தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (26)

வாய்ப்பியம்

இந்நூலை இயற்றியவர் வாய்ப்பியனார் என்பவர். அவர் பெயரே இந்நூலுக்குப் பெயராயிற்று. இந்த நூலையும் இந்நூல் சூத்திரத்தையும் யாப்பருங்கல விருத்தியுரைகாரர் குறிப்பிடுகிறார். இந்நூலிலிருந்து உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்கள் சிலவற்றைக் காட்டுவோம்:

"பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென
நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர்"

என்றார் வாய்ப்பியனார். விளரி யாழோடைந்துமென்ப. இனிப் பண் சார்பாகத் தோன்றியன திறமாம். என்னை?

"பண்சார் வாகப் பரந்தன வெல்லாந்
திண்டிற மென்ப திறனறிந் தோரே"

என்றாராகலின். அத்திறம் இருபத்தொரு வகைய:

‘அராக நேர்திற முறழம்புக் குறுங்கலி
யாசா னைந்தும் பாலையாழ்த் திறனே.’

நைவளங் காந்தாரம் பஞ்சுரம் படுமலை
மருள் வியற் பாற்றுஞ்
செந்திற மெட்டுங் குறிஞ்சியாழ்த் திறனே.’
நவிர்படு குறிஞ்சி
செந்திற நான்கும் மருதயாழ்த் திறனே.’

‘சாதாரி பியந்தை நேர்ந்த திறமே
பெயர் திறம் யாமை யாழ்
சாதாரி நான்கும் செவ்வழியாழ்த் திறனே’

என்றார் வாய்ப்பியனார்.1

"இனிச் செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் ஆமாறு:

நாற்பெரும் பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இசையெல்லாம் செந்துறை. ஒன்பது மேற்புறமும் பதினோராடலும் என்றிவையெல்லாம் வெண்டுறையாகும் என்பது வாய்ப்பியம்."2

இந்திரகாளியம்

இப்பெயருள்ள இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று அவர் எழுதுகிறார். இது அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை எழுதுவதற்கு உதவியாக இருந்தது.

குலோத்துங்கன் இசைநூல்

சோழ அரசர்களில் புகழ் பெற்றவன் குலோத்துங்க சோழன். இவனுக்கு விசயதரன், சயங்கொண்டான் என்னும் சிறப்புப் பெயர்களும் உண்டு. கலிங்கப்போரை வென்றவன் இவனே. அதனால், ‘கலிங்கத்துப் பரணி’ என்னும் நூலைச் சயங்கொண்டார் என்னும் புலவரால் பாடப்பெற்றவன். இவன் இசைக்கலையில் வல்லவன் என்றும், இசைத்தமிழ் நூல் ஒன்றை இயற்றியவன் என்றும் கலிங்கத்துப் பரணி கூறுகிறது:

"வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்
மதுர வாரியென லாகுமிசை மாதரிதனால்
ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க வுரியான்
யானை மீதுபிரி யாதுட னிருந்துவரவே"3

"தாள முஞ்செல வும்பிழை யாவகை
தான்வ குத்தன தன்னெதிர் பாடியே
காள முங்களி றும்பெறும் பாணர்தங்
கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே"4

இதனால், இவன் இசைக்கலையை நன்கறிந்தவன் என்பதும், இசைக்கலையில் வல்லவரான பாணர்களின் இசையிலும் இவன் பிழை கண்டவன் என்பதும், இசை நூல் ஒன்றை இவன் இயற்றினான் என்பதும், இவன் அமைத்த இசை முறைப்படி இசை பாடி இவனிடம் பாணர்கள் பரிசு பெற்றனர் என்பதும் அறியப்படுகின்றன.

இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை

இப்பெயருள்ள இசைத்தமிழ் நூல் ஒன்று இருந்ததென்பதை, யாப்பருங்கலக் காரிகை உரைப்பாயிரத்தினால் அறிகிறோம். அவ்வுரைப்பாயிரம் வருமாறு:

"அற்றேல் இந்நூல் (யாப்பருங்கலக் காரிகை) என்ன பெயர்த்தோ எனின்…. இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவையே, உரூபாவதாரத்திற்கு நீதகச் சுலோகமே போலவும் முதல் நினைப்பு உணர்த்திய இலக்கியத்தாய்ச்…. செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து."

இதனால் அறியப்படுவது என்னவென்றால், யாப்பருங்கலம் என்னும் நூலுக்குப் புறனடையாக யாப்பருங்கலக் காரிகை எழுதப்பட்டதுபோல, இசைத்தமிழ் நூல் என்னும் பெயருடனிருந்த ஒரு முதல் நூலுக்குப் புறனடையாக ‘இசைத்தமிழ்ச் செய்யுட்கோவை’ என்னும் இந்நூல் எழுதப்பட்டது என்பது தெரிகிறது. இப்புறனடை நூலில் முதனூலில் இருந்த பாட்டுகளை உணர்த்தும் செய்யுள்களும் இருந்தன என்பது தெரிகிறது.

