தங்க மீன்கள் – இசை விமர்சனம்

கெளதம் மேனனின் தயாரிப்பில் ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கி நடிக்கும் படம் ‘தங்க மீன்கள்’. இது தந்தைக்கும் மகளுக்குமான பாசம் பேசுவது என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள். ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். அனைத்தையும் எழுதியிருப்பவர் நா.முத்துக்குமார். இசைக்கு யுவன் சங்கர் ராஜா. முந்தைய படத்தில் சமூகத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தியவர், இதில் பாசத்தைப் பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பார்த்து பார்த்துச் செதுக்கப்பட்டு வரும் படத்தின், பாடல்கள் எப்படியிருக்கின்றன எனப் பார்ப்போம்!

ஆனந்த யாழை

தனக்கு உலகிலேயே மிக முக்கியமானவள் தன் செல்ல மகள்தான் எனப் பாடியிருக்கிறார் ஸ்ரீராம் பார்த்தசாரதி. ‘மகள் போல் தேவதை இந்தப் பூவுலகில் உலகில் வேறு யாரும் இல்லை’ என நீள்கிறது பாடல். இசையும் பாடலைப் பாதிக்காமல் அளவாக ஒலிக்கிறது.

அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி!
இந்த மண்ணில் இதுபோல் யாரும்
இங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!! – தந்தைமையின் வரிகள்.

First Last

பள்ளிக்கூடம் பற்றிய கேலியும் கிண்டலும் நிறைந்த பாடல். முத்துக்குமாரும் சிறு வயதில் பள்ளி செல்ல அடம் பிடித்திருப்பார் போல! வரிகளில் அவ்வளவு உண்மை! பேபி சஞ்சனா, சாதனா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். குரலில் உள்ள இயல்பு நம்மை இழுக்கிறது.

ஃபீஸு கட்டிதான் படிக்கிறேன்
ஃப்யூசு ஆகிதான் நிக்கிறேன்
வேஸ்ட்டு பேப்பரா கொஸ்டீனை நான் தூக்கிப் போடப் போறேன்! – பள்ளிப்பருவத்துக்கு அழைத்துச் செல்லும் பாடல்!

நதி வெள்ளம்

தந்தை – மகளின் பிரிவைச் சொல்லும் பாடல். ராகுல் நம்பியார் பாடலின் கனம் உணர்ந்து பாடியிருக்கிறார். வரிகளைத் தாங்கிப் பிடிக்கும் இசை பாடலுக்குப் பலம்.

என் காட்டில் ஒரு மழை வந்தது
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடி மின்னல் விழுந்து
காடே எரிந்ததடி! – வலிக்கும் வரிகள்!

யாருக்கும் தோழன் இல்லை

வித்தியாசமான ஒலியுடன் தொடங்கும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் அல்போன்ஸ் ஜோசப். வாழ்க்கையின் யதார்த்தத்தையும் ஒரு தந்தையின் நிலையையும் பேசும் பாடல். அல்போன்ஸின் குரல் பாடலுக்குக் கச்சிதம். இசையில் வெளிப்படும் உக்கிரம் கவனிக்க வைக்கிறது. யுவனின் சிறந்த பாடல்கள் பட்டியலில் நிச்சயம் இதற்கு இடம் உண்டு.

சொன்ன தேதி சொன்ன நேரம் உன்னை வந்து சேருவேன்
இல்லையென்று ஆகும்போது என்னை நானே கொல்லுவேன்! – உக்கிர வரிகள்!

ஆல்பத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மனதை அதன் பக்கம் இழுக்கத்தான் செய்கிறது. யுவன் – ராம் கூட்டணிக்கு மற்றுமொரு நிச்சய வெற்றி!

தங்க மீன்கள் – ஒலியுடன் நீந்தும்!

About The Author