தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (9)

உயரமான கோயில்கள்

மிக உயரமான விமானத்தையுடையது தஞ்சாவூர் பெரிய கோயில். இராஜராஜசோழன் இதைக் கி.பி. 1000இல் கட்டினான். இது 190 அடி உயரம் உள்ளது. இதைப் போன்று அமைப்பும் உயரமும் உடையது, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோயில். இது கி.பி.1025இல் கட்டப்பட்டது. மற்றோர் உயரமான கோயில் திரிபுவனத்துக் கம்பேசுவரர் கோயில். இவை சோழர்களால் கட்டப்பட்டவை. இவையே மிக உயரமான கோயில்கள். பிற்காலத்துக் கோயில்கள் இவ்வளவு உயரமாகக் கட்டப்படவில்லை.

காலப்பகுப்பு

திராவிடக் கட்டடக் கலையைப் பழைய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், விஜயநகர அரசர் காலம் என்று ஐந்து காலப்பகுதியாகப் பிரித்துக் கூறுவர்.

பழைய காலம் என்பது கி.பி.600-க்கு முற்பட்ட காலம். அந்தக் காலத்தில், கோயில் கட்டட அமைப்புகள் முழுவதும் அமையப்பெற்று, மரத்தினாலும் செங்கற்களினாலும் அமைக்கப்பட்டன.

பல்லவர் காலக் கட்டடம் என்பது கி.பி. 600 முதல் 900 வரை உள்ள காலம். இந்தக் காலத்தில் கற்றளிகள் (செங்கற்களுக்குப் பதிலாகக் கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டடப்பட்ட கோயிற் கட்டடங்கள்) ஏற்பட்டன.

சோழர் காலம் என்பது பிற்காலச் சோழர் காலம். இது கி.பி.900 முதல் 1300 வரையில் உள்ள காலம். இந்தக் காலத்தில் சோழ அரசர்கள் புதிதாகக் கற்றளிகளை அமைத்ததோடு, பழைய செங்கற் கோயில்களை இடித்து அக்கோயில்களைக் கற்றளியாகப் புதுப்பித்தார்கள். அன்றியும், ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும், கோயில்கள் அமைக்கப்பட்ட காலமும் இதுவே. மேலும், சிவன் கோயில்களிலே அம்மன் சந்நிதிகள் தனியாகக் கட்டப்பட்ட காலமும் இதுவே. சோழர் காலத்துக்கு முன்பு, சிவன் கோயில்களில் அம்மனுக்கென்று தனியாகக் கோயில் இல்லை. இச்செய்தியைச் சோழர் காலத்துச் சாசனங்களிலிருந்து அறிகிறோம்.

பல்லவர் காலத்துத் தூண்கள்

பாண்டியர் கட்டடக் காலம் என்பது கி.பி.1300 முதல் 1500 வரையில் உள்ள காலம். விஜயநகர அரசர் கட்டடக்காலம் என்பது கி.பி.1500 முதல் 1700 வரையில் உள்ள காலம்.

கட்டடக் கலையைப் பற்றிப் பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர காலம் என்று சொல்லும்போது, இந்தக் காலங்களில் கோயிற் கட்டடங்களில் வெவ்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன என்று கருதக் கூடாது. பெரிய மாறுதல்கள் ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால், தூண்கள், கர்ண கூடு, கோஷ்ட பஞ்சரம் முதலிய உறுப்புகளில் அந்தந்தக் காலத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இந்த மாறுதல்களைக் கொண்டுதான் மேற்சொன்னபடி காலத்தைப் பிரித்திருக்கிறார்கள்.

பிற்காலத்துத் தூண்கள்

குகைக்கோயில்களும் பாறைக்கோயில்களும் கி.பி.600இல் இருந்து 850 வரையில் தமிழ்நாட்டிலே முதன்முதல் அமைக்கப்பட்டன. குகைக்கோயிலைத் தமிழ் நாட்டிலே முதன் முதலாக அமைத்தவன், முன்னர் சொல்லியபடி மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன். அவனுக்குப் பிறகு அவன் மகன் நரசிம்ம வர்மனான மாமல்லன், மாமல்லபுரத்தில் (மகாபலிபுரத்தில்) குகைக் கோயில்களையும் இரதக் கோயில்கள் என்னும் பாறைக்கோயில்களையும் அமைத்தான். அவனுக்குப் பிறகு வந்த பல்லவ அரசர்கள் சாளுவன் குப்பம் முதலிய இடங்களில் குகைக்கோயில் அமைத்தார்கள். பிறகு புதுக்கோட்டையிலும் பாண்டிய நாட்டிலும் குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டன. கி.பி. 850-க்குப் பிறகு குகைக் கோயில்கள் அமைக்கும் வழக்கம் மறைந்து விட்டது.

கி.பி. 1000-க்குப் பிறகு அரசாண்ட சோழ, பாண்டிய, விஜயநகர அரசர்கள் குகைக் கோயிலை அமைக்கவில்லை. அவர்கள் கற்றளிகளைத்தான் அமைத்தார்கள்.

–கலை வளரும்…

படங்கள்: நன்றி. தமிழ் இணையக் கல்விக்கழகம்

About The Author