ஜா தீ (2)

சபாபதியின் ஆட்கள் டிரைவர், கண்டக்டர்களாக ஓடும் பஸ்கள் நிற்க முரண்டு பண்ணின. கீழே இழுத்துப் போட்டு போராட்டக்காரர்கள் அவர்களை உதைத்தார்கள். பயணிகள் பயந்து திசைக்கொருவராய் ஓடி ஒளிய இடம் தேடினார்கள். எதுவும் லலிதாவுக்குத் தெரியாது. அவள் மாடியறையில் மருதாணி இட்டுக் கொண்டிருந்தாள். அவள் கையில், காலில் என்று தோழிகள் புதுப் புது டிசைன் மருதாணியில் வரைந்தார்கள். மருதாணி ஈரம் குறுகுறுப்பாய் இருந்தது. ஒரே கேலியும் கிண்டலுமாய் இருந்தது அங்கே. சாப்பாட்டு நேரம் அம்மா வந்து லலிதாவுக்கு வாயில் ஊட்டினாள்.
முதல்வரிடமிருந்து இன்னும் அறிவிப்பு வரவில்லை. சிவகுருவுக்கு ஆத்திரம் இன்ன அளவு என்றில்லை. தான் சீண்டப்படுவதாய் உணர்ந்தார் அவர். குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை என்று அழைத்திருக்கலாம். அன்றிரவு பணிமனையில் இருந்த இரண்டு பஸ்கள் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டன…

ஜாதித் தலைவர் பெயரில் பஸ் விடச் சொல்லி, இருக்கிற பஸ்ஸை எரிப்புப் போராட்டம்! கொஞ்சம் பெரிசாயிட்டது விவகாரம். ஆனால் நான் என்ன செய்யிறது? விவகாரத்தை நாங்களாவே பெரிசாக்குறோம்? இந்த அரசாங்கம்தானவே பெரிசாக்குது? கோரிக்கை வெச்சா பதில் சொல்லுய்யா, அதை விட்டுட்டு, கலவரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குவம்-னா… என்னா அது வார்த்தை? திமிராத்தானே பேசறாரு அந்த மனுசன்? நாங்க மாத்திரம் நெஞ்சில் மயிர் முளைக்காத மாங்கா மடையனுவளா? அடக்கட்டும்வே! அதையும் பாத்திறலாம்… அட, அப்படியாவது நம்ம ஜாதிப் பயல்களுக்கு வீரம் வருதா பாப்பம்!

சிற்சபேசனின் வயல் அறுவடைக்குத் தயாராய் இருந்தது. முற்றி முதிர்ந்து புதுமணப் பெண்ணாய் நாணித் தலை கவிழ்த்திருந்தன கதிர்கள். மஞ்சள் நகை மணிகள்… திடீரென்று வயல் தீப்பற்றிக் கொண்டது. தூர தூரத்துக்கும் வெளிச்சம். பயிர் கருகும் நெடி. புகை. அணைக்க முடியாத பெரு நெருப்பு. இனி பயிர் முழுக்க அவிந்துதான் அது அடங்கும். உள்ளேயிருந்து பாம்பும் தவளையும் எலிகளும், குற்றுயிரும் கொலையுயிருமாய் வெளியே வந்து விழுந்தன. உடல் கருகிய நிலையில் துடிதுடித்து அவை இறந்தன.

அன்றிரவே சபாபதியின் மாட்டைக் காணவில்லை. கொட்டடி, தேரடி, நாலு முக்கு எங்கேயும் காணவில்லை. மேய்ச்சலுக்குப் போன காராம் பசு. நல்லா மடி கனத்த்த்த பசு. எட்டு பத்து லிட்டர் கறக்கும். ஊரிலேயே எவனிடமும் அது போலப் பசு கிடையாது. மெத்தென்ற கருப்பு வெல்வெட் உடம்பு. கண்ணில் இமைகள் நரைத்திருக்கும். வாய் மாத்திரம் தனி ஆரஞ்சு… அழகான பசு. தனியே யாரும் மாட்டைத் தேடிப் போக வேண்டாம் என்றார் சபாபதி.

கூட்டங் கூட்டமாய் வேக வேகமாய் ஜனங்கள் நடமாடினார்கள். பொதுவில் ஊரே சந்தடி அடங்கிக் கிடந்தது… யாருமே வெளியே வர பயப்பட்டார்கள்.