இசைக்கலைச் சாசனம்

அரசர்களும் செல்வர்களும் இசைக்கலைஞர்களைப் போற்றியதோடு, அவர்களில் சிலர் தாமே பெரிய இசைக்கலைஞராகவும் இருந்தார்கள். அப்பர் சுவாமிகள் காலத்தில் இருந்த மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன் (கி.பி.600-630) சிறந்த இசைப்புலவனுமாக இருந்தான். இவன் புத்தம் புதிதாக ஓர் இசையை அமைத்தான். ஆகையினாலே, இவனுக்குச் சிறப்புப் பெயரும் உண்டு. இவன் காலத்திலே இசைக்கலையில் பேர்போன உருத்திராசாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். உருத்திராசாரியார், மகேந்திரவர்மனுடைய இசைக்கலை ஆசிரியர் என்று கருதப்படுகிறார்.

இசைக்கலைஞனாகிய மகேந்திரவர்மன் இசைக்கலையைப் பற்றி ஒரு சிறந்த சாசனத்தைக் கல்லில் எழுதி வைத்தான். அந்தச் சாசனத்திற்கு இப்போது குடுமியாமலை சாசனம் என்று பெயர். புதுக்கோட்டையைச் சேர்ந்த குளத்தூர் தாலுக்காவில் குடுமியாமலை என்னும் குன்றின்மேலே சிகாநாத சுவாமி கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்குப் பின்புறத்தில் பெரும்பாறையில் இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என்னும் இரண்டு விநாயகர் உருவங்களுக்கு மத்தியில் 13 x 14 அடி பரப்புள்ள பாறையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம் அக்காலத்தில் (கி.பி.7ஆம் நூற்றாண்டின் மத்தியில்) தமிழ்நாட்டில் வழங்கி வந்த இசைகளைப் பற்றிக் கூறுகிறது.5

வடமொழியிலே எழுதப்பட்டிருப்பதனாலே இந்தச் சாசனம் கூறும் விஷயம் தமிழ்நாட்டு இசையன்று என்று கருதக்கூடாது. தமிழ் நாட்டில் வழங்கிய இசையைத்தான் இந்தச் சாசனம் வடமொழியில் கூறுகிறது. வடமொழியில் சங்கீத நூல்கள் எழுதப்பட்டிருப்பதனாலே அவை தமிழ் நாட்டு இசையல்ல என்று கருதுவது தவறு. இப்போதுள்ள வடமொழிச் சங்கீத நூல்களில் பலவும் தமிழ் நாட்டு இசையைத்தான் கூறுகின்றன.

சங்கீத ரத்நாகரம்

கி.பி 1210 முதல் 1247 வரையில் வாழ்ந்திருந்தவரும், ‘சங்கீத ரத்நாகரம்’ என்னும் இசைநாடக நூலை வடமொழியில் எழுதியவருமான நிசங்க சார்ங்க தேவர் என்பவர், தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் இசைகளை ஆராய்ந்து, பின்னர் கி.பி 1237இல் அந்நூலை எழுதினார் என்பர். அந்நூலிலே தேவாரப் பண்கள் சிலவும் காணப்படுகின்றன. தமிழ் இசைதான் பிற்காலத்திலே கர்னாடக சங்கீதம் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது.

கீர்த்தனைகள்

கீர்த்தனைகள் என்று கூறப்படுகிற இசைப்பாடல்கள் மிகப் பிற்காலத்திலே தோன்றின. கீர்த்தனைகளைப் பற்றித் தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்கள் கூறுவது இது:

"தமிழ்நாடு விருந்தோம்புவதில் பெயர் பெற்றது. எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது. கீர்த்தனையால் நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது; தீங்கோ பெரிது.

கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன. அந்நாளில் பெரும்பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத்தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர் பெருஞ்சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறியலாயின. இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர். அவைகள் ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன.

அவ்வணியைத் தாங்க அவைகளால் இயலவில்லை. கலையற்ற கீர்த்தனைகளின் ஒலி, காதின் தோலில் சிறிது நேரம் நின்று, அரங்கம் கலைந்ததும் சிதறி விடுகிறது. இதுவோ இசைப்பாட்டின் முடிவு?

இசைப்பாட்டு இயற்கையில் எற்றுக்கு அமைந்தது?… புலன்களின் வழியே புகுந்து, கோளுக்குரிய புறமனத்தை வீழ்த்தி, குணத்துக்குரிய அகக்கண்ணைத் திறந்து, அமைதி இன்பத்தை நிலைபெறுத்துதற்கென்று இசைப்பாட்டு இயற்கையில் அமைந்தது. இஃது இசைப்பாட்டின் உள்ளக் கிடக்கை. இதற்கு மாறுபட்டது இசைப்பாட்டாகாது."6

–கலை வளரும்…

________________________________________
1. யாப்பருங்கலம், ஒழிபியல் உரைமேற்கோள்.
2. யாப்பருங்கலம், ஒழிபியல், உரைமேற்கோள்.
3. கலிங்கத்துப் பரணி, அவதாரம், 54 ஆம் தாழிசை.
4. காளிக்குக் கூளி கூறியது, 13ஆம் தாழிசை.
5. Epi. Indi. Voll. XXII-p 226-237.
6. தமிழிசைச் சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழாத் திறப்பு மொழி.

About The Author