தமிழ் என்னும் விந்தை!-சதுரங்க பந்தம் – 8

சதுரங்க பந்தங்களைப் பற்றிப் பல இலக்கண நூல்கள் கூறுகின்றன. குறிப்பிடத்தகுந்த ஒரு சதுரங்க பந்தத்தை ‘மாறனலங்காரம்’ எடுத்துக் காட்டுகிறது. இது புதிரான ஒரு சதுரங்க பந்தமாக அமைந்திருக்கிறது. பல காலம் பலமுறை முயன்ற பின்னரும் என்னால் இதற்கு விடை காண முடியவில்லை. அதாவது, பாடலை சதுரங்க பந்தமாக அமைக்க முடியவில்லை. சதுரங்கத்தில் குதிரை பாய்வது போல இந்தச் செய்யுளைக் கட்டங்களில் அமைக்க முயன்றால் அதற்கான வழிகள் ஏராளம் உள்ளன. இதில் ஓரளவு எழுத்துக்கள் அமைந்தாலும் நிபந்தனைகளை முற்றிலுமாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை.

ஆகவே, உலகின் தலைசிறந்த சதுரங்க நிபுணர் ஒருவரை நாடினேன். அவருக்குத் தமிழ் தெரியாதென்பதால் தமிழில் இருந்த செய்யுளின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதி அவருக்கு அனுப்பினேன். ஒரு குறிப்பு மட்டும் காட்டிவிட்டு இதன்படி அமைக்கலாம் என்று அந்த நிபுணர் மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்தார். ஆனால், அப்படி முயன்றும் அந்த சதுரங்க பந்தத்தை அமைக்க முடியவில்லை.

பெங்களூருவில் உள்ள சதுரங்க க்ளப் ஒன்றில் சதுரங்க பந்த ஆர்வலர் இருப்பதை இணையத்தளம் மூலம் அறிந்து அவரைத் தொடர்பு கொண்டு பாடலை அனுப்பினேன். அவராலும் இயலவில்லை.
புத்தரின் மீது பக்தி கொண்ட அவலோகித பக்தர் ஒருவர் இது போன்ற சித்திர கவிகளின் மீது ஆர்வம் கொண்டிருப்பதை அறிந்து அவருக்கு அனுப்பினேன். அவருக்கு ஓரிரு முறை நினைவூட்டிய பின்னர் தனக்கு வேலைப் பளு அதிகம் என்று பதில் அனுப்பி விட்டார்.

சுலபமாக அமைக்கக் கூடியது என்றால் மேற்கூறிய நிபுணர்கள், அதுவும் சதுரங்க பந்த ஆர்வலர்கள் அதை ஒரு நொடியில் நிச்சயம் அமைத்திருப்பார்கள். ஆனால், சிக்கலான புதிர் என்பதால்தான் அவர்கள் பேசாமல் இருந்து விட்டார்கள் அல்லது ஒரு குறிப்பை மட்டும் காட்டிவிட்டு விலகி விட்டார்கள் என்று உணர்ந்து கொண்டேன். மேலே கூறிய நிகழ்வுகள் மாதிரிக்காகச் சொல்லப்பட்டவையே. எனது முயற்சிகள் அனைத்தையும் முழுவதுமாக இங்கு கூறவில்லை; அது தேவையுமில்லை. விந்தையான பாடல், சிக்கல் நிரம்பிய ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டவே இவற்றையெல்லாம் விரிவாகக் கூறினேன்.

மற்ற சித்திர பந்தங்களை எல்லாம் சரியாகச் சித்திரங்களில் அமைத்து வெளியிடப்பட்டிருக்கும் ‘மாறனலங்கார விரிவுரை’ இந்த சதுரங்க பந்தப் பாடலை மட்டும் கட்டங்களில் அமைக்காமல் காலியான 64 கட்டங்களை மட்டும் பாடலுக்குக் கீழே போட்டிருப்பது விந்தையாகவே இருக்கிறது.
பாடலையும், குறிப்பையும் கீழே காணலாம். இதை அமைக்க முடிந்தவர்கள் அமைத்து அனைவரையும் மகிழ்விக்கலாம்.

பாடல் இதோ:-

மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யானதவபோதனுமாயாய்ந்தகோ – மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனான்
றாதயமாவன்புலமாய

பாடலின் பொருளை மாறனலங்கார விரிவுரை இப்படி விளக்குகிறது:

ஒன்றாதயமா – சருவான்மாக்களோடும் பொருந்தாத நமனே!
மானவனா– மனு குலங் காவலனாக
மேவலாமாறன் – நங்கையர்க்குங் காரியார்க்கும் புத்திர மோகந்தீரப் புத்திரனாம் மாறனென்னும் பிள்ளைத் திருநாமத்தையுடையவன்
நித்தமாமாலை – அழிவில்லாத பெரிய பிராட்டியாருடன் கூடிய பெரியோனை
ஆன – தன்னிடத்தாக்கம் பெற்ற
தவபோதனுமா – மெய்த்தவத்தோடுங்கூடி ஞானவானுமாகி
ஆய்ந்த கோ – அவனே பரத்துவமென்று தெளிந்த தெரிசன ராசன்
மானவடி – பெருமையையுடைய திருவடிகளை
நாதனின் மேல் – எனது நாவினிடத்தும் அதற்கும் மேலான சிரத்தினிடத்தும்
நன்கலன்பூண் – நல்ல ஆபரணமாகப் பூண்ட
என்முனநீவந்தெவன் – என் முன்னே வந்து நீ சாதிப்பதெதுதான்? ஒன்றுமில்லை.
வன்புலமாய – என்னிடம் நீ வருதற்கெளிய இடமன்று; வலிய இடமாகப்பட்டன, ஆதலாலுனக்கு வரப் போகாதென்று அறிந்து கொள் என்றவாறு
மேல் – இடம் பற்றிய ஆகு பெயர்; திணை – வாகை; துறை – அறிவன்வாகை

பாடலை அமைப்பதற்கான குறிப்புரை:

"இச்செய்யுளை இச்சதுரங்க அரங்கின் நாலு பக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும் நடுவினாலறையிலும் மாதவன் என்னும் திருநாமநிற்குமாறு ஆராய்ந்து அமைத்துக் கொள்க:"

அதாவது,

•நான்கு புறங்களிலும் மாதவன் என்ற வார்த்தை அமைந்திருக்க வேண்டும். கட்டங்களில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் எழுத்துக்கள் வரலாம்.

•உள்ளறைகளில் உள்ள 16 அறைகளில் ஓர மூலைகளில் மாதவன் எனும் வார்த்தையில் உள்ள எழுத்துக்கள் வர வேண்டும்.

•அதேபோல், நடு அறைகள் நான்கில் மாதவன் என வர வேண்டும்.

பாடல் முறைப்படி வரிசையாக 64 கட்டங்களில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாடலை அமைத்துப் பாருங்கள். இதற்கேற்ப கட்டங்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

அற்புதமான சதுரங்க பந்தம் அல்லவா இது! இது போன்ற ஒரு பந்தம் உலகின் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பது நிச்சயமான உண்மை!

(குறிப்பு: பாடலை அமைக்கும் வழி தெரிந்தாலோ, அதில் வெற்றி பெற்று விட்டாலோ பின்னூட்டம் பகுதியில் தெரிவிக்கலாம். அல்லது snagarajans@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்).

-விந்தைகள் தொடரும்…

About The Author