அடுத்த நாள் மதியம் சபாபதியின் மாடு, பிரியமான மாடு தோலுரிபட்டு, வெயில் தாளவியலாத தத்தளிப்புடன், தள்ளாடித் தடுமாறி வந்து, சபாபதி வீட்டு முன் விழுந்து செத்துப் போனது. வாசலெங்கும் ரத்தம். பசுமாட்டின் தவிப்பும் முனகலும்… பயத்தில் உறைந்து வெறித்த அந்தக் கண் பிதுக்கம்…

லலிதா விஷயம் கேள்விப்பட்டே "ஐயோ!" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.
ஊரில் கடைகள் பாதி திறந்து பயத்துடன் வியாபாரம் நடந்தது. ஏதாவது விபரீதமான சத்தம் கேட்டால், அவர்கள் படபடவென்று ஷட்டரை இறக்கி விட்டுத்தான் என்ன ஏது என்று விசாரித்தார்கள். கொஞ்சம் அசந்தால் கடை சூறையாடப்பட்டு விடும்… சிற்சபேசன் ஆளோ, சபாபதி சகாவோ, நஷ்டம் அவங்களுக்கா, நமக்குத்தானே என பயந்தார்கள். நம்ம ஜாதிக்காக, என்று செத்துப் போக முடியுமா? யாருமே குளத்துக்கோ, ஊருணி, கிணறு என்றோ குளிக்க வெளியே வரவில்லை. வயற்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த ரெண்டு பேர் கத்தியால் குத்தப்பட்டனர். "பேமானிப் பயகளா, என்னா தைரியம் இருந்தா வேலைக்கு வருவே?"

"ஆத்தி! பச்சப் பிள்ளை, பசிச்ச முகத்தப் பாக்க மாட்டாமத்தான் வந்தம்…" என்று கும்பிடுமுன், கத்திக் குத்து ஆழமாய் இறங்கியிருந்தது. ஊர் ரவுடிகளுக்கு இரவுகளில் கொண்டாட்டம். இன்ன ஜாதிக்கும், இன்ன ஜாதிக்கும் சண்டை என்றில்லாமல், இவன் ஆள் அவன் ஆள்… என்று விவகாரம் முற்றியது.

அப்பா செய்தித்தாள் வாங்கிப் படித்தார். அடேடே நம்ம அண்ணாச்சி அப்படில்லாம் இல்ல… என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். அவர்ன்னா அவராய்யா எல்லாம் செய்யிறாரு? அவராட்கள் மனுச மக்கள் செய்யிறாங்க. அவங்காளுங்க தூண்டுதல். ஜாதி வெறி. அது சபாபதி மேல திரும்புதா, ஊர்மேலே திரும்புதான்னு இங்கேர்ந்து சொல்ல முடியுமா?

இராத்திரி தூங்கவே லலிதாவுக்கு பயமாய் இருக்கிறது. சுற்றிலும் ஆட்கள் நடுவே அவள் படுத்துக் கொண்டிருந்தாலும், எல்லாம் நல்லபடியா முடியணுமே என்று கவலை. அவள் வேண்டாத தெய்வம் இல்லை. பஸ்சில் வராமல், அந்த மட்டுக்கு இவர், அனந்தராமன் அல்ல, அனந்தராமர்! காரில் வருகிறாரே, என்றிருந்தது. மறுபுறம், ஐயோ! தனியே இரவில் அவர்கள் இப்படி வருவது நல்லதா? ஊரே கெட்டுக் கிடக்கே எனத் திகில். வீட்டில் யாரும் தெருவில் இறங்கவில்லை… பக்கத்து கீழ்ப்பந்தல் குடியில் இருந்து வாழையிலை, வெற்றிலை, காய்கனி வகைகள் வர வேண்டும். பஸ் கிடையாது. மாமா சைக்கிளில் கிளம்பினார். அவர் கிளம்புவதே லலிதாவுக்கு உதறல்தான். அவருக்கே கூட உள்ளூரக் கலவரமாய்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. "பாத்து மெதுவாப் போறேம்மா… ரெண்டு சைடும் நம்மாளுங்கதான்… நம்மளைப் பொறுத்தமட்டில், முகந் தெரிஞ்ச ஆளுங்கன்னா பிரச்சனை எதுவும் வராதுன்னு தோணுது," என்று அவர் கிளம்பியபோது, சிற்சபேசன் ஒரு வஸ்தாதுவைக் கூட அனுப்பி வைத்தார்!

