தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (29)

இசைக்கருவிகள்

இசைப்பாட்டிற்கும் பரதநாட்டியம், கூத்து முதலியவற்றிற்கும் இசைக்கருவிகள் (பக்க வாத்தியங்கள்) இன்றியமையாதவை. அவற்றைப் பற்றிக் கூறுவோம்.

இசைக்கு உரிய ஓசைகள் ஐந்து பொருள்களில் உண்டாகின்றன. அப்பொருள்கள் தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடறு (கழுத்து) என்பன. இவற்றில் உண்டாகும் ஓசைகளை ஒழுங்குபடுத்தி இசையை அமைத்தார்கள். அவற்றை விளக்குவோம். முதலில் தோற்கருவிகளைக் கூறுவோம். தோற் கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டுத் தோலால் கட்டப்பட்டவை.

அவையாவன: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவலையம், மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, தடி, பெரும்பறை.

இவற்றில் மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, படகம், குடமுழா என்பன இசைப்பாட்டிற்குப் பக்க வாத்தியமாக உள்ளவை. இவை அகமுழவு எனப்படும். தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் என்பன மத்திமமான கருவிகள். இவை அகப்புற முழவு எனப்படும்.

கணப்பறை முதலியன அதமக் கருவிகள். புறமுழவு எனப்படும். மத்தளம், சல்லிகை, கரடிகை என்பன ஓசையினால் பெற்ற பெயர்கள். மத்து என்னும் ஓசையினால் மத்தளம் என்னும் பெயர் உண்டாயிற்று. சல்லென்னும் ஓசையையுடையதனால் சல்லிகை என்னும் பெயர் பெற்றது; கரடி கத்தினாற்போலும் ஓசையுடைமையால் கரடிகை என்னும் பெயர் பெற்றது.

இடக்கைக்கு ஆவஞ்சி என்றும், குடுக்கை என்றும் வேறு பெயர்கள் உண்டு. இடக்கையால் வாசிக்கப்படுதலின் இடக்கை என்றும், ஆவின் (பசுவின்) உடைய வஞ்சித்தோலினால் போர்க்கப்பட்டதாகலின் ஆவஞ்சி என்றும், குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்றும் காரணப் பெயர்கள் உண்டாயின.

மத்தளம்:
இதற்குத் தண்ணுமை என்றும், மிருதங்கம் என்றும் பெயர்கள் உள்ளன. மத்து என்பது ஓசைப் பெயர்; தளம் என்பது இசையிடனாகிய கருவிகளுக்கெல்லாம் தளமாக இருப்பது. ஆதலால், மத்தளம் என்று பெயர் பெற்றது. இசைப்பாட்டிற்கு மட்டும் அல்லாமல் கூத்து, நடனம் முதலிய ஆடல்களுக்கும் இது இன்றியமையாதது. ஆகவே, இசைக் கருவிகளில் இது முதன்மையானது.

இடக்கை:
இசைப்பாட்டிற்குப் பக்கவாத்தியமாக உபயோகப்பட்டது இக்கருவி.

குடமுழா: மேலே கூறப்பட்ட தோற்கருவிகளில் ஒன்றாக இது கூறப்பட்டது. குடமுழவாகிய கடம் (குடம்) தோற்கருவியன்று. ஆகவே, தோற்கருவிகளில் ஒன்றாகக் கூறப்படுகிற குடமுழா என்பது, பஞ்சமுக வாத்தியம் என்று இப்போது பெயர் கூறப்படுகிற இசைக்கருவியாகும். இது இப்போது இசைப்பாட்டில் வாசிக்கப்படாமல் மறைந்துவிட்டது.

தவுல்: இது நாகசுரத்துடன் வாசிக்கப்படுகிற தோற்கருவி.

பதலை, தபலா: தபலா என்னும் தோற்கருவி இக்காலத்தில் வடஇந்திய இசையிலும் இந்துஸ்தானி இசையிலும் பக்கவாத்தியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி சங்ககாலத்தில் தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்டுப் பிற்காலத்தில் மறைந்துவிட்டது. இது பற்றிச் சிறிது விளக்குவோம்.

பதலை என்னும் தமிழ்ப் பெயர் தபலா என்று திரிந்து வழங்குகிறது.

சங்க காலத்திலே பாணர் என்று தமிழரில் ஓர் இனத்தார் இருந்தார்கள். ஆடல், பாடல், நாடகம் என்னும் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவது அவர்கள் தொழில். பாணருடைய பெண்மக்களும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பாணருடைய பெண்களுக்குப் பாடினி என்றும், விறலி என்றும் பெயர். பாணர் குடும்பமே இசை, நாடகங்களில் தேர்ச்சி பெற்றிருந்தது. பாணர்கள் குடும்பத்தோடு ஊர் ஊராகச் சென்று, ஊர்களில் திருவிழா நடக்கும்போது இசைகளையும் நடனங்களையும் நிகழ்த்தினார்கள். பெயர் பெற்ற பாணர்கள், அரசர், சிற்றரசர், பிரபுக்கள் முதலியவர்களிடம் சென்று இசைப் பாடல்களையும் ஆட்டங்கள், நாடகங்களையும் நிகழ்த்திப் பரிசு பெற்றார்கள். அவர்கள் தமது கலை நிகழ்ச்சிகளில் யாழ், குழல், முழவு முதலிய இசைக்கருவிகளுடன் பதலையையும் வாசித்து வந்தார்கள்.

