சொப்பு விருந்து (1)

உலகம் எப்பவுமே கண்டுபிடித்து அறிந்துகொள்ள வேண்டியதாகத்தானே இருக்கிறது! கண்ணுக்குத் தெரியாத திரைகள் எங்கும் எங்கெங்கிலும் தொங்கிக்கொண்டிருக்கின்றன என்று தோன்றியது சரவணனுக்கு. துரும்படியில் யானைகள் இருப்பதைக் கண்டுகொள்ளவா முடிகிறது. சின்னத் திரியைப் பற்ற வைத்தால் பெரும் வெடிகள் சிதறுகின்றன. பாறைக்கடியில் நீரூற்றுகள் கிடைக்கின்றன. வயலை உழுதால் புதையல் கிடைக்கிறது. தேடுதலும், கவனமாய்க் காத்திருத்தலும் வாழ்க்கையை எத்தனை பரசி விரித்துக் காட்டுகின்றன.

நியதிகளுக்கு முடிவு என்று ஒன்று இல்லைதான். கண்ணி விட்டுப் போதல், அதுவே நிகழ்கிறது. சில நியதிகள் விட்டுப் போவதேகூட, புதிய நியதிகளில் ஒருவேளை புகுந்துகொள்வதாக அமையக் கூடும் அல்லவா? மானுடக் கணக்குகளும் காலக் கண்ணிகளும் சரியாக இணைவதில் அடையாளங்கள் தட்டுப் படுகின்றன போலும்.

காலையிலேயே மனசு ஒரு புதிய தாள லயத்தில் தன்னை இணைத்துக்கொண்டாற் போலிருந்தது. எத்தனை கனமான நினைவுகள் அழுத்தினாலும் ஓர் உறக்கம், மனசைக் கழுவிவிட வல்லதாய் இருக்கிறது. அடுத்த நிலைநோக்கி நகர்தல் இயல்பாகவே தவிர்க்கவொண்ணாததாகவே அல்லவா ஆகி விடுகிறது. இனி என்ன, என திகைக்கிறதே ஒரு பாவனைதான். கணநேர மயக்கம். மருட்டல். எதற்கும் முடிவு உண்டு என்பதுபோலவே, இதுவும் ஒரு பார்வைதான்… எதற்கும் முடிவு என்பது இல்லை!

புடவை புடவையாய் உடுத்திப் பார்த்துக்கொள்ளும் வானத்தின் வர்ண அமர்க்களமாய் மானுடம் மனச் சலனங்களிலும் தேடல்களிலும் ஆர்வத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டேதான் வருகிறது. வாழ்வில் அழகுகள் பொதிந்துள்ளதைக் கண்டுணர்ந்து பிரித்து அனுபவிப்பதில்தான் வாழ்கிற தத்துவம் வெற்றி பெறுகிறது. எங்கோ தூரத்தில் இருந்து வரும் பூ வாசனையின் மௌன அறிவிப்பு இதைத்தான் சொல்கிறது. எங்கோ பெய்கிற மழையின் மண்வாசனை, முகம் காண முடியாத தொலைதூரத்து நண்பனின் கடிதம் போல. நண்பா! என்ன இருந்தாலும் நீ நேரில் வந்திருக்கலாம். கடிதம் போடாமல்கூட வந்துவிடுகிறது மழை. கதவைத் தட்டுகிறது திறக்கச் சொல்லி…

குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்கள் வாசலிலும் உள்ளேயும் குவித்து வைத்திருக்கிற கடையை அன்றைக்குப் பார்த்தபோது மனம் துள்ள ஆரம்பித்துவிட்டது. அவிழ்த்துக்கொண்ட கன்றுக்குட்டி போல. காலை உதறி உதறி எம்பித் தாவும் கன்றுக்குட்டிகள் திடீரென்று சூழலுக்குக் கலகலப்பைக் கொண்டுவந்து விடுகின்றன. மனசுள் குலுங்கும் கிலுகிலுப்பை. கடைவாசலில் சிறு பலகைபெஞ்சில் பிஞ்சுக் குழந்தைகளுக்கான செருப்புகள் ஷூக்கள் பார்த்தபோது மனம் பரவசப் பட்டது. ஹெமிங்வே ஒரே வரியில் எழுதிய சிறுகதை ஞாபகம் வந்தது.

Children shoes for sale. unworn!

குழந்தைக் காலணிகள். இதுவரை போட்டுப் பார்க்காதது!

இந்த இலக்கியவாதிகள் ஏதோ ஒன்று புதுசாய் கவனிக்கிறார்கள். அதைச் சொல்லித் தருகிறார்கள். வாழ்க்கை புதுப்பித்துக்கொண்டேதான் இருக்கிறது. கவனிக்காமல் விட்டால் அது சரியில்லைதான்! கீச் கீச்சென்று ஊதல் உள்ளே வைத்த காலணிகள். சிற்றடி சீரடி எடுத்து வைக்கும்தோறும் காலுக்குள்ளிருந்து சீறும் சப்த அமர்க்களத்தில் குழந்தைக்கு சிறு திகைப்பும் பின் சிரிப்பும். திடீர் திடீரென்று காது நிறைவதில் அந்த உணர்ச்சி அதன் உடம்புக்குள் நதியாய் ஓடுவதைப் பார்க்க முடிகிறது. குழந்தைகள் நடைபழக உத்திரீதியாய் ஒரு கொண்டாட்டம். ‘மா தூ…’ (அம்மா தூக்கு) எனும்போது ‘பாரு குட்டி நீ இதைப் போட்டுக்கோ நடந்தா விசில் சத்தம் வரும்…’ அதன் நடையில் குழந்தையை விட, பார் அம்மா முகத்தை. புன்னகை முகம் நெடுக விரிந்து பரந்திருக்கிறது.