"டேய்! பாத்து கோளாறாக் கூட்டிட்டுப் போ! நீங்க ஒண்ணும் அஞ்சாமப் போயிட்டு வாங்க சாமி…" மாமாவுக்கு மறுக்கத் தெம்பில்லை. ஆனால் அதுவே விவகாரமாக உருவாகி விடக் கூடாதே என்று உள்ளே கலக்கியது. இது என்ன இது, வெடிகுண்டை மடியில் ஏந்திக்கிட்டே போகிறாப் போல!
மாமா நல்லபடியாய்ப் போய், நல்லபடியாய்த் திரும்பினார். தெருவில் ஒரு குஞ்சு இல்லை. ஊரே வெறித்துக் கிடந்தது. நல்லவேளை, அவர் போன வழியில் அசம்பாவிதமாய் எதுவும் நிகழவில்லை. "நாம யார் கூடம்மா விவகாரத்துக்குப் போகப் போறோம்… நாம உண்டு, நம்மபாடு உண்டுன்னு போப்போறோம்…" என்று வந்தபின் அவர் ஆசுவாசப்பட்டார்.

காய்கனி, பழவகைகள், பலசரக்கு, பால் டின், தேங்காய், வாழையிலை, வெற்றிலை என்று வண்டியில் சாமான்கள் வந்து இறங்கின.

"நம்மாளு கூட எப்பவுமே உங்க துணைக்கு இருப்பான்" என்றார் சிற்சபேசன். வெளியே அமைதி காத்தாலும் அவர் உள்ளே உக்கிர வன்மத்துடன் நடமாடியதாகத் தெரிந்தது. அடிக்கடி யோசனையில் மீசையை மீசையைத் தடவுகிறார். "சமையல் கூட இங்கியே நம்ம வீட்லயே ஆக்கிக்கிடுங்க. ஏப்பா! சாமான்லாம் இங்கியே இறக்கிரு" என்றுவிட்டார் அவர். சபாபதியை முற்றாகத் தவிர்க்க வேண்டியதாகி விட்டது. மாமாவுக்கு என்ன செய்ய, புரியவில்லை.

ஊரில் கலவரம் அதிகமாகி விட்டது. மாரியம்மன் கோவில் வாசலில் ஒரு பிணம் கிடப்பதாகப் பேசிக் கொண்டார்கள். பட்டப் பகலில் கொலை. திடீர் திடீரென்று ஊருக்குள் கூச்சலும் குழப்பமும் அழுகையும் அலறலும்… திரும்பவும் நீர்ப்பாசியெனச் சூழும் நிசப்தம். இதே தெருவில் நமச்சிவாயத்தின் வீட்டு ஜன்னல்கள் கல்லெறியப்பட்டன. யாரோ எறிந்து விட்டுத் தடதடவென்று தெருவில் ஓடியது தெரியும். அவனைப் பிடிக்க முடியவில்லை. சிதம்பரம் சிற்சபேசனின் வலது கரம் போல. சிதம்பரத்தின் வீட்டில் சாணி, மனுசலத்தி, மூத்திரம் என்று சகல அழுகல்களும் கலந்து சுவரில் வீசியெறிந்து விட்டு யாரோ ஓடி விட்டார்கள். சுத்தம் செய்தால் கூட ஒரு வாரம் பத்து நாளைக்கு அந்தப் பகுதியிலேயே நாற்றம் மூக்கைப் புரட்டியெடுக்கும். "டேய், வெளியே வந்தேன்னா நடக்கிறதே வேற…" என்று வீட்டுக்குள்ளேயிருந்தபடி யாராவது கத்தினார்கள். யாரும் ஆனால் வெளியே வரவில்லை. ராஜமாணிக்கத்தின் வைக்கோற் புடைப்பு தீ வைக்கப்பட்டது. யாரோ பைத்தியம், புடைப்பில் மேலேறி ஜிங்கு ஜிங்கு என்று ஆடினாப்போல இருந்தது தீயின் கொந்தளிப்பு. உடனே பார்த்து அமத்தி விட்டார்கள். பஸ் நிலையத்தின் எதிரே தெரு நடுவே வைக்கப்பட்டிருந்த கூத்தபிரான் சிலையை அதற்குள் யாரோ தலையை உடைத்து சின்னாபின்னப்படுத்தியிருந்தார்கள். கொலையுண்ட பிணத்துக்குக் காவல் போல் அதன் முன்னே ஆயுதம் ஏந்திய போலிஸ். செத்த சவம் போல முழுச் சிலையையும் துணியால் மூடி விட்டார்கள்.

