தமிழர் வளர்த்த அழகு கலைகள்(12)

சிற்பாசாரியர்

கோயிற் கட்டடங்களையும் சிற்பங்களையும் அமைத்த சிற்பாசாரியர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவர்கள் பெயர்கள் மறைந்துவிட்டன. ஆயினும், சில பெயர்கள் மட்டும் தெரிகின்றன.

மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்துக் கோயில்களையும்  பாறைக்கோயில்களையும் அமைத்த சிற்பாசாரியர்களின் பெயர்கள் சில, மகாபலிபுரத்துக்கடுத்த பூஞ்சேரிக் கிராமத்துக்கு அருகில், நொண்டி வீரப்பன் குதிரைத் தொட்டி என்னும் ஒரு பாறையில் பொறிக்கப் பட்டுள்ளன. 1  இப்பெயர்கள் மாமல்லபுரத்துச் சிற்பங்களை அமைத்த சிற்பாசாரிகளின் பெயர்கள் என்று கருதப்படுகின்றன.

அவை:

1. கேவாத பெருந்தச்சன்,
2. குணமல்லன்
3. பய்யமிழிப்பான்,
4. சாதமுக்கியன்,
5. கலியாணி,
6. திருவொற்றியூர் அபாஜர்,
7. கொல்லன்
ஸேமகன்.

கி.பி. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த தண்டி என்னும் ஆசிரியர், தாம்ம எழுதிய அவந்தி சுந்தரி கதை என்னும் வடமொழி நூலில் லலிதாலயர் என்னும் சிற்பக் கலைஞரைக் குறிப்பிடுகிறார். தண்டி ஆசிரியர் காலத்தில், லலிதாலயர் மாமல்லபுரத்தில் சிற்பக் கலைஞராக இருந்தார்
என்றும், இக்கலைஞரே சூத்ரக சரிதம் என்னும் கதையைத் தமிழில் எழுதினார் என்றும் தண்டியாசிரியர் கூறுகிறார்.

இரண்டாம் விக்கிரமாதித்யன் (733-745), காஞ்சிபுரத்தை வென்ற பிறகு, அந்நகரிலிருந்த குண்டன் என்னும் சிற்பியை அழைத்துக் கொண்டு போய், அச்சிற்பியைக் கொண்டு பட்டடைக்கல் என்னும் ஊரில் ஒரு கோயிலைக் கட்டினான். இக்கோயில்ல இப்போது விருபாக்ஷ ஈசுவரர் கோயில்
என்று வழங்கப்படுகிறது. இந்த அரசன், இச்சிற்பக் கலைஞருக்குத் திரிபுவனாசாயார் என்றும், அநிவாரிதாசாரியார் என்றும் சிறப்புபப் பெயர்களைக் கொடுத்தான்.

முதலாங்ம் குலோத்துங்க சோழன் காலத்தில், புரிசையில் திருப்படக்காருடைய மகாதேவர் கோயில் கட்டப்பட்டது. இதனைக் கட்டிய சிற்பாசாரியின் பெயர், சந்திரசேகரன் ரவி என்னும் சோழேந்திர சிம்ம ஆசாரி என்பது. 2

திருவொற்றியூர் மூலக்கோயில், இராஜேந்திரசோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய சிற்பியின் பெயர் வீரசோழ தச்சன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ரவி என்பதாகும். 3

சிதம்பரத்து வடக்குக் கோபுரத்தைக கட்டிய சிற்பியரின் உருவங்களும் பெயர்களும் வடக்குக் கோபுரத்து உட்சுவரில் எழுதப்பட்டுள்ளன. அப்பெயர்களாவன: விருத்த கிரியில் கேசவப் பெருமாள்; அவர் மகன் விசுவமுத்து. திருப்பிறைக்கோடை ஆசாரி திருமருங்கன்; அவருடைய தம்பி காரணாச்சாரி.

–தமிழர் வளர்த்த அழகுக் கலைகளின் வரிசையில் அடுத்து – சிற்பக்கலை!

அடுத்த இதழிலிருந்து.

________________________________________
1. S.I.I. Vol.XII, No.23A.
2. Epi. Rep. 1911. P. 72.
3.S.I.I. Vol. IV, P. 185

About The Author