தமிழ் என்னும் விந்தை! – 20

மாலைமாற்று – 2

மேலும் சில மாலைமாற்று செய்யுள்களை இனி இங்கு காண்போம்.
மாறனலங்காரம் தரும் அழகிய பாடல் இது:-

"வாமனாமானமா
பூமனாவானவா
வானவானாமபூ
மானமானாமவா"

இதன் பொருள்:-

வாமனா – வாமனனே!

வானவாவானவானாம – தேவர்களால் விரும்பி சொல்லுவதாய பெரிய திரு நாமத்தை உடையவனே!

மானமாபூ – பெருமையை உடைய திரு மகளுக்கும் பூமி தேவிக்கும்,

பூமானமனா – பூமானாகிய மன்னனே!

மானாம – மாலாகிய திரு நாமத்தை உடையவனே!

வா – என் முன்னே வந்து தோன்றுவாய்!

இது இரண்டு விகற்பத்தால் வந்த வஞ்சித்துறை.

யாப்பருங்கல விருத்தி தரும் அழகிய மூன்று மாலமாற்றுப் பாடல்கள் பின் வருமாறு:-

"நீமாலை மாறாடி நீனாடு நாடுனா
நீடிறா மாலைமா நீ"

"பூமாலை காரணீ பூமேத வேதமே
பூணீர காலைமா பூ"

"காடாமாதா வீதாகா
காதாவீதா மாடாகா"

யாழ்ப்பாணக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றியுள்ள இரு மாலைமாற்றுச் செய்யுள்களில் ஒன்று குறள்வெண்பாகவும் இன்னொன்று வஞ்சிவிருத்தமாகவும் அமைந்துள்ளது.

குறள் வெண்பா

"காயாதி யாதிநீ காநாத வேதநா
காநீதி யாதியா கா"

இதன் பொருள் : –

ஆதி! வேத நாத நாகா! நீதியா! தியாகா! நீ காயாதி கா என்று பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

வேத நாத நாகா – வேதத் தொனி (நிறைந்த கீரி) மலையை உடையவரே!

காயாதி கா – கோபியாது காத்து அருள்க

வஞ்சி விருத்தம்

"வேக மாகமு னோடிவா
வான வாகன மேறுநா
நாறு மேனக வானவா
வாடி னோமுக மாகவே"

இதன் பொருள்:-

ஆன் அ வாகனம் ஏறுநா – இடபமாகிய அந்த வாகனத்தில் ஏறுபவரே!

நாறும் மேல் நக வானவா – காணப்படுகின்ற மேலாகிய (கீரி) மலையில் (எழுந்தருளிய) கடவுளே!

வாடினோம் முகமாக – வாடினோமாகிய எம்மை நோக்கி,

முன் வேகமாக ஓடி வா – எதிரே விரைவாக ஓடி வந்தருள்க!

இப்படி மாலைமாற்றுச் செய்யுள்கள் ஆங்காங்கே பற்பல கவிஞர்களால் இயற்றப்பட்டு ஓலைச் சுவடிகளிலும் அச்சிடப்பட்ட பழங்காலப் புத்தகங்களிலும் காணக் கிடைக்கின்றன.

தமிழ் விந்தைகளுள் மாலைமாற்றும் ஓன்று!

(தொடரும்)

About The Author