லலிதாவின் சிரிப்பு ஓடி ஒளிந்து கொண்டது. "உன் கழுத்துல நல்லபடியாத் தாலி ஏறணுமேடி…" என்று அம்மா நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். அப்பா மாப்பிள்ளையை எப்படிக் கூட்டி வரப் போகிறார்? எதுவும் புரிபடவில்லை.

"அதெல்லாம் நீ ஒண்ணும் கவலைப்படாதே லலிதா. அந்த ஈஸ்வரன் நம்மளை அப்பிடி விட்டுற மாட்டான்… உன் கல்யாணம் நல்லபடியா நடக்கும்" என்று மாமா அவள் தலையைத் தடவிக் கொடுத்தார்.

லலிதா அனந்தராமரின் புகைப்படத்தைப் பார்க்கிறாள். "சீக்கிரம் வந்துருங்கோ! எனக்கு பயமா இருக்கு!" என்றாள்.

சிற்சபேசன் வீட்டு மாடி என்றில்லை. ஆட்கள் உள்ளேயும் வெளியேயுமாய் அவருடன் கூடிக் கூடி ஏதோ பேசியபடி இருந்தார்கள். மாமா வரும்போது மட்டும் பேச்சை நிறுத்தி, "நீங்க போங்க…" என்று வழி விட்டார்கள். "நாங்க பாத்துக்கறோம். இந்தக் கல்யாணம் எங்க பொறுப்பு. பாப்பாவை பயப்படாம இருக்கச் சொல்லுங்க…" என்றார்கள்.

பதினெட்டாம் தேதி அவளுக்குப் பரபரப்பு அதிகமாகி இருந்தது. அனந்தராமன் இப்போது விமானத்தில் இருந்து இறங்கியிருப்பார்… அப்பா வரவேற்கப் போயிருப்பார். டி.வி செய்தியில் வருகிறாப் போல, அப்பா அனந்தராமனுக்கு மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்பாரா? சினிமாக்களில் காட்டுவது போல, ‘திரு அனந்தராமன்’ என்று பேரெழுதிய அட்டையை, போராடும் தொழிலாளி போல விமான நிலைய வாசலில் உயர்த்திப் பிடித்துக் காத்திருப்பாரா?… மாட்டார். அப்பாதான் அனந்தராமன் படம் பார்த்திருக்கிறாரே! வேடிக்கைக்கு நேரமல்ல இது. அவர்கள் பத்திரமாகக் கார் பிடித்து வந்துசேர வேண்டும். கல்யாணம் நல்லபடியா முடிந்தால் முக்குறுணிப் பிள்ளையாருக்குத் தேங்காய் விடல் போட வேண்டும்.

அவர்கள் காரில் கிளம்புகிற அந்த ராத்திரி அவளுக்குத் தூக்கமே போச்சு. கந்த சஷ்டி கவசம் தன்னைப் போல வாயில் வந்தது. மதுரை எல்லை வரை கூடப் பிரச்சினை எதுவும் இராது என்றே பட்டது. தாண்டி ஊர்ப் பக்கம் வர வரத்தான் ஜாக்கிரதையாய் வர வேண்டியிருக்கும். சிற்சபேசன் மதுரைக்கே காரில் நாலைந்து பேர் அனுப்பி வைத்திருந்தார். அவர்கள் எதிர்கொண்டு மாப்பிள்ளைப் பார்ட்டியை அழைத்து வர, சந்திக்கிற இடம் எல்லாம் விவரமாய் ஏற்பாடுகள் பண்ணியிருந்தார். சிற்சபேசன் வீட்டில் தொலைபேசி, எஸ்.டி.டி வசதி எல்லாம் இருந்தது. இத்தனை பாதுகாப்பு வியூகம் இருக்கிறது. சிற்சபேசனை மீறி என்ன ஆகிவிடும்? பயப்படத் தேவையே இல்லை. அனந்தராமர்! பேசாம காருக்கு பதிலா ஹெலிகாப்டரில் வந்துர்றேளா? ஓ! எஸ். கைல மருதாணி ஜோரா இருக்குடி! லலிதா எழுந்து போய்த் தண்ணீர் குடித்து வந்து படுத்துக் கொண்டபோது, அம்மா அவளுக்கு விபூதியிட்டு, "பேசாமப் படுடி, அதெல்லாம் ஒரு விக்னமும் வராது" என்று லலிதாவை அணைத்துக் கொண்டாள். வீடு நிறைய உறவினர்கள் படுத்திருந்தார்கள். வேணுகோபால் சித்தப்பா சிகரெட் குடித்தபடி வாசலில் உட்கார்ந்திருந்தார்.

