன்…"

"நீங்க அப்டித்தான் சொல்லியிருப்பீங்க, எனக்குத் தெரியும். இது என்னமோ தப்பாப் புரிஞ்சிக்கிட்டு ராத்திரிப் பூரா ஒரே அழுகை."

"அழுதியா லலிதா? அட அசடே. நா ஒன்ட்டக் கோச்சுக்வேனாம்மா? என் ஹஸ்பண்ட் ராத்திரி ஊருக்குப் போயிருவார். நாளைலயிருந்து சமத்தா ட்யூஷனுக்கு வா, என்ன?"

ஹஸ்பண்ட் என்கிற பதத்தைக் கிளுகிளுப்புடன் அவள் ரெண்டு முறை உச்சரித்த பின்னாலும் தலை மறைவாய் இருப்பது தர்மமில்லை என்று, படக்கென்று சட்டையையெடுத்து மாட்டிக் கொண்டு ஹாலில் நான் ப்ரசன்னமான போது, மூணு ஜோடி விழிகள் என்மேல் பாய்ந்து நிலைகுத்தி நின்றன.

லலிதா சட்டென்று தலை கவிழ்ந்து கொண்டாள்.

நம்ம ஆள் ஆட்சேபமாய் முறைத்தாள்.

மம்மியின் இமைகள் அகலமாய் விரிந்தன. உதடுகளும்.

"இது தான் ஒங்க ஹஸ்பண்டா மேடம்?"

"ம்? ஆமா."

"ஹெள ஹாண்ஸம்!"


(‘நட்சத்திரங்கள் கருப்பு’ மின்னூலில் இருந்து)

About The Author