தபால்காரர் ஆகப் போறேன்!

சொன்னால் எல்லாரும் சிரிப்பீர்கள். பரவாயில்லை. நம்மைப் பார்த்துச் சிரித்து, மகிழ்ச்சி அடையறாங்களே என்று நானும் பெருமைப்படறேன்.

உங்களுக்கு எல்லாம் நண்பர்கள் இருக்காங்க. எனக்கும் சிறுவர், சிறுமின்னு நண்பர்கள் இருக்காங்க. ஆனால் அவர்களை நேசிக்கும் அதே நேரத்தில், நான் இன்னொரு நபரையும் அதிகமாக நேசிக்கிறேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் தபால் பெட்டி! சிரியுங்களேன்? நான் கோபப்பட மாட்டேன்.

தபால் பெட்டியை அவர் இவர் என்று உயர்திணையாகச் சொல்லலாமா என்று உங்களில் எவராவது கேட்கலாம். இது இலக்கண அளவில் மதிப்பிடுவது அல்ல. அறிவுபூர்வமாகவும் மதிப்பிடக்கூடியது அல்ல. உணர்வு பூர்வமாக மதிப்பிட வேண்டியது.

எங்கள் வீட்டு வாசல் ஜன்னலில் ஒரு சின்ன தபால் பெட்டி கட்டப்பட்டிருக்கு. கொஞ்ச நாட்களுக்கு முன்பாகத்தான் கொண்டு வந்து கட்டிவிட்டுப் போனாங்க. அழகான தபால் பெட்டி, சிவப்பு நிறம். வாயைத் திறந்து வைத்துக்கொண்டு எப்போதும் சிரிக்கிற மாதிரி இருக்கிறது. வயிறை மூடிச் சாத்தி அடைத்து, பூட்டுத் தொங்குகிறது. தினமும் ரெண்டு தடவை வயிறைத் திறந்து தபால்களை எடுத்துக்கிட்டுப் போறாங்க. ‘காலை மணி 9.30, மாலை மணி 3.15 என்று சின்ன கறுப்புத் தகடுகளில் வெள்ளைப் பெயிண்ட்டால் எழுதி வயிற்றின் மேல் வச்சுட்டுப் போறாங்க. அந்த நேரத்திற்குள் உங்கள் தபால்களை என்னுள் போட்டு விடுங்கள்னு தபால் பெட்டி சொல்றது. பின்கோடு எண்ணைச் சொல்றது.

இது சின்ன, குட்டித் தபால் பெட்டி. அஞ்சலக வாசல்லே பெரிய தபால் பெட்டி வச்சிருக்காங்க. கம்பீரமா, ஜவான் போல அது நிக்கறது. தலையிலே தொப்பி மாதிரி வட்டத் தகடு. இந்தக் குட்டி தபால் பெட்டியும் பெரிசா வளர்ந்தால், அப்படித்தான் இருக்கும். வித்தியாசம் என்னன்னா, குட்டி தபால் பெட்டி தூளியில் இரு கைகளையும் மாட்டிக் கொண்டு தொங்கற குழந்தை மாதிரி என் வீட்டுவாசல் ஜன்னலில் இருக்குது. அஞ்சலக வாசல்லே இருக்கும் பெரிய தபால் பெட்டி பெரிய மனிதனாக, வளர்ந்த ஆளாக, ஜவானாக அட்டென்ஷன்லே தன் கால்லேயே நிக்குது.

இன்னொரு வித தபால் பெட்டியும் இப்பப் புழக்கத்துக்கு வந்துக்கிட்டு இருக்கு. பதினஞ்சு சென்டிமீட்டர் விட்டத்தோடு கூடிய அரை மீட்டர் நீளக் குழாயை நிக்க வச்சு அது மேலே குட்டி வீடு போல அது இருக்கு. எனக்கு என்னவோ அந்தத் தபால் பெட்டி பேரில் அத்தனை நட்பு உண்டாகல்லே. இந்தப் பழங்கால சிவப்புத் தபால் பெட்டிதான் எனக்குப் பிடிச்சிருக்கு.

வாசல்லே நின்னு நான் பார்த்துக்கிட்டு இருப்பேன். ஒவ்வொருவரா, அவரவர்கள் வசதிப்படி வந்து என் வீட்டு வாசல் ஜன்னல்லே கட்டி இருக்கற தபால் பெட்டிலே கடிதங்களைப் போட்டு விட்டுப் போவாங்க. ஆண்கள் வருவார்கள், பெண்கள் வருவார்கள், முதியோர் வருவாங்க, சிறுவர், சிறுமியர் வருவாங்க. ஒரு சமயம் ஒரு சின்னப் பொண்ணு ஒரு கார்டை எடுத்திட்டு வந்தது. அவளாலே எட்டி அந்தக் கார்டைப் பெட்டியுள் போட முடியல்லே. எம்பி எம்பிப் பார்த்தாள். ஊஹூம். நான் தான் போயி, அவள் கையிலிருந்து அந்தக் கார்டை வாங்கி பெட்டிலே போடேன். அவள் ‘தாங்க்ஸ்’ சொன்னாள். ஏதோ என்னால் ஆன உதவி. இப்படி உதவி செய்தால், மனசு ரொம்ப சந்தோஷப்படுது.

யாரும் பக்கத்துலே இல்லாத நேரங்களில் நான் என் வீட்டுத் தபால் பெட்டி கூடப் பேசுவேன். சிரிக்கிறீர்களா? உங்கள் வீட்டு வாசல் ஜன்னலில் இப்படி ஒரு சின்ன தபால் பெட்டி கட்டப் பட்டிருந்தால், நீங்களும் என்னைப் போல அதோடு பேசப் பழகி இருப்பீங்க. இதுலே சிரிக்கறதுக்கும் ஏதும் இல்லை.

"இன்னிக்கு எப்படி இருக்கே?" – தபால் பெட்டியிடம் கேட்பேன்.

அது பதில் சொல்லாது. ஆனால் சொல்ற மாதிரி நான் நினைச்சுப்பேன்.

"நல்லாத்தான் இருக்கேன்."

"சாப்பிட்டியா?"

"ஒ…! இதோ வயிறு கனமா இருக்கே?"

"என்ன சாப்பிட்டே?"

"அம்பத்தஞ்சு கார்டு, ஏழு கவர், ரெண்டு புக் போஸ்ட் அவ்வளவுதான்."

"இதையா கனம்னு சொல்றே?"

"சாதாரணமா நான் இருப்பத்தஞ்சு கார்டு, அஞ்சு கவர், ஒரு புக் போஸ்ட் தான் தாங்குவேன். அதுக்கு மேலேனா, ஒவர் லோடுதான்."

"காலைலே என்ன சாப்பிட்டே?"

"காலைலேயா?" தபால் பெட்டி யோசித்தது. "ஞாபகமில்லை" என்றது.

இப்படித்தான் இருக்கும் எங்கள் உரையாடல்.

இந்தத் தபால் பெட்டிக்கு நூறு கைகள்! வியப்பாக இருக்கிறதா? அத்தனை கைகளுக்கும் பத்து கிலோ மீட்டர், நூறு கிலோ மீட்டர், ஆயிரம் கிலோ மீட்டர் நீளம்! இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறாதா? தான் வாங்கிக் கொள்ளும் தபால் அனைத்தையும் அந்த அந்த ஊர்களில் கொடுத்துவிடும். இந்தச் சின்னத் தபால் பெட்டிக்கு அத்தனை நீளக் கைகளா என்று இருக்கும் எனக்கு.

என் ஆசிரியை ஒரு நாள், "படித்துப் பட்டம் பெற்ற பிறகு நீங்கள் ஒவ்வொருவரும் என்ன வேலைக்குச் செல்ல விரும்புகிறீர்கள்?" என்று ஒரு கேள்வி கேட்டார்.

இஞ்சினீயர், டாக்டர், வக்கீல், பைலட் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கூறினார்கள். என் முறை வந்தது, "தபால்காரர் ஆகப் போறேன், மிஸ்!" என்றேன்.

வகுப்பே சிரித்தது. அடக்கினார் ஆசிரியை.

"அவன் சொன்னதுலே சிரிப்புக்கு என்ன இருக்கு? எல்லாரையும் விட அவன்தான் அழகான பதிலைச் சொல்லி இருக்கிறான். தபால்காரர் என்பவர் நம்மிடம் நாள்தோறும் பழகுகிறவர். நமது தாய் தந்தையர், உற்றார், உறவினர், நண்பர்கள், இவர்களிடமிருந்து வரும் கடிதங்களை எல்லாம் நமக்குக் கொண்டு வந்து தருகிறவர். நாம் அவைகளைப் படித்து மகிழ்றோம். கடிதங்கள் மூலமாக நம் அப்பா, அம்மா, சொந்தக்காரர்கள், நண்பர்கள் நம்முடன் பேசுகிறார்கள். அப்படி நமக்காகப் பணி செய்யும் தபால் காரர்களை நாம் நேசிக்க வேண்டும். அந்த வேலைக்குச் செல்ல விரும்புகிறேன் என்று சொன்ன ராமு உண்மையிலேயே பண்பு உள்ளவன். அவனைப் பாராட்டும் விதமாக நாம் கைதட்டுவோம்" என்றார் ஆசிரியை.

கை தட்டினார்கள். எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. என் வீட்டு ஜன்னலில் கட்டப்பட்டிருக்கும் அந்தச் சின்ன தபால் பெட்டியை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன். அதுதானே எனக்கு இப்படி ஒரு பாராட்டை வாங்கிக் கொடுத்திருக்கு? என்ன மறுபடி சிரிப்பா? உங்களை மாற்றவே முடியாது!

About The Author