"சிற்சபேசன் வீட்டுக்கு அப்பா இப்பதான் பேசினார்" என்றார் சித்தப்பா. "ம்" என்றாள் லலிதா. "எல்லாம் புரோகிராம்படி நடந்துண்டிருக்கு. கவலைப்பட வேண்டாம்! பிளான்படி ஜானவாசத்தன்னிக்குக் காலைல வந்து சேர்ந்துருவோம்னார். என்ன, நீ தூங்கலியா குழந்தே?" என்றார் அவர். அவள் பதில் பேசாமல் திரும்பிப் போனாள்.

அன்றிரவு சபாபதி மேற்பார்வையில் நடக்கும் பள்ளிக்கூடத்தில் பெஞ்சு மேஜைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஜாதித் தலைவன் பேரில் பஸ் விடுவதற்கும், பள்ளிக்கூடத்தை நொறுக்குவதற்கும் என்ன சம்பந்தம், தெரியவில்லை. தலைவன் சிலையை நடுவீதியில் வைக்க ஒரு வேகம். அதை ஒருத்தன் உடைத்துப் போட, ரெண்டு பேருமே அல்லவா தலைவனை அவமானப்படுத்தி விடுகிறார்கள்! நீ சிலை வெக்காட்டி அவன் எப்படிடா உடைக்க முடியும்? சிற்சபேசன் என்றால் என்ன, சபாபதி என்றால் என்ன? ரெண்டுமே சிவனின் பெயர்தானே? ஆனா கருத்து மாறி அடிச்சிக்கறாங்களே… சித்தப்பா வருத்தப்பட்டார். மறுநாள் செய்தித்தாளில் வகுப்புகள் நொறுக்கப்பட்ட படம் வந்திருந்தது. பெஞ்சுகள், நாற்காலிகள், மேப்புகள், ஊர்கள் உலகங்கள் ரெண்டாய்க் கிழிபட்டிருந்தன… மேஜைகள் கரும் பலகைகள் உடைத்து குப்பையாய்க் குவிக்கப்பட்டு நெருப்பு வைக்கப்பட்டு திகுதிகுவென்று எரிகிறது நெருப்பு. ஜா தீ…

சபாபதி ஆட்கள் ஊரின் நாலு எல்லைகளிலும் பரவி மறித்துக் கொண்டு, யாரையும் ஊருக்குள் விடவில்லை என்று சேதி கேட்டதும் லலிதாவுக்கு அழுகையே வந்து விட்டது. மாப்பிள்ளையை வரவேற்க என்று புதுப் புடவை கட்டிக் கொண்டு அவள் தன்னைத் தயாரித்துக் கொள்ளவேயில்லை.
காலை ஐந்து மணிக்கெல்லாம் கார் வந்து சேர்ந்துவிடும் என்று சொல்லியிருந்தார்கள். மாப்பிள்ளை உறவுக்காரர்கள் கூட வந்து ஒவ்வொருவராய் இறங்க ஆரம்பித்தாகி விட்டது. மணி ஏழாகி விட்டது. வைதீஸ்வரன் சமையல் வேலைகளை மும்முரமாக ஆரம்பித்து விட்டார். பனையோலைப் பாய்கள் விரித்து, காய்கறிகளைக் குன்று குன்றாக அறுத்துக் குவிக்கிறார்கள். குதிரையில் போகிறாப் போலத் தேங்காய் துருவுகிறார்கள்… இன்னும் யாரையும் காணவில்லை. போய்ப் பார்க்கவும் முடியாது. வெளியே இறங்கவே வழி கிடையாது. சிற்சபேசன், "நான் பாத்துக்கறேன். அதான் நம்மாட்கள் மதுரைலேர்ந்தே கூட வர்றாங்களே! அதெல்லாம் நெளிவு சுழிவு பார்த்து, நல்லபடியாக் கூட்டி வந்துருவாங்க… நாளைக்குத்தானே முகூர்த்தம், அப்றமென்ன?" என்றார் அவர்.

