தமிழ் என்னும் விந்தை! – 15

ஒரு நான்கடிச் செய்யுளில் நான்காம் அடியில் உள்ள எழுத்துக்கள் மற்றைய மூன்று அடிகளில் மறைந்து நிற்குமாறு இயற்றப்படும் செய்யுள் ‘கூட சதுர்த்த’மாகும்.

மாறன் அலங்காரத்தில் இதன் இலக்கணம் சிறிது வேறுபாட்டுடன் தரப்படுகிறது.

"பாடலி னலாம் பதம் பொறி வரியிடைக்
கூட முற் றதுவே கூட சதுர்த்தம்"

இதன் பொருள்:- நான்கு அடிகளால் ஆகிய செய்யுளில் நான்காம் பாதம் ஏனைய மூன்று பாதங்களையும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேல் ஏறுவதுமாக எழுதி முடித்த மூன்று வரிகளில் இடையில் மறைந்து நான்காம் வரி நிற்பது கூட சதுர்த்தமாகும்.

கூட சதுர்த்தத்திற்கு உதாரணமாகப் பரிதிமால் கலைஞர் தனது ‘சித்திர கவி விளக்கம்’ நூலில் தரும் செய்யுள் இது:-

"நாதா மானதா தூய தாருளா
ணீதா னாவாசீ ராம னாமனா
போதா சீமானா தரவி ராமா
தாதா தாணீ வாமனா சீதரா"

இதன் பொருள்:-

நாதா – சுவாமியே!
மானதா – என் மனத்திலுள்ளவனே!
தூய தார் உளான் நீதான் நாவா – பவித்திரம் (பரிசுத்தம்) பொருந்தின தாமரையில் உள்ளாளாக (இலக்குமியாவது) நீயாக (நீயாவது) என்னுடைய நாவிலே வந்து உறைவீராக! அதுவுமன்றி,
சீராமன் ஆம் மனா – சக்கரவர்த்தித் திருமகனாகிய மன்னனே!
சீமான் – அழகுடையவனே!
ஆதர இராமா – சகலரும் விரும்பும் இராமனே!
வாமனா சீதரா போதா – வாமனனே! சீதரனே! ஞான மயமானவனே!
தா தா தாள் நீ – உனது திருவடித் தாமரைகளைத் தந்தருள்வாயாக!

இதைச் சித்திரமாகப் போட்டுப் பார்த்தால் எப்படி வரும் என்பது கீழே தரப்பட்டுள்ளது. மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேயும் படித்தால் முழுப் பாடலும் வரும். நான்காம் அடியான தாதா தாணீ வாமனா சீதரா படத்தில் நடு அடியாக வருவதைக் காணலாம்!

கூடம் – மறைவு; சதுர்த்தம் – நான்காவது. மறைவான நான்காவது அடியைக் கொண்டது என்று பொருள். இதை விளக்க உதாரணச் செய்யுளாகப் பரிதிமால் கலைஞர் தரும் செய்யுள் இது:-

புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக்
கட்பிறைப் பற்கறுத்த
பகைத்திறச் சொற்கெடச் செற்றகச்
சிப்பதித் துர்க்கைபொற்புத்
தகைத்ததித் தித்தது தத்தசொற்
றத்தைப்பத் தித்திறத்தே
திகைத்தசித் தத்தைத் துடைத்தபிற்
பற்றுக் கெடக்கற்பதே

இந்தச் செய்யுளில் நான்காம் அடியில் வந்துள்ள எழுத்துக்கள் எல்லாம் ஏனைய மூன்று அடிகளிலும் வருவதைக் காணலாம்.

இந்தச் செய்யுளின் பொருள்:-

புகைத்தகைச் சொல் – புகையும் நெருப்பின் தன்மை உடைய சொற்களையும்
படைக் கை – ஆயுதங்களைப் பற்றிய கைகளையும்
கதம் கண் – கோபம் பொருந்திய கண்களையும்
பிறை பல் – பிறைத் திங்கள் போலும் வளைந்த வக்கிர தந்தங்களையும்
கறுத்த – கரு நிறத்தையும் உடைய
பகை திறம் – பகைவராகிய அசுர சாதி என்னும்
சொல் கெட – பேரும் கெட்டழிய
செற்ற – தொலைத்த
கச்சிப் பதித் துர்க்கை – காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் துர்க்கா தேவியாகிய
பொற்புத் தகைத்த – அழகு தங்கிய
தித்தித்த – இனிமை வாய்ந்த
துத்தத்த – யாழின் இசை போலும்
சொல் – சொல்லை உடைய
தத்தை – கிளி போன்றவளிடத்து
பத்தித் திறத்தே திகைத்த சித்தத்தை – பக்தி செய்யும் விஷயத்தில் மயக்கமடைந்து தடுமாறிய உள்ளத்தை
துடைத்த பின் – மயக்கம் நீங்கிய பிறகு,
பற்றுக் கெடக் கற்பது – அகங்கார மமகாரங்களாகிய இரு வகைப் பற்றும் கெட்டு ஞானத்தைப் பெறுவது உண்டாகும்.

பாடலைப் பாடுவோர் க, ச, ட த, ப, ற என்ற வல்லினம் பயிலும் பாடலாகவும் அழகிய பொருளை உடைய பாடலாகவும் இது உள்ளதைக் கண்டு மகிழ்வர்.

–விந்தைகள் தொடரும்...

About The Author