தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (31)

கோட்டுவாத்தியம்: இது பிற்காலத்தில் உண்டானது. ஆனால், வீணை போன்று அவ்வளவு சிறந்ததல்ல. வீணைக்கு இரண்டாவதாகவே இது கருதப்படுகிறது.

தம்பூரா: இது சுருதிக்குப் பயன்படுகிறது.

பிடில்: இது மேல்நாட்டு இசைக்கருவி. இதற்கு வயலின் (Violin) என்றும், பிடில் (Fiddle) என்றும் ஆங்கிலத்தில் பெயர் கூறுவர். இப்போது இது நமது நாட்டு இசைக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய இசைக்கருவியாகிய இதனை, நம் நாட்டு இசைக்கருவியாக முதன் முதல் அமைத்தவர் வித்துவான் வடிவேலு பிள்ளை அவர்கள். இவர் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர். தலைக்கோல் ஆசான் (நட்டுவர்) ஆகிய இவர், தஞ்சாவூர் மகாராட்டிர அரசர் சமஸ்தானத்தில் அரண்மனை வித்துவானாக இருந்தார். ஒரு சமயம் அரண்மனையில் இங்கிலீஷ் பாண்டு வாசிக்கப்பட்டபோது அதனுடன் பிடிலும் வாசிக்கப்பட்டதை இவர் ஊன்றிக் கவனித்தார். பிறகு, பிடிலைத் தமிழ் இசைக்குப் பயன்படுத்தலாம் என்று கண்டார். ஆகவே, அதனைக் கற்று அதை வாசிப்பதில் நிபுணர் ஆனார். இக்கருவியை நமது நாட்டு இசைப்பாட்டிற்குத் துணைக்கருவியாக்கினார். கிளார்னெட் என்னும் மேல்நாட்டு இசைக்கருவியை நமது நாட்டு இசைக்கருவியாக்கிக் கொடுத்த வித்துவான் சின்னையா பிள்ளை அவர்கள் இவருடைய உடன்பிறந்த சகோதரர். திருவாங்கூர் அரசரும், இசையில் வல்லவருமான சுவாதித் திருநாள் மகாராஜா அவர்கள், வித்துவான் வடிவேலு பிள்ளை அவர்களின் பிடில் வாசிக்கும் திறமையை மெச்சிப் புகழ்ந்து, அவருக்குத் தந்தத்தினால் செய்யப்பட்ட பிடில் ஒன்றை 1834ஆம் ஆண்டில் பரிசாக வழங்கினார். ஐரோப்பிய இசைக்கருவியாகிய பிடிலை, நமது நாட்டு இசைக் கருவியாக்கித் தந்த வித்துவான் வடிவேலு பிள்ளை அவர்களுக்குத் தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது. இப்போது இது பெரிதும் வழங்கப்படுகிறது. இக்காலத்தில் பிடில், வாய்ப்பாட்டிற்கு இன்றியமையாத இசைக்கருவியாக விளங்குகிறது. அன்றியும், புல்லாங்குழலைப் போலத் தனி இசைக்கருவியாகவும் வாசிக்கப்படுகிறது. இது சிறந்த இசைக்கருவியாகும்.

(மேல்நாட்டுப் பிடிலை நமது இசைக்கருவியாக்கிக் கொண்டது போலவே, மேல்நாட்டு பேண்டு (Band) என்னும் இசையையும் நமது நாட்டு இசையாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.)

கஞ்சக்கருவிகள்: இவை வெண்கலத்தால் செய்யப்படுவன. தாளம், குண்டுதாளம், பிரமதாளம், ஜாலர் முதலியன.

கடம்: குடம் என்றும், பானை என்றும் பெயர். இது மண்ணால் செய்யப்பட்டது. பழைய இசைக்கருவிகளில் ஒன்று. குடம் வேறு; குடமுழா வேறு. குடமுழா என்பது பஞ்சமுக வாத்தியம்.

இசைக் கற்றூண்கள்

சிற்பிகள் சிலர், தமது சிற்பக் கலைகளிலேயும் இசையை அமைத்திருக்கிறார்கள். இது சிற்பிகளின் திறமையைக் காட்டுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக் கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் தட்டினால் இசை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. கருங்கற்பாறையில் அமைந்த இந்தத் தூண்களில் 22 மெல்லிய கம்பங்களைச் சிற்பிகள் அமைத்திருக்கிறார்கள். இம்மெல்லிய கற்கம்பங்களைக் கம்பியினால் தட்டினால் இசைகள் உண்டாகின்றன.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும் சுசீந்திரம் கோயிலிலும் இதுபோன்று இசைக் கற்றூண்கள் உள்ளன.

புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்னவாசல் என்னும் ஊரில் ஒரு ஜைன உருவம் கருங்கல்லில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விக்கிரகத்தைத் தட்டினால் இனிய இசை உண்டாகிறது. அளவுக்கு அதிகமாகத் தட்டித் தட்டி மக்கள் இந்த உருவத்தைச் சிறிது உடைத்து விட்டார்கள். கலைச் செல்வங்களின் பெருமையையும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் நமது நாட்டினர் இன்னும் உணரவில்லை. சிற்பிகள் தமது வன்மையினாலே கருங்கல்லில் அமைத்த வேறு சில பொருள்களும் உள்ளன.

–கலை வளரும்…

About The Author