"ஐயோ! நல்லபடியா உங்கழுத்துல தாலி ஏறணுமேடி…" அம்மா இப்படியேதான் திரும்பத் திரும்பப் புலம்பினாள். அவளுக்கு ஆஸ்த்மா மெல்ல மூச்சைத் திணறடிக்க ஆரம்பிக்கிறது.

சபாபதியின் ஆட்கள் கல்யாணம் பற்றி விசாரிக்கக் கூட இல்லை. அப்பா இருந்தால் எப்படிச் சமாளிப்பார், தெரியாது. மாமா, சித்தப்பாக்களுக்கு அவர்களையெல்லாம் அத்தனைக்குப் பழக்கம் கிடையாது. எப்படியோ இந்தக் கல்யாணம் முடிந்த கையுடன் எல்லாருமாய் மாப்பிள்ளையுடன் சென்னை போய்விடலாம். மூன்று பல்லில் தங்கிக் கொள்ளலாம் ஒருவேளை என மாமா நினைத்திருக்கலாம். போய் விட்டு, ஊர்ப் பதட்டம் அடங்கிய பின்னால் திரும்பி வந்தால் போதும்.
சாயந்தரம் வரை மாப்பிள்ளை வரவேயில்லை. அதுவரை தெம்பாய் ஓரிரு வார்த்தை பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட ஒருவரை ஒருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டார்கள். லலிதாவை வற்புறுத்திச் சாப்பிட வைத்தார்கள். பசலை நோய் வாட்டுகிறது அவளை… சிற்சபேசன் லலிதாவைக் கூப்பிட்டு விட்டார். "பயமா இருக்காம்மா?"

அவள் தலையாட்டினாள். "ஐய, கண்ணைத் துடைம்மா! வர்ற வழியில என்ன பிரச்சனையோ என்னமோ?" என்றவர், "பிரச்சனையின்னா உயிருக்கு ஆபத்து, அது இதுன்னெல்லாம் புரிஞ்சிக்கிடண்டாம். வண்டி ஒரு பிரேக்டவுனாயிருக்கலாம். டயர் பஞ்ச்சர் ஆகியிருக்கலாம், இல்லியா?" என்று அவளைப் பார்த்துப் புன்னகை செய்தார். "பாரு, நீ எம் பொண்ணு மாதிரி. இது எங்க வீட்டுக் கல்யாணம். இது என் கோட்டை… இங்க ஒருத்தனும் எனக்குத் தெரியாம (ஒரு மயிரும் புடுங்க முடியாது என நினைத்தார்.) உள்ள வரவும் முடியாது. வெளியே போகவும் ஏலாது. பார்! எத்தினி ஆளுங்க இருக்காங்க, பாத்தியா?" அவர் மீசையை நீவிவிட்டுக் கொண்டார். அவர் கையில் சபாபதியின் பள்ளிக்கூடம் எரிந்த படத்துடன் செய்தித்தாள் – திரும்பி மாமாவைப் பார்த்தார்.
"நன்னாச் சொன்னேள்…" என்றார் அவர் உள்ளூர பயத்துடன்.

எங்கெல்லாமோ அலைந்து, வழி மாறி மாறி, ரஸ்தா நடுவே மரம் வெட்டிப் போட்டிருந்தது அங்கங்கே… கலவரக் கும்பல்களில் இருந்து தப்பித்து, மாப்பிள்ளைப் பார்ட்டியின் கார் சிற்சபேசன் வீட்டின் முன் வந்து நின்றபோது மறுநாள் விடிகாலை நாலு மணி. வீட்டில் யாரும் தூங்கவில்லை. தெரு முனையில் டாக்ஸி பார்த்ததுமே சித்தப்பா வாசலில் இருந்து, சிகெரெட்டை விசிறியடித்தபடி, "அவா வந்தாச்சி!" என்று கத்தினார். கல்யாண வீடே எழுந்து கொண்டது.

