தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நாட்டுப்புறப்பாடல்கள்

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து சமுதாய முன்னேற்றம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது பண்பாட்டுப் பழமையைக் காட்டி நிற்பவை நாட்டுப்புறப் பாடல்கள். அறம், கல்வி, வீரம், நம்பிக்கைகள், உழைப்பு போன்ற பல பண்பாட்டுக்கூறுகள் நாட்டுப்புறப் பாடல்களில் மிளிர்கின்றன. காலத்தால் அழியாத அத்தகைய காவியப் பாடல்களில் சிலவற்றை இங்கு காண்போம்!

தங்களைச் சார்ந்தவர்களுக்கு எவ்விதத் துன்பமும் விளைவிக்காது வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதில் தவறாது இருப்பவர்கள் பாமர மக்கள். அவ்வாறு குறையேற்படும் காலங்களில் தாங்களே பேசித் தீர்த்துக் கொள்கின்றனர். காதல், குடும்பம், உறவினர் எனப் பல நிலைகளில் சச்சரவுகள் ஏற்படும் வேளைகளில், இறந்தவர் தெய்வநிலையில் உறங்குவதாகவும் அவர்களின் ஆலோசனையின்படி தவறாது நீதி வழங்கப்படுவதாகவும் நம்புகின்றனர்.

மேலோர்கள் நீதிவழங்கி மனுவாழ்க மதிவாழ்க
பூலோகம் உள்ளளவும்…

எனும் பாடலின் மூலம் நாட்டுப்புற மக்களின் மேற்படி நம்பிக்கைகளை அற உணர்வுகளை அறியமுடிகிறது.

சமுதாயச் சிற்பிகளான குழந்தைகளுக்கு நல்ல பண்பாடுகளை எடுத்துக்காட்டி அறிவுரை பகர்ந்து சிறந்த அறிஞனாக்குவது தாயின் கடமையாகும். தாய் தன் குழந்தையைக் கண்ணாகக் காப்பதிலும் அவனைப் பண்படுத்திச் சீராட்டி வளர்ப்பதிலும் உவகை கொண்டு செயல்படுகிறாள். மழலைமொழி பேசி மகிழும் குழந்தையும் மனதை நிறைக்கும் தெய்வமும் ஒன்றுதான் என்பதை உலகமே உணரும். அத்தகைய குழந்தை உறங்கும் வேளையில் தூய சிந்தனையோடு இருக்கவேண்டும் என்பதால்,

செம்பவளத் தொட்டிலிலே என்
சீராளா கண்ணுறங்கு!
பச்ச வண்ணக் கட்டிலிலே
பாலகனே கண்ணுறங்கு!

என்று தாலாட்டுகிறாள் தாய்.

எண்ணும் எழுத்தும் மனிதனுக்கு இரு கண்கள் என்பது வள்ளுவப் பெருந்தகையின் கூற்று. எனவே, குழந்தைகளுக்கு விளையாட்டுப்போக்கில் பாடல் வழியே எண்களைப் புகட்டுகின்றனர். குழந்தை கற்கிறோம் என்ற எண்ணமின்றியே கற்றுக்கொள்கிறது.

ஒண்ணு எலுமிச்சங்கண்ணு
ரெண்டு ரோசாப்பூச் செண்டு
மூணு முருங்கப்பட்ட தோலு…

இவ்வாறு ஒன்று முதல் பத்து வரை எண்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

வீரமும் மானமும் மிகக் கொண்டது தமிழினம். வீரம் தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட ஒன்று. வீரம் கொண்டவனாகத் தன் மகன் வளர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட தாய் அவனுக்குப் பாலுடன் வீரத்தையும் சேர்த்தே புகட்டுகிறாள். அவனை வீரனாக்க முனைவதோடு மட்டுமில்லை, தானே வீரம் நிறைந்தவள் என்பதையும் புலப்படுத்துகிறாள். குழந்தையின் அழுகை கேட்டு, "யானையைக் கண்டு நீ அழ வேண்டாம் கண்ணே! நானே அதை விரட்டிவிட்டேன்" என்று பெண்ணொருத்தி பாடும் வரிகள் இங்கே.

ஆனையைக் கண்டு நீ அலறி அழ வேண்டாம்!
அதட்டி ஓட்டிவிட்டோம் அஞ்சுகமே கண்ணுறங்கு!