A thing of beauty is a joy for ever, என்கிறான் கவி ஒருவன். அதை ஆவேசமாய் சாமர்செட் மாம் மறுக்கிறான். புலன்களை முதற் பரிச்சயத்தில் நிறைப்பதே அழகு. அது காலாந்திர ஆனந்தத்தை எப்படித் தர முடியும். மகிழ்ச்சியைத் தாண்டி அது மூளையில் திரும்பத் திரும்ப அலைமோதல் செய்ய வேணுமென்றால் அதில் அழகுத்தளத்தைத் தாண்டி உள்படுகைகள் (லேயர்ஸ்) தரிசனப்பட வேண்டாமா? – என்கிறான். எதிராளியை எள்ளுவதில் மாமுக்கு நிகரில்லை. நிஜத்தில் அந்த cakes and ale நாவலே சக எழுத்தாளனை எத்தும் உச்ச உத்திதானே…

பார்வையில் கோளாறு என்று நினைத்தான் சரவணன். அழகுச் சிதறல்கள் கண்ணுக்கு விருந்து என்பது சரிதான். அதிலேயே மனசூன்றிக் கொண்டிருப்பது எளிய நிலையே, அலுத்துவிடும் அது, என்பதும் உண்மைதான். ஆனால் வாழ்க்கையில் அடுத்தடுத்து அழகுகள் கலைக்கண்ணுக்குத் தட்டுப்பட்டுக் கொண்டேதானே இருக்கின்றன. ஒரு அழகுக் கூறில் இருந்து அடுத்ததுக்கு மனம் தாவிக் கொண்டேதான் இருக்கிறது. பட்டாம்பூச்சி தேனுக்கு அலைகிறதைப்போல!

ஆக வாழ்க்கையில் ஆனந்தத்துக்குக் குறைவில்லை. Life is too short to be kept worrying, என்பார்கள். சாமர்செட் மாம் அறியாதிருக்க முடியாது. சும்மா கிண்டிக் கிளறிவிட்டுப் பார்க்கிறான்! தூக்குமேடையில் இருந்துகொண்டே தாஸ்தயேவ்ஸ்கி சொல்லவில்லையா – Beauty will save the world! ஆச்சர்யமானவர்கள் இந்தக் கலைஞர்கள்!

சில நாட்கள் இப்படி ஆகிவிடுகிறது. காற்றலைத்தாற் போல மனசுக்குள் எண்ண அலைகளின் சளப் சளப். காற்றில் காயப்போட்ட வேட்டியின் ஃபட் ஃபட். கோவில் பக்க சிறு உலாவலில் நம்பிக்கைப் புன்னகையுடன் உள்பவித்திரங்களுடன் நடமாடும் பக்தக் கும்பலின் ஊடே புகுந்து கடக்க அவனுக்கு எப்பவுமே பிடிக்கும். நம்பிக்கைக் கேந்திரங்கள் அவை. கையில் விபூதி குங்குமத்துடன் துளி நம்பிக்கையும் அங்கே கிடைக்கிறது ஜனங்களுக்கு. பாவனைகள் அற்ற மனிதர் யார்? மிளகு உப்புடன் அந்தக் கோவில் குளத்தில் பாவத்தையும், அட அவநம்பிக்கையையும் அல்லவா அவர்கள் கரைக்கிறார்கள்.

குடும்பம் குடும்பமாக வந்து போவதற்குக் கோவில் போல வேறில்லை. கோவிலில் என்றில்லை, ஒன்றாய்க் கோவிலுக்குக் கிளம்பும் கணத்திலேயே வாழ்க்கை இறுக்கம் தளர்ந்து ஓர் அமைதி உள்ளே ஸ்தாபித்துக்கொள்கிறது. கையெடுத்து அவன் இதுவரை உள்ளே போய்க் கும்பிட்டதில்லை. அது தேவையாயும் உணர்ந்ததில்லை. கைவிடப்பட்ட நிலை, என்கிற தருணம் அவனில் கிடையாது. உலகம் புன்னகைகளால் ஆளப்படுகிறது.

வாசம் என்பது மலரின் புன்னகை. சின்ன வயசில் அம்மாவுடன் கோவிலுக்குப் போயிருக்கிறான். கடவுளை உற்சவம் என்று யானை வாகனத்தில், குதிரை வாகனத்தில் ஊர் உலா அழைத்து வருவது, குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவதாய்த்தானே இருக்கிறது… என்றான் அம்மா கையைப் பிடித்துக்கொண்டே வேடிக்கை பார்த்து வந்த ஒரு போதில். டாய், என்றாள் சிரித்தபடி. ரசித்தாப் போலிருந்தது. சடைநாயைப் பார்த்து, பஞ்சுமிட்டாய், என்று அவன் காட்டியதை அடிக்கடி ஞாபகம் கொள்வாள் அவள்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author