"யம்மாடி! இனிமே உன் கல்யாணம் நடந்துட்டா மாதிரிதான்" என்று தாய் மகளை புஸ் புஸ்ஸென்று மூச்செடுப்புடன் கட்டிக் கொள்கிறாள்.

அப்பா நேரே அவளிடம்தான் வருகிறார். அசாத்தியக் களைப்பாய் இருந்தார். முகத்தில் அந்த பயம் இன்னும் விலகவில்லை. லலிதா அப்பாவைக் கட்டிக் கொண்டு பொங்கிப் பொங்கி அழுகிறாள். இதுவரை அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் வெள்ளமயமாய்க் கரையுடைத்துப் பெருகுகிறது. பக்கத்தில் அனந்தராமன். அலுத்துக் களைத்த அனந்தராமன். நேரில் இன்னுங்கூட அழகாய் இருக்கிறாள் இவள்… செர்ரி! புன்னகை செய்கிறது போல முகம் பாவனை செய்தாலும், அப்பா மகள் காட்சியைக் கண்டு அவனுக்கும் கண் பொங்குகிறது. அருமை ஆம்படையாள் அல்லவா!
திடீரென்று கல்யாண வீடு சுறுசுறுப்பாகிறது! எல்லாரிடமும் ஓர் உற்சாகம். காலை ஐந்து – ஆறரை முகூர்த்தம். மேள நாதஸ்வரம் ஆரம்பிக்கிறது. சடாரென்று மோகனத்தைக் குழாய் வழி பிழிகிறான் நாதஸ்வரக்காரன். சுமாரான வித்வான் அவனுக்கே உற்சாகம் தாளாமல் நாதம் குழைகிறது அபாரமாய். வாசலில் பெண்கள் பெரிசாய்க் கோலம் போட்டிருக்கிறார்கள். அங்கே திரும்பத் திரும்ப திருஷ்டி கழித்து, ஆரத்தி கரைத்து இனி ஊற்றுவார்கள். பரபரப்பாய்க் குளித்து விட்டு பட்டுப் புடவைக்குள் சிறைப்படுகிறாள் லலிதா. சிரிப்பு பொங்கி வழிகிறது அவளில்… என்னவெல்லாம் ஆகிவிட்டது இடையே என ஒரு பெருமூச்சு விடுகிறாள்… கண்ணாடி பார்த்து நெற்றியில் சாந்து வைத்துக் கொள்கையில், மீதியும் கழிந்து முடியணும் என்று இருந்தது. பின்வாசல் வழியே சபாபதி ஆள் ஒருவன் நுழைய முயற்சியெடுத்ததும், சிற்சபேசன் அதைக் கண்டுபிடித்து அவனைத் தடுத்து விட்டதும் அவளுக்குத் தெரியாது.

முகூர்த்தம் ஆகிறது. அத்தனை நேரம் அம்மா தவியாய்த் தவித்த அந்த மாங்கல்ய தாரணம் நடக்கிறது. மென்மையோ மென்மையான, எலக்ட்ரிக் ஷேவ் மழுமழுக் கன்ன அனந்தராமன், மாப்பிள்ளை என்று அவன் கண்ணுக்கு மை இட்டு விட்டிருந்தார்கள்… அழகு பிம்பமான லலிதா என்ற வனிதையின் கழுத்தில் மூணு முடிச்சு போடுகிறான். அப்பாவும் அம்மாவும் தாள முடியாமல் அழுகிறார்கள். இது ஆனந்தக் கண்ணீர்.

அதே நேரம் சபாபதியின் ஆள் ஒருவன் கூட்டத்தில் இருந்து உருவிய கத்தியுடன் திடீரென்று எழுந்து அனந்தராமன் மேல் பாய்கிறான். வினாடிக்குள்ளே அனந்தராமனின் கழுத்து துண்டுபட்டு லலிதாவின் மடியில் விழுகிறது. பீய்ச்சியடிக்கும் ரத்த ஆரத்தி. லலிதா மயங்கிச் சாய்கிறாள்.கொலைகாரனைப் பிடிக்க யாரோ துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.

About The Author