பிற்காலத்தில் யாழ், வங்கியம் முதலிய இசைக்கருவிகள் வழக்கிழந்து மறைந்துவிட்டது போலவே பதலையும் தமிழ் நாட்டிலிருந்து மறைந்துவிட்டது. ஆனால், தபேலா என்னும் பெயருடன் வடநாட்டில் இன்றும் வழங்கி வருகிறது. பாணர் இசைக்கலை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இசைக்கருவிகள் எடுத்துக்கொண்டு போனதை நெடும் பல்லியத்தனார் என்னும் புலவர் கூறுகிறார்:

"நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி" (புறம்: 64:1-2)

என்று பாணன் விறலியிடம் கூறியதாக இச்செய்யுள் கூறுகிறது. இதில் யாழ், ஆகுளி (சிறுபறை), பதலை என்னும் இசைக்கருவிகள் கூறப்படுவது காண்க.

பாணர்கள் தங்கள் இசைக் கருவிகளைக் காவடிகளின் இரண்டு புறத்திலும் உள்ள கூடைகளில் வைத்து, தோளின் மேல் காவடியைச் சுமந்துகொண்டு போனார்கள் என்பதை ஒளவையார் கூறுகின்றார்.

"ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கி" (புறம்: 103:1-2)

என்று கூறுகின்றார். இதிலும் பதலை என்னும் கருவி கூறுப்படுவது காண்க.

பரணர் என்னும் புலவரும் இதைக் கூறுகின்றார்:

"பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர்"
(பதிற்றுப் பத்து, 5ஆம் பத்து:1 3-5)

இதிலும், பரணர் பதலையைக் கூறுவது காண்க. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் தாம் பாடிய மலைபடுகடாம் என்னும் செய்யுளில் பாணர்கள் காவடியில் வைத்துத் தோளில் தூக்கிக் கொண்டு போன இசைக் கருவிகளின் பெயர்களைக் கூறுகிறார்.

"திண்வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்
மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குரும்பரந் தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ
நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையர்"
(மலைபடுகடாம்: 3-13)

இவற்றில் பதலை என்னும் இசைக்கருவியும் கூறப்பட்டுள்ளது.

ஓரி என்னும் வள்ளலுடைய சபையிலே ஒரு பாணன் தன்னுடைய குழுவினருடன் சென்று இசைப்பாட்டுப் பாடத் தொடங்கினான். அப்போது அவன், விறலியைத் தன்னுடன் சேர்ந்து பாடும்படியும், மற்றவர்கள் இசைக் கருவிகளை வாசிக்கும்படியும் கூறினான் என்று வன்பரணர் என்னும் புலவர் கூறுகின்றார்:

"பாடுவல் விறலிஓர் வண்ணம் நீரும்
மண்முழா அமைமின், பண்யாழ் நிறுமின்,
கண்விடு தூம்பின் களிற்றுயிர் தொடுமின்
எல்லரி தொடுமின், ஆகுளி தொடுமின்
பதலை ஒருகண் பையென இயக்குமின்"
(புறம்: 152: 18-22)

இதிலும் பதலை கூறப்படுவது காண்க.

பதலையும் தபலாவும் ஒன்றே. இதில் சிறிதும் சந்தேகம் இல்லை தபலாவுக்கு ஒரு பக்கம் மட்டும் தோல் மூடிக் கட்டப்பட்டிருப்பது போலவே பதலையும் ஒரே பக்கம் தோல் மூடிக் கட்டப்பட்டிருந்தது. இதனைப் ‘பதலை ஒருகண் பையென இயக்குமின்’ என்று கூறப்படுவதிலிருந்து அறியலாம். மேலும், புறநானூற்றுப் பழைய உரையாசிரியர் இதைத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். "பதலை என்பது, ஒரு தலை முகமுடையதோர் தோற்கருவி" என்று அவ்வுரையாசிரியர் (புறம்: 103ஆம் செய்யுள் உரையில்) சந்தேகத்துக்கு இடமில்லாமல் எழுதியிருப்பது காண்க. இவ்வுரையாசிரியரே புறம் 64ஆம் பாட்டு உரையில், பதலை என்பதற்கு ஒருதலை மாக்கிணை என்று உரை எழுதியிருப்பதையும் நோக்குக. நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியரும் ‘நொடி தரு பாணிய பதலை‘ (மலைபடுகடாம்11) என்பதற்கு, "மாத்திரையைச் சொல்லும் தாளத்தையுடைய ஒருகண்மாக்கிணை" என்று உரை எழுதியிருப்பதையும் காண்க.

எனவே, பதலை என்பது ஒரு பக்கத்தில் மட்டும் தோல் போர்க்கப்பட்ட இசைக்கருவி என்பதும், அதைச் சங்க காலத்தில் பாணர்கள் இசைப்பாட்டுகளுடன் பக்க வாத்தியமாக இசைத்து வந்தார்கள் என்பதும் தெரிகிறது. இந்த இசைக்கருவி, பிற்காலத்தில் யாழ், வங்கியம் முதலிய இசைக் கருவிகள் மறைந்துவிட்டது போலவே மறைந்துவிட்டது! ஆனால், இதே இசைக்கருவி தபலா என்னும் பெயருடன் வடநாடுகளில் இன்றும் இருந்து வருகிறது. பழைய தமிழ்நாட்டுப் பதலை இப்போது வடநாட்டுத் தபலாவாகக் காட்சியளிக்கிறது.

இதுபோலவே, பெருவங்கியம் என்னும் மூங்கிலினால் செய்யப்பட்டுத் தமிழ் நாட்டில் வழங்கி வந்த இசைக்கருவி இப்போது மறைந்துவிட்ட போதிலும், வடஇந்தியாவில் கிராமிய இசைக்கருவியாக இன்றும் இருந்து வருகிறது.

–கலை வளரும்

About The Author