கணவன் பரத்தையரை நாடிச் சென்றுவிட்டான். தனது சொத்து சுகத்தை இழந்துவிட்டான். குடும்பத்தை மறந்து பெண் மோகத்தில் ஆழ்ந்துவிட்டான். அவன் மனைவி தன் மகனுக்கு ஒழுக்கத்தையும், தன் குடும்பம் எப்பேர்ப்பட்ட வளமிக்க குடும்பம் என்பதையும் ஒருசேர உணர்த்தப் பாடுகிறாள் ஒரு தாலாட்டு,

வேசிக்கே விட்டபணம் – உங்கப்பா
வெள்ளிமாடம் கட்டலாமே!

என்று.

நாட்டுப்புற மக்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தப் பாடலைக் கருவியாகக் கொண்டுள்ளனர். காடு வயல் வரப்புகளிலும், ஆடு மாடு மேய்க்கும் பகுதிகளிலும், தண்ணீர் கொண்டு செல்லும் பாதைகளிலும், அறுவடைக் காலங்களிலும் ஏற்ற இடமாயின் சாடைமாடையாகப் பாடல்களின் வழியே காதலை வெளிப்படுத்துவர். இதோ, அப்படி ஒரு பாடல்.

காதலன் தூரத்தே இருக்க அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவனைச் சேரும் காலத்தைச் சிந்திக்கலானாள். தாயோ தன் மகளின் செயல்பாடுகளில் மாற்றத்தை அறிந்தவளாய் அவளுக்குக் காவல் கிடக்கிறாள். காதலின் பாதிப்பில் வேண்டாதவனும் உற்ற உறவினன் ஆவான். தம்மவரிடம் தாம் வரும் நேரத்திற்காகக் காத்திருக்கத் தூதனுப்பிவிட்டு அவள் இயல்பினள் ஆனாள். ஆனாலும் காதலுற்ற மனங்களோ எங்கே நிம்மதி கொள்ளும்! சந்தித்தால்தானே சந்தோசம்! அதற்குத் தடையான தாய் எப்போது மயக்கம் கொள்வாள் என்று காத்துக் கிடந்தவள் தாய் உறங்கியது கண்டு உயிர் பெற்றாள். காதலன் கை சேர இரவுக்காலமே ஏற்றது. அதுவும் நிலாக்காலமாயின் காதலர்க்கு இரட்டை சந்தோசம். ஏனெனில், காதலி பாதுகாப்பாகத் தன்னிடம் வந்து சேர்வாள் என்பதை தூரத்தே நிலா நிச்சயித்துவிடும். ஆனால், காதலி வந்தபின் அந்த நிலவே வருத்தமும் தரும். காரணம், பிறர் பார்த்துவிடக் கூடுமே!

சோதி நிலா மறையட்டும்
தாய் படுத்துத் தூங்கட்டும்
சொன்ன குறிபார்த்து
சேர்ந்திருக்கும் எந்துரையை
சேரக்காலம் எப்ப வரும்!

எனும் வரிகள் இப்படி சங்க இலக்கியத்துக்கு நிகரான காதல் காட்சியைக் காட்டுகின்றன.

காதல் கொண்டவன் மதியிழந்தான், நிதியிழந்தான். தன்னிடம் உள்ளதை அவளுக்கு அளிக்க முன்வந்தான். எதைக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வாள் என்பதை அறியாது தவித்தான். தன்னைக் காணாது அவளும் ஏங்கி முகம் கறுத்து அழகுமேனி வருந்தியிருப்பாள். எனவே, தன் இதயம் பறித்தோடியவளின் அழகுக்கு அழகு சேர்க்க மஞ்சளையும் அவள் மனதுக்கேற்ற ரவிக்கையையும் பரிசாக அளித்து அவளோடு விளையாடி மகிழ்ந்திருக்க முனைந்தான்.

மஞ்சக்கிழங்கு தாரேன் – பெண்ணே
மனசுக்கேத்த ரவிக்கை தாரேன்!

என அவன் காதலைப் பேசுகின்றன வரிகள்.

கருவுற்ற பெண்ணுக்கு ஏழு அல்லது ஒன்பதாவது மாதத்தில் செய்யும் சடங்கினை ‘சீமந்தம்’ என்பர். கணவன் மனைவியை ஒன்று சேர அமர வைத்துப் பெரியவர்கள் வாழ்த்துவர். பெண்ணுக்குக் கூறைப்புடவையும் கை நிறைய வளையலும் அணிவித்து, மஞ்சள் பொட்டிட்டு வாழ்த்துவர். அப்பொழுதும் சில குறும்புப் பாடல்களைப் பாடுவது வழக்கம்.

ஓடி நின்ன அத்தமவ
மாமா சரணமின்னு
மடிமீது கை போட்டா
இதென்ன தோசமின்னு – எங்கண்ண
கட்டினாரு மாங்கல்யம்!

என்பது போல.

முதுமைப் பருவமெய்தி இறப்பவர்க்குச் செய்யப்படும் சடங்கு முறைகளை ஈமச் சடங்குகள் என்கிறோம். மரணத்திற்குப் போராடும் நிலையிலிருப்பவருக்குப் பால் ஊற்றுவதைப் ‘பால்சடங்கு’ என்பர். இறந்தவரைக் குளிப்பாட்டி வாசனைத் திரவியங்களை மேனி முழுவதும் பூசி ‘கோடி’ எனப்படும் புத்தாடையை அணிவிப்பர். இறந்தவர் ஆணென்றால் வேட்டியும், பெண்ணென்றால் புடவையும் கோடியாக அணிவிப்பர். இயற்கை மரணமெனில் மண்ணில் புதைப்பதும், தற்கொலையெனில் தீமூட்டியெரிப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. மூன்றாம் நாள், அடக்கம் செய்தவிடத்தில் பால் வைப்பர். இறந்தவர் வந்து அதை அருந்திச் செல்வர் என்ற நம்பிக்கையில்.

பார்வதியாள் சோலையிலே
பாலுகொண்டு போகையிலே
பாலும் அலுங்குச்சோ
பட்டகரை மங்குச்சோ!

என்று அதற்கும் உண்டு பாடல், ‘ஒப்பாரி’ எனும் பெயரில்.

இவை மட்டுமின்றி, பிறந்த குழந்தையை முதன்முதலாகத் தொட்டிலில் படுக்க வைத்தல், காது குத்துதல், பெண் குழந்தை பூப்பெய்தியதும் அதற்கான சடங்கு – இப்படித் தமிழர் வாழ்வில் எத்தனையோ சடங்குகள், விழாக்கள்! இவை ஒவ்வொன்றுக்கும் ஏற்றபடி அழகழகான நாட்டுப்புறப் பாடல்களும் ஏராளம் உண்டு. நாட்டுப்புற மக்களிடையே இப்படிப்பட்ட சடங்குமுறைகள் இன்றும் மாறாமல் அப்படியே பின்பற்றப்படுகின்றன. தகவல்தொடர்புச் சாதனங்கள் அந்த மக்களின் உணவு, உடை, மொழி ஆகியவற்றில் எவ்வளவோ மாற்றங்களையும் ஏற்றங்களையும் கொண்டு வந்திருந்தாலும் தங்கள் பண்பாடு சிதைவுறாமல் அவர்கள் காத்து வருகின்றனர். அவர்கள் தங்கள் பழக்கவழக்கங்களையும் சிந்தனைகளையும் பதிவு செய்து வைத்திருக்கும் இந்த நாட்டுப்புறப் பாடல்கள் தமிழ் மக்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் எழுதப்படாத இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன!

உசாத்துணை (பயன்பட்ட நூல்கள்):

திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள் – முனைவர் சு.சண்முக சுந்தரம்.
உலகநாடுகள் போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் – பேரா.கோ.பெரியண்ணன்.
நாட்டுப்புறவியல் ஆய்வு – முனைவர்.சு.சக்திவேல்.
கிராமத்துச் சிறுவர் பாடல்கள் – எ.மு.ராசன்.
தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் – சோமலே.
நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம் – தே.லூர்து.

About The Author

1 Comment

  1. arjun

    ணன்ராக உல்லது . இன்னும் நெரைய பாடல்கலை முலுவதும் அசிட்டிருஇந்தால் நன்ராயிருக்கும்

Comments are closed.