ஜடாயு மோட்சமும் ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயிலும்

ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயிலைப் பார்க்குமுன் அந்தக் கோயில் பற்றிய இதிகாசக் கதை ஒன்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்!

சீதையை இராவணன் அபகரித்துச் சென்றான். மாய மானைத் தேடிச் சென்ற ராமனும் தன் அண்ணனைத் தேடிச் சென்ற இலக்குவனும் உண்மை அறிந்து திரும்பி வந்து, சீதையைக் காணாமல் பதறி நின்றனர். பின் வழியெங்கும் "ஹே சீதே! நீ எங்கு இருக்கிறாய்?" என்று புலம்பியபடியே ராமன் வர, இலக்குவனும் பின் தொடருகிறான். அங்கு "ராம்!… ராம்!…" என்ற முனகல் கேட்க, இராவணனால் இறக்கைகள் வெட்டி வீழ்த்தப்பட்ட ஜடாயு பட்சி உயிருக்குப் போரடியபடிக் கிடப்பதைப் பார்த்தார் ராமர். அருகில் சென்று, அப்படியே ஜடாயுவை அள்ளி எடுத்துக் கருணையுடன் மடியில் வைத்துக்கொண்டார். இராவணன் சீதையை அபகரித்துச் சென்றதையும் அதைத் தடுக்கத் தன் உயிரையே பயணம் வைத்து ஜடாயு போராடியிருப்பதையும் கேட்டுக் கண்ணீர் மல்கினார்.

"சுவாமி! எனக்குத் தாங்கள் தேவி சமேதராகக் காட்சி அளித்து அருள்புரிய வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை" என்றார் ஜடாயு. ராமர் அந்தப் பட்சியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். திடீரென்று ராமர் நின்ற இடத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணர் தோன்றினார்! "ஆஹா! என்ன அழகு! என்ன பாக்கியம்!" என்றபடியே ஜடாயு அந்தத் தரிசனத்தில் ஒன்றித் தன் உயிரை விட்டார். மோட்சம் அடைந்தார்.

இந்த லட்சுமி நாராயணர்தான் அருகன்குளம் என்னுமிடத்தில் திருக்கோயிலில் கொண்டு அருள்புரிகிறார். அருகன்குளம் என்றால் அறுகம்புல் அதிகமாக விளையும் குளத்தைக் கொண்ட இடம். ராமர் சீதையைத் தேடி வரும் வழியில் தாமிரபரணி நதி சலசல என்று ஓட, அதன் இரு பக்கங்களும் ‘தூர்வா’ தடாகம் இருந்தது. தூர்வா என்றால் சம்ஸ்கிருதத்தில் அறுகம்புல். ஸ்ரீராமர் ஜடாயுவின் ஈமக்கிரியைகளை இந்தத் தடாகத்தில்தான் செய்தார். திருநெல்வேலியிலிருந்து சுமார் நாலைந்து கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் அமைந்திருக்கிறது.

கோயிலில் ஸ்ரீலட்சுமி நாராயணர் வீற்றிருக்க அவர் மடியில் லட்சுமி அமர்ந்திருக்க, அருகில் ஜடாயு காட்சியளிக்கிறார். கோயில் தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இல்லை. புதுவிதமாய் சுவாமி சன்னதியிலேயே அமைந்திருக்கிறது. ஜடாயு தீர்த்தம் எனும் இந்தத் தீர்த்தக் குண்டத்திலேயே ஸ்ரீலட்சுமி நாராயணர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

இங்கு சிவ தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இரு தீர்த்தகுண்டங்களைக் காண முடிகிறது. ஜடாயுவின் மரணத் தாகத்தைத் தீர்க்க ராமர் உருவாக்கிய தீர்த்தகுண்டம் ராம தீர்த்தம் எனவும், ஜடாயு மோட்சம் அடைந்தவுடன் ராமர் முன் சிவன் தோன்றி அவரது வெற்றிக்கு ஆசி வழங்கியபோது உண்டான தீர்த்தம் சிவ தீர்த்தமாகவும் அறியப்படுகிறது."இங்கு குளித்தால் பாவங்கள் அழிந்து சகலவிதமான சௌபாக்கியங்கள் கிடைக்கும்" என்று சிவன் திருவாய் மலர்ந்தாராம். இதனால் இங்கு அமாவாசை, உத்திராயன புண்ணியக் காலம், தக்ஷிணாயன புண்ணியகாலம், கிரகணம், தை அமாவாசை, மஹாலய பட்சம் போன்ற நாட்களில் பித்ரு கடன் செய்தால் பித்ரு தோஷம் நீங்கி நலம் உண்டாகும் என்று பலர் இங்கு வந்து கூடுகின்றனர். இந்தத் தீர்த்தங்களில் திருநீராடி முன்னோர்களுக்குத் திதி அளிக்கின்றனர்.

இதன் அருகில் காட்டுராமர் கோயிலும் உள்ளது. ராமர் சீதையை மீட்டு இதே வழியில் திரும்பி வந்தபோது, ஜடாயுவை நினைத்து ஜடாயுவின் ஆன்மாவுக்கு ராம – சீதையாகக் காட்சி அளித்தாராம். அதன் அடையாளம் இந்தக் கோயில்! இந்தக் கோயிலில் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர் மூவரும் அருள்புரிய, ஜய ஹனுமானும் உடன் இருக்கிறார